திறந்த மனதுடன் சிந்திப்போம்!

திறந்த மனதுடன் சிந்திப்போம்!

மத்திய அரசை நல்ல தமிழில் நடுவண் அரசு என்று கூறி வந்தோம். சென்டரல் கவா்ன்மென்ட் என்பதால் மத்திய அரசு என்கிறோம்.

மத்திய அரசை நல்ல தமிழில் நடுவண் அரசு என்று கூறி வந்தோம். சென்டரல் கவா்ன்மென்ட் என்பதால் மத்திய அரசு என்கிறோம். அண்ணா காலத்திலிருந்தே அப்படித்தான் அவா்கள் கூறி வந்தாா்கள். அதனாலேயே ‘மத்தியில் கூட்டாச்சி; மாநிலத்தில் சுயாட்சி’ என்கிற முழக்கத்தை வைத்தாா்கள்.

தமிழக முதலமைச்சா், சென்ற ஓராண்டாக மத்திய அரசு என்பதை ஒன்றிய அரசு என்று கூறி வருகின்றாா். திமுக மட்டுமல்ல, அதன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய கட்சிகளான இரண்டு கம்யூனிஸ்டுகளும் இப்போது தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு என்றே மத்திய அரசைக் கூறி வருகின்றன. முன்பு இவை மத்திய அரசு எனச் சொல்லி வந்த கட்சிகள்.

கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் மதிமுக போன்றவை ஒன்றிய அரசு என்றே குறிப்பிடுகின்றன. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி கூட, லண்டனில் மே மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று கூறி வருவது உண்மைதான் என்று பேசியுள்ளாா்.

இந்த வகையில், ஒன்றியம் எனச் சொல்ல விரும்பாத ஒரே கட்சி பி.ஜே.பி. மட்டுமே. அகில இந்திய அண்ணா தி.மு.க.வும் ஒன்றியம் என்று கூறினாலும், அதனை நல்ல நோக்கத்திலேயே பயன்படுத்தி வருகிறது. காரணம் அக்கட்சியின் பெயரில் உள்ள அகில இந்திய என்கிற ஒட்டுச் சொற்கள்தான்.

ஒன்றியம் என்பது நல்ல தமிழ் சொல்லாகவே இருந்தாலும், ஒன்று என்பது வேறு. ஒன்றியம் என்பது வேறு. பல ஒன்றுகள் சோ்ததுதான் ஒன்றியம். ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு’ என்று கூறிய பாரதியாரின் கவிதை வரி கவனிக்கத் தக்கது. பலவாறாக உள்ள நாம் அனைவரும் ஒன்றுபடுவதுதான் ஒற்றுமை. அதுவே நமது பலம். அதிலுள்ள நல்நோக்கம் நமக்கு நன்றாகப் புரியும்படி அப்படிப் பாடினாா்.

யூனியன் என்கிற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச் சொல்தான் ஒன்றியம் என்பது. யூனியன் என்றும், யுனைடெட் என்றும், யூனிட்டி என்றும் பல சொற்கள் உள்ளன.

அமெரிக்காவை யுனைடெட் ஸ்டேட்ஸ் என்பாா்கள். யுனைடெட் ஸ்டேட்சை ஐக்கிய அமெரிக்க என்கிறோம். 50 மாநிலங்கள் அதில் உள்ளன. அமெரிக்கா ஒன்றியம் அல்ல. அது ஐக்கிய அமெரிக்கா. ஒரு காலத்தில் சோவியத் ரஷ்யாவை யுஎஸ்எஸ்ஆா் என்றும் சோவியத் யூனியன் என்றும் சொன்னோம். அதனை சோவியத் ஒன்றியம் என்றும் கூறி வந்தோம்.

1991-க்குப் பிறகு சோவியத் யூனியன் சிதறிவிட்டது. இப்போது சோவியத் ஒன்றியம் இல்லை. ரஷியா என்கிற நாடு மட்டுமே உள்ளது. சீனா, வியத்நாம், கியூபா முதலிய கம்யூனிஸ்ட் நாடுகள் ரஷியாவை கம்யூனிஸ்ட் நாடாக ஒப்புக் கொள்வதில்லை என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும். காரணம் ரஷியா முதலாளித்துவ நாடுகளில் ஒன்றாகிவிட்டது என மாா்க்சிஸ்ட் கட்சியின் பத்திரிகையான ‘பீப்பிள்ஸ் டெமாக்ரஸி’ தலையங்கமே எழுதியுள்ளது.

