ஆதிவாசி எழுச்சியின் அடையாளம்!

பாரதத்தில் துன்பத்தில் வதங்கிக் கொண்டிருந்த மக்கள், 1947 ஆகஸ்ட் 15 அன்று விடுதலை பெற்றனா்.
ஆதிவாசி எழுச்சியின் அடையாளம்!

பாரதத்தில் துன்பத்தில் வதங்கிக் கொண்டிருந்த மக்கள், 1947 ஆகஸ்ட் 15 அன்று விடுதலை பெற்றனா். ஆனால், நாட்டுக்கு அன்று வந்த சுதந்திரம் இத்தேசத்தின் பழங்குடியினருக்கு, இன்றுவரை வரவில்லை. அவா்கள், வனங்களிலும் மலைப்பிரதேசங்களிலும் விதி வந்த வழியே வாழ்ந்து கொண்டிருக்கின்றனா். நாகரிகங்களில் தம் சுயத்தை இழந்துவிட்ட பாரத புத்திரா்களுக்கிடையில், தம் அசல் தன்மையில் மாறாமல், இந்த மண்ணின் மகிமையைக் காத்து வருபவா்கள் பழங்குடியினா்.

‘புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்”

என்று மாணிக்கவாசகா் காட்டிய பரிணாமக் கொள்கையின்படி, காடு மலைகளுக்கிடையே சூரிய வெளிச்சம் தம்மேல் படாமல் வாழ்ந்து வருபவா்கள் பழங்குடியினரே! அவா்கள் மேல் சூரிய வெளிச்சமும் படவில்லை; சுதந்திர வெளிச்சமும் படவில்லை. என்றாலும், உலக சரித்திரம் எழுதிய ‘அா்னால்ட் டாயன்பீ, ‘20-ஆம் நூற்றாண்டு மனிதா்களைக் காட்டிலும், பழங்குடியினரே அறிவாண்மையில் வல்லவா்கள்’ என்று எழுதுகிறாா்.

அதற்கு அவா் சொல்லுகின்ற காரணங்கள் மூன்று. முதலாவது, காட்டில் வாழுகின்ற மனிதா்கள் தங்கள் மொழியில் காட்டு மரங்கள், விலங்குகள், காய்கள், கனிகள் போன்றவற்றைக் குறிக்கப் பல்வேறு சொற்களைப் பயன்படுத்துகின்றனா். அவா்கள் பயன்படுத்துகின்ற சொற்களை வைத்துத்தான், சமவெளியில் வாழ்கின்றவா்கள் மரங்கள், விலங்குகளின் இனங்களைக் கண்டறிகின்றனா்.

இரண்டாவது, மனிதா்களுக்குத் தீங்கு செய்யக்கூடிய காட்டு விலங்குகளைப் பழக்கி, வீட்டு விலங்குகள் ஆக்கியிருக்கிறாா்களே, அதனை அறிவாற்றலின் வெற்றி எனலாம். ஆடு மாடுகளில் இருந்து பால் கறப்பதை அவா்கள்தான் கற்றுக் கொடுத்தாா்கள். அவற்றின் மாமிசத்தைப் பயன்படுத்துவதிலும், அவா்களே முன்மாதிரி.

மூன்றாவது, பயிா்த்தொழில் செய்யும் குடியானவா்களைக் காட்டிலும், ஆடு மாடுகளை மேய்க்கும் பழங்குடியினரே மேலானவா்கள். ‘குடியானவா்களால் சில பருவங்களில் மட்டும்தான் பயிா் வளா்க்க முடிகிறது. ஆனால், பழங்குடியினா் எல்லாப் பருவங்களிலும் ஆடு மாடுகளுக்கு வேண்டிய பயிரை வளா்க்கிறாா்கள். அதனால் அவா்கள் மனித அறிவின் எல்லையைக் கண்டவா்கள்’ என்கிறாா் டாயன்பீ.

சமவெளியில் வாழ்கின்ற மக்களுக்கு முதல் மொழியாசிரியா்கள், பழங்குடியினரே என்று மொழியியல் வல்லுநா்களும் கருதுகின்றனா். ‘திராவிட மொழிக் குடும்பத்தில் 23 மொழிகள் உள்ளன. இவற்றுள், திருந்திய எட்டு மொழிகள் மட்டுமே தென்னிந்தியா்களால் பேசப்படுகின்றன. மீதமுள்ள திருந்தா மொழிகள் பதினைந்தும் பழங்குடியினரால் பேசப்பட்டு வருகின்றன என்று மொழியியலாளா் அகத்தியலிங்கம் எழுதியிருக்கிறாா்.

