மரித்துவிடலாகாது மனிதம்!

மரித்துவிடலாகாது மனிதம்!

அண்மையில் ஆந்திர மாநிலத்தில் நடந்த ஓர் ஈவு இரக்கமற்ற செயல், இதயத்தைக் கனக்கச் செய்துவிட்டது. திருப்பதிக்கு அருகில் அன்னமையா மாவட்டத்தில் சித்வெல் என்றோர் கிராமம் உண்டு. பழங்குடி மக்கள் வாழ்கின்ற கிராமம் அது. அங்கு நரசிம்மலு என்பவர், ஒரு மாம்பழத் தோப்பில் மாதம் ரூ. 4,000 ஊதியத்திற்கு தோட்டக்காரராக வேலை பார்த்து வருகிறார். அவருக்குப் பத்து வயதில் ஜாஸ்வா என்றொரு மகன் இருந்தான்.
 அந்த மகன் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, திருப்பதியிலுள்ள எஸ்.எஸ்.ஆர்.ஆர். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான். வசதி படைத்தவர்களுக்கு சிறுநீரகம் தருவதற்குப் பலர் வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். ஆனால், ஏழைகளுக்கு இறைவனை விட்டால் ஏது கதி? ஜாஸ்வா ஒரே நேரத்தில் சிறுநீரகமும் கல்லீரலும் பாதிக்கப்பட்டு 25.4.2022 இரவு 11மணிக்கு, இறந்து விடுகிறான்.
 மருத்துவமனை அதிகாரிகள், இரவு இரண்டு மணிக்கு இறந்த மகனின் உடலை, நரசிம்மலுவிடம் கொடுத்து, உடனடியாக எடுத்துப் போக வற்புறுத்தினர். கலங்கி நின்ற நரசிம்மலு, ஆம்புலன்சுக்கு ஏற்பாடு செய்து தரும்படி கெஞ்சினார். ஏழையின் சொல் அம்பலம் ஏறவில்லை.
 மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தியிருந்த தனியார் ஆம்புலன்சு ஓட்டுநர்களிடம் தம் நிலையை எடுத்துச் சொல்கிறார் நரசிம்மலு. திருப்பதியிலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் சிக்வெல் கிராமத்திற்கு, உடலை எடுத்துச் செல்வதென்றால் ரூ. 20,000 வேண்டும் எனக் கூறினர் அங்கிருந்த ஆறு ஓட்டுநர்களும். தாம் மாதம் ரூ. 4,000-க்கு வேலை பார்க்கும் தோட்டக்காரன் என்று கெஞ்சிக் கூத்தாடிப் பார்க்கிறார் நரசிம்மலு. இறுகிப் போனவர்கள் இளகவில்லை.
 தமிழ்நாட்டில் இலவச ஆம்புலன்ஸ் 108 போல், ஆந்திரத்தில் ஏழை எளியவர்களுக்கு உதவ "மகாபிரஸ்தானம்' எனும் இலவச வாகனங்களை அந்த அரசு, பொது மருத்துவமனைகளுக்கு வழங்கியிருக்கிறது. அந்த வகையில் எஸ்.எஸ்.ஆர்.ஆர். மருத்துவமனைக்கு மூன்று வாகனங்கள் உண்டு. அந்த மூன்றில் ஒன்றுகூட அந்த நேரத்தில் அங்கு இல்லை.
 என்றாலும், "அமரர் ஊர்தி' வாகனங்கள் மூன்று நின்றிருந்தன. அந்த மூன்றில் ஒன்றைத் தரும்படி மருத்துவமனை அலுவலர்களிடம் நரசிம்மலு வேண்டினார். ஆனால், அதிகார வர்க்கம் அவ்வூர்திகள் காலை 7.00 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரைதான் செயல்படும் என்று உரத்த குரலில் கூறிவிட்டது.