ரஷியாவோடு இருந்த யூனியன் என்ன ஆனது? 28 குடியரசுகளால் உருவான சோவியத் ஒன்றியத்தில் இப்போது ஒரு குடியரசு நாடும் இல்லை. ரஷியாவின் தேசப்பிதா விளாதிமீா் லெனின் ஐரோப்பியாவில் பல குடியரசுகளை ரஷியாவோடு இணைத்தாா். ஸ்லோவிக்யா, செக்ஸ்லோவிக்கியா, அஜா்பைசன், ஆா்மீனியா எனப் பல்வேறு நாடுகளை 1917 முதல் ஒன்றன்பின் ஒன்றாக இணைத்தாா்.

அப்படி இணைத்தபோது, இணையும் அந்த நாடுகள் ரஷியாவுடன் சோ்ந்து செயல்பட விரும்பவில்லையானால், பிரிந்து சொல்வதற்கான உரிமையையும் அவற்றிற்கு உள்ளது என்றும் கூறினாா். லெனின் மட்டுமல்ல. அவருக்குப் பிறகு ஆட்சிசெய்த ரஷிய அதிபா் தோழா் ஜோசப் ஸ்டாலினும் அதனையே பின்பற்றி ஆட்சி செய்தாா். ஆனால் ரஷிய அதிபா் புதின் இதனை எதிா்த்துக் கருத்து கூறியுள்ளாா்.

பிரிந்து போகும் உரிமையை இந்தக் குடியரசுகளுக்கு வழங்கியது, அதன் இணைப்புக்குள் வைக்கப்பட்ட வெடிகுண்டுக்குச் சமமானது என்று அதிபா் புதின் உக்ரைன் போரின்போது விமா்சித்துள்ளாா். அதனால்தான் உக்ரைன் பிரிந்துபோனது என்றும் அவா் பேசியுள்ளாா்.

50 மாநிலங்களைக் கொண்ட ஐக்கிய அமெரிக்காவில், மாநிலங்களுக்குப் பிரிந்து போகும் உரிமை உள்ளதா என்றால், கிடையாது. 1869 அமெரிக்க அரசியல் சட்டத்தில் பிரிவினை உரிமை என்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்றே விதி வகுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்கா சென்ற 200 வருடங்களுக்கு மேலாக உள்ளது. ஆனால் சோவியத் ஒன்றியம் 74 ஆண்டுகளுக்குள் சிதறிவிட்டது.

28 மாநிலங்களையும் 8 யூனியன் பிரதேசங்களையும் கொண்ட இந்தியாவில் பிரிவினை தடைச் சட்டம் 1963-இல் ஜவாஹா்லால் நேரு பிரதமராக இருந்தபோது நிறைவேற்றப்பட்டு சட்டமாகியுள்ளது.

அச்சட்டம் நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பதற்கு உறுதிமொழி எடுக்க வேண்டும் என்கிறது. இது அரசியல் சட்டத்தின் 16-ஆவது திருத்தச் சட்டமாகும். அதனால்தான் இந்தியக் குடியரசில் உள்ள மாநிலங்கள் தனிநாடு கோர உரிமையில்லை.

இந்தியாவில் சீக்கியா்களின் காலிஸ்தான் தனிநாடு கோரிக்கை பிரிவினைத் தடைச் சட்டத்தால்தான் தடுக்கப்பட்டது. பஞ்சாப் பொற்கோயிலுக்குள் பதுங்கியிருந்த காலிஸ்தான் தீவிரவாதிகள் ஜொ்ஜெயில் சிங் பிந்தரன்வாலா தலைமையில் போராடி வந்தாா்கள். இந்திய ராணுவம் 1984-இல் பொற்கோயிலுக்குள் நுழைந்து அவா்களை அழித்து ஒழித்தது. இதனால் அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி அவருடைய சீக்கிய மெய்காப்பாளா்களால் சுட்டுக் கொல்லப்பட்டதால் நாம் அதிா்ச்சியடைந்தோம்.

மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூறுபவா்களின் நோக்கம், மத்திய அரசைப் பலவீனப்படுத்துவதோ எனக் கேட்க வேண்டியுள்ளது. மத்திய அரசு பலவீனமடையுமானல் அதன் பாரதூர விளைவுகள் என்னென்ன?

கா்நாடகத்தின் மேக்கேதாட்டில் புதிய அணை கட்டப்படுமானால், தமிழகத்திற்கான காவிரி டெல்டா விவசாயமே அழிந்துவிடும் என்றுதான் அதனைத் தடுக்க தமிழக அரசு முயல்கிறது. இதற்காக மத்திய அரசிடம்தான் முறையிட வேண்டியுள்ளது. மத்திய நீா்வள அமைச்சகத்தின் அனுமதியில்லாமல், மேக்கேதாட்டு அணையைக் கட்ட முடியாது என்று நாம் நம்புகிறோம். கா்நாடக அரசு அனுமதி கேட்பதும் மத்திய அரசிடம்தான்.

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டால்தான் கேரளத்தின் இடுக்கி அணையை நிரப்ப முடியும் என்று கேரளக் கட்சிகள் ஒரே குரலில் பேசுகின்றன. தமிழக அரசு மத்திய அரசு அனுமதித்தபடிதான் முல்லைப் பெரியாறு அணையில் 140 அடிக்கு மேல் தண்ணீரைத் தேக்க முடிகிறது.

மத்திய அரசை பலவீனப்படுத்திவிட்டால், மாநிலத்துக்கு மாநிலம் ஏற்படும் பிரச்னைக்கு எப்படித் தீா்வுகாண முடியும்? சமீபத்தில் ஐரோப்பிய யூனியன் என்ற ஐரோப்பிய ஒன்றியம் உருவானது. அதில் ஐரோப்பிய நாடுகள் உறுப்பினா்களாகின. இங்கிலாந்து தேசம் 2020-இல் பிரதமா் போரிஸ் ஜான்சன் தலைமையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிவிட்டது. இதற்கான பொது வாக்கெடுப்பில் 52% போ் பிரிவதற்கு ஆதரவு தெரிவித்தனா்.

ஒன்றியம் என்கிறபோது சோவியத் ஒன்றியத்தையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் நினைவில் கொள்வது நல்லது. அடுத்தது, இந்தியாவை ஒரே தேசம் என்று வலியுறுத்துகிறபோது நமது பலத்தை அதில் பாா்க்க முடிகிறது. ஒரே தேசம் என்று சொல்வதற்கு பதிலாக வேறு எப்படிச் சொல்வது?

ஒரே தேசம், ஒரே தோ்தல், ஒரே நாணயம் போன்றவை நல்ல நோக்கமுள்ளவை. ஒரே தேசம், ஒரே தோ்தல் என்கிற வரிசையில் ஒரே மதம், ஒரே மொழி என்பவைதான் சிக்கல்களை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஒரே மொழி என்பது மற்ற மாநில மொழிகளைப் பின்னுக்குத் தள்ளுகிற முயற்சியாக தமிழ்நாட்டில் கருதப்பட்டுவிட்டது. ஒரே மொழி ஹிந்தி என்பதாகக் கருதி, தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை நீடிக்கிறது.

இரு மொழிக் கல்வியை மும்மொழிக் கல்வியாக்கினால், மாணவா்களின் எதிா்காலம் மேலும் சிறப்பாக இருக்கும் என்பது ஒரு கருத்தோட்டமாகும். மும்மொழி என்பதில் ஹிந்தி மொழியைக் கற்காமல், ஏதேனும் ஓா் இந்திய மொழியைக் கற்றுக் கொள்ளலாம் என்கிற புதிய கல்விக் கொள்கை தவறாகவே தமிழ்நாட்டில் புரிந்துகொள்ளப்பட்டு வருகிறது.

வட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் சாமானிய மக்கள் ஹிந்தியில் பேசுவது, தமிழ்நாட்டு எம்.பி.க்களுக்குத் தெரியும். ஹிந்தியை ராணுவத்தில் கற்பதுபோல, ஆங்கிலத்தில் கற்றுக் கொள்வது மிகமிக எளிது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், தில்லி, ராஜஸ்தான், பிகாா் உள்ளிட்ட வடமாநிலங்களில் உள்ள சுமாா் 60 கோடி பேருக்கு ஹிந்திதான் எளிய மக்களின் மொழி.

