விருதுகளுக்கு அப்பால்...

பாராட்டுரைகள், பட்டங்கள் அனைத்தையும் விட, செயற்கருஞ்செயல்களால் நிலைபெறும் பெயர் ஒன்றே சிறப்பு. கம்பனும், பாரதியும், ஔவையாரும் எந்த விருதுக்காக  எழுதிப் புகழ் கொண்டார்கள்?
விருதுகளுக்கு அப்பால்...


அண்மையில் எனக்கு வந்த கடிதங்களில் ஒன்று, "விருது பெறுதற்குத் தங்கள் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது' என்ற அறிவிப்புடனானது. எனக்கு மட்டுமல்ல, இப்படியான கடிதங்கள் பலருக்கும் வந்திருக்கலாம். அம்மடலில், "தங்களுக்கு விருது வழங்க விரும்புகின்றோம். இத்துடன் உள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, நீங்கள் விரும்பும் விருதைக் குறிப்பிட்டு, உங்களின் தன்விவரக்குறிப்புடன், மூன்று புகைப்படங்களையும் இணைத்து அனுப்பவும். 

இதற்கான கட்டணம் இவ்வளவு. செலுத்தியமைக்கான ரசீதையும் இணைத்துக் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பவும். விருது, கேடயம், பொன்னாடை ஆகியவை தங்களுக்கு இன்னாரால் வழங்கப்படும். விழா நாள், நேரம், இடம் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய இறுதிநாள் இது' என்ற செய்திகளோடு, முந்தைய ஆண்டுகளில் யாரெல்லாம் விருது பெற்றிருக்கிறார்கள் என்பதற்குரிய செய்திகளும் படங்களும் இணைக்கப்பட்டிருந்தன.

முன்பெல்லாம் இத்தகு அறிவிப்புக் கடிதங்கள் அஞ்சலில் மட்டுமே வந்து கொண்டிருந்தன. இப்போது மின்னஞ்சலில் வருவதோடு, கைப்பேசி அழைப்புகளிலும் வரத்தொடங்குகின்றன. இதைவிடவும், "என் பணிகள் இவை. இதற்கான விருதோ, பரிசோ வழங்குதற்குப் பரிந்துரை செய்யுங்கள் அல்லது தாருங்கள்' என்று தன்விவரக்குறிப்புகள் தாங்கிவரும் மடல்களும் வரும்' என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். 

இப்படியொரு போக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து இப்போது அங்கிங்கெனாதபடி எங்கும் எழுந்திருக்கின்றது. ஊரடங்கு காலத்தில் ஓய்ந்து கிடந்துவிட்டு, இப்போது மீளவும் கிளம்பியிருக்கின்றது. இதற்காக யாரையும் குறை சொல்ல முடியாது. அவரவர்க்குத் தேவைகள் இருக்கின்றன. தகுதியாளர்களுக்கு உரிய மரியாதை செய்யவும், அந்தத் துறையில் வல்லவர்களை அங்கீகாரம் செய்து, அடுத்து வருவோர்க்கு அடையாளம் காட்டவும் அத்தகையோரைத் தேடிக் கண்டுபிடித்து விருதுகள், பரிசுகள் வழங்குகின்ற அமைப்புகளும் இருக்கின்றன. 

விண்ணப்பிக்கச் சொல்லி விளம்பரப்படுத்தி தக்கோரைத் தேர்ந்து தருகின்ற நிறுவனங்கள் இன்னமும் முறைப்படி இயங்குகின்றன. இவற்றுக்கிடையே, இதையும் ஒரு தொழிலாகக் கொண்டு ஆண்டுதோறும் நடத்திக் கொண்டிருக்கின்ற குழுக்களும் செயல்படுகின்றன. விளம்பரம், அதன் வாயிலாக பிரபலம், அதுவே நிலைபெறு புகழ் என்ற எண்ணமும் தூண்டுதலும் இதற்கு அடிப்படைக் காரணங்கள். அத்துடன் எதையாவது செய்தாக வேண்டுமே என்கிற உந்துதல்.

இதைவிடவும், "இன்னார்க்கு இன்ன விருது ஏன் தரப்படவில்லை' என்றும், "சிலர்க்கு ஏன் இந்த விருதுகள் தரப்படுகின்றன' என்றும்  சர்ச்சைகள் எழுப்பப்படுகின்றன. ஜனநாயக நாட்டில் இவை தவிர்க்க முடியாதவை மட்டுமல்ல, ஆரோக்கியமான முறையில் விவாதங்களாக நடத்தப்பெற வேண்டியவையும்கூட.

"இந்த விருது பெற்றமையால், இவருக்குப் பெருமை' என்றும், "இந்த விருது இவரால் பெருமை பெறுகிறது' என்றும் பாராட்டுப் பத்திரங்கள் அடிக்கடி படிக்கப்படுகின்றன. அவ்வப்போது சொல்லவும் படுகின்றன. அவை பொருத்தமாகவும் இருப்பதுண்டு; மிகைபட அமைதலும் உண்டு. இதற்கெல்லாம் மயங்காத தகுதியாளர்களும் இருக்கிறார்கள். ஒன்றுபோல் தோன்றினாலும், புகழ், பிரபலத்துவம், பெருமை ஒவ்வொன்றும் வெவ்வேறானவை.

