ஆசிரியப் பணி அர்ப்பணிப்புப் பணி!

ஆசிரியப் பணி அர்ப்பணிப்புப் பணி!

பள்ளியின் வளர்ச்சியில் ஊர் மக்கள் அனைவரும் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். நம்மிடம் உள்ள பெரிய குறையே, பொது இடங்களையும், பொது சொத்துகளையும் முறையாகப் பராமரிக்கத் தவறுவதுதான்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. முதல் நாளில் மாணவர்களும், ஆசிரியர்களும் உற்சாகமாகப் பள்ளிக்கு வந்தனர். பிள்ளைகளை ஆசிரியர்கள் வரவேற்றதை ஊடகங்களில் பார்த்தபோது திருவிழா போலத் தோன்றியது. ஆசிரியர்கள், குழந்தைகளுக்கு மலர் கொடுத்தும், இனிப்பு கொடுத்தும், சந்தனம் இட்டும் வரவேற்றனர். ஆசிரியர்கள் முகத்தில் உற்சாகத்தைப் பார்க்க முடிந்தது. இந்த உற்சாகம் வடிந்து போகாமல் ஆண்டு முழுவதும் இருக்க வேண்டும்.

அரசுப் பள்ளிகள் என்றால் மக்கள் மனத்தில் ஒரு பிம்பம் வரும். தூய்மையற்ற, காற்றோட்டம் இல்லாத வகுப்பறைகளும், அழுக்கான சுவர்களும், காரை பெயர்ந்த தரைகளும், தண்ணீர் இல்லாத அசுத்தமான கழிவறைகளும், சுற்றுச் சுவர் இல்லாதப் பள்ளி வளாகமும் மனதில் படமாய் விரியும். ஆனால், தற்போது பல அரசுப் பள்ளிகள் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

அடிப்படை வசதிகள், உள் கட்டமைப்பு எல்லாம் கொண்ட அழகான அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. ஆனாலும், இன்னமும் கவனிக்கப்பட வேண்டிய நிலையில் பல பள்ளிகள் உள்ளன. 

அனைத்து அரசுப் பள்ளிகளும் தனியார் பள்ளிகளுக்கு நிகரான உள்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றிருக்க வேண்டும். இதற்கு அந்தந்த ஊர் மக்களின் பங்களிப்பும் இன்றியமையாதது. திருவிழா நடத்த லட்சக்கணக்கில் செலவு செய்கிறார்கள். அப்போது பள்ளிகளுக்கு ஒரு சிறு தொகையை நன்கொடையாகத் தரலாம். மின்விசிறி, நாற்காலி, மேஜை போன்றவற்றை வாங்கிக் கொடுக்கலாம். 

பள்ளியின் வளர்ச்சியில் ஊர் மக்கள் அனைவரும் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். நம்மிடம் உள்ள பெரிய குறையே, பொது இடங்களையும், பொது சொத்துகளையும் முறையாகப் பராமரிக்கத் தவறுவதுதான். பள்ளிகளின் பராமரிப்பில் சுணக்கமோ, அசட்டையோ கூடாது.

கொள்ளை நோய்த்தொற்று காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டது பள்ளி மாணவர்கள்தான். இரண்டாண்டு பள்ளி சரிவர இயங்காததால் குழந்தைகள் எழுத்துகளை மறந்து விட்டனர். தனியார் பள்ளி மாணவர்கள் இணையவழி கற்றல் மூலம் ஓரளவு பாடங்களுடன் தொடர்பில் இருந்தார்கள். அவர்கள் பாடங்களைப் படிக்கவில்லை; ஆனாலும் பாடங்களை கவனித்தார்கள்.

வசதி படைத்த, விவரமான பெற்றோர் சிலர், தங்கள் குழந்தைகளை தனிப்பயிற்சி வகுப்புகளில் சேர்த்து, அவர்கள் கல்வி தேங்கிப் போகாமல் பார்த்துக் கொண்டார்கள். ஏழைப் பிள்ளைகளின் பெற்றோர், குழந்தைகளின் படிப்பு வீணாகிறதே என்று ஏங்கவும் இல்லை; வருந்தவும் இல்லை. ஆகவே, அரசின் பொறுப்பு கூடிப் போயிற்று. இரண்டாண்டு இடைவெளி விட்டு, பள்ளிகளைத் திறந்து பாடங்களைத் தொடர்ந்தால் குழந்தைகளுக்கு என்ன புரியும்? ஆகவே, மாணவர்களின் கற்றல் திறன் பாதிப்பை சரிசெய்ய வேண்டியது முக்கியம். 

