தேவை சமய மறுமலர்ச்சி!

தேவை சமய மறுமலர்ச்சி!

 பாரத வரலாற்றிலும் தமிழக மண்ணிலும் காலம் காலமாக நாம் சந்தித்து வரும் தொடர் பிரச்னைகளே மதமாற்றம், கட்டாய மதமாற்றம் ஆகியவை. அவற்றுக்கான எதிர்வினைகளும் இங்கே அழுத்தமாகச் செய்யப்பட்டிருக்கின்றன. இன்ன மதம் என்றில்லாமல் காலந்தோறும் பல்வேறு சமயங்களும் இங்கே மதமாற்றத்தைக் கையிலெடுத்து செயல்பட்டு வந்திருக்கின்றன.
 பொதுவாக, உலக வரலாற்றில் தேசங்கள் சமயத்தின் பெயராலேயே அடையாளம் காணப்படுகின்றன. சமயம் என்பதை அரசியல் கருவியாகவே பெரும்பாலான தேசங்கள் பார்க்கின்றன. உலகளாவிய இந்த மத அரசியலின் கரம் இந்தியாவிலும் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்த முயன்றே வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவில் கட்டாய மதமாற்றத் தடை சட்டம் சில மாநிலங்களில் அமலில் இருக்கிறது. தமிழகத்தில் கூட சில காலம் இந்த கட்டாய மதமாற்றத் தடை சட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தது.
 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், அசோகர் காலம் முதல், மதமாற்றத்திற்கான முயற்சிகள் அரசுகளால், அரசர்களால், அமைப்புகளால், தனிமனிதர்களால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. கட்டாய மதமாற்றங்களும் போதனைகள் வழியிலான மதமாற்றங்களும் தொடர்கதைகளே. தான் நம்பும் சித்தாந்தங்கள் மாறுபட்டிருந்தாலும் ஆரோக்கிய விவாதங்கள் மூலம் தன்னுடைய சித்தாந்தத்தை நிலைநாட்டியவர்களை இந்த தேசம் பார்த்திருக்கிறது. சேவையால் மக்களை தன்வசப்படுத்திய சமய மாற்றத்தையும் கண்டிருக்கிறது.
 தேசம் முழுமையாக மொகலாயர்கள் வசமான காலத்தில் வாள் முனையில் மத மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. கோயில்களே இந்த கலாசாரத்தின் அடிப்படை என்பதை அறிந்து, தேசம் முழுவதும் உள்ள கோயில்களை சிதைத்து விடுவதற்கான கொடூரங்களையும், அதற்காக நிகழ்ந்த உயிர் தியாகங்களையும் இந்த மண் பார்த்திருக்கிறது. திருவரங்கத்தில் வெள்ளை கோபுரமும், மதுரையில் மீனாட்சி ஆலயமும் இதற்கு மெளன சாட்சிகளாக இன்றைக்கும் இருக்கின்றன. இத்தனை கொடூரங்களுக்குப் பின்னரும் சனாதனம் இந்த மண்ணில் வேர்கொண்டே இருந்தது.
 தமிழகத்தில் மாலிக்காபூர் படையெடுப்பினால் நிகழ்ந்த திருவரங்கம் தாக்குதலும், அப்போது அரங்கனையும் அவன் ஆலயத்தையும் காக்க உயிர் தியாகம் செய்த பன்னிரண்டாயிரம் வீர வைஷ்ணவர்களின் தியாகமும் வரலாறு. இப்படியான தாக்குதல்களுக்குப் பிறகும், கோயில்கள் அழிக்கப்பட்ட பின்னரும், கல்சுவர்களால் கோயில்கள் பக்தர்களால் மறைத்து வைக்கப்பட்ட பின்னரும் இந்த பூமியில் சனாதனம் உயிர்ப்புடனேயே இருந்தது; இருந்து வருகிறது.
 மொகலாய சாம்ராஜ்யங்கள் வீழ்ந்து, ஐரோப்பியர்கள் வருகையிலும் மதமாற்றங்கள் இங்கே வாழ்வையே கேள்விக்குறியாக மாற்றிய நிலையும் தொடர்ந்திருக்கிறது. கோவாவில் போர்ச்சுகீசிய ஆக்கிரமிப்பும், அங்கே அவர்கள் நிகழ்த்திய அரசாங்கமும் ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் இங்குசிஷன் விசாரணை என்ற பெயரில் கட்டாய கொடூர மதமாற்றம் நிகழ்த்தியதை வரலாறு சொல்கிறது. நாற்சந்திகளில் உயிரோடு கழுவிலேற்றப்பட்டவர்கள், தலைகீழாகக் கட்டிவைத்து உயிரோடு நெருப்பில் எரிக்கப்பட்டவர்கள் என்று சித்திரவதை செய்து மதம்மாற மறுத்தவர்கள் கொல்லப்பட்டதை இந்த தேசம் கண்டிருக்கிறது. லட்சக்கணக்கான சமய நூல்கள் கொளுத்தப்பட்டிருக்கின்றன.