புகழுக்கும், பெருமைக்கும் இரண்டு அதிகாரங்களில் (24, 98) இருபது குறட்பாக்களில் விளக்கம் தந்திருக்கிறார் திருவள்ளுவர். முதலாவது, அறத்துப்பாலிலும், அடுத்தது, பொருட்பாலிலும் இடம்பெறுகின்றன. அதன்வழி, "அழியாத பேரறம் புரிவதால் வருவது புகழ்' என்பதும், "அறவழி நின்று ஈட்டிய பொருள் கொண்டு எய்துவது பெருமை' என்பதும் விளக்கம்பெறுகிறது.

"இல்வாழ்க்கை முதல் ஈகை வரை சொல்லப்பட்ட இல்லறத்தின் வழுவாதார்க்கு, இம்மைப் பயனாகிய இவ்வுலகின்கண் நிகழ்ந்து இறவாது நிற்கும் கீர்த்தி' என்று புகழுக்கு மேல் விளக்கம் செய்வார் பரிமேலழகர். இவரே, "செயற்கு அரிய செய்தல், தருக்கு இன்மை, பிறர் குற்றம் கூறாமை என்று இவை முதலிய நற்குணங்களால் பெரியாரது தன்மை. நிலையினும் மேன்மேல் உயர்த்தல் பயத்தலாய இவை உளவாவது நிலையின் தாழாமை' என்றும் பெருமையை விளக்குகிறார். 

இவ்வாறு, பெருமைக்கும் புகழுக்கும் இலக்கணம் வகுத்த திருவள்ளுவர், பலரும் அறிய பிரபலப்படுத்திக் கொள்ளும் தன்மை குறித்துப் பின்வருமாறு எச்சரிக்கையும் செய்திருக்கிறார்.

மலர்அன்ன கண்ணாள் முகம் ஒத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி
நிலவே!

மலர் போன்ற கண்ணை உடையவளின் முகத்தைப்போல் விளங்கவேண்டும் என்றால், நீ பலரும் காணுமாறு தோன்றாதே. இது நிலவாகிய மதிக்குச் சொல்லியதுதான் என்றாலும், அது கேட்குமா என்ன? நாம் மதிமயங்கிவிடலாகாது என்று மறைமுகமாக உணர்த்தப்படும் உண்மை இது.

மதி என்பதற்கு அறிவு என்றும் பொருள் உண்டல்லவா? "பலர் காணத் தோன்றிவிட்டால் பிரபலமாகிவிடலாம்' என்கிற ஆசை பலருக்கும் இருக்கிறது. அது தவறன்று. பலரும் அறியத்தக்க வகையில் பயன்தரு செயல்களைப் புரிவதே தேவை.

ஒருமுறை எழுத்தாளர் ஜெயகாந்தன் சொன்னார், "என்னை எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால், நான் அறிந்துகொள்ளப்படவேண்டியவன்' என்று. தெரிந்துகொள்ளுதல் வேறு. அறிந்துகொள்ளுதல் வேறு என்பதைப் புரிந்துகொண்டால், இந்த விளக்கங்கள் மேலும் தெளிவாகும்.

பலரது பாராட்டுரைகள், விளம்பரப் பேருரைகள், பெயருக்கு முன்னோ, பின்னோ சேர்க்கப்பெறும் பட்டங்கள் இவை அனைத்தையும் விட, தத்தம் செயற்கருஞ்செயல்களால் நிலைபெறும் பெயர் ஒன்றே சிறப்பு. கம்பனும், பாரதியும், ஔவையாரும் இன்னபிற புலவர்களும் எந்த விருதுக்காக, பரிசுக்காக எழுதிப் புகழ் கொண்டார்கள்? தனக்குப் புகழும் பெருமையும் வரும் என்று கருதியா வேள் பாரி முல்லைக்குத் தேர் கொடுத்தான்?

அதேசமயத்தில், இயற்பெயர்களைவிடவும் புனைபெயர்கள் கொண்டவர்களும், பட்டப்பெயர்களாலேயே அறியப்பெறுகிறவர்களும் புகழ்பெற்று விளங்குகிறார்கள். திருக்குறளார், சிலம்புச் செல்வர், சிலம்பொலியார், கம்பனடிப்பொடி ஆகிய பெயர்களை நினைவுகூரலாம்.

பாராட்டு மொழிகளும், புகழ்மிக்க தொடர்களால் ஆன பட்டங்களும், உபசார வார்த்தைகள் என்று புரிந்து கொண்டவர்களும் இருக்கிறார்கள். இவற்றை விரும்பி, விரைந்து செயல்பட்டவர்களின் பெயர்கள் அதே வேகத்தோடு காணாமல் போகவும்  நேர்ந்துவிடுகின்றன.