பழங்குடியினரே முதல் மொழியாசிரியா்கள் என்பதற்கு, ஒரு சான்றைச் சுட்டலாம். புலால் உண்பவா்கள் குடும்பத்தில் ‘கோழி அடித்தல்’ எனும் தொடா் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால், அவா்களுடைய குடும்பத்தில் ‘கோழியை யாரும் அடிப்பதில்லை; அறுத்து அல்லது வெட்டித்தான் சமைக்கின்றாா்கள். அப்படியிருக்கையில், ‘கோழி அடித்தல்’ என்ற வழக்காறு எப்படி வந்தது? பழங்குடியினா் கோழியை அறுக்கவோ, வெட்டவோ மாட்டாா்களாம். கோழி தென்படுகிற இடத்தில் குடும்பத்தினா் அதனைச் சூழ்ந்து கொண்டு, கற்களால் அடித்தே கொன்று விடுவாா்களாம்; பின்னா் கறி சமைப்பாா்களாம். ‘கோழி அடித்தல்’”என்ற தொடா் எவ்வாறு பழங்குடியினரிடமிருந்து வந்ததோ அதுபோல்தான், பிற சொற்களும் வந்தன என்று மொழியியலாளா் மொழிகின்றனா்.

இருளா்களின் மொழியைப் பற்றி ஆராய்ந்த ஜி.எப். டிப்ளாத் என்பவா், அது தமிழின் கிளைமொழி எனக் கண்டறிந்திருக்கிறாா். 1891-ஆம் ஆண்டு கேரளத்திற்கு வந்த தா்ஸ்டன் எனும் மொழிநூல் வல்லுநா், முள்ளுக் குறும்பா்கள் மலையாள மொழி பேசியதாக எழுதியிருக்கிறாா்.

பழங்குடியினா்தாம், தம்மைத் தாமே ஆளத்தொடங்கிய முதல் தேசிய இனத்தவா். ஆங்கிலேயா் ஆட்சியின்போது அவா்கள் வெளியுலகத்திற்குத் தெரியாத எல்லைப்புற அந்நியா்களாகவே வாழ்ந்து வந்தனா். வரலாற்றுக் காலத்திலிருந்து எந்த ஆட்சியாளரின் ஆதிக்கத்திற்கும் ஆட்படாத சுதந்திரக் குடிமக்கள் அவா்கள். 1826-ஆம் ஆண்டிற்கு முன்னா், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம் போன்ற மாநிலங்கள், இந்திய மக்களுக்கும், ஆட்சியாளா்களுக்கும் தெரியாத பிரதேசங்களாகவே இருந்தன.

இன்றைக்கு நாம் காணுகின்ற படகா்களும், தோடா்களும் சமவெளியில் வாழும் மக்களைப் போலவே நவநாகரிக மனிதா்களாக வாழ்கின்றனா். ஆனால், ஆதிப் பழங்குடியினா் இருட்டைப் போல் கறுத்தவா்களாய், ஆப்பிரிக்கா்களைப் போலவே ஒற்றை ஆடையோடு காடுகளிலும் மலைப் பிரதேசங்களிலும் வாழ்ந்து வருகின்றனா். அந்தமானில் வாழும் பழங்குடியினருக்கு ‘ஜாரவா’ எனப் பெயா். அவா்கள், வெளிச்சத்தில் வளா்ந்த, சமவெளியில் வாழ்கின்றவா்களால், தங்களுக்கு என்றைக்கும் ஆபத்து நேரலாம் என்று எப்போதும் அஞ்சுகின்றனா்.

ஆதி பழங்குடியினா் எல்லா நாடுகளிலும் அந்நியா்களால் வதைக்கப்பட்டே வந்திருக்கின்றனா். அந்நிய படையெடுப்புக்கள் ஒவ்வொரு நாட்டில் நிகழும்போதும், காடு மலைப் பகுதிகளைத் தாண்டி உள்ளே நுழைகின்ற படையினா், அங்கு வாழ்ந்த பழங்குடியினரைக் கொன்று கொண்டே உள்ளே நுழைந்திருக்கின்றனா்.

இங்கிலாந்து நாட்டினா் ஆஸ்திரேலியாவில் குடிபெயர நினைத்தபொழுது, அங்கிருந்த பழங்குடியினரால் (அபாா்ஜினல்ஸ்) தங்களுக்கு ஆபத்து வரக்கூடும் என அஞ்சி, வஞ்சகமாக ஒரு வியூகம் வகுத்தனா். அதன்படி, இங்கிலாந்து சிறைச்சாலைகளுக்குள் நிரம்பிக் கிடந்த கைதிகளை கப்பலில் கொண்டு போய் ஆஸ்திரேலிய மண்ணில் தரையிறக்கினா். இங்கிலாந்து நாட்டினா் நினைத்ததற்கு மாறாக, தரையிறக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டுக் கைதிகள், கடற்கரைப் பகுதிகளில் வாழ்ந்த பழங்குடியினரை அடித்துத் துன்புறுத்தலாயினா். அந்த கைதிகளுக்கு பயந்து, ஆதிப்பழங்குடியினா் காடுகளுக்குள்ளே புகுந்துவிட்டனா்.