 உயிருக்கான அச்சுறுத்தல் மதமாற்றத்தை நோக்கி மக்களை நகர்த்திய காலங்களும் இருந்ததுண்டு. தங்கள் உயிர் பிழைத்தல் மட்டுமல்ல, தங்களின் சமயமும் பிழைத்திருக்க வேண்டுமென பல்லாயிரம் மைல்கள் நடந்தே பயணித்து கோவா பகுதியில் இருந்து கேரளம் நோக்கி வந்தவர்களும் உண்டு.
 இத்தகைய கோர சம்பவங்களையும் தாண்டி சனாதன தர்மம் இங்கே ஜீவசக்தியோடு நிலைத்திருக்கிறது. ஏன்? எப்படி? இந்த வினாக்களுக்கான விடையில் இன்று நாம் செய்ய வேண்டியது என்ன என்பதும் அடங்கியிருக்கிறது.
 பாரதத்தில் கல்வி நிறைந்தவர்களோ பாமரர்களோ எவரும் தங்கள் நம்பிக்கைகளில் தெளிவு கொண்டவர்களாக இருந்தனர். சமயக் கல்வியும் அது குறித்தான புரிதலும் அனைவருக்கும் சாத்தியமாகி இருந்தது. சமய நூல்களைப் படித்தவர்கள் பெருமதிப்போடு வாழ்ந்தனர். அறவழிப்பட்ட வாழ்வில் அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். பிற சமயங்கள் இங்கே தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முயலும் பொழுதெல்லாம் சமயப் பெரியோர்களும், குருமார்களும் தோன்றி மக்களுக்கு வழி காட்டிய நீண்ட சரித்திரமும் இருக்கிறது.
 நாயன்மார்களும், ஆழ்வார்களும் இறை சிந்தனை என்ற புள்ளியில் மக்களை ஒருங்கிணைத்தனர். வேதாந்த தேசிகர் போன்ற மகான்களும் நமக்கு சனாதனத்தைக் காக்கும் வழிகளைக் கற்றுக் கொடுத்தார்கள். அனைத்துத் தரப்பு மக்களையும் அவர்கள் அரவணைத்துக் கொண்டார்கள். ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ சமூக அமைப்பை நமக்குள் ஏற்படுத்தினார்கள். அதற்காக ஊர் ஊராகப் பயணம் செய்தார்கள். எளிய மக்களைக் காத்திட அவர்கள் முன்னின்றார்கள்.
 ஊர் இரண்டு பட்டால் எதிராளிக்குக் கொண்டாட்டம் என்ற நிலையை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். பக்தர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் வரிசையில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இருப்பதே இதற்கான சிறந்த சான்று. நம்மிடையே ஒற்றுமை இருந்ததால் வேற்றுமைப்படுத்துவோரின் நோக்கம் நிறைவேறவில்லை.
 ஒவ்வொரு தனிமனிதனின் முயற்சியும், விருப்பமும் இருந்தால் மட்டுமே ஒரு சமயம் தன்னை உயிர்ப்போடு வைத்துக் கொண்டிருக்க முடியும். ஏனெனில், சமயம் என்பது இங்கே மதமல்ல, அது ஒரு வாழ்வியல். நம் கலாசாரம்தான் நம் சமயம். நமது அன்றாட வாழ்க்கை முறை, நாம் நம்பும் அறம், பின்பற்றும் வழக்கங்கள், நாம் செய்யும் சடங்குகள் எல்லாமும் சமயம் என்பதற்குள் அடக்கம். இப்படியான நிலையில், பிற சமயத்தை ஏற்பது என்பது, நம்முடைய கலாசாரத்தில் இருந்தும் பண்பாட்டுக் கூறுகளில் இருந்தும் நாம் விலகுதல் என்றாகிறது. சமயக்கல்வி பெற்றிருந்த மக்கள் மனம் இதனை எளிதில் ஏற்க இயலாமல் இருந்தது.
 நம்முடைய சனாதன சைவம், வைணவம் போன்ற மார்க்கங்கள் மதமாற்றத்தால் நலிவுற்றபொழுது சமயப் பெரியோர்கள் கிராமம் தோறும் சென்று இறை உணர்வையும், ஆழ்ந்த பக்தியையும் ஏற்படுத்தினார்கள். தங்கள் பாசுரங்களாலும், பதிகங்களாலும் மக்களிடம் பெருமிதத்தை ஏற்படுத்தி ஒரு மறுமலர்ச்சியை மக்கள் மனங்களில் அன்று ஏற்படுத்தினார்கள். இன்றைய தேவையும் அதுவே.
 இன்றைய கல்வி முறையில் நம்முடைய சமயம் குறித்தான புரிதல் இளந்தலைமுறையினருக்குக் கிடைக்க வழியில்லை. ஆன்மிகம் பற்றிய அடிப்படைகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பும் மிகவும் குறைவு. தியாக சரித்திரங்களைப் படிக்கும் வழக்கமும், அதனைக் குழந்தைகளுக்குச் சொல்லும் பொறுமையும், காலமும் இல்லாத நிலை இன்றைய நிலை.