வாழும்போது புகழப்படுதல் புகழல்ல. அது எதிர்பார்ப்புக்குரிய கையூட்டேயாம். ஒருவர் இறந்தபின், இறந்தவரின் சமுதாய நடப்பியலுக்கு அவருடைய தேவையை, இருப்பை எண்ணிப் பேசும் புகழே, புகழ் என்பார் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக்காது,
இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது!
வளமார் கவிகள் வாக்குமூ லங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு!
என்பது கவியரசு கண்ணதாசனின் வாக்குமூலம்.

அதற்காக, வாழும் காலத்திலேயே தகுதியாளர்களைப் பாராட்டவேண்டாம் என்பதல்ல. வாழும் காலத்தில் பாராட்டப்பெறுவது, அடுத்து வாழப்போகிற தலைமுறையினருக்கு வழிகாட்டியராக, அத்தகுதியாளர்கள் இருக்கவேண்டும் என்பதே. அதுமட்டுமன்றி, "விருதுக்காகவோ, விளம்பரத்திற்காகவோ, பொருளுக்காகவோ, புகழுக்காகவோ அல்ல, நான் செய்யும் பணிகள்' என்கிற உறுதிப்பாடு உடையவர்களைத் தேடிச் சென்று இத்தகு சிறப்புக்கள் சேரவேண்டும் என்பதே கருத்து.

"பரிசு வாங்கிச் செல்வதற்காக, குன்றும் மலையும் பின்செல்லும்படியாக, விரைந்து உன்னிடம் வந்தேன் என்று எண்ணவேண்டாம். என் தகுதியறிந்து, தினை அளவு சிறிய பரிசில் ஈந்தாலும் அதன் பெருமை உணர்ந்து பெறுவேன். என் தகுதி இன்னதென்று காணாது ஈத்த இப்பொருளைப் பெறுதற்கு, "யான் ஓர் வாணிகப் பரிசிலன் அல்லேன்' என்று நெஞ்சுரத்தோடு பாடியவர் சங்கப்புலவர் பெருஞ்சித்திரனார் (புறம் 208) 

பழிக்கு அஞ்சுதலும், புகழுக்கு நாணுதலும் பண்புடையாளர்களின் இயல்பு. அத்தகு "பண்புடையாளர்களால்தான், இந்த மாநிலம் மண்புக்கு மாயாது இருக்கிறது' என்பது திருக்குறள் தரும் தெளிவு. பரிசுகளும் விருதுகளும் வரலாம், வராமலும் போகலாம். அதற்காக, "ஈயென இரத்தல் இழிவு.  ஈயேன் என்றல் அதனினும் இழிவு' என்று பாடிய கழைதின் யானையார் என்னும் சங்கப் புலவர், "கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தது. அதன்எதிர் கொள்ளேன் என்றால் அதனினும் உயர்ந்தது' என்கிறார் (புறம் 204).

படைப்போ, பணியோ எதுவாக இருந்தாலும், அதற்கான அங்கீகாரம் என்று நினைக்கும் புகழும் பெருமையும், பரிசுகளைவிட, விருதுகளைவிட மக்கள் மனங்களை வென்றெடுப்பதில் இருக்கின்றன; அவர்கள் மனங்களில் நின்று நிலைப்பதில் சிறக்கின்றன. அத்தகையோரைத்தான், இந்த உலகம் என்றும் வரவேற்கிறது; வாழ்த்துகிறது; தகுதியாளர்கள் என்று முன்னிறுத்துகிறது. அவ்வழி வருவோரை முன்மொழிகிறது. அந்த வழியில், "மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர் தம் புகழ் நிறுவி' தலைசிறந்தவர்களாக விளங்குபவர்களை வரலாறு போற்றுகிறது.

முன்பெல்லாம் இத்தகு பரிசுகளும், விருதுகளும் அவ்வளவாக இல்லை. இன்றைக்கு ஊர்தோறும் பல்வேறு அமைப்புகள் வந்திருக்கின்றன; வளர்ந்திருக்கின்றன. பொன்னாடை, பொற்கிழி, கேடயம் உள்ளிட்ட எத்தனையோ பரிசுப்பொருள்களும் வழங்கப்படுகின்றன. அவை கருதிப் படைக்கப்படுகிற நூல்களும், செய்யப்படுகின்ற பணிகளும் நிறைந்து வருகின்றன. 

அவை தரம் மிக்கவையாக இருக்கின்றனவா, இல்லையா என்கிற ஆய்வு செய்வதைவிடவும், இலக்கியமோ, பணிகளின் இலக்கோ, பரிசுகளுக்கும், விருதுகளுக்கும் அப்பால் என்றும் இவ்வுலகம் நன்றாகும்படியாகச் செய்யும் செயல்களாக நிலைபெற்று இருக்கவேண்டும் என்பதே நம் விழைவு. 

கட்டுரையாளர்: எழுத்தாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com