கல்லூரிக் கல்வியில் கவனம் தேவை

கோப்புப் படம்.
கோப்புப் படம்.

 நம் நாட்டில் கல்லூரி படிப்பிற்குச் செல்லும் 18 முதல் 24 வயது வரையிலானவர்களில் 100 பேரில் 12 பேர் மட்டுமே கல்லூரிக்குச் சென்று படிக்கும் வாய்ப்பினைப் பெறுகின்றனர். இது தேசிய அளவில் 1.4 கோடி ஆகும். இதனை வளர்ந்த நாடுகளுக்கு இணையாகக் கொண்டு வர ஏராளமான பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் தேவைப்படும் என மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கணக்கிட்டுள்ளது.
 கடந்த சில ஆண்டுகளில் கல்லூரி செல்லும் மாணவியர் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளில் மாணவியர் எண்ணிக்கை அதிகமாகவும், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவும், அதாவது ஒற்றை இலக்கத்திலும் உள்ளது.
 குறிப்பாக தமிழ், வணிகவியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவியர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அண்மையில் வெளியான புள்ளிவிவரங்கள் இதை தெரிவிக்கின்றன.
 நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களிடமிருந்து மாணவ, மாணவியர் சேர்க்கை உள்ளிட்ட புள்ளிவிவரங்களைப் பெற்று மத்திய கல்வி அமைச்சகம் ஆண்டுதோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன்படி நடந்த ஆய்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், 40 ஆயிரம் கல்லூரிகள், 10 ஆயிரம் தனிப்பட்ட கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன.
 இந்த ஆய்வின் மூலம் கிடைத்த புள்ளிவிவரங்களின்படி 2015 - 2016 முதல் 2019- 2020 வரையான ஐந்தாண்டுகளில் உயர்கல்வியில் மாணவ, மாணவியர் சேர்க்கை 11.4 % வளர்ச்சி அடைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதே காலகட்டத்தில் உயர்கல்வியில் சேர்க்கை பெற்ற மாணவியர் எண்ணிக்கை 18.2 % அதிகரித்துள்ளது.
 ஒட்டுமொத்த உயர்கல்வியில் பாலின சமநிலை என்பது கடந்த 2018 - 2019-ஆம் ஆண்டில் 1 என்ற விகிதத்தில் இருந்தது 2019 - 2020-ஆம் ஆண்டில் 1.01 என்ற அளவில் மாணவியர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
 உயர்கல்வியில் மாணவ, மாணவியர் சேர்க்கை தொடர்பான இவ்வாய்வில் ராஜஸ்தானில் 3 மகளிர் பல்கலைக்கழகங்கள், தமிழகத்தில் 2 மகளிர் பல்கலைக்கழகங்கள், 11 மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பல்கலைக்கழகம் என 16 மகளிர் பல்கலைக்கழகங்கள் பங்கேற்றன.
 ஆய்வு முடிவில், உயர்கல்வி பயிலும் மாணவியர் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதல் இடத்திலும், மகாராஷ்டிரம் இரண்டாம் இடத்திலும் உள்ளன. மூன்றாம் இடத்தில் உள்ள தமிழகத்தில் உயர்கல்வி சேர்க்கையில் மாணவர்கள் எண்ணிக்கை 50.5 % ஆகவும், மாணவியர் எண்ணிக்கை 49.5 % ஆகவும் உள்ளது.
 இளநிலை படிப்புகளைப் பொறுத்தவரை, கலை, அறிவியல் பாடங்களில் குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளில் மாணவியர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மருத்துவம் தொடர்பான படிப்பில், செவிலியர் பாடப்பிரிவில் மாணவியர் எண்ணிக்கை மாணவர்களைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமாக உள்ளது. பொறியியல் படிப்பில் மற்ற பிரிவுகளைக் காட்டிலும் கட்டடக்கலை (பி.ஆர்க்.) பாடப்பிரிவில் மாணவியர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
 முதுநிலை படிப்புகளைப் பொறுத்தவரை, கலை, அறிவியல், வணிகவியல் பாடப்பிரிவுகளில் மாணவியர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதே வேளையில், வணிக நிர்வாகம் (எம்.பி.ஏ.) கணினி பயன்பாடு (எம்.சி.ஏ., முனைவர் பட்ட ஆய்வு (பிஎச்.டி.) ஆகியவற்றில் மாணவியர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மருத்துவம், அது சார்ந்த இதர படிப்புகளில் மாணவியர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் அதே வேளையில் சட்டப்படிப்புகளில் மாணவியர் சேர்க்கை குறைவாக உள்ளது.
 அண்மைக்காலமாக இளநிலை பயிலும் மாணவியர் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே வேளையில் முதுநிலையில் குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகள், முனைவர் பட்ட ஆய்வு ஆகியவற்றில் மாணவியர் எண்ணிக்கை குறைவான அளவிலேயே உள்ளது. அரசு கல்லூரிகளில் அதிகமானோர் விண்ணப்பிகும் இளநிலை பாடப்பிரிவு இரு சுழற்சியாக நடைபெறுகிறது. ஆனால், முதுநிலை பாடப்பிரிவில் இம்முறை பின்பற்றப்படுவதில்லை.
 இதனால் இளநிலை பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெறும் அனைவரும் முதுநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்கும்போது அனைவருக்கும் சேர்க்கை கிடைப்பதில்லை. இவ்வாறு சேர்க்கை கிடைக்காத நிலையில், சிலர் தனியார் கல்லூரிகளில் முதுநிலை சேர்க்கை பெறுகின்றனர். ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளோர் தொடர்ந்து பயில்வதற்கு இயலாமற் போய்விடுகிறது.
 தனியார் கல்லூரிகளில் வணிகவியல் (பி.காம்.), வணிக நிர்வாகம் (பி.பி.ஏ) போன்ற பாடப்பிரிவுகளுக்கு அதிகமானோர் விண்ணப்பித்தால் கூடுதல் பிரிவுகள் தொடங்கப்படுகின்றன. ஆனால், அரசுக் கல்லூரிகளில் போதுமான கட்டட வசதிகள் இல்லாதது, பற்றாக்குறையான பேராசிரியர்கள் ஆகியவற்றால் குறைவான அளவிலேயே சேர்க்கை நடைபெறுகிறது.
 கடந்த சில ஆண்டுகளைப் போன்றே நடப்பு கல்வியாண்டிலும் தமிழ், வணிகவியல், வணிக நிர்வாகம், கணினி அறிவியல் போன்ற பாடப்பிரிவுகளில் அதிகமானோர் சேர்க்கை பெற்றுள்ளனர். பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ளவர்களே அரசுக் கல்லூரிகளைத் தேர்வு செய்கின்றனர். எனவே, இத்தகைய குறைபாடுகளை களைந்து அதிகமானோர் சேர்க்கை பெற வழிவகை செய்யப்பட வேண்டும்.
 மாணவியர் பட்டப்படிப்பு பயில்வதே குறைவாக இருந்த நிலையில், சமீப காலமாக அதிக மாணவியர் உயர்கல்வியில் சேர்க்கை பெறுகின்றனர் என்பது மகிழ்ச்சியான ஒன்றாகும். இதில், மாணவியர் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்யவும், அவர்களைத் தக்க வைக்கவும், அதனைத் தொடர்ந்து ஆராய்ச்சி படிப்புகளில் மாணவியர் சேர்க்கையை அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com