 உள்ளத்தால் உடைந்து நொறுங்கிப் போயிருந்த நரசிம்மலு, தம் கிராமத்தில் இருந்தவர்களோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஒரு வாகனம் அனுப்பும்படி வேண்டினார். ஊர்க்காரர்களும் ஓர் ஆம்புலன்சை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் 20,000- ரூபாய் கேட்டுக் கொண்டிருந்த தனியார் ஆம்புலன்சு ஓட்டிகள், வந்த வாகனத்தை அடித்து விரட்டினர்; ஓட்டி வந்த ஓட்டுநரையும் தாக்கினர். அதைத் தடுக்கப் போன நரசிம்மலுவையும் தாக்கத் தொடங்கினர். வந்த வாகனம், வந்த வேகத்திலேயே திரும்பி விட்டது.
 வேறு வழியின்றி, நரசிம்மலு மோட்டார் பைக் ஒன்றை வரவழைத்து, தம் மகனைத் தோளில் போட்டுக் கொண்டு, பின் சீட்டில் அமர்ந்தபடியே 90 கிலோ மீட்டரைக் கடந்து, சித்வெல் கிராமத்தை அடைந்தார். உயிரோடு அழைத்து வந்த மகனை பிணமாகச் சுமந்து சென்றார் நரசிம்மலு.
 நம் நாட்டில் மட்டுமன்றி, அயல்நாடுகளிலும் மனிதம் தேய்ந்தே வருகிறது. உலகத்தில் இருக்கின்ற உழைக்கும் வர்க்கத்தினரின் வறுமை ஒழிய வேண்டும் என்று முதல் குரல் கொடுத்தவர் காரல் மார்க்ஸ். ஆனால், அவருடைய வறுமையை மனிதநேயத்தோடு பரிசீலித்தவர்கள் யாருமில்லை.
 மார்க்ஸ் "மூலதன'த்தை எழுதிக் கொண்டிருந்தபோது, அவருடைய மனைவி ஜென்னி, அவரை நெருங்கி, "மகள் பிரான்சிஸ்கா இறந்துவிட்டாள்; சவப்பெட்டி வாங்கப் பணமில்லை' என்றார். அதற்கு மார்க்ஸ், "அவள் பிறந்தபோது தொட்டில் வாங்கக் காசு இருந்தால் அல்லவா, இப்பொழுது இறந்தபோது சவப்பெட்டி வாங்கப் பணம் இருக்கும்' என்றார். அதனால், அவருடைய இரண்டு கரங்களிலும் மகளின் உடலை ஏந்தியவாறே கல்லறைக்கு நடந்து போனார்.
 நரசிம்மலு வீட்டு வாசலையும் காரல் மார்க்ஸ் வீட்டு வாசலையும் எட்டிப் பாராத மனிதநேயம், காந்தியடிகளுடைய வாசலை ஓரளவு எட்டிப் பார்த்திருந்தது. காந்தியடிகள் ஆகாகான் மாளிகையில் அரசியல் கைதியாக இருந்தபோது, 22.2.1944 அன்று அன்னை கஸ்தூர்பா இம்மண்ணுலக வாழ்வை நீத்தார். அன்னையினுடைய புகழுடம்பை இறுதி யாத்திரைக்கு வெளியே எடுத்துச் செல்ல, ஆங்கில அரசு அனுமதிக்கவில்லை. அதனால், ஆகாகான் மாளிகையிலேயே அன்னையைத் தகனம் செய்ய, காந்திஜி முடிவெடுத்தார். அன்னைக்குப் புத்தாடை அணிவிக்க என்ன செய்வதென்று தெரியாத நிலையில், அங்கிருந்த ஜெயிலர் கடேலி மனிதநேயத்தோடு ஒரு தூய கதராடையைக் கொண்டு வந்தார்.
 ஆனால், காந்தியடிகள் "கதர் துணியை நான் வீணாக எரிக்க விரும்பவில்லை. இது ஏழைகளுக்குப் பயன்படும்' என்றார். மனிதாபிமானம் மிக்க ஜெயிலர், "என்னிடம் ஏற்கெனவே வெட்டப்பட்ட இரு சந்தன மரங்கள் இருக்கின்றன' என்றார். அதற்கு காந்தியடிகள், "நீங்கள் எதைக் கொடுப்பீர்களோ, அதுதான் பயன்படப் போகிறது' என்றார். ஒரு ஜெயிலரின் மனித நேயத்தால், அன்னையின் தகனத்திற்கு சந்தனக் கட்டை கிடைத்தது.
