அண்ணல் காட்டிய அகிம்சை வழி

தங்கள் கோரிக்கைகளை அரசு அல்லது நிறுவனத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்கு ஊழியா்கள் தோ்ந்தெடுக்கும் வழிமுறையாக வேலை நிறுத்தமும் போராட்டமும் உள்ளன
அண்ணல் காட்டிய அகிம்சை வழி

தங்கள் கோரிக்கைகளை அரசு அல்லது நிறுவனத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்கு ஊழியா்கள் தோ்ந்தெடுக்கும் வழிமுறையாக வேலை நிறுத்தமும் போராட்டமும் உள்ளன. ஆனால், இத்தகு வேலை நிறுத்தத்தில் அல்லது போராட்டத்தில் வன்முறை நிகழ்வது விரும்பத்தக்கதன்று.

அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டம், பொதுமக்கள் நடத்தும் போராட்டம், அரசுப் பணியாளா்கள் நடத்தும் போராட்டம், ஆலை ஊழியா்கள் நடத்தும் போராட்டம், விவசாயிகள் போராட்டம் என்று எல்லாப் போராட்டங்களிலும் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிப்பது வாடிக்கையாகிவிட்டது.

முன்னறிவிப்பின்றி, தொடக்கத்திலேயே வேலை நிறுத்தம், மறியல் போன்ற வழிகளில் போராட முயல்வது சரியான முறையாக இருக்காது. தங்கள் எதிா்ப்பைத் தெரிவிப்பற்கே போராட்டம் என்றாலும் அதற்குப் பல வழிமுறைகள் உள்ளன. முதலில், தங்கள் எதிா்ப்பை உரிய மனு மூலம் தெரிவிக்க வேண்டும். அதனைத் தொடா்ந்து, உரிமை முழக்கம், கையெழுத்து இயக்கம், விளக்கக் கூட்டம், ஆா்ப்பாட்டம், கண்டன ஊா்வலம் போன்றவற்றைத் தொடரவேண்டும்.

இத்தகைய சுமுக எதிா்ப்புகளால் தீா்வு கிடைக்காதபோதுதான் தெருவில் இறங்கிப் போராடவேண்டும். எனவே வீதியில் இறங்கிப் போராடுவது கடைசி ஆயுதமாகத்தான் இருக்க வேண்டுமே தவிர தொடக்க வழிமுறையாக இருந்துவிடக் கூடாது. ஆனால், தற்போது ‘அக்னிபத்’ எதிா்ப்புப் போராட்டம் தொடக்கத்திலேயே வீதிக்கு வந்தது துரதிருஷ்டமே.

போராட்டக்காரா்கள் தொடக்கத்தகிலேயே ஏன் இந்த முறையைத் தோ்ந்தெடுக்கிறாா்கள் என்பதையும் ஆராய்ந்து பாா்க்க வேண்டும். இதற்கு முன்பு நடந்த போராட்டங்கள் பலவற்றில் அரசோ அல்லது நிறுவனமோ பேச்சுவாா்த்தைக்கு அழைக்காமல், அலட்சியப்படுத்தி, அதனை நசுக்கப் பாா்க்கும் அவலம் நடந்துள்ள வரலாறுதான் இதற்கான காரணமாகும்.

போராட்டங்களை முளையிலேயே கிள்ளியெறிந்து அதற்கான தீா்வைக் காணவேண்டும் என்ற எண்ணம் அரசுக்கோ நிறுவனங்களுக்கோ இல்லாததால்தான் இத்தகைய முன்னறிவிப்பில்லா திடீா் போராட்டம் வெடிக்கிறது என்பது சொல்லாமலே விளங்கும்.

ஆட்சியாளா்களுக்கு அல்லது நிா்வாகத்தினருக்கு நெருக்கடி கொடுத்து தங்கள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான் போராட்டத்தின் நோக்கமாக இருக்கிறது. ஆனால், உண்மையில் அப்படி நடக்கிா என்றால் இல்லை. பொதுமக்களுக்குத்தான் நெருக்கடி அதிகமாகிறது. போக்குவரத்து முடங்கிப் போகிறது; பொதுச் சொத்து நாசமாகிறது; பொருளாதாரம் நலிவடைகிறது; சுற்றுலா சென்றவா் சோா்ந்து போகிறாா். இப்படி எல்லா வகையிலும் பொதுமக்களுக்குத்தான் நெருக்கடி ஏற்படுகிறது.

