அறிவைக் கூர்மையாக்கும் ஆட்டம்!

அறிவைக் கூர்மையாக்கும் ஆட்டம்!

 இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெறுவது தமிழர்கள் பெருமை கொள்ளத்தக்க நிகழ்வு. சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் இன்று (ஜூலை 28) முதல் ஆகஸ்ட் 10 வரை பதினான்கு நாட்கள் நடைபெற இருக்கிறது 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி.
 பொதுவாக விளையாட்டு என்பது உடலுக்கும் மனதுக்குமான பயிற்சி. ஆனால், செஸ் எனப்படும் சதுரங்க விளையாட்டு அறிவின் கூர்மைக்கான பயிற்சி ஆகும். இது கி.பி. 600-இல் "சதுரங்' என்ற பெயரில் இந்தியாவில் விளையாடப்பட்ட விளையாட்டு. 16-ஆம் நூற்றாண்டு வரை இந்த விளையாட்டு ஒரே மாதிரிதான் இருந்தது. அதிக மாற்றங்கள் இல்லை.
 பின்னர், சதுரங்க விளையாட்டில் பயன்படுத்தப்படும் காய்கள் தொடங்கி மணிக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது வரை பல மாற்றங்களைக் கண்டிருக்கிறது. 19-ஆம் நூற்றாண்டில்தான் சதுரங்க விளையாட்டில் பல விஷயங்கள் முறைப்படுத்தப்பட்டன.
 அதுவரை ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செஸ் போர்டையும் காய்களையும் வைத்து விளையாடி வந்தனர். இன்று நாம் செஸ் விளையாட்டில் பயன்படுத்தும் காய்களுக்கு ஒரு வடிவமைப்பு இருக்கிறது. ராஜா என்றால் உச்சியில் சிலுவை போன்ற ஒரு குறியீடு இருக்கும். ராணி என்றால் உச்சியில் மகுடம் தரித்தது போல் இருக்கும். இந்த தோற்றங்கள் ஜெக்ஸ் ஆஃப் லண்டன் என்ற பொம்மை தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த நத்தேனியல் குக் என்பவரால் 1849-ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டன.
 புதிய வடிவிலான காய்களை ஹாவர்டு ஸ்டான்டன் என்கிற அந்தக்காலத்து செஸ் வீரர் அங்கீகரித்தார். ஹாவர்ட் பயன்படுத்திய காய்கள் உள்ளூர் போட்டி தொடங்கி உலகப் போட்டி வரை பயன்படுத்தப்பட்டன. பின்னர் அந்தக் காய்களுக்கு ஸ்டான்டன் பேட்டர்ன் என்றே பெயர் வைத்து விட்டனர். இன்றுவரை உலக அளவில் நடக்கும் எல்லா முக்கியப் போட்டிகளிலும் ஸ்டான்டன் பேட்டர்ன் காய்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
 அதே போல ராஜா காய் 9.5 செ.மீ உயரமும், ராணி காய் 8.5 செ.மீ உயரமும், அமைச்சர் 7 செ.மீ, குதிரை 6 செ.மீ, யானை 5.5 செ.மீ, சிப்பாய் 5 செ.மீ உயரமும் இருக்க வேண்டும்; உயரத்தில் 40 முதல் 50% அளவிற்குத்தான் விட்டம் இருக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் எல்லாம் கொண்டு வரப்பட்டன. 19-ஆம் நூற்றாண்டில்தான் செஸ் போட்டியில் அதற்கான கடிகாரம் வைத்து விளையாடத் தொடங்கினர்.
 அதற்கு முன் ஆட்டத்தின் தீவிரத்தைப் பொறுத்து 14மணி நேரம் வரை கூட விளையாடப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் செஸ் உலக சாம்பியன்ஷிப் பட்டம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
 1800-களில் இருதரப்பிலும் செக் மேட் வைப்பதை முக்கிய இலக்காகக் கொண்டுதான் ஆடினர். தங்கள் தரப்பில் உள்ள காய்களைப் பொறுமையாக நகர்த்தும் கோட்பாடெல்லாம் அப்போது அதிகம் கடைப்பிடிக்கப்படவில்லை. அக்காலகட்டத்தில்தான் பால் மர்ஃபி என்கிற வீரர் உலக சதுரங்க களத்திற்கு வந்தார். அவர், நிதானத்தோடும் அழகியலோடும் தாக்குதல் நடத்தும் முறையை அறிமுகப்படுத்தினார்.