 மனிதநேயத்தின் உச்சத்தை கம்பர், கானகத்தில் இராவணனின் வாள் பட்டு இறக்கும் தறுவாயில் இருந்த சடாயு எனும் பறவைக்கு, இராமபிரான் ஈமக்கிரியைகள் செய்ததன் மூலம் எடுத்தியம்புகிறார். அயோத்தியில் இருந்திருந்தால், தசரதனுக்கு இராமன் எப்படி இறுதிக் கடன்களைச் செய்வானோ, அவ்வாறே சடாயு எனும் கழுகரசனுக்குச் செய்கிறான். சடாயு ஓர் அநாதைப்பிணமாக ஆகிவிடக்கூடாது என்று எண்ணிய இராமபிரான், சடாயுவைத் தம்முடைய இரு கரங்களிலும் ஏந்தி, ஈமப்படுக்கையில் இடுகின்றான் (தாதை தன்னைத் தடக்கையால் எடுத்துச் சார்வான்).
 இராவணன் பிறன்மனை விழைந்தவன் என்றாலும், அவன் அம்பு பட்டு வீழ்ந்தவுடன், அவனுக்குச் செய்ய வேண்டிய இறுதிக் கடன்களை நிறைவேற்றும்படியாக வீடணனுக்கு ஆணையிடுகிறான், இராமன்.
 உயிர் நீத்த ஒரு சடலத்திற்கு ஈமக்கிரியைகளைச் செய்வதற்கு, எந்த ஜாதியும் மதமும் தடை போட்டது இல்லை. எம்பெருமானார் இராமானுசரின் ஆச்சாரியர்களில் ஒருவர், பெரியநம்பி. சேரியில் பிறந்து வாழ்ந்த மாறநேரி நம்பி, பெரியநம்பிக்கு உற்ற சீடராக இருந்தார். மாறநேரி நம்பிக்கு முதுகில் பிளவை நோய் ஏற்பட்டு, உடல் புண்ணாகி விட்டது. பெரிய நம்பிகள் ஒவ்வொரு நாளும் சேரிக்குச் சென்று, மாறநேரி நம்பியின் புண்களைத் துடைத்து, மருந்திட்டு வந்தார்.
 ஒருநாள் மாறநேரி நம்பி அகால மரணமடைந்தார். அவருக்கு உற்றார் யாருமில்லாத காரணத்தால், பெரிய நம்பியே ஈமக்கடன்களை ஆற்றினார். அதனால், வெகுண்ட மேற்குலத்தார், பெரிய நம்பியை ஜாதி பிரஷ்டம் செய்தனர். அப்படிச் செய்வார்கள் எனத் தெரிந்தும், பெரிய நம்பிகள் இறுதிக்கடன்களை ஆற்றியது, மனிதநேயத்தால் அல்லவா?
 எம்பெருமான் இராமானுசருக்கு நீலகிரி பகுதியில் நல்லான் என்றொரு சீடன் இருந்தார். அந்த நல்லான் ஆற்றோரமாக நடந்து கொண்டிருந்தபொழுது, ஒரு பிணம் மிதந்து வருவதைப் பார்த்தார். உடனே ஆற்றில் இறங்கி, அப்பிணத்தை ஏந்தி வந்து, வைஷ்ணவ சம்பிரதாயத்தின்படி, ஈமக்கடன்களை நிறைவேற்றினார். ஆனால், அதனை ஊர்க்காரர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
 "குலம் தெரியாத ஒருவனின் பிணத்திற்கு எப்படி ஒரு வைணவன் ஈமக்கடன்களைச் செய்யலாம்' எனச்சொல்லி, அவரை ஊரை விட்டு விலக்கி வைத்தனர்.
