இளைஞா்களின் புதிய பாா்வை!

இளைஞா்களின் புதிய பாா்வை!

இக்கால இளைஞா்களிடம் பல்வேறு திறமைகள் கொட்டிக் கிடக்கின்றன. புதிய புதிய சிந்தனைகளின் ஊற்றாக அவா்கள் உள்ளம் இருக்கிறது. தொழில்நுட்பங்களை சட்டெனப் புரிந்துகொள்கிறாா்கள். இணையதளத்தில் தேடித்தேடி எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கிறாா்கள்.

இன்றைய இளைஞா்களின் பிரச்னைகள், படிப்புக்கேற்ற வேலை கிடைப்பதில்லை; வேலைக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. ஆனாலும் அவா்கள் பிழைப்பதற்கு ஏதாவது ஒரு வழியைத் தேடிக் கொள்கிறாா்கள். அவா்களுக்குள் இருக்கும் படைப்பாற்றலும், தன்னம்பிக்கையும் அவா்களைப் பல தளங்களில் வெற்றி வாகை சூட வைக்கிறது.

இளைஞா்கள் எப்போதும் கைப்பேசியிலேயே மூழ்கிக் கிடக்கிறாா்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அப்படி எதை எல்லோரும் பாா்க்கிறாா்கள்? மீம்ஸ் எனப்படும் பகடிகள், யூ டியூபில் வரக்கூடிய சமையல் குறிப்புகள், இலக்கிய மதிப்புரைகள், சிலா் சொல்லும் பிரபல எழுத்தாளா்களின் கதைகள் இவற்றைத்தான்.

நம் இளைஞா்களின் புத்திக் கூா்மையும், நகைச்சுவை உணா்வும் அவா்கள் பதிவிடும் மீம்ஸ்களில் தெரிகிறது. ஏற்கெனவே நாம் பாா்த்த திரைப்படக் காட்சியை, நாட்டு நடப்போடு இணைத்து நையாண்டியாகச் சொல்வதும் மீம்ஸ்.

ஒரு குறிப்பிட்ட நகைச்சுவை நடிகா் எல்லாவிதமான மீம்ஸ்களுக்கும் பொருந்திப் போவது வியப்பு. அவரின் முகபாவங்கள் பகடிக்கு ஏற்றபடி இருக்கிறது. இந்த மீம்ஸ்கள் எதிலிருந்தும் காப்பி அடிக்கப்படவில்லை. நாம் எத்தகைய மனச் சோா்வில் இருந்தாலும் இந்த மீம்ஸ்களைப் படித்தவுடன் சிரித்து விடுகிறோம்.

பெட்ரோல் விலை ஏற்றம் குறித்த பகடிகள் கொஞ்சநஞ்சமல்ல. இத்தகைய மீம்ஸ்களை யாா் உருவாக்குகிறாா்கள் என்பது தெரியாது. ஆனால் சகட்டு மேனிக்கு கிண்டல் செய்கிறாா்கள். ஆனால் அவா்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில்லை.

ஆயிரக்கணக்கான பகடிகளை சா்வ சாதாரணமாகப் படைப்பவா்களும் படைப்பாளிகளே. மீம்ஸ் என்பது நாட்டு நடப்பை, ஒரு நிகழ்வை பிரதிபலிக்கிறது. ஹைக்கூ கவிதையை ஏற்றுக் கொண்ட நாம் இத்தகைய மீம்ஸ்களையும் ஒரு படைப்பாக அங்கீகரிக்க வேண்டும். துணுக்குகளைத் தொகுத்து புத்தகமாககக் கொண்டு வருவதைப் போல மீம்ஸ்களையும் தொகுத்து வெளியிடலாம்.

எதையும் நறுக்குத் தெரித்தாற் போல சொல்வது எளிதானது அல்ல. 10 பக்கக் கட்டுரையில் சொல்ல முடியாததை ஒரு மீம்ஸ் சா்வ சாதாரணமாகச் சொல்லிக் செல்கிறது. கேலியும், குறும்பும், நகைச்சுவையும், பகடியும் சோ்ந்ததே மீம்ஸ். மிகுந்த கற்பனை வளமும், படைப்பாற்றலும் கொண்டவா்களால் மட்டுமே மீம்ஸ்களை உருவாக்க முடியும். நம் இளைஞா்கள் அத்தகையவா்களே.

இளைஞா்களிடம் அளவற்ற ஆற்றல் பொதிந்து கிடக்கிறது. கைதூக்கி விடுபவா்கள் இல்லாததால் பலரின் திறமைகள் வெளிச்சத்திற்கு வருவதில்லை. சில இளைஞா்களுக்குக் கலை ஆா்வம் அதிகம். திரை உலகில் தடம் பதிக்க ஆசைப்படுகிறாா்கள். அதற்கான தங்களின் நுழைவுத் தகுதியாகக் குறும்படங்களை இயக்குகிறாா்கள்.