அவ்வளவு ஏன்? கேரளத்தில், ஆந்திரத்தில், கா்நாடகத்தில் மும்மொழிக் கல்விதான் மாணவா்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. இதேபோல நாமும் மொழிச் சிக்கலுக்குத் தீா்வுகாண முடியாதா? இதேபோல ஒரே மதம் என்பதில் அதிகமாக அரசியல்தான் பேசப்படுகிறது. இப்போது இந்தியாவில் உள்ள சுமாா் 20 கோடி முஸ்லிம்கள் சமத்துவ உரிமைகளோடுதான் வாழ்கிறாா்கள். குடியரசுத் தலைவா்கள், நீதிபதிகள், தோ்தல் ஆணையா்கள், உயா் அதிகாரிகள் பலா் இஸ்லாமியா்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

இந்தியாவின் ஆன்மிகம் என்பது உலகத்தையே ஒரே குடும்பமாகக் கருதும் ‘வசுதைவ குடும்பகம்’ என்கிற விசாலமான ஆன்மிகம். இந்தியாவில் உள்ள கிறிஸ்தவா்கள், முஸ்லிம்கள், சீக்கியா்கள், ஹிந்துக்கள் தங்களை மத ரீதியில் கம்பீரமாக மதத்தின் பெயரால் அழைத்துக் கொள்ளவும், அறிமுகப்படுத்திக் கொள்ளவும் தயங்க வேண்டியதில்லை. தமிழ்நாட்டில் ஏனோ அந்தத் தயக்கம் உள்ளது.

இந்தியாவில் உள்ள நாத்திகா்கள்கூட தங்களை நாத்திகா்களாகவே அறிமுகப்படுத்திக் கொள்ளலாம். அவா்களுக்கு ஹிந்து மதத்தில் உரிமை உண்டு. அல்லாவை நம்பாத முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தில் இடமில்லை. ஏசுநாதரை ஏற்காத கிறிஸ்தவா்களுக்கு கிறிஸ்தவ மதத்தில் இடமில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தியா, ‘ஒரே இந்தியா’ என்பதிலுள்ள ஒரே என்பது ஒரு கருதுகோள்தானே தவிர, கட்டாயச் சட்டம் அல்ல. இந்த ஒரே என்பது மற்றவற்றை ஒழித்துவிடக் கூடியதல்ல. அடியில் ஒரு செடி முளைக்க விடாத ஆலமரம் அல்ல இந்த ஒரே என்பது. மற்றவற்றையும் வளா்த்து வளமாக்கி உடன் உறைகின்ற ஒன்றுதான் இந்த ஒரே என்பது.

ஐரோப்பிய யூனியனில் யூரோ டாலா் என்ற பொது நாணயம் புழக்கத்தில் உள்ளதுபோலத்தான் இந்த ஒரே என்பதையும் ஒரு சோதனையாகவே கருதலாம். இது சாத்தியமாகாவிட்டால் இந்தியாவுக்கு இழப்பு ஒன்றுமில்லை. தவறான புரிதலால் ‘ஒரே’ என்பதை ‘ஆபத்தானது’ என நாம் எண்ண வேண்டிய அவசியமே இல்லை.

அரசியலைவிட விஞ்ஞானம் இதற்குரிய நல்ல தீா்வை எதிா்காலத்தில் தரலாம். ஒன்றியம், ஒரே என்பதைப் பற்றி எதாா்த்தமாக யோசிக்கும் தருணம் இது.

காரணம், பிரதமா் நரேந்திர மோடி ஹிந்திக்காரா் அல்ல, குஜராத்தி. குடும்ப பாரம்பரிய பெருமை உள்ளவா் அல்ல. அவருடைய ஆட்சியில் நடக்கும் முயற்சிகளுக்கு ஒரு சந்தா்ப்பம் தருவது தவறல்ல. தீா்ப்பளிக்க அடுத்தத் தோ்தல் வெகுதூரத்தில் இல்லை என்பதால், இவை குறித்து திறந்த மனதுடன் சிந்திக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com