 அவர், ஐரோப்பிய கண்ட முன்னணி செஸ் வீரர்கள் பலரோடு மோதி வெற்றிவாகை சூடினார். அவர்களில் அடால்ப் ஆன்டர்சன், லூயிஸ் பால்சன், டேனியல் ஹார்விட்ஸ் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
 1858-ஆம் ஆண்டு கால், கவுன்ட்இசார்ட் ஆகியோரோடு பால் மர்ஃபி ஆடிய விளையாட்டு இன்றுவரை சதுரங்க விளையாட்டின் மிக முக்கியமான போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அந்த ஆட்டத்தில் பால் மர்ஃபி சடசடவென எல்லாக் காய்களையும் வீழ்த்தி ஆட்டத்தின் 16-வது நகர்வில் எதிர்த்தரப்புக்கு செக் வைத்து ஆட்டத்தை முடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
 வில்ஹெம் ஸ்டெய்னிட்ஸ் என்கிற அமெரிக்க ஆஸ்திரியர்தான் உலகின் முதல் அதிகாரபூர்வ செஸ் சாம்பியன். 1886-ஆம் ஆண்டு முதல் 1894-ஆம் ஆண்டு வரை இவரை எவராலும் வீழ்த்த முடியவில்லை. அதிரடி ஆட்டத்தையெல்லாம் விலக்கி வைத்துவிட்டு, திட்டமிட்டு ஆடும் முறையை இவர் பிரபலப்படுத்தினார். கேம்பிட்பான் முறையை இவர் ஏற்று அதன்படி விளையாடி மெல்ல மெல்ல காய்களை வெட்டிச் சாய்த்து வெற்றியை உறுதி செய்ததை இவரின் அசாத்திய திறமை என்றே சொல்லாம். செஸ் விளையாட்டில் பொசிஷன் எடுத்து விளையாடுவதை பிரபலப்படுத்தியவரும் இவர்தான்.
 இவரை வெல்ல எவரும் இல்லை என்று செஸ் ரசிகர்கள் எண்ணிக் கொண்டிருக்கும் போது, ஜெர்மனில் இருந்து இமானுவல்லஸ்கர் என்கிற சதுரங்கப் புயல் செஸ் விளையாட்டு உலகில் மையம் கொண்டது. அன்றைய மிகச்சிறந்த செஸ் வீரரான வில்ஹெம்மை வீழ்த்தினார் இமானுவல்லஸ்கர். உலக செஸ் வரலாற்றிலேயே அதிக காலம் (27ஆண்டுகள்) உலக சாம்பியனாக திகழ்ந்தவர் இவரே. இவரும் வில்ஹெம்மைப் போல பொசிஷன் எடுத்து விளையாடுவதில் நிபுணத்துவம் பெற்றவர்.
 1921-ஆம் ஆண்டு இமானுவலை வீழ்த்திய ஜோஸரால் காபாபிளாங்கா, உலகின் 3-ஆவது செஸ் சாம்பியன் ஆவார். ஒவ்வொரு நகர்வையும் திட்டமிட்டு, கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்தி ஆட்டத்தின் இறுதியில் எதிரியை வெல்வது இவரது தனித்துவ முறையாகும். இன்றுவரை இவரது எண்ட் கேம் டெக்னிக்கை எந்த செஸ் சாம்பியனாலும் குறைசொல்ல முடியவில்லை. அந்த அளவிற்கு சிறப்பான உத்தி அது. இப்படி சிறப்பாக விளையாடி உலகையே வியக்க வைத்த சதுரங்க நாயகனான இவர் அதிக காலம் செஸ் உலகில் நீடிக்கவில்லை. ஆறே ஆண்டுகளில் ஆட்டங்களிலிருந்து விலகினார்.
 1920-களில் சதுரங்க விளையாட்டில் ஹைபர்மாடர்னிசம் தலைதூக்கியது. களத்தின் மையத்தில் உள்ள சதுரங்களை வெறுமனே காய்களைக் கொண்டு பிடித்து இழுப்பதற்கு மாற்றாக சதுரங்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் முறை தொடங்கியது. அப்போது, ஆரோன் நிம்சோவிச், எஃபிம் பொகொல்யுபோவ், ரிச்சர்ட் ரெடி, எர்ன்ஸ்ட் க்ரன்ஃபெல்ட் என பல திறமையான ஆட்ட வீரர்கள் களத்தில் நுழைந்தனர்.
 இக்காலகட்டத்தில்தான் தொடக்க நிலை காய்களை நகர்த்தும் முறைகள் மேம்படுத்தப்பட்டன. இந்தியன் டிஃபென்ஸ், திக்ரன்ஃபெல்ட் டிஃபென்ஸ், தி பெனானி டிஃபென்ஸ் ஆகிய டெக்னிக்குகள் பரவலாகத் தொடங்கின.