 எம்பெருமானார் நீலகிரி வழியாக மேல்கோட்டைக்குச் செல்லும்போது, "நல்லான் எங்கே' என்று தம் சீடர்களைக் கேட்கின்றார். ஊர்க்காரர்கள் நல்லானை ஜாதி நீக்கி வைத்திருக்கும் செய்தியை சீடர்கள் தெரிவிக்கின்றனர். அது மட்டுமல்ல, சீடர்கள் நல்லானைத் தேடிப்பிடித்து, எம்பெருமானாருக்கு முன்னர் கொண்டு வந்து நிறுத்துகின்றனர். எம்பெருமானார் நல்லானை ஆரத்தழுவிக்கொண்டு, "இவன் ஊருக்குப் பொல்லான் என்றாலும், எனக்கு நல்லான்' என உரைத்தார்.
 சுவாமி விவேகானந்தர் கல்கத்தாவில் வாழ்ந்த காலத்தில், டிகா கடற்கரையில் ஆழிப்பேரலை எழுந்து, பல மனித உயிர்களை பலிகொண்டது. சுவாமிஜிக்கு நீச்சல் தெரியும் என்ற காரணத்தால், கடலில் நீந்திச் சென்று தத்தளித்துக் கொண்டிருந்த உயிர்களைத் தோளில் தாங்கிவந்து, கரையேற்றினார். அவர் ஏந்தி வந்த மனிதர்களில் இந்துக்களும் உண்டு; இசுலாமியர்களும் உண்டு. மனிதநேயமே வடிவெடுத்து வந்தாற்போன்ற சுவாமி, பேதம் பார்க்காமல் தொண்டாற்றினார்.
 ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடந்த சிப்பாய்க் கலகத்தின்போது, ஆங்கிலேய சிப்பாய்களும் இறந்து போனார்கள்; இந்திய சிப்பாய்களும் இறந்து போனார்கள். இறந்து போன ஆங்கிலேய சிப்பாய்களுக்கு இறுதிக் கடன்களை ஆற்றிக் கொண்டு வரும்போது, அதில் இந்திய சிப்பாய்களின் பிணங்களும் தென்பட்டன. ஆங்கிலேயர்கள் மனிதர்களுக்கு இடையிலேதான் பேதம் காட்டுகிறவர்களே தவிர, பிணங்களுக்கிடையில் பேதம் காட்டியவர்கள் இல்லை. அதனால், இந்திய பிணங்களுக்கும் மாலையிட்டு புதைகுழியில் இறக்கினர்.
 காக்கைக் கூட்டத்தில் ஏதாவது ஒரு காக்கை மின் கம்பத்தில் சிக்கி, உயிரிழந்து கீழே விழுந்தால், உடனே அது எப்படியோ பல காக்கைகளுக்குத் தெரிந்து, செத்த காக்கையைச் சூழ்ந்து நின்று கரைந்து கொண்டே இருக்கும். சிறிது நேரம் கழித்து, செத்த காக்கையை ஓர் ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டுப்பறந்துவிடும். காக்கைகள்கூட செத்த காக்கையை அநாதையாக விட்டு விடுவதில்லை.
 ஒளரங்கசீப் பதவியேற்றவுடன், தனது தந்தை ஷாஜகானை தாஜ்மகாலுக்கு எதிரே சிறை வைத்து, யமுனைத் தண்ணீரை அவருக்குக் கிடைக்க விடாமல் செய்தான். தாகம் எடுத்தே ஷாஜகான் சாக வேண்டும் என நினைத்தான். ஷாஜகான், "என் மகன் என்னை வாழும்போதே சாகடிக்கிறான்' என்றார்.
 ஒரு மனிதன் வாழும்போது எத்தனை இடர்ப்பாடுகளுக்கும் உள்ளாகலாம்; ஆனால், அவன் மரித்துவிட்டால், மரியாதையோடு அடக்கம் செய்யப்பட வேண்டும். எத்தகைய காலமாற்றத்திலும் மனிதம் மட்டும் மரித்துவிடலாகாது!
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர் (ஓய்வு).
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com