ஆன்மிகம் தழைக்கட்டும்!

ஆன்மிகம் தழைக்கட்டும்!

அமெரிக்காவும் சோவியத் நாடும் சேர்ந்து கூட, ஆப்கானிஸ்தானத்தில் தலிபான்கள் நடத்திவரும் அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்தமுடியவில்லை. அணு ஆயுதத்தாலும், ஏவுகணைகளாலும், சமாதான உடன்படிக்கைகளாலும், சட்டங்களினாலும் நாட்டுக்கு நாடு நிகழ்ந்து வரும் போர்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. பின்னர் எப்படித்தான் உலக அமைதியை ஏற்படுத்துவது? அது ஆன்மிகத்தால்தான் முடியும்.
 இரண்டாவது உலகப்போரில் வென்ற வின்ஸ்டன் சர்ச்சிலை, "உலகத்தைக் காப்பாற்றியவர்' (சேவியர் ஆஃப் த வேல்ட்) என அனைவரும் பாராட்டினர். அந்த சர்ச்சிலைப் பார்த்து, "ஏன் உங்களால் காந்தியடிகளை வெல்ல முடியவில்லை என நிருபர்கள் கேட்டனர். அதற்கு சர்ச்சில், "காந்தியடிகள் கம்பை எடுத்திருந்தால், நான் கத்தியை எடுத்திருப்பேன்; மகாத்மா கத்தியை எடுத்திருந்தால், நான் போர்வாளைத் தூக்கியிருப்பேன்; காந்தியடிகள் போர்வாளைத் தூக்கியிருந்தால், நான் துப்பாக்கியை எடுத்திருப்பேன். ஆனால், மகாத்மா சத்தியாகிரகத்தை அல்லவா ஆயுதமாக ஏந்தினார்; அதனால்தான் அவரை என்னால் வெல்ல முடியவில்லை' என்றார்.
 காந்தியடிகளுடைய வாழ்க்கை சரித்திரத்தை எழுதியவர் "காந்தியடிகள் அரசியல்வாதிகளுக்குள்ளே ஒரு ஞானி; ஞானியர்களுக்குள்ளே ஓர் அரசியல்வாதி' என எழுதியதன் பொருத்தத்தை இங்கு எண்ணிப் பார்க்க வேண்டும். காந்தியடிகளை "அரை நிர்வாணப் பக்கிரி' என வருணித்த சர்ச்சில், மகாத்மாவின் மரணத்தை அறிந்தபோது, "ஐம்பதாண்டுகள் நாங்கள் போற்றிப் பாதுகாத்த ஓர் உயிரை சுதந்திரம் பெற்ற ஓராண்டுக்குள்ளே கொன்றுவிட்டீர்களே' என வருந்தினார். எந்த உயிரையும் கொல்லுவதற்கு ஆன்மிகம் உடன்படாது.
 1980-இல் ஜம்மு - காஷ்மீரிலிருந்து மண்ணின் மைந்தர்களை, பள்ளத்தாக்கில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றபோது, 6,482 பண்டிட் குடும்பங்கள் இந்தியாவின் மற்ற பாகங்களுக்கு இடம் பெயர்ந்தனர். 2008-இல் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக உறுதி அளித்ததன் பேரில் இடம் பெயர்ந்த சிறுபான்மையினரும், பண்டிட் குடும்பங்களும், மீண்டும் ஜம்மு - காஷ்மீருக்கு இடம் பெயர்ந்தனர்.
