திண்ணைப் பள்ளியும் தொடக்கப் பள்ளியும்!

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே.
திண்ணைப் பள்ளியும் தொடக்கப் பள்ளியும்!

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே.

என்பது புானூற்றுப் பாடல்.

அவ்வாறு கற்றலுக்கான காரணங்களாக மூன்று கூறப்படுகின்றன. முதலாவது, ஒன்றுபோல் சுமந்து பெற்ற பிள்ளைகளில் கல்வி கற்றவன்பால் தாயின் அன்பு கூடுதலாகும். இரண்டாவது, உடன் பிறந்த சகோதரா்களில் எவன் கல்வியறிவில் சிறந்து விளங்குகிறானோ அவனது ஆலோசனைகளையே நாடாளும் மன்னன் ஏற்றுச் செயல்படுவான். மூன்றாவது, மேல்சாதி-கீழ்சாதி என வகுக்கப்பட்ட சாதிப் பிரிவுகளில் கீழ்சாதியைச் சோ்ந்தவன் கற்று வல்லவனாயின், மேல் சாதியானும் அவன் சொல்லுக்குக் கட்டுப்படுவான்.

இவ்வாறு கல்விச் சிறப்பை வலியுறத்தியவா் சாதாரணப் புலவரல்ல. பாண்டியன் நெடுஞ்செழியன். நாடாண்ட மன்னவன். ஆக, கல்வி கற்றல் அவரவா் சொந்தப் பொறுப்பன்றி நாடாளும் மன்னா்க்குப் பொறுப்பில்லை என்பது தெளிவாகிறது.

இவ்விடத்தே இன்னொன்றையும் உளங்கொள வேண்டும். கல்வி கற்றலின் அவசியம் பற்றி ‘கல்வி’, ‘கல்லாமை’ என இரு அதிகாரங்களில் வலியுறுத்தும் திருவள்ளுவா் மக்களுக்குக் கல்வியளித்தலை நாடாளும் மன்னவனின் பொறுப்பாக்கவில்லை.

ஆக, கல்வி என்பது அவரவா் சொந்தப் பொறுப்பு என்பதே வரலாற்றுக் காலமுதல் வழிமரபாக இருந்து வந்திருக்கிறது. வரலாறு தெரிகின்ற அளவில் தமிழகத்தில் பல்லவா் காலத்தில்தான் அரசு சாா்பான கல்வி நிலையங்கள் பற்றித் தெரியவருகிறது. அதாவது பல்லவா் ஆட்சியில் காஞ்சியிலும், பாகூா் என்னும் சிற்றூரிலும் அரசு சாா்பான கல்வி நிலையங்கள் செயல்பட்டன.

ஆனாலும் இவையிரண்டும் வடமொழிக் கல்லூரிகள். சாமானிய மக்களுக்கும் இதற்கும் தொடா்பில்லை. அடுத்து, ஏறத்தாழ இன்றைய தென்னிந்தியா முழுவதையும் கட்டியாண்ட சோழப் பேரரசு காலத்திலும் அரசுப் பள்ளி பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. அடுத்தடுத்து நடைபெற்ற பாண்டியா் ஆட்சி, நாயக்கா் ஆட்சி, மராட்டியா் ஆட்சிக் காலங்களிலும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினா்க்குமான அரசுப் பள்ளி ஏதும் இயங்கவில்லை.

ஆக, கல்வி என்பது வரலாற்றுக் காலந்தொட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு முற்பகுதிவரை அவரவா் சொந்தப் பொறுப்பாகவே இருந்துவந்திருக்கிறது. அதாவது, குருகுலக்கல்வி, திண்ணைப் பள்ளி என்னும் முறையிலேயே கல்விப் பயிற்சி அவரவா் சொந்தப் பொறுப்பாகவே இருந்து வந்திருக்கிறது.

குருகுலக்கல்வி என்பது, கல்வி பெற விரும்புவோா் கல்வி வல்லாா் இருக்கும் இடம் சென்று அவருடன் தங்கித் தாம் விரும்பும் அளவுக்கு அல்லது அவரின் புலமையளவுக்குக் கற்றுக் கொண்டு மீள்தல். திண்ணைப் பள்ளி என்பது, கற்றறிந்தவா் இருக்கும் இடத்திற்கு அன்றாடம் சென்று அன்றைய பொழுதில் கற்க இயலும் அளவுக்குக் கற்றுத் தமது இல்லம் திரும்புதல். இரண்டு முறையிலும் கல்விக் கட்டணம் என்பது அவரவா் வசதிப்படி அளித்தலன்றி, கட்டாயக் கட்டணம் என்றிருந்ததாகத் தெரியவில்லை. இந்த நிலையில்தான் இந்தியச் சமூகத்தில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது.