முதல் இரு வகுப்புகள் படிக்காமலேயே மூன்றாம் வகுப்புக்கு சென்றுள்ள மாணவர்களுக்கு அந்த வகுப்புக்கு உரிய பாடம் எதுவும் விளங்காது. அரிச்சுவடியையே அறியாதவர்கள் அவர்கள். ஆகவேதான் அரசுப் பள்ளி மாணவர்கள் அடிப்படைக் கணிதத் திறனுடன் பிழையின்றி எழுதவும், படிக்கவும் வேண்டும் என்பதற்காக "எண்ணும் எழுத்தும்' திட்டத்தை மாநில அரசு முன்னெடுத்துள்ளது. 

எட்டு வயதிற்குள் மாணவர்கள் பொருள் புரிந்து படிக்கும் திறனையும், அடிப்படை கணித செயல்பாட்டுத் திறனையும் பெற்றிருக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் இலக்கு. இதற்கான பயிற்சியும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

தொடக்கக் கல்வி தரமானதாகக் கிடைத்து விட்டால், அவர்கள் வேர் ஊன்றி வளர்ந்து விடுவார்கள். கல்வியின் ருசியை அவர்கள் உணர்ந்து கொண்டால் இடைநிற்றல் இருக்காது. பாடங்கள் புரியாமல் போவதாலும், ஆசிரியர்களின் கண்டிப்பாலும், பள்ளியின் சூழல் இதமாக இல்லாததாலும்தான் மாணவர்கள் பள்ளியில் இருந்து நின்று விடுகிறார்கள். 

இதைத் தடுக்க வேண்டுமென்றால் பள்ளிகள் மாணவர்களை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும். வகுப்பறையின் அழகு அவர்களைக் கவர வேண்டும். குட்டி மேசையும் இருக்கையும் அவர்களுக்குப் பிடிக்க வேண்டும். வீட்டில் கிடைக்காத அன்பும் அரவணைப்பும் பள்ளியில் கிடைக்க வேண்டும். 

எந்தக் குழந்தையும் முட்டாளாகப் பிறப்பதில்லை. அதன் சூழலும், வளர்ப்பும், வாய்ப்பும் அதை உருமாற்றுகிறது. எண்ணும் எழுத்தும் திட்டம் அத்தகைய சிறந்த சூழலை உருவாக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனிக் குழுக்கள் அமைத்து, இத்திட்டத்தை செழுமைப்படுத்தியுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இம்மூன்று பாடங்களிலும் பயிற்சி நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

தமிழ் வழி, ஆங்கில வழி ஆகிய இரண்டிலும் இந்த நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு ஆர்வம் மேலிடும் வகையில் எளிய ஆடல் - பாடல் மூலம், கதையாகச் சொல்லுதல், நடித்துக் காட்டுதல், பொம்மலாட்டம், கைவினைப் பொருள் என பல்வேறு வடிவங்களில் இப்பாடங்கள் பயிற்றுவிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று, பள்ளி ஆசிரியர்களின் வேலை, கல்லூரி பேராசிரியர்களின் பணியை விடக் கடினமாகி விட்டது. 

அடுத்த வரவேற்புக்குரிய செய்தி, பள்ளிகளில் வாரந்தோறும் மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்புகள் நடத்த முடிவெடுத்திருப்பது. அண்மைக்காலமாக பள்ளி மாணவர்கள் சிலரின் நடத்தை பற்றிய காணொலி சமூக ஊடகங்களில் பரவி சமூகத்தையே தலைகுனிய வைத்திருக்கிறது. 

ஆசிரியை வகுப்பில் இருக்கும்போதே சில மாணவர்கள் அருவருப்பாக நடனம் ஆடுகிறார்கள்; ஓர் ஆசிரியரைச் சுற்றிச் சுற்றி வந்து நடனம் ஆடுகிறார்கள்; ஒரு மாணவன் ஆசிரியரை அடிக்க கை ஓங்குகிறான்; பெண் பிள்ளைகள் மது அருந்துகிறார்கள்; புகை பிடிக்கிறார்கள்; காதில் கடுக்கண், கையில் வளையல், அருவருப்பான சிகை அலங்காரம் இவை மாணவர்களின் அடையாளங்களாகி விட்டன. ஒழுங்கீனங்கள் பெருகிப் போய் விட்டன. 