 இந்திய விடுதலைக்கு முன்னர் ஜம்மு - காஷ்மீரில் நிம்மதியாக வாழ்ந்த மண்ணின் மைந்தர்கள், விடுதலைக்குப் பின்னர் மன்னர் ஹரி சிங் காலத்திலிருந்து கொடுங்கோன்மைக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த அக்டோபரில் காஷ்மீரில் பிரபல வணிகராக இருந்த பண்டிட் எம்.எல். பிந்த்ரூ சுடப்பட்டு உயிரிழந்தார். தொடர்ந்து ஸ்ரீநகர் அரசுப் பள்ளியின் முதல்வர் சுபிந்தர் கௌரும், அவருடைய நண்பர் தீபக் சந்த்தும் பள்ளி வளாகத்திலேயே தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராகுல் பட் எனும் 35 வயது இளைஞர் மே மாதம் 12-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
 மேலும், மே மாதம் 31-ஆம் தேதி "ரஜ்னி பாலா எனும் பள்ளி ஆசிரியர், வளாகத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த மாதம் தேசிய வங்கியில் மேலாளராக இருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த விஜயகுமார், பணியிடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றி வந்த "அம்ரீன் பட்' எனும் பெண்ணை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றிருக்கின்றனர். இன்னும் செங்கல் சூளையில் பணியாற்றிக் கொண்டிருந்த பிகாரைச் சேர்ந்த தில்குஷ் குமார் என்ற இளைஞர், சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அதே நாள், பாரமுல்லாவிலுள்ள மதுக்கடை ஒன்றில் பணியாற்றி வந்த ரஞ்சித் எனும் இளைஞர், அதே இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.
 பல உயிர் இழப்புகளுக்கு ஆளான மண்ணின் மைந்தர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். "இப்படி கொடூரக் கொலைகள் நாளும் நடந்தால், 1990-களில் ஜம்மு - காஷ்மீரை விட்டு இடம் பெயர்ந்ததுபோல், மீண்டும் ஒட்டுமொத்தமாக இடம் பெயர்ந்து விடுவோம்' என்று ஆளுநருக்குத் தெரிவித்தார்கள். செய்தியறிந்து நேரில் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, "உங்கள் உயிருக்கு பாதுகாப்பைத் தருகிறோம். பாதுகாப்பான இடங்களில் உங்களைப் பணியமர்த்துகிறோம்' என உறுதிமொழி தந்தார்.
 பள்ளத்தாக்கில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள், மண்ணின் மைந்தர்களை சுட்டுக் கொல்வதற்கு நான்கு காரணங்கள் உள்ளன. முதலாவது, ஜம்மு - காஷ்மீரில் நிலம் வாங்கும் பிற மாநிலத்தவர்களை எச்சரிப்பது. இரண்டாவது, ஜம்மு - காஷ்மீரில் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க 400 நிறுவனங்கள் முன் வந்ததும், ஜே.எஸ். டபிள்யு எனும் கார்ப்பரேட் நிறுவனம் இரும்பாலை அமைக்க 6.25 ஏக்கர் நிலம் ஸ்ரீநகரில் ஒதுக்கப்பட்டதும். மூன்றாவது, ஜே.கே.எல்.எஃப் தலைவர் யாசின் மாலிக்கை ஆயுள் கைதியாக ஆக்கியது. நான்காவது, 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டவுடன், பிறப்பு - இறப்பு சான்றிதழ்களைப் பெறவும், திருத்தியமைக்கப்பட்ட சொந்த நிலங்களின் வரைபடங்களைப்பெறவும், உள்ளூர்வாசிகள் முயன்றதைத் தடுப்பதற்கு. 370 சட்டப்பிரிவை நீக்கியமைக்காக மத்திய அரசின் மீது கோபத்தைக் காட்ட வேண்டிய தீவிரவாதிகள், உள்ளூர் மக்களை சுட்டுக் கொன்று கொண்டிருக்கிறார்கள்.
 பயங்கரவாதிகளின் கோரக் கொலைகளைச் சட்டத்தாலும் திருத்த முடியவில்லை; ராணுவத்தாலும் தடுக்க முடியவில்லை. பின் எதனால் அவர்களைத் திருத்தலாம் என்றால் ஆன்மிக உணர்வால் திருத்தலாம்.
 ஆன்மிகம் என்பது சமயம், மதம் ஆகிய எல்லாவற்றையும் கடந்து நிற்கின்ற உயிரிரக்கம் ஆகும். "மறையாதி நூலையும் வகுத்து, சைவம் முதலாம் அளவில் சமயமும் வகுத்து மேல் சமயம் கடந்த மோன சமரசமும் வகுத்தவன்' எனும் தாயுமானவர் பாடலில் இடம்பெறும் "மோன சமரசம்' என்பதுதான் ஆன்மிகம்.
