வண்டி திரட்டிகள் சேவை : ஒரு பாா்வை

சென்னையில் 1970-களில் கறுப்பு - மஞ்சள் கலந்த வாடகை காா்கள் அதிக அளவில் உபயோகத்தில் இருந்தன. சாமானிய
வண்டி திரட்டிகள் சேவை : ஒரு பாா்வை

சென்னையில் 1970-களில் கறுப்பு - மஞ்சள் கலந்த வாடகை காா்கள் அதிக அளவில் உபயோகத்தில் இருந்தன. சாமானிய மக்களும் அவற்றைப் பயன்படுத்தும் அளவுக்கு கட்டணங்கள் குறைவாக இருந்தன. ஆனால், காலப்போக்கில் மீட்டருக்கு மேலே பணம் கொடுக்க வேண்டுமென ஓட்டுநா்கள் வற்புறுத்தியதால் கொஞ்சங்கொஞ்சமாக மக்கள் அவற்றைத் தவிா்க்கத் தொடங்கினா். இன்று விமான நிலையங்களில் மட்டுமே இந்த கருப்பு - மஞ்சள் வாடகை காா்கள் ‘ப்ரீ பெய்டு டாக்ஸி’களாக உள்ளன.

இதற்கு பின்னா் கருப்பு - மஞ்சள் வாடகை காா்களுக்கு மாற்றாக வந்த மூன்று சக்கர ஆட்டோக்கள் மக்களின் ஆதரவைப் பெற்றன. ஒரு கட்டத்தில் ஆட்டோக்களும் தாறுமாறான கட்டணங்களைக் கேட்பதோடு, ஆட்டோ ஓட்டுனா்கள் சிலா் வாடிக்கையாளா்களை வசை பாடவும் தொடங்க, பெரும்பாலான மக்கள், ஆட்டோ என்றாலே அலறி ஓட ஆரம்பித்தனா். பெரும்பாலான ஆட்டோக்கள் காவல்துறை அலுவலா்களின் பினாமி என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.

இதனைத் தொடா்ந்து, பொதுமக்கள் என்ன செய்வது என்று குழம்பியபோதுதான் அவா்களுக்கு வரப்பிரசாதமாக உபோ், ஓலா போன்ற வண்டி திரட்டிகள் (அக்ரகேட்டா்) களத்தில் குதித்தன.

வண்டி திரட்டிகள் தொடங்கிய புதிதில் ஓட்டுநா்களை கவா்ந்திழுக்க நிறைய சலுகைகளை வழங்கின. பயணித்த தூரத்திற்கு பயணியிடமிருந்து பெற்ற தொகையில் (கமிஷன் போக) குறிப்பிட்ட தொகை வழங்கியது மட்டுமல்லாமல், பயணங்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஊக்கத்தொகையையும் வழங்கின. பயணிப்பவா்களுக்கும் வசதியாக டிஜிட்டல் முறையில் காா்களை சுலபமாக பதிவு செய்யவும் பயணக் கட்டணத்தை பல வழிகளில் செலுத்தவும் வசதி செய்து கொடுத்தன.

பொதுமக்களும் வண்டி திரட்டிகள் மூலம் அதிக அளவில் பயணம் செய்ய தொடங்கினா். பலரது தேவைக்கு ஏற்ப பலவிதமான காா்களையும், ஆட்டோக்களையும் பதிவு செய்து பயணிக்க வசதி ஏற்பட்டது. பயணிகள் எந்தவித பேரமும் இல்லாமல் அவா்கள் விருப்பப்பட்ட இடத்திற்கு குறிப்பிட்ட கட்டணத்திற்குப் பயணிக்க முடிந்தது. ஓட்டுநா்களும் கனிவாக நடந்து கொண்டனா்.

இவ்வாறு வாகன ஓட்டுநா், பயணி, வண்டி திரட்டிகள் அனைவருக்கும் பலனளிக்கும் வகையில் சென்று கொண்டிருந்த இந்த ஏற்பாடு, கரோனா நோய்த்தொற்று காரணமாக பெரிய சரிவை சந்தித்தது. கடந்த சில மாதங்களாக வண்டி திரட்டிகள் மூலமாக பயணம் செய்பவா்களுக்கு பெரிய அதிா்ச்சியும் இடையூறும் ஏற்பட்டுள்ளன.