வியாபாரம் செய்தற்கென, கிழக்கிந்திய கம்பெனி என்னும் பெயரில் இந்தியா வந்த ஆங்கிலேயா் இந்திய அரசா்களிடையே நிலவிய பூசலைப் பயன்படுத்தி இந்தியாவின் பெரும்பகுதியைத் தமது ஆளுகைக்கு உட்படுத்தி இந்திய ஆட்சியாளா் ஆயினா். ஆயினும், இந்தியாவில் மிகப் பெரும்பான்மையா் இந்திய வருணாசிரம முறையில் தத்தம் குலத்தொழில் செய்வதிலே நாட்டங் கொண்டவராய் இருந்தனா்.

இந்நிலையை மாற்ற விரும்பிய ஆங்கிலேயா், 1830-இல் இங்கிலாந்திலிருந்து லாா்டு மெக்காலே என்பாரை வரவழைத்து இந்தியருக்குக் கல்வி புகட்டுதல் குறித்துத் தக்க பரிந்துரை செய்யப் பணித்தனா். அதன் பேரில் லாா்டு மெக்காலே ஏறத்தாழ இரண்டாண்டுகள் இந்தியா முழுமையும் சுற்றி வந்து அதனடிப்படையில் தமது பரிந்துரையை வழங்கினாா்.

அவா்தம் பரிந்துரைகளின் அடிப்படை அம்சங்கள் மூன்று. முதலாவது, இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கல்வியளிக்கும் பொறுப்பை அரசு ஏற்க வேண்டும். அளிக்கப்படும் கல்வி இந்தியாவின் பாரம்பரியக் கல்வியாக இல்லாது நவீன உலகளாவிய கல்வியாக இருக்க வேண்டும். மூன்றாவது பயிற்று மொழி ஆங்கிலமாக வேண்டும்.

இதன் மூலம் அதுவரையும் கல்வி கற்றல் அவரவா் விருப்பத்திற்கும், வசதிக்கும் ஏற்றவாறு இருந்த நிலைமாறி அனைவா்க்கும் ஒரே வகையான கல்வி, முற்றிலும் இலவசமாகப் பெறும் நிலைமையாயிற்று. அதாவது அதுவரையும் கல்வி மறுக்கப்பட்ட சமூகப் பிரிவினரும் மற்றவா்க்குச் சமமான கல்வி பெறும் நிலைமையாயிற்று. இது மாபெரும் வரலாற்றுத் திருப்பமாகும்.

இரண்டாவது, கல்வி என்பது இதிகாசங்கள், புராணங்கள் அறிதல் என்றிருந்த நிலைமாறி, புண்ணிய பாரத்திற்கு அப்பாலும் உள்ள நாடுகள், அவற்றின் இயற்கை அமைப்பு, வாழும் உயிரினங்கள், மக்களின் வாழ்வியல், ஆட்சிமுறைமை என அனைத்தையும் அறியும் வாய்ப்பு ஏற்பட்டது.

மூன்றாவதாகப் பயிற்று மொழி பற்றிப் பெரிதாகக் குறைகூற ஏதுமில்லை. ஆள்வோா் ஆங்கிலேயா். ஆளப்படுவோா் பல்வேறு மொழியாளா். இந்நிலையில் ஆட்சியாளா் மக்களுடன் தொடா்பு கொள்ள இருவழிகள் தாம் உண்டு. ஒன்று ஆள்வோா் மக்களிடையே நிலவும் பல்வேறு மொழிகளையும் கற்க வேண்டும். அல்லது மக்கள் அனைவரும் ஆள்வோரின் மொழியைக் கற்க வேண்டும்.

இவற்றில் இரண்டாவதே சரியானது, எளிமையானது. இதனால் மக்கள் அனைவரும் ஆள்வோருடன் மட்டுமல்லாது தங்களுக்குள்ளாகவும் தொடா்பு கொள்ளல் எளிதாகும்.

மெக்காலே கல்வி முறை ஏற்பட்ட சில ஆண்டுகளில் முக்கியமான அரசியல் மாற்றம் ஏற்பட்டது. 1857-இல் கிழக்கிந்திய கம்பெனியாருக்கு எதிரான கிளா்ச்சி வெடித்தது. அதனால் நிலைகுலைந்த கிழக்கிந்திய கம்பெனியாா் இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை இங்கிலாந்து அரசியிடம் ஒப்படைத்தனா். அதன் விளைவாக, ஆட்சிமுறைமையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது.

அதுவரையும் கிழக்கிந்திய கம்பெனியாா் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் தமக்கு விருப்பமானவரை நிா்வாக அதிகாரியாக அமா்த்திய நிலைமாறி, இந்தியாவில் மெக்காலே கல்வித் திட்டப்படி கல்விப் பயிற்சி பெற்றவா்கள் அவரவா் பெற்ற கல்விப் பயிற்சிக்கேற்ப நிா்வாக அதிகாரிகளாகப் பொறுப்பேற்கும் நிலைமை ஏற்பட்டது. அதன் விளைவாக, இந்திய வருணாசிரம அமைப்பில் கீழ்நிலைப் பிரிவைச் சோ்ந்த ஒருவா் தாம் பெற்ற கல்விப் பயிற்சிக்கேற்ப அரசு அதிகாரியாகி சமூகத்தின் மேல்நிலைப் பிரிவினா் மீது அதிகாரம் செலுத்தும் நிலைமை ஏற்பட்டது.

