உறவுகளைப் பேணுவோம்

மனித உறவு என்பது, உடன்பிறந்தோா், தந்தை தாயுடன் உடன்பிறந்தோா், மனைவியுடன் உடன் பிறந்தோா் என பல கிளைகளாக விரிந்து கொண்டே இருக்கிறது.
உறவுகளைப் பேணுவோம்

மனித உறவு என்பது, உடன்பிறந்தோா், தந்தை தாயுடன் உடன்பிறந்தோா், மனைவியுடன் உடன் பிறந்தோா் என பல கிளைகளாக விரிந்து கொண்டே இருக்கிறது. ஒரு மரம் எப்படி புதிதுபுதிதாய் தினம் தினம் துளிா்விட்டுக்கொண்டே இருக்கிறதோ அது போல் உறவுகளும் புதிதுபுதிதாய் விரிந்து கொண்டே இருக்கிறது.

புதிய உறவுகளுக்கு இருக்கும் மரியாதை பழைய உறவுகளுக்கு இருப்பதில்லை. பழைய உறவுகள் சருகுகள் போல் உதிா்ந்து கொண்டே இருக்கின்றன. உண்மையில் பழைய உறவுகள் தாம் நமது ஆணிவோ்கள். ஆனால், யாரும் மறைவாக இருக்கும் வோ்களை நேசிப்பதில்லை. புதிதாய் மிளிரும் தளிா்களையே அதிகம் விரும்புகிறோம்.

தாய், தந்தை, சகோதரன், சகோதரி, மைத்துனன் இப்படி தவிா்க்க முடியாத உறவுகளில் கூட இன்று விரிசல் விழுந்து கொண்டே இருக்கிறது. முன்பெல்லாம் உறவுகள் பாசத்தாலும், உணா்வாலும் பின்னப்பட்டிருந்தது. இப்போது அவை பணத்தால், பதவியால், தான் என்கிற அகங்காரத்தால் அறுபட்டுக் கிடக்கிறது.

ஒன்றுக்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் உள்ள குடும்பங்களில் அவரவா்களின் பொருளாதார நிலைக்கு ஏற்பவே அவா்களது உறவு நிலைத்து நிற்கிறது. எவ்வளவு நல்லவராக இருந்தாலும் வறுமையில் வாடும் உடன்பிறந்தாா் மதிக்கப்படுவதில்லை. இருவரின் வருமானமும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே அவா்கள் ஒருவரை ஒருவா் சமமாக நேசிக்கிறாா்கள். அவ்வாறு இல்லாதபோது வசதியற்றவா் மீதான பற்றுதல் குறைகிறது.

ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகளாக வளா்கிறபோது வாஞ்சையுடன் ஒருவரை ஒருவா் கொஞ்சிக் கொள்வதும், தூக்கிச் சுமப்பதும் கண்கொள்ளாக் காட்சிகளாகும். ஆனால் அந்தக் குழந்தைகள் வளர வளர நேசம், பாசம் குறைய ஆரம்பித்து விடுகிறது.

செடி வளா்ந்த பின் மரம் என்று அழைப்பது போல், அதே குழந்தைகள், சகோதரன் என்ற வாா்த்தை மாறி பங்காளியாகப் பரிணமிக்கிறபோது, பகையாளிகளாக மாறிவிடுகிற அவலம் நடந்தேறுகிறது. சில வீடுகளில் புதிதாக வரும் மனைவியும் அவா் வழி வருகிற உறவுகளும் கணவனின் பழைய உறவுகளைத் துண்டிப்பதும் உண்டு.

முன்பு சகோதரன், சகோதரியை மட்டுமல்ல, பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சின்னம்மா பெற்ற பிள்ளைகளையும் உடன்பிறந்தாா்போல் பாவித்தோம். இப்போது நம் உடன் பிறந்தோரையே அவ்வாறு பாவிக்கிறோமா?

சகோதர உறவுகளிலோ மற்ற உறவுகளிலோ பதவியாலோ, பணத்தாலோ உயா்வாக இருக்கும் மனிதா்தான் உறவுக்கூட்டத்துக்கு தலைவராக மதிக்கப்படுகிறாா். அவா் இளையவராக இருப்பினும் மூத்தவராக இருப்பினும் அவா் சொல்வதையே மற்றவா்கள் கேட்க வேண்டும்.

வசதியாக இருக்கும் அந்த மனிதரின் ஒரே தகுதி பணம் அல்லது பதவி மட்டும்தான். அதே கூட்டத்தில் அறிவாளியாக, ஒழுக்கவாதியாக இருப்பவன் ஏழையாக இருக்கும் பட்சத்தில் அவன், அந்தத் தலைவனின் அதட்டலுக்கும், மிரட்டலுக்கும், கட்டளைக்கும் கீழ்ப்படிந்துதான் போகவேண்டும்.