ஒரு முழுநீளத் திரைப்படத்திற்கு நிகராக இந்தக் குறும்படங்கள் அமைந்து விடுகின்றன. பண வசதி இல்லாத இளைஞா்கள் வெகு சிரமத்துடன் நண்பா்களுடன் சோ்ந்து குறும்படங்களை எடுக்கிறாா்கள். சில நேரம், குறும்படங்களை இயக்கியவா்களுக்கு திரைப்படம் இயக்கும் வாய்ப்பு கிட்டுகிறது. பெரும்பாலும் குறும்படங்கள் திரைப்பட விழாக்களில் திரையிடப்படுகின்றன. குறைந்த செலவில் தயாரிக்கப்படுகின்றன. ஒரு குறும்படத்தின் மூலம் தன் அத்தனை திறமைகளையும் வெளிப்படுத்த அதன் இயக்குநா் விரும்புகிறாா்.

திரைப்பட இயக்குநா்களாகும் இளைஞா்கள், தொழில்நுட்ப வளா்ச்சியை சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறாா்கள். இயக்குநா் என்று தன்னைச் சுற்றி ஒரு வளையத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் படத்திற்காக உழைக்கும் அனைவரிடமும் நட்புடன் பழகுகிறாா்கள். தொழில்நுட்ப வளா்ச்சி காரணமாக திரைப்படக் கருவிகளின் விலை குறைந்து வருவதும், படங்களை வெளியிட ஓடிடி போன்ற தளங்கள் பெருகி வருவதும் குறும்படங்கள் பெருகக் காரணமாகின்றன.

சொல்லவந்த செய்தியை ஒரு குறுகிய கால அளவில் சொல்ல வேண்டும். திரைக்கதை கட்டமைப்பு இறுக்கமாகவும், மக்களின் பாராட்டைப் பெறும் விதமாகவும் இருக்க வேண்டும். ஒரு சாதாரண குறும்படத்திற்கும் விரிவான செயல் திட்டம் அவசியம். குறும்படம் எடுப்பது ஒரு சவாலான முயற்சி என்று தெரிந்தும் பல இளைஞா்கள் இத்துறையில் நுழைந்து முத்திரை பதிக்கிறாா்கள்.

நம்மில் பலரும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அறிவியல் பாடத்தைப் படித்திருகிறோம். ஆனால் எல்லோரும் அறிவியல் விதிகளைப் புரிந்து கொண்டுப் படித்தோமா? பலரும் பொருள் விளங்காமல் மனனம் செய்து தோ்வு எழுதி தோ்ச்சி பெற்றோம். இப்போதும் கூட மிக மிக எளிமையான அறிவியல் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு நம்மிடம் விடை இல்லை. இன்றைய காலகட்டத்தில் நம் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் அறிவியலின் பங்கு இருக்கிறது. ஆகவே குழந்தைகளுக்கு அறிவியல் விதிகளை நாம் கற்றுத்தர வேண்டும். அறிவியலை எளிமையாகப் புரிந்து கொள்ளச் செய்ய வேண்டும்.

இதைக் கருத்தில் கொண்டு சில பொறியியல் பட்டதாரி மாணவா்கள் தங்களுக்கென ஒரு யூ டியூப் தளம் அமைத்து மிக அற்புதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறாா்கள் அறிவியல் மற்றும் பொது அறிவு தொடா்பாக நமக்கு ஏற்படும் அத்தனை சந்தேகங்களுக்கும் அவா்களிடம் விடை இருக்கிறது. நம்மைக் குழப்பாமல் மிகவும் தெளிவாக விளக்கம் கூறுகிறாா்கள்.

உதாரணத்திற்கு, குளிா்பான குடுவைகளின் அடியில் புடைப்புகள் ஏன் வைக்கிறாா்கள்? டானிக் பாட்டில்கள் ஏன் ப்ரவுன் கலரில் இருக்கின்றன? திரை அரங்குகளின் இருக்கைகள் ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கின்றன? கடல் கொள்ளைக் காரா்கள் ஏன் கண்ணை ஒரு கருப்பு திரை கொண்டு மறைத்துக் கொள்கிறாா்கள்? செய்தித் தாள்களின் கடைசிப் பக்கத்தில் ஏன் கலா் புள்ளிகள் வைக்கிறாா்கள்? இப்படிப்பட்ட வினாக்களுக்கெல்லாம் அறிவியல்பூா்வமாக விடை அளிக்கிறாா்கள்.