 தாயுமானவர் நாளும் சிவபூசை செய்பவர். ஒருநாள் பூ கொய்கின்ற பண்டாரம் வராதபொழுது, அவரே பூ கொய்யப் புறப்படுகின்றார். ஆனால், ஒவ்வொரு பூவிலும் இறைவனுடைய முகம் தெரிந்ததால், பூக்களைக் கொய்யாமலே திரும்பி வந்துவிட்டார். அன்றைக்கு பூஜை செய்யாமல் போனார். அதனை "பண்ணேன் உனக்காக பூஜை பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி; அப்பனிமலர் எடுக்க மனமும் நண்ணேன்' எனும் பாடல் மூலம் தெரிவிக்கின்றார்.
 இராமாயணத்தில் இராவண வதம் முடிந்தவுடன், அச்செய்தியை அசோகவனத்தில் இருக்கும் சீதாபிராட்டிக்குத் தெரிவிக்க அனுமன் விரைகின்றான். அங்கு சீதையைச் சூழ்ந்து இருக்கும் அரக்கியர்களைப் பார்க்கிறான். அரக்கியர்கள் சீதைக்கு இழைத்த கொடுமைகள் எல்லாம் அனுமனுக்கு நினைவு வந்து, "பிராட்டியே! உனக்குத் தீங்கிழைத்த இவ்வரக்கியர்களைக் கொல்வதற்கு எனக்கு ஒரு வரம் கொடு' என்கிறான். இங்குதான் பிராட்டியினுடைய பெருங்கருணையைப் பார்க்க வேண்டும். "அனுமனே! எனக்கு இவர்கள் இழைத்த தீமை எல்லாம், என்னுடைய வினைப்பயன்களே தவிர, இவர்கள் செய்ததாக நினைக்காதே! இவர்களுக்கு ஒரு தீங்கும் செய்யமாட்டேன் என்று எனக்கு நீ ஒரு வரம் கொடு' எனப் பிராட்டி வேண்டுகின்றாள். இதுதான் ஆன்மிகத்தின் உச்சம் ஆகும்.
 ஆன்மிக உணர்வுக்கு மற்றுமோர் நிகழ்ச்சியைச் சுட்டலாம். அமெரிக்காவில் வாழ்ந்த இங்கர்சால் நாத்திகர். ஆனால், பேச்சில் மன்னாதி மன்னன். அமெரிக்க அதிபரின் சம்பளத்தைக் காட்டிலும், அதிகமாகச் சம்பாதித்தவர் இங்கர்சால் தம் மேடைப் பேச்சின் மூலம். மேலும், இங்கர்சால் பேச்சில் அப்பொழுதிருந்த போப்பாண்டவருக்கு மயக்கமே உண்டு. போப்பாண்டவர் மரணப்படுக்கையில் இருக்கும்போது, பல நாட்டுக் காடினல்கள் காத்துக் கிடந்தனர், அவருடைய அழைப்பிற்காக! ஆனால், போப்பாண்டவர் இங்கர்சாலை மட்டும் அழைத்து வரச்சொன்னார்.
 அவர்முன்வந்த இங்கர்சாலை நோக்கி போப்பாண்டவர், "இங்கர்சால், நான் வாழ்க்கை முழுதும் ஆண்டவரைப் பற்றிப் பேசினேன்; சிந்தித்தேன். அதனால் நான் சொர்க்கத்திற்குப் போவேன். நீயோ வாழ்க்கை முழுமையும் நாத்திகம் பேசி வருகிறாய். அதனால் நீ நரகத்திற்குத்தான் போவாய். ஆனால், நான் சொர்க்கத்தில் இருந்தாலும், உன் பேச்சைக் கேட்காவிட்டால், அது சொர்க்கமாக இருக்காது. அதனால் இனிமேலாவது கடவுளைப் பற்றிப்பேசு' எனச் சொல்லித் தம் கடைசி மூச்சையும் நிறுத்திக் கொண்டார். இதைப்பற்றி எழுத வந்த வரலாற்றாசிரியர்கள், "போப்பாண்டவர் வெற்றி பெற்றார்; ஆனால் இங்கர்சால் தோற்கவில்லை. இங்கர்சால் வெற்றி பெற்றார் எனினும் போப்பாண்டவர் தோற்கவில்லை' என எழுதினர். இதுவும் ஆன்மிகம் அல்லவா?