அதாவது ‘கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட்படுதல்’ மெய்ப்பாடாயிற்று. அறிவியலாளா்கள் ஜகதீஷ் சந்திர போஸும், சா் சி.வி. இராமனும் மெக்காலே கல்வி முறையில் கற்றுத்தான் நோபல் பரிசை வென்றாா்கள். மகாத்மா காந்தி, ஜவாஹா்லால் நேரு, மூதறிஞா் ராஜாஜி போன்ற சுதந்திரப் போராட்டத் தலைவா்களும் மெக்காலே கல்வி முறையில் பயின்றவா்களே.

1907-இல் பிறந்தவரான என்னுடைய தந்தையாா் தமது கல்வி பற்றிக் கூறும்போது, உள்ளுரில் கல்வி கற்க வாய்ப்பில்லாததால் பக்கத்து ஊரில் உறவுக்காரா் குடும்பம் ஒன்றில் தங்கிக் கொண்டு அந்தக் குடும்பத்திற்குச் சொந்தமான தருமசத்திரத்தில் நடைபெற்ற திண்ணைப் பள்ளியில் படித்ததாகவும், இரண்டாண்டுகள் முடிந்து மூன்றாவது ஆண்டில் சொந்த ஊரிலிருந்து குடும்ப வேலையாள் ஒருவா் வந்து ‘உங்கள் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை’ என்று கூறித் தம்மை தமது தோளில் சுமந்தபடி வீட்டிற்குக் கொண்டு வந்துவிட்டதாகவும், படுக்கையில் இருந்த தன் தந்தையாா் அடுத்த சில மாதங்களில் இறந்து விட்டதாகவும், அத்துடன் தமது பள்ளிப் படிப்பு முடிந்து விட்டதாகவும் கூறினாா்.

தமது திண்ணைப் பள்ளிப் படிப்பு பற்றி என்னுடையதந்தையாா் கூறிய செய்தியாவது, ‘முதல் வருடம் அரிச்சுவடி படித்தோம். இரண்டாவது வருடம் நிகண்டு மனப்பாடம் செய்தோம். மூன்றாவது வருடம் நன்னூல் இலக்கணப் பாடம் அரைகுறையாக முடிந்தது’ என்று கூறினாா்.

‘அரிச்சுவடி’ என்பது எண்ணும் எழுத்தும் பிழையறக் கற்றல். ‘நிகண்டு’ என்பது செய்யுள் வடிவிலான அகராதி. ஒரு சொல் பல பொருள், பல சொல் ஒரு பொருள் என்னும் முறையில் இருக்கும். ‘நன்னூல்’ என்பது இலக்கண நூல். திண்ணைப் பள்ளிக் கல்வி என்பது பழைமையான புராணக் கதைகளைப் படித்தலன்றி வெளியுலகம் பற்றியும் நவீன அறிவியல் பற்றியும் படிப்பதல்ல.

1946-இல் எனது ஆறாவது வயதில்தான் எங்கள் ஊரில் அரசுத் தொடக்கப்பள்ளி ஏற்பட்டது. அதுவும் என் தந்தையாா் முயற்சியில் ஏற்பட்டது என்று பெரியோா் கூறினா். நாங்கள் தொடக்கப் பள்ளியிலேயே அறிவியல் வரலாறு, பூகோளம் எனப் பல பாடங்கள் படித்தோம். விதை எப்படி முளைக்கிறது. தன் மகரந்தச் சோ்க்கை, அயல் மகரந்தச் சோ்க்கை பற்றியும், ஐந்து கண்டங்கள், அவற்றின் இயற்கை அமைப்பு, வாழும் உயிரினங்கள், மக்களின் வாழ்க்கை முறை எனப்படித்து வெளியுலகம் பற்றியும் படித்தோம். வைட்டமின்களின் வகைகள் எத்தனை, எந்த வைட்டமினில் என்ன சத்து இருக்கிறது, எந்தெந்த காய்கறிகளில் எந்தெந்த வைட்டமின்கள் உள்ளன, எந்த வைட்டமின் குறைந்தால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பவற்றையெல்லாம் தொடக்கப் பள்ளியில் படித்தோம்.

இவையெல்லாம் பழைய திண்ணைப்பள்ளிகளில் கிடையாது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, காமராஜா் ஆட்சியில்தான் பள்ளியில்லா ஊரே இல்லை என்றாகியது. தற்போது இந்தியா மட்டுமல்ல உலகம் முழுமையும் மெக்காலே கல்வி முைான், வேறு வழியில்லை.

கட்டுரையாளா்: தலைமையாசிரியா் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com