பெண்ணின் பெருந்தக்க யாவுள?

கரோனா நோய்த்தொற்று காலத்தில் கூடுதல் ஆகிப் போனது இல்லத்தரசிகளின் பொறுப்பு. பல வீடுகளில் பாடங்களை இணையத்தில் பிள்ளைகளை விட அதிகமாக கவனித்தது அம்மாக்களே.
பெண்ணின் பெருந்தக்க யாவுள?

ஒரு முனிவரிடம் சீடர் ஒருவர் தன் குடும்பத்தில் அடிக்கடி ஏற்படும் பிரச்னைகளைக் கூறி, அவற்றுக்கான தீர்வைக் காண முடியாமல் தான் திணறுவதாகக் கூறினார். உடனே முனிவர் "உனக்கு உன் ஊரைப் பிடிக்குமா, உன் ஊர் எப்படிப்பட்ட ஊர்' என்று கேட்டார். உடனே சீடர், "எனது ஊர் மிகவும் ரம்மியமான கிராமம். அங்கு இருக்கும் மலைகள் மிகப்பெரியவை. அவை மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும்' என்று கூறினார். 

முனிவர் அவரை அழைத்துக் கொண்டு ஒரு மலையின் உச்சிக்கு வெகுதூரம் நடந்து சென்றார். சீடருக்கோ ஒன்றும் புரியவில்லை. நம் பிரச்னைக்கு இங்கு என்ன தீர்வு இருக்கும் என்று எண்ணிக்கொண்டே  தொடர்ந்தார். மிகவும் உயரமான உச்சியை இருவரும் அடைந்தனர். அப்போது இங்கிருந்து நீ என்ன காண்கிறாய் என்றார் முனிவர்.  சீடர் "மிக அருமையான காட்சி குருவே. கால் வலிக்க ஏறி வந்த களைப்பெல்லாம் இப்போது சென்றுவிட்டது' என்றார்.
"அதோ அங்கு ஒரு புள்ளியாகத் தெரிகிறதே, அதுதான் உன்னுடைய கிராமம்' என்றார். சீடர், "அட, நான் பிரமிப்போடு பார்த்த என் கிராமம் இப்போது இவ்வளவு சிறிதாகத் தெரிகிறதே' என்று பதிலளித்தார். முனிவர் "உண்மைதான், நாம் பெரிதாக எண்ணும் விஷயங்கள் எல்லாம் மேலிருந்து பார்க்கும்போது சிறிதாகத் தோன்றும்.

நீ உன் பிரச்னையை வெளியிலிருந்து பார்க்கும்போது, அதை எளிதாகக் கையாளலாம். பிரச்னைக்கு உள்ளேயே இருந்துகொண்டு அதற்கான  தீர்வைக் காண நினைப்பது,  புதைகுழியில் இருக்கும் மனிதன் அதிலிருந்து மீள நினைப்பதாகும். தரையில் இருப்பவரால் மட்டுமே புதைகுழியில் இருப்பவரைக் காப்பாற்றமுடியும்' என்று முனிவர் கூறினார். சீடருக்குத் தெளிவு பிறந்தது. வெளியுலகம் தரும் அனுபவங்கள், இன்னல்களைக் கையாளும் திறமையை நமக்குக் கற்றுக்கொடுக்கும். 

சுமெய்யே பொயாசி என்ற பெண், பிறக்கும்போதே இரண்டு கைகளும் இன்றி பிறந்தவர்.  திடீரென அவருக்கு நீச்சலின் மீது ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், அவரைச் சுற்றியிருப்பவர்களோ "இரு கைகளும் இல்லாத உன்னால் எப்படி நீந்த முடியும்' என்று கேள்வி எழுப்புகின்றனர். அவர், மீன்தொட்டியில் மீன்கள் நீந்துவதைக் காட்டி, "கைகள் இல்லாத மீன்களால் நீந்த முடியும்போது என்னாலும் முடியும்' என்று கூறுகிறார். 

தன்னுடைய முயற்சியால் தண்ணீரின் ஆழம் காண்கிறார். நம்பிக்கையுடன் பல போட்டிகளில் கலந்துகொள்கிறார். 2018-இல் ஐரோப்பிய நாட்டில் நடந்த போட்டியில் வெற்றியாளராக முடிசூடுகிறார். 2019-இல் நீச்சல் போட்டியில் உலக அளவில் பட்டம் வென்று சாதனை புரிகிறார். அவரின் தன் னம்பிக்கையின் நீட்சியே அவர் தன் கால்களால் தீட்டும் வண்ணமிகு ஓவியம். 
தனக்குக் கைகள் இல்லை என்பதை எண்ணி சோர்ந்து போகாமல் தன்னம்பிக்கையுடன் முயன்றதால் பொயாசி பெரிதினும் பெரிய சாதனையை செய்ய முடிந்தது. தன் கைகள் மற்றவர்களைப் போல் அழகாக இல்லையே என்று எண்ணுபவர்களுக்கு மத்தியில், கைகளே இல்லாத பொயாசி வாழ்க்கையின் கண்ணோட்டத்தை மாற்றி, முயன்றால் வாழ்வு வளமாகும் என்பதை நமக்குப் புரிய வைத்தார். 