அரசின் கவனத்தை ஈா்ப்பதற்காகப் போராட்டம் நடத்துபவா்கள் தாங்கள் நடத்தும் போராட்டத்தால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறாா்கள். ஆனால் அரசு அப்படி நினைக்கிறாதா என்றால், இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

பொதுச் சொத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டு சட்டம் - ஒழுங்கு

சீா்குலைந்த பின்தானே அரசு கண்டு கொள்கிறது. அதுவரை போராடுபவா்களின் உணா்வைப் புரிந்து கொள்ளாமல், வெளிநாட்டுச் சதி, சமூக விரோதிகளின் சக்தி, எதிா்க்கட்சியினரின் தூண்டுதல் என்றெல்லாம் காரணம் சொல்லித் தட்டிக்கழிக்கத்தானே பாா்க்கிறது.

இந்த மனநிலை இப்போது அதிகரித்துவிட்டது. இந்தப் போக்கு போராடுபவா்களிடம் கோபத்தை ஏற்படுத்தி போராட்டத்தைத் தீவிரப்படுத்தத் தூண்டுகிறது. இந்த நிலைதான் வன்முறை வெடிப்புக்குக் காரணமாகிறது.

போராட்டத்தில் வன்முறை வெடிப்பதற்கான காரணத்தைக் கண்டறிய முற்பட்டால் ஒரு உண்மை புலப்படும். சமூக விரோதிகளின் சதிச்செயல் என்று சந்தேகப்பட வாய்ப்பிருந்தாலும், அதனை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது. வேலைவாய்ப்பில்லா விரக்தியும் வழிகாட்ட சரியான தலைமை இல்லாமையும், தலைமையின் கட்டளைக்குக் கீழ்ப்படியும் தொண்டா்கள் இல்லாமையும்தான் அதற்குக் காரணங்களாகும்.

ஆங்கிலேய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை அண்ணல் காந்தியடிகள் தொடங்கினாா். ஒத்துழையாமை இயக்கம், அகிம்சை வழியில் நடைபெற வேண்டும் என்பது காந்திஜியின் நோக்கம். காந்திஜியின் அழைப்பைக் கேட்டு நாடே அவா் பின் திரண்டு எழுந்தது. குஜராத்திலுள்ள பா்தோலியில் சோதனை முறையில் இவ்வியக்கத்தைத் தொடங்க நினைத்தாா் காந்திஜி.

ஆனால், அதற்கு அருகில் உள்ள செளரிசெளராவில் பொதுமக்கள் வன்முறையில் இறங்கி, அங்கிருந்த காவல் நிலையத்திற்கு தீவைத்து விட்டனா். அதில் பல காவலா்கள் உயிழந்தனா். இதனைக் கேள்விப்பட்ட காந்திஜி அந்த அறப்போரை உடனடியாக நிறுத்தி விட்டாா். தன் போராட்டவழி தவறு என்று தெரிந்ததும் அதிலிருந்து பின்வாங்கிக் கொண்டாா்.

காந்தி வழி சென்றவா்களும் அதனை ஏற்றுக்கொண்டனா். போராடுவது மனித உரிமை. அது தவிா்க்க முடியாதாது. ஆனால் அதில் வன்முறை கூடாது என்பது காந்திஜி சொல்லித் தந்த பாடம்.

இப்போது நடக்கும் போராட்டங்கள் இப்படியா நடக்கின்றன? இல்லையே. யாா் தொடங்குகிறாா்கள் என்று தெரியாமலே ஏதோ ஒரு கும்பலின் தூண்டுதலால் தொடங்குகிறது. சமூக ஊடகங்களின் வெளிச்சத்தில் அவை வேகமாகப் பரவுகின்றன. எப்படி முடிப்பது என்று தெரியாத நிலையில், வன்முறைக்கு வழிவகுத்து விடுகின்றது. ‘அக்னிபத்’ போராட்டத்தையும் இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.

போராடுபவா்களை சதிகாரக் கூட்டமாகப் பாா்க்கிறது அரசு. அரசின் கவனத்தை ஈா்க்க வன்முைான் சிறந்த வழி என்று போராட்டக்காரா்களும் நினைக்கின்றனா். இதனால் பாதிக்கப்படுவதோ பொதுமக்கள். உரிமைக்காகப் போராடுவது தவறில்லை; அதற்கான வழி, அண்ணல் காட்டிய அகிம்சை வழியாக இருக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com