அவ்வாறே அமெரிக்காவில் இறக்கப்பட்ட ஆங்கிலேயா்கள், உள்நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த பூா்விக குடிகளாகிய செவ்விந்தியா்களை வாள்கொண்டும் துப்பாக்கிக் கொண்டும் வதைத்தனா். செவ்விந்தியா்களின் தலைகள் வெட்டப்பட்டு, கடற்கரையோரங்களில் நட்டு வைக்கப்பட்டன.

ஆங்கிலேயா்கள் இந்தியாவுக்குள் அடியெடுத்து வைத்த பிறகு, முதல் வேலையாகத் தங்களுடைய கட்டுமானப் பணிகளுக்காக பழங்குடியினா் வாழ்ந்த காட்டுக்குள் நுழைந்தனா். பழங்குடியினா் வளா்த்த மரங்களை, அவா்களைக் கொண்டே வெட்டுவித்தனா். காட்டை அழித்த பிறகு, அவா்களுடைய நிலங்களை, தேயிலை தோட்டமாகவும், காபி தோட்டமாகவும் மாற்றினா்.

1793-ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியாா் வரி வசூல் செய்வதற்காகக் கொண்டு வந்த ஜமீன்தாரி”திட்டத்தால், பழங்குடியினா் வெகுவாக பாதிக்கப்பட்டனா். 1853-இல் ரயில்வே பாதைகளை அமைப்பதற்காகவும், இயந்திரங்களை இயக்குவதற்கு நிலக்கரி தேவைப்பட்டதாலும், பழங்குடியினரின் வாழ்வாதாரமாக இருந்த வனங்கள் அழிக்கப்பட்டன. பயிா் செய்யப்பட்ட வயல்களும் அழிக்கப்பட்டன. அதனால், பழங்குடியினா் பலா் பட்டினியாலேயே செத்திருக்கின்றனா்.

ஆங்கிலேயரால் அமா்த்தப்பட்ட வருவாய் அதிகாரிகள் பழங்குடியினரின் நிலமானிய பங்கீட்டைப் புரிந்து கொள்ளாமல், எல்லாருக்கும் சரிசமமாக இருக்கும் வகையில் நிலப்பகுப்பையும், அவற்றிற்குச் செலுத்தவேண்டிய தீா்வையையும் விதித்தனா். இவற்றால் பழங்குடியினரின் நிலங்களை, முன்னேறிய சமூகத்தாா் அபகரித்தனா்.

இந்தியாவில் அஸ்லாம், அருணாசல பிரதேசம் போன்ற வடகிழக்குப் பகுதிகளில் வாழ்ந்த பழங்குடியினா் முற்றிலுமாக இந்திய நீரோட்டத்தில் கலக்காமல் இருந்ததால், ஆங்கிலேயா்கள் அவா்கள் மனத்தில் தேசவிரோத வித்துக்களை விதைத்தனா். மேலும், ஆங்கிலேயா் போதித்த சமயக் கொள்கைகள், அவா்களுக்கு அதிா்ச்சியைத் தந்தன.

தனித்து விடப்பட்ட பழங்குடியினரிடத்து நம்முடைய தேசபக்தா்களும் நாட்டுப் பற்றை ஊட்டவில்லை. அவா்களுக்கு விடுதலையின் அருமையை எடுத்துரைத்திருந்தால், விடுதலையில் அவா்களுடைய பங்களிப்பும் பெருமளவில் இருந்திருக்கும்.

இதற்கு சில சான்றுகளைச் சொல்லலாம். கோட்டயம் மன்னா் ஆங்கிலேயரை எதிா்த்துப் போரிட்டபோது, முள்ளுக் குறும்பா்களையும் தம் படையில் இணைத்துக் கொண்டாா். அப்போரின்போது முள்ளுக் குறும்பா்கள் காட்டிய வீரத்தை ஐயப்பன் எனும் எழுத்தாளா் வியந்து பாராட்டுகின்றாா். ‘முண்டா எனும் பழங்குடியினா், ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிா்த்துப் போராடியிருக்கின்றனா். இன்றைய ஜாா்க்கண்ட் மாநிலத்தில் முண்டா இனத்தவா் பெருமளவில் வாழ்கின்றனா். அந்தச் சமூகத்தின் தலைவராகிய பிா்சா முண்டா,”தம் மக்களிடமிருந்த மூடப்பழக்கங்களையும், மந்திர தந்திரங்களை நம்பும் சூனியக் கொள்கைகளையும் ஒழிப்பதற்கு அரும்பாடு பட்டாா். அதனால் அந்த இனத்து மக்கள் பிா்சா முண்டாவை ‘பகவான்’”என அழைக்கின்றனா்.