 உலகின் நான்காவது செஸ் சாம்பியனான அலெக்ஸாண்டர்அல்கெயின் விளையாடிய அல்கெயின் டிஃபென்ஸ் உலகப் புகழ் பெற்றது. அதுவரை உலக சாம்பியன்கள் ஒரே வகையான ஆட்ட முறையையே கடைப்பிடித்தார்கள். ஆனால், இவர் மட்டும்தான் முற்றிலும் புதிய பாணியில் விளையாடினார். எதிர்த்தரப்பின் ஆட்ட முறையைப் பொறுத்து, அதிரடியாகவோ, பதுங்கிப் பாய்ந்தோ, நிதானமாகத் திட்டமிட்டோ ஆடுவது என்பதே இவரது ஆட்ட முறையாகும். இவர், 1927 முதல் 1946 வரை உலக சாம்பியனாக வலம் வந்தவர். தனது இறுதிக்காலம் வரை செஸ் சாம்பியனாக இருந்தவர் அலெக்ஸாண்டர்அல்கெய்ன் ஒருவர்தான்.
 1948-ஆம் ஆண்டில் இருந்து உலக செஸ் சம்மேளனத்தின் மேற்பார்வையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. அதில் ரஷியாவின் மிகெல்பொட்வின்னிக் வென்று செஸ் உலக ராஜாவானார். எதிரணிக்குத் தகுந்தாற்போல் தனது காய்களை நகர்த்துவது மிகெல்பொட்வின்னிக்கின் முக்கிய உத்தியாகக் கருதப்பட்டது. 1927-இல் இருந்து 2006 வரை ரஷிய நாட்டினர்தான் உலக சதுரங்கத்தை தீர்மானிக்கக் கூடிய வல்லமை படைத்தவர்களாகத் திகழ்ந்தார்கள்.
 இந்தியாவைச் சேர்ந்த, குறிப்பாக நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வநாதன்ஆனந்த் 2000 ஆண்டு வாக்கில் உலக செஸ் சாம்பியனானார். அதுபோன்றே, பிரக்ஞானந்தா என்ற இளைஞர் இந்தியாவுக்காக களத்தில் நிற்கிறார். அவரை ஒரு புதிய மாற்றத்திற்கான அடையாளமாகவே நாம் பார்க்கலாம். ரஷிய தலைநகரான மாஸ்கோவில் நடைபெற இருந்த 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, ரஷியா - உக்ரைன் போர் காரணமாக சென்னைக்கு வந்திருக்கிறது.
 கடந்த ஆட்சியில் நான் இளைஞர்நலன், விளையாட்டுத்துறை அமைச்சராகப் பணியாற்றியபோது, விளையாட்டுக்காக கூடுதல் நிதி ஒதுக்கி பல்வேறு ஆக்கபூர்வ பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அக்காலகட்டத்தில் ஒலிம்பிக்கில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தபோது அதனைப் பாராட்டாதவர்களே இல்லை எனலாம். அந்தவகையில் இன்று 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெறுவதை விளையாட்டுத்துறையின் முன்னேற்றமாகவே நாம் பார்க்கலாம்.
 செஸ் என்பது தனிநபர் விளையாட்டு. அதனை ஒரு அணியாக விளையாடினால் எப்படி இருக்கும் என்று தோன்றலாம். அதற்குப் பெயர்தான் செஸ் ஒலிம்பியாட். இதில் ஒவ்வோர் அணியிலும் நான்கு வீரர்கள் இடம் பெற்றிருப்பார்கள். இந்த நான்கு பேரும் நான்கு வெவ்வேறு செஸ் போர்டில் ஒரே நேரத்தில் விளையாடுவார்கள்.
 வழக்கமான செஸ் போட்டி போன்று இது கிடையாது. இப்போட்டியில் குறிப்பிட்ட நேரத்தில் காய்களை நகர்த்தி ஆட்டத்தை முடிக்க வேண்டும். வெற்றி பெற்றால் இரண்டு புள்ளிகள், தோல்வி அடைந்தால் புள்ளிகள் ஏதுமில்லை. போட்டி சமனில் முடிந்தால் புள்ளிகள் வழங்கப்படாது. ரவுண்ட்ராபின் முறைப்படி போட்டிகள் நடைபெறும்.
 விளையாட்டுப் போட்டி என்றாலே ஆற்றல், திறமை, விறுவிறுப்பு என நிறைய அம்சங்கள் இடம் பெற்றிருக்கும். ஆனால், செஸ் எனப்படும் இந்த சதுரங்க விளையாட்டு, விளையாடுகிறவர்கள் நிதானத்தோடும், பார்ப்பவர்கள் பதற்றத்தோடும் பங்கேற்கும் ஓர் அற்புதமான விளையாட்டு ஆகும்.
 
 கட்டுரையாளர்:
 முன்னாள் அமைச்சர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com