வீட்டிற்குள்ளே இருக்கும் சிறு சிறு இன்னல்களால் சலிப்படைந்து வாழ்வின் இனிமைகளை ரசிக்கத் தவறும் மனிதர்கள் ஏராளமானோர். குறிப்பாக பெண்கள் தங்கள் கனவுகளைத் தன் குடும்பத் தேவைக்காக தள்ளிவைத்து விடுவர். பிறருக்காகவும், குடும்பத்துக்காகவும் வாழ்ந்து பின்னாளில் நான் எனக்கென வாழவில்லையே என்று எண்ணி மனம் வருந்துவார்கள். ஒரு பெண் தனக்காக ஒதுக்கும் நேரமே அவளின் வாழ்வை 
மாற்றும்.
நமக்கான நேரம் என்பது தொலைக்காட்சி பார்ப்பது மட்டும் அல்ல. தனக்கு ஏற்ற ஒரு கலையைக் கற்பதோ கற்பிப்பதோகூட இருக்கலாம். நாம் கற்றுக் கொள்ளும் கல்வி நம் அறிவைப் பண்படுத்தும்; கலையோ நம் மனதைப் பண்படுத்தும். நாம் கற்றுக் கொள்ளும் கலைகள் நம் மனதில் உள்ள களைகளைக்  களையும்.

சிறுசிறு நிகழ்வுகளைப் பெரிதாக்கிப் பார்க்கும் குணமே நம் மகிழ்ச்சிக்கான தடையாகும். உண்மையில் ஒருவரின் மகிழ்ச்சி அவருடைய கைகளில்தான் உள்ளது. அற்ப விஷயங்களில் மாட்டிக் கொண்ட மனங்களுக்கான மருந்து பெரிதினும் பெரிதாய் ஒன்றை நோக்கி நகர்வதுதான்.
ஆரோக்கியமற்ற செயல்பாடுகளை அலட்சியப்படுத்தும் குணம் நம்மைப் பண்படுத்தும். ஆம், கண்ணுக்கு அருகில் இருக்கும் சிறு கல் கூட உலகைக் காணும் நம் பார்வையை மறைக்கும். வாழ்வில் நிலையற்ற நிகழ்வுகளைத் தள்ளி வைத்து, நிலையான நிகழ்வுகளுக்காக எடுக்கப்படும் முயற்சிகளே வாழ்வின் வெற்றிக்கான அடித்தளமாக அமையும்.

தங்களை துச்சமாகப் பேசியவர்களைப் புறந்தள்ளி சரித்திரம் படைத்த பெண்கள் பலர் உள்ளனர். தன் மீது அமிலம் வீசப்பட்ட பின்னரும் தளராமல் போராடி வெற்றி கண்ட லக்ஷ்மி அகர்வால், ஏளனம் செய்தவர்களுக்கு முன் எழுச்சியுடன் எழுந்து நின்ற ஆளுமை மிக்க பெண்ணாவார். 
உயரிய இலக்கை நோக்கி வீட்டையும், நாட்டையும்  உயர்த்துவதற்கு முயன்று கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணும் நாட்டின் வளர்ச்சிக்கான அடிக்கல் ஆவர். இன்றும் பல இடங்களில் தங்கள் அடிப்படைத்  தேவைக்காக போராடும் பெண்கள் இருந்து  கொண்டுதான் இருக்கின்றனர். அவர்களுக்கு மத்தியில் கிடைத்த வாய்ப்புகளைக் கொண்டு கேளிக்கை நிகழ்வுகளில் மட்டும் மனம் செலுத்தாமல் தனக்காகவும், சுற்றத்தாரின் உயர்வுக்காக பாடுபடும் ஒவ்வொரு பெண்ணும் போற்றப்பட வேண்டியவரே. 

எந்தச் சூழ்நிலையிலும் தன்னால் இயன்ற உதவியை நாட்டுக்கு செய்யலாம் என்பதற்கு மிகப்பெரிய சான்று, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த துளசி கெளடா என்ற பெண்மணி. அவர் அன்று நட்ட ஒவ்வொரு மரக்கன்றும் இன்று ஆக்ஸிஜன் தரும் ஆலைகளாக வளர்ந்து நிற்கின்றன. 
துளசி கிட்டத்தட்ட முப்பதாயிரம் மரக்கன்றுகளை நட்டு ஒரு காட்டையே உருவாக்கிப் பாதுகாத்து வருகிறார். இளம் வயதில் தனக்கு மரம் நடுவதில் ஏற்பட்ட ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு, இன்று தன் 72 வயதில், மரங்களின் தாயாய் பூமித்தாயின் சேயாய் உயர்ந்து நிற்கிறார். 

ஒருவர் தன் பங்கை சமுதாயத்திற்கு அளிப்பதற்கு  பதவியோ பட்டமோ தேவையில்லை என்பதே அவரது வாழ்க்கை நமக்குக் கற்றுத் தரும் பாடமாகும். அவர் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதினைப் பெற்றபோது செருப்பு அணியாத கால்களுடன், தங்கள் கலாசார உடையணிந்து வந்து விருதைப் பெற்றது  இன்னும் சிறப்பு.

கரோனா நோய்த்தொற்று காலத்தில் கூடுதல் ஆகிப் போனது இல்லத்தரசிகளின் பொறுப்பு. பல வீடுகளில் பாடங்களை இணையத்தில் பிள்ளைகளை விட அதிகமாக கவனித்தது அம்மாக்களே. எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் திறமை பெண்களுக்கு உண்டு என்று உணர்த்திய காலம் அது.

அனுமனுக்குத் தன் திறமை தெரியாமல் இருந்தபோது ஜாம்பவான் வந்து அவரின் திறமையை விளக்கிக் கூறியது போல், நோய்தொற்றுக் கிருமி பல பெண்களின் திறமையை இணையதளம் மூலம் பிரபலமடையச் செய்திருக்கிறது. தன் திறமையை உலகறியச்  செய்ய இணையதளம் போதுமானது என்ற புரிதல் பெண்களிடம் ஏற்பட்டுள்ளது.

எந்த ஒரு புதிய முயற்சியும் தொடங்கும்போது அது குறித்த விமர்சனங்கள் வரலாம்