 இத்தகைய காலகட்டத்தில் அரசியல் சாசனத்தை, சட்டங்களை விமர்சித்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. நாம் என்னவாக இருக்கப் போகிறோம்? நம் குழந்தைகளுக்கு எதைக் கற்றுக் கொடுக்கப் போகிறோம்? எப்படி நம்முடைய சமய நம்பிக்கையை அழுத்தமாக அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்க்கப்போகிறோம்? பரந்துபட்ட சமய அறிவையும், ஆழ்ந்த ஞானத்தையும் அடைவதற்கான வழிமுறை யாது? அறியாமையால் முளைத்து நிற்கும் பேதங்களைக் களைவதற்கான முயற்சிகள் என்னென்ன? காலங்காலமாய் நம்மைக் காத்து நிற்கும் நம் குலதெய்வங்களை எப்படி நாம் காக்கப் போகிறோம்? இவை குறித்த தெளிவு நமக்குப் பிறக்க வேண்டும்.
 தங்கள் சமயத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்ப்பதைப் புண்ணியமென்றும், சமய ஆசாரம் என்றும் கருதுவோர் அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவார்கள் என்பது வெளிப்படையான உண்மை. அதிக பலத்துடன், திட்டமிட்டு அவர்கள் தங்கள் சமயக் கடமையை ஆற்றுவதற்கு முயல்வார்கள். அது குறித்த புகார்களையே தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை. அதனை எதிர்கொள்வதற்கான ஆற்றலை வளர்த்துக் கொள்ளவும், புன்னகையோடு அதனை ஒதுக்கிவிட்டு திடமாக நம்முடைய வழியில் பயணிக்கவும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
 இல்லந்தோறும் நம்முடைய பண்டிகைகள், மூத்தோர் கடன் முதலான நம்பிக்கைகள் தொய்வின்றி கடைப்பிடிக்கப்படல் அவசியம். சமய உபந்யாசகர்கள் கதைசொல்லிகளாக மட்டும் நின்றுவிடாமல் மக்கள் மனங்களில் எழும் கேள்விகளுக்கு அறிவார்த்தமான விளக்கங்களைத் தருவதும், நம் தர்மத்தின் மேன்மைகளை இன்றைய தலைமுறையினர் ரசிக்கும் வகையில் அதற்கேற்ற ஊடகங்களில் கொண்டு சேர்ப்பதும் அத்தியாவசியம்.
 மதமாற்றத்தின் வழியே நம்முடைய கலாசார அழிவு நிகழ்கிறது என்பதை மக்கள் உணர வேண்டும். பன்னெடுங்காலமாக கொடுங்கோன்மைகளிலும் கூட நம் மூதாதையர்கள் காத்து வந்த தர்மம் தொடர்ந்து நம்மால் காக்கப்பட வேண்டும் என்ற உணர்வு மக்களுக்கு ஏற்பட வேண்டும். அறியாமை, ஏழ்மை போன்ற இருள் சூழ்ந்த பகுதிகளில் தவிக்கும் மக்களுக்கான ஆன்ம ஒளியை நம் குருமார்களும், சமயப் பெரியோர்களும் காட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
 "எந்தச் செயலையும் இறை உணர்வோடு செய்யுங்கள்' என்று கற்றுக் கொடுத்த யோகி அரவிந்தர் போன்ற மகான்கள் உணர்த்தியிருக்கும் சனாதனத்தின் பெருமைகளை, ஆன்மிகச் செல்வங்களை ஒவ்வொருவரின் மனத்திலும் விதைக்க வேண்டும். கடந்த காலங்களில், சுவாமி தயானந்த சரஸ்வதி, சுவாமி சித்பவானந்தர் போன்ற மகான்கள் இந்தப் பணியினை சிறப்பாகச் செய்து வந்தனர்.
 சனாதனத்தின் பெருமைகளைக் காக்கவும், மக்களை நம்முடைய மார்க்கத்தில் நிலைபெறச் செய்யவும் ஏற்படுத்தப்பட்ட புராதனமான மடங்களும், ஆதீனங்களும் சனாதனத்தின் பெருமைகளைக் குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். தங்களைப் பின்பற்றும் லட்சோபலட்சம் மக்களுக்கு குருமார்கள் அறிவார்த்தமாக சமயப் புரிதலை ஏற்படுத்தும் புனிதப் பணியை மேற்கொள்ள வேண்டும். இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் மகான்களும், பெரியோர்களும் அடித்தட்டு மக்கள் வரை அனைவரையும் சந்தித்து, அவர்களை ஒருங்கிணைத்து அவர்களின் அறியாமை இருள் அகற்றி அருள் பெருக்கும் உன்னத சமய மறுமலர்ச்சிப் பயணத்தைக் தொடங்க வேண்டும்.
 
 கட்டுரையாளர்:
 ஊடகவியலாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com