 ஆன்மிகத்தின் ஆற்றலுக்கு கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்லலாம். வ.உ.சி.யினுடைய "சந்நத்' உரிமையையும் ஆங்கிலேய அரசு பறித்துக்கொண்டதால், அவர் வழக்குரைஞர் தொழிலை நடத்த முடியாமல், எண்ணெய்க்கடை வைத்து வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார். வாரிவாரி வழங்கியதால், கடனாளியாகி, வறுமையில் வாடிக் கொண்டிருந்ததை ஆங்கிலேய நீதிபதி வாலேஸ் அறிந்து, மனம் நொந்து போனார். வ.உ.சி.யின் துன்பத்தைக் துடைக்க எண்ணிய நீதிபதி வாலேஸ், தமது குமாஸ்தாவை அழைத்து வ.உ.சி.யைத் தம்மிடம் அழைத்து வரச்சொன்னார்.
 வ.உ.சி.யினுடைய வீடு, கடைகளைச் சுற்றி உளவுத்துறையினர் வேவு பார்த்துக் கொண்டிருந்ததால், தயங்கிய குமாஸ்தா, கடைசியில் நீதிபதியினுடைய ஆணைக்கு இணங்கி வ.உ.சி.யின் இருப்பிடத்திற்குச்சென்றார்.
 நீதிபதியின் இளகிய மனத்தை வ.உ.சி.யிடம் எடுத்துச் சொல்லுகிறார் குமாஸ்தா. அதற்கு வ.உ.சி. "நான் அரசாங்கத்திற்கு விரோதமானவன். நீதிபதி என்னை சந்தித்தார் எனும் செய்தி அரசுக்குத் தெரிந்தால், அவருடைய வேலை போய்விடும்' எனச் சொல்லி வர மறுத்தார். ஆயினும் அந்த குமாஸ்தா நீதிபதியினுடைய இளகிய மனத்தையும், அவர் கழிவிரக்கப்பட்டதையும் எடுத்துச் சொன்னார். உடனே வ.உ.சி.யும் நீதிபதியின் இருப்பிடத்திற்குச் சென்றார்.
 நீதிபதி வாலேஸ், வ.உ.சி.யிடம், அவருக்கு வழக்குரைஞர் தொழிலை நடத்துவதற்குரிய "சந்நத்' எனும் அடையாளத்தைப் பெற்றுத் தருவதாக வாக்களித்தார். அதனை ஏற்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் நின்றார் வ.உ.சி. அதனை கவனித்த நீதிபதி, மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி என முடிவெடுத்து அவருக்குச் "சந்நத்' அடையாளத்தைப் பெற்றுத் தந்தார்.
 "சந்நத்' சின்னம் பெற்ற வ.உ.சி.யின் வழக்குரைஞர் தொழில், முன்புபோல் கொடிகட்டிப் பறந்தது. வழக்குரைஞர் தொழிலில் பெற்ற ஊதியத்தைக் கொண்டு ஏழைகளுக்கு வாரி வழங்கினார்.
 ஆங்கிலேயர்கள் ஐந்து விரல்களால் அடித்தபொழுது வடிந்த கண்ணீரை, வாலேஸ் என்ற ஒற்றை விரல் துடைத்ததை நினைத்து நெஞ்சம் நெகிழ்ந்த வ.உ.சி. நன்றி என்ற ஒற்றைச் சொல்லால், தமது உள்ளத்தைத் திறந்து காட்ட விரும்பாமல், நிலைத்து நிற்கும் வகையில், நன்றி சொல்ல விரும்பினார். வ.உ.சி.க்கு இரண்டு மகன்கள் உண்டு. நீதிபதி வாலேஸுக்கு நிலைத்த நன்றியைச் சொல்ல, ஒரு மகனுக்கு "வாலேஸ்வரன்' என பெயர் சூட்டினார். இதுவும் ஆன்மிக உணர்வே.
 சட்டத்தாலும் சலுகைகளாலும், ராணுவத்தாலும் சாதிக்க முடியாததை ஆன்மிக உணர்வு சாதிக்கும் என்பதால், அது தழைத்து வளரட்டும்.
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர் (ஓய்வு).
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com