அவர்களைக் கண்டிக்க ஆசிரியர்களுக்குத் தயக்கம். சிக்கலில் மாட்டிக் கொள்வோமோ என்ற பயம். இதனால் மாணவர்கள் அடங்க மறுக்கிறார்கள். அந்த மாணவர்களை நல்வழிப்படுத்த நீதிபோதனை வகுப்புகள் கைகொடுக்கும் என நம்புவோம். சில ஆண்டுகளுக்கு முன் பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் இருந்தன. அது தவிர ஓவிய வகுப்பு, இசை வகுப்பு, கைவேலை வகுப்பு என எல்லாம் இருந்தன. ஆனால், நீதிபோதனை வகுப்பும், விளையாட்டு நேரமும் கணித வகுப்பாகவும், அறிவியல் வகுப்பாகவும் மாறிவிடும். 

வாரத்திற்கு இரண்டு வகுப்புகள் விளையாட்டுக்கென ஒதுக்கப் பட்டிருக்கும். அந்த வகுப்புக்காக மாணவர்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களுக்கு அந்த வகுப்புகள் எல்லையில்லா மகிழ்ச்சியைத் தரும். ஆனால், ஆசிரியர்கள் அந்த நேரத்தில் பாடம் நடத்துவது உண்டு. அப்போது நடத்தப்படும் கணிதம் மாணவர்களுக்கு கசக்கவே செய்யும். நீதிபோதனை வகுப்புகள், அட்டவணையில் மட்டும் இல்லாமல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும்.

ஒரு நீதிக்கதை பிள்ளைகளின் மனக்கசடுகளைப் போக்கக் கூடும். வெற்றியாளர்களின் வாழ்க்கைப் போராட்டங்கள் மாணவர்களின் மனதில் நம்பிக்கை விதைகளைத் தூவும். பேரரசர்களின் வாழ்க்கை வரலாறு வீரத்தை விதைக்கும். தேசம் குறித்த நல்ல சிந்தனைகளையும், நம் மண்ணின் மகத்துவத்தையும் மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

குழந்தைகளைத் தவறான வழியில் இட்டுச் செல்வதற்கு, கைப்பேசிகளும் இணையமும் போட்டி போடும்போது, அவர்களை மீட்டெடுக்க வேண்டியது அரசு, பெற்றோர், ஆசிரியரின்  பொறுப்பாகும். 

சிறுவர்களாக இருக்கும் போது நன்னடத்தைப் பயிற்சி பெற்றவர்களே பெரியவர்களான பின்னர் வெற்றிகரமான வாழ்வை அடைந்துள்ளதாக பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 20 ஆண்டுகளாக நடத்தப்பட்ட அந்த ஆய்வின் முடிவு கூறுவது என்னவென்றால், நன்னெறி பயிற்றுவிக்கப்பட்ட குழந்தைகள் பிற்காலத்தில் எத்தகைய மன அழுத்தமும் இன்றி ஒழுக்கமாக வாழ்கிறார்கள் என்பதே. நம் முன்னோர்கள் உருவாக்கிய ஒழுக்க நெறிகளைப் பின்பற்றினால் மாணவர்களின் வாழ்க்கை செம்மையாகும். 

ஒழுக்கத்தைத் தராத கல்வியும், விளைச்சலைத் தராத வயலும் வீண். கல்வியின் பயன் அறிவு; அறிவின் பயன் ஒழுக்கம். நம் நல்லொழுக்க வகுப்புகள் மாணவர்களை நல்வழியில் இட்டுச் செல்ல வேண்டும். தொடக்க நிலையுடன் ஆசிரியர்களின் உற்சாகம் நின்று போய்விடக் கூடாது. முதல் நாளன்று அவர்கள் தங்கள் முகத்தில் தேக்கி வைத்த புன்னகை ஆண்டு முழுவதும் அவர்கள் முகத்தில் தங்கி இருக்க வேண்டும்.

பிள்ளைகள் மகிழ்ச்சியாகப் பள்ளிக்கு வரவேண்டும். ஆர்வத்துடன் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் நேர்மையுடன் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும். ஆசிரியர்களிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த ஆசிரியர்கள் பாடுபட வேண்டும். பள்ளிக்கு கைப்பேசி கொண்டுவர தடை விதித்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

புள்ளிகளை சரியாக வைத்தால் கோலம் சரியாக வரும். அளப்பறிய ஆற்றலைத் தன்னகத்தே வைத்துள்ள குழந்தைகள் நாளை சிகரம் தொடும். தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள குழந்தைகளின் உயர்வும் வெற்றியும் தங்களைச் சார்ந்தவை என ஆசிரியர்கள் எண்ண வேண்டும். சிறந்த மாணவர்களை உருவாக்கினால் சமுதாயம் சிறக்கும்; மனிதம் மலரும்; வாழ்வு இனிக்கும். 

அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டிவரும் இன்றைய நிலையில், ஆசிரியர்கள் தங்களின் திறமையை, அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்த வேண்டியது 
இன்றியமையாதது. 

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com