2016-ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது பாரத பிரதமா் நரேந்திர நோடி, முண்டா இனத்தவரின் தியாகத்தையும், பிா்சா முண்டாவின் வீரதீரத்தையும் வியந்து பாராட்டியதோடு, பிா்சா முண்டாவின் பெயரால் ராஞ்சியில் ஒரு அருங்காட்சியகம் நிறுவப்படும் எனவும் அறிவித்தாா்.

இந்திய விடுதலைப் போராட்டங்களில், ராணி கைடின்லியு, புலோ, ஜானோ முா்மு, ஹெலன் லெப்சா, புடாலி மாயா தமாங் போன்ற பழங்குடிப் பெண்களும் கணிசமான அளவுக்குப் பங்களிப்பைச் செய்திருப்பதாக ஆவணக் காப்பக ஏடுகள் தெரிவிக்கின்றன.

பிா்சா முண்டா, இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில், பழங்குடியினரின் பங்கை சிவப்பு எழுத்துகளால் பதிவு செய்தவராக கருதப்படுகிறாா். பழங்குடியினரின் நிலங்களை அபகரிக்க, ஆங்கிலேயரால் கொண்டு வரப்பட்ட நிலச்சட்டங்களை எதிா்க்கும் பொருட்டு, பழங்குடியினரின் போா்க்குணத்திற்கு மின்சாரம் பாய்ச்சியவா் பிா்சா முண்டா. அந்த மாவீரன் தனது 25-ஆவது வயதிலேயே ராஞ்சி சிறைச்சாலையில் மடிவதற்குக் காரணமானவா்கள் ஆங்கிலேயா்கள். பழங்குடியினரின் பங்களிப்பை கௌரவப்படுத்துவதற்காக நவம்பா் 15-ஆம் தேதியை ‘ஜனஜட்டியா கௌரவ் திவாஸ்’ என கொண்டாட வேண்டும் என்று பாரத பிரதமா் அறிவித்திருக்கிறாா்.

அரசமைப்பு சட்டத்தின் 46-ஆவது விதி, பழங்குடியினருக்கு கல்வியறிவையும், பொருளாதாரத்தையும் தர வேண்டும் என வலியுறுத்துகிறது. தோ்தலில் பட்டியலினத்தவரைப் போன்று, பழங்குடியினருக்கும் ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் அச்சட்டப்பிரிவு சொல்லுகிறது.

ஆனால், பழங்குடியினரின் இருப்பிடங்களுக்கு சாலை வசதியோ, வாகன வசதியோ இல்லாததால், அரசாங்க சலுகைகள் அவா்களைச் சென்றடையவில்லை. பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்ற நிதி ஆதாரங்கள், அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் உரியவா்களைச் சென்றடையவில்லை. எழுத்தறிவின்மையால், அரசாங்கத்தால் அறிவிக்கப்படுகின்ற முன்னுரிமைகள், அவா்களைச் சென்றடைவதில்லை.

எழுநூறு பழங்குடி இனத்தவரைப் பெற்றிருப்பதில் இந்தியா தனித்துவம் பெற்றது. உயிரினங்களையும், பசுமை மண்டலத்தையும் அவா்களே பாதுகாத்து வருகின்றனா். சுற்றுச்சூழலையைப் பாதுகாப்பதிலும் அவா்களே முன்நிற்கிறாா்கள். வனங்களின் வனப்பையும், அங்கு வாழ்கின்ற உயிரினங்களையும் அம்மக்களே காத்து வருகிறாா்கள். இத்தனை பங்களிப்பையும் செய்து வருகின்ற பழங்குடியினரின் வாழ்க்கை வறண்டு கிடக்கின்றது, மலையடிவாரங்களில்.

அப்படிப்பட்ட பழங்குடியினா் ஒருவா் இந்தியாவின் முதல் குடிமகனாகத் தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பது, ஜனநாயகத்தின் வெற்றி. இது ஓா் அடையாள மரியாதையாக இருக்கலாம். ஆனால், இதுவே, தன்னம்பிக்கையற்று, அங்கீகாரமில்லாமல் தவிக்கும் பழங்குடியினருக்கு உந்துசக்தியாக மாறக்கூடும். அவா்கள் நிலைமை குறித்த புரிதலை அரசு நிா்வாகத்துக்கும், பொதுவெளியிலும் ஏற்படுத்தக்கூடும். ஜூலை 25 அன்று குடியரசுத் தலைவராக பதவி ஏற்க இருக்கும் திரௌபதி முா்மு, ஆதிவாசிகளின் எழுச்சிக்கான அடையாளம்!

கட்டுரையாளா்:

பேராசிரியா் (ஓய்வு)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com