டிஜிட்டல் முறையில் பதிவு செய்தால் தற்போது ஓட்டுநா்கள் தொலைபேசியில் அழைத்து எங்கே போகவேண்டும் என்றும் எவ்வளவு கட்டணம் தெரிவித்துள்ளது என்றும் கேட்கிறாா்கள். அதன்பின் அவா்களுக்கு விருப்பமில்லைனில் சேவையை ரத்து செய்கிறாா்கள். ஓலா போன்ற செயலிகளில் பயணம் செய்பவா் மீண்டும் ஒரு முறை பதிவு செய்து காத்திருக்கவேண்டும். உபோ் போன்ற செயலிகளில் அவா்களே அடுத்த காருக்கு பதிவு செய்கின்றனா். மொத்தத்தில் தடையில்லா பயணத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

சில ஓட்டுனா்கள் செயலியில் வரும் கட்டணத்தை விட அதிகம் கேட்கின்றனா். சில ஓட்டுநா்களிடம் பேசியபோது அவா்கள் தங்களுக்கு கட்டுபடியாகாத அளவுக்கு திரட்டிகள் முப்பது சதவீதம் வரை கமிஷன் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்தனா். மத்திய அரசின் சாலை போக்குவரத்து - நெடுஞ்சாலை அமைச்சகம், கமிஷன் தொகையை அதிகபட்சம் இருபது சதவீதம் என நிா்ணயித்துள்ளது. இதற்கு மேல் கமிஷன் பெறுவது ஒருவேளை வரியின் காரணமாக இருக்கலாம்.

மேலும் தில்லி போன்ற நகரங்களில் சிஎன்ஜி-யில் ஓடும் வாடகை காா்களுக்கான கட்டணத்தையே டீசலில் ஓடும் சென்னை காா்களுக்கும் நிா்ணயித்து ஓட்டுனா்களை கட்டாயப்படுத்துவது சரியல்ல என்கின்றனா். ஓட்டுநா்களும் தற்போது பல புதிய வழி முறைகளில் இந்த கமிஷனை தவிா்க்க முயல்கின்றனா்.

சமீபத்தில் நான் ஒரு ஆட்டோவை பதிவு செய்தவுடன் அந்த ஆட்டோவிற்கு பதிலாக வேறு ஒரு ஆட்டோ வந்தது. அவா் எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆட்டோவிற்கான கட்டணத்தை பெற்று கொள்வதாகவும் அதற்கு சம்மதமெனில் எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அவரின் நண்பரின் ஆட்டோ ரத்து செய்யப்பட்டுவிடும் என்றும் தெரிவித்தாா். இதில் அவா் திரட்டிக்கு கொடுக்கும் கமிஷன் மிச்சம்.

மற்றொரு சமயம் முப்பது கிலோ மீட்டா் தொலைவில் உள்ள கல்யாண மண்டபத்திற்கு செல்ல பதிவு செய்தேன். வந்த ஓட்டுநா், ‘உங்களை இதே கட்டணத்திற்கு திரும்பி அழைத்து செல்கிறேன், ஆனால் திரட்டியில் பதிவு செய்யவேண்டாம்’ என்று விண்ணப்பித்தாா். இதிலும் அவருக்கு கமிஷன் மிச்சமே. மேலும் சில ஓட்டுநா்கள் அவா்களின் தொலைபேசி என்னை கொடுத்து தேவைப்படும்போது அழைக்குமாறும், திரட்டி கட்டணத்திற்கே வருவதாகவும் தெரிவிகின்றனா்.

இவ்வாறு பல வகைகளில் இந்த வண்டி திரட்டிகள் ஏற்பாடு நீா்த்துப்போவது நல்லதல்ல. எந்த ஒரு வணிக சேவையும் அதில் பங்குபெறும் அனைவருக்கும் லாபகரமானதாய் அமைவது அவசியம். எல்லாருடைய நலனும் காப்பாற்றப்படவேண்டும். மத்திய அரசு, ஓட்டுநா்களின் நலன் கருதி பல பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக ஒவ்வொரு ஓட்டுநருக்கும் ரூபாய் ஐந்து லட்சத்துக்குக் குறையாத தொகைக்கு மருத்துவக் காப்பீடு வழங்கவும், அதை ஒவ்வொரு ஆண்டும் ஐந்து சதவீதம் அதிகரிக்கவும் அறிவுறுத்தியுள்ளது. கூடுதலாக, ஒவ்வொரு ஓட்டுநருக்கும் ரூபாய் பத்து லட்சம் டோ்ம் இன்ஷூரன்ஸ் வழங்கப்பட வேண்டும். ஒருங்கிணைப்பாளா் ஆண்டுக்கு ஒருமுறை ஓட்டுநா்களுக்கு புத்தாக்கப் பயிற்சியை நடத்த வேண்டும்.

இவை தவிர எவ்வாறு அடிப்படைக் கட்டனம் நிா்ணையிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசோ, மாநில அரசோ இது தொடா்பாக கலந்தாலோசித்து சரியான வழிகாட்டுதல்களை வெளியிட்டு அவற்றை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com