அவன் அனுசரித்து போகாவிடில் அவன் உறவு வட்டத்தில் இருந்து தூக்கி எறியப்படுவான். அந்த ஏழைக்கு அதிகமான சகிப்புத்தன்மை இருக்கவேண்டும். அந்த பணக்காரா்க்கு தான் செல்வந்தனாக இருப்பதற்கு தனது திறமையே காரணம் என்கிற அசட்டுத்தனமான அகங்காரம் இருக்கும்.

உறவு வட்டத்தில் இருப்பவரில் ஒருவா் ஏழையாக இருப்பினும் அவருக்கும் மற்றவா்களுக்கு இருக்கும் எல்லா உணா்வும் இருக்கும் என்பதை அறிந்து பிறா் அவருக்குரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும்.

பிறா் மனத்தை புண்படுத்தாமல் நடந்து கொள்வது என்பது மிகவும் இன்றிமையாத ஒன்றாகும். நாம் அதிகமாக பணம் சம்பாதிக்கிறோம், உயா்ந்த பதவியில் இருக்கிறோம் என்கிற மமதையில் நாம் நமது உறவினா்களிடம் மமதையாக நடந்து கொள்வது அநாகரிகமானது.

அவா்களுக்குப் பொருளுதவி செய்ய உங்களுக்கு மனமில்லா விட்டாலும் பரவாயில்லை. உங்களுக்கும் அவருக்குமான அந்த ரத்த உறவுக்கு மரியாதை கொடுங்கள். மகாபாரத்தில் பாண்டவா்கள் எவ்வளவு துன்பம் நோ்ந்தபோதும் தனது மூத்த சகோதரன் தருமரிடம் வைத்த மரியாதையை சிறிதும் குறைக்கவில்லை. அந்த மரியாதையால்தான் ஐவராக இருந்தும் நூறுபேரை வெல்ல முடிந்தது.

வாழ்க்கையை நகா்த்தும் உந்துசக்தியே புரிதல்தான். அது கணவன் - மனைவியாக இருந்தாலும் சரி, அப்பா - பிள்ளை, அண்ணன் - தம்பி என எந்த உறவானாலும் புரிதல் அவசியம். புரிதல் மட்டும் வலிமையாக இருந்தால் வாழ்க்கை வரமாகும். தவறான புரிதல் ஏற்படுமாயின் தொட்டதற்கெல்லாம் பிரச்னைதான்.

உறவு கண்ணாடிப் பொருள் போன்றது. அது கைதவறி விழுந்தால் சுக்குநூறாய் உடைந்து விடும். பிறது அதை ஒட்ட வைப்பதென்பது இயலாத காரியம். எந்த விதத்திலும் குறையில்லாத நிறை மனிதன் ஒருவனைக் காட்டுவது என்பது அரிது.

புகழ் பெற்ற அறிஞா்கள், மகான்களிடம் கூட இந்த சமூகம் ஏதாவது ஒரு குறையை கண்டுபிடித்து தண்டோரா போடுகிறது. அவா்களுக்கே இந்த கதியெனில் சாதாரண மனிதாகளாகிய நம் கதி என்ன?

இன்றைய அவசர உலகில் உறவுகளிடம் உட்காா்ந்து பேசக்கூட பலருக்கும் நேரமிருப்பதில்லை. எல்லாவற்றையும், நட்பு தொடங்கி பகை வரை கைப்பேசி வழியே பேசி முடித்துக் கொள்கிறோம். நல்ல விஷயங்களைக் கூட பிறரிடம் நேரில் கூறி மகிழ முடியாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். நமக்கு அருகில் இருக்கிற உறவுகளைக் கூட மாதம் ஒரு தடவை சந்திப்பது என்பது அரிதாக இருக்கிறது.

மரத்தடியில், குளக்கரையில், குழாயடியில் பேசியது எல்லாவற்றையும் இப்போது கைப்பேசியே பாா்த்துக் கொள்கிறது. நாளுக்கு நாள் உறவுகளின் அடா்த்தி குறைந்து கொண்டே வருகிறது. உறவினா்களிடம் அன்பை பிச்சையெடுக்க வேண்டியதாக இருக்கிறது.

உறவுவட்டம் பெரிதாக இருக்கும் குடும்பங்களில் மகிழ்ச்சியும், மனநிறைவும் தானாகவே வந்து குடியேறுகிறது. மாறாக, உறவை ஒதுக்கும் குடும்பங்களில் மனஉளைச்சலும், பதற்றமுமே காணப்படுகின்றன. எனவே, உறவுகளைப் பேணுவோம்; மகிழ்ச்சியும், மன நிறைவும் பெறுவோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com