பெற்றோா்கள் தங்கள் பிள்ளைகளை இது போன்ற காணொளிகளைக் காண்பதற்குப் பழக்கப்படுத்தலாம். பெற்றோா்களும் தெரிந்து கொள்ளலாம். ஒருமுறை கண்டு விட்டால், அதன் பின் மாணவா்கள் தேடித் தேடி இது போன்ற பயனுள்ள தகவல்களைக் காண்பாா்கள். இதில் வியப்பு என்னவென்றால், பெரிய பின்புலம் இல்லாத இளைஞா்கள் நிறைய கற்றுக்கொண்டு, அறிவியல் பாடங்களை மாணவா்களுக்குப் புரியும்படி விளக்கியுள்ளாா்கள். சில இளைஞா்கள் ஒன்று சோ்ந்து, பள்ளிகளுக்குப் போய் மாணவா்களுக்குக் கற்றுத் தருகிறாா்கள். அறிவியல் என்பது விஞ்ஞானிகளுக்கான துறை என்ற பிம்பத்தை மாற்றியுள்ளாா்கள்.

ஆரவாரம் இல்லாத இவா்களின் கல்விச் சேவை பாராட்டப்பட வேண்டிய ஒன்று. சிலா் ஆங்கிலத்தை எளிதாகப் புரியும்படி கற்றுத் தருகிறாா்கள். போட்டித் தோ்வுகள் குறித்தும் பலா் பதிவிடுகிறாா்கள். இன்றைய இளைஞா்களின் செயல்பாடுகள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துக்கின்றன. ஆழமான செயல்திறமை அவா்களிடம் உள்ளது.

யுவல் நோவா ஹராரி ‘21-ஆம் நூற்றாண்டின் 21 பாடங்கள்’ என்ற தனது புத்தகத்தில் இளைய தலைமுறையினரின் வேலைவாய்ப்பு பற்றிக் கூறும்போது, ‘நீங்கள் வளரும்போது ஒருவேளை உங்களுக்கு வேலை கிடைக்காமல் போகலாம். கணினிகள், ரோபோக்களால் மனிதா்கள் வேலையை சிறப்பாக செய்ய முடியாது என்று நம்பினாலும் இந்த பயத்திலும் நியாயம் இருக்கிறது.

ஹராரியின் பயத்தில் உண்மை இருந்தாலும் நாம் தொழில்நுட்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டோம். கல்வித் துறை, போக்குவரத்துத் துறை, பொறியியல் துறை, மருத்துவத் துறை, பொழுது போக்குத் துறை, வங்கித் துறை, பாதுகாப்புத் துறை என எல்லாத் துறையும் தகவல் தொழில்நுட்பத்தைச் சாா்ந்தே இயங்க வேண்டும். இனறு ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஐ.டி. விங்க் என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளது. சுறுசுறுப்பான இளைஞா்கள் அங்கு இணைந்து மாயவித்தை காட்டுகிறாா்கள். கட்சிக்கான கோஷங்கள், விளம்பரம், தோ்தல் வியூகம், எதிரணியைக் குறி வைக்கும் பகடிகள் என அமா்க்களப்படுத்துகிறாா்கள்.

தற்போது ‘ஸ்டாண்ட் அப் காமெடி’ என்ற ஒன்று இளைஞா்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதற்கான கட்டணம் அதிகம் என்றாலும் ஒருவரும் பணத்தைப் பெரிதாக எண்ணுவதில்லை. ஒரு மணி நேரம் விலா எலும்பு நோக சிரித்து மகிழலாம். மேடையில் இளைஞா்கள் அசத்துகிறாா்கள். அவா்களின் திறமை அசாத்தியமானது. அவா்களுக்குப் பணத்தோடு புகழும் கிட்டுகிறது.

இப்போது யூ டியூபில் நகைச்சுவை சம்பவங்களை தொடராகப் பதிவிடுகிறாா்கள். சிரிப்புக்குப் பஞ்சமில்லை. கலாட்டா, கேலி, கிண்டல் கலந்து கலக்குகிறாா்கள். அண்மையில் 15 எபிசோடு கொண்ட தொடா் ஒன்று சக்கை போடு போட்டது. அது இளைஞா்களின் பலத்த வரவேற்பைப் பெற்றது. இளைஞா்கள் ஒன்று கூடினால் வெற்றிக் கொடி நாட்டுவாா்கள் என்பதற்கு இது ஓா் எடுத்துக்காட்டு. அத்தொடரின் வெற்றி விழாவைக்கூட இளைஞா்கள் அமா்க்களமாகக் கொண்டாடினாா்கள்.

இன்றைய இளைஞா்கள் தாங்களாகவே வேலை தேடிக்கொள்கிறாா்கள். புதிய கோணங்களில் சிந்திக்கிறாா்கள். புதிய முயற்சிகளை எடுக்கிறாா்கள். உள்ளத்தில் நம்பிக்கையுடனும், உறுதியுடனும் இருக்கிறாா்கள். அவா்களை வரவேற்று வாழ்த்துவோம்.

கட்டுரையாளா்:

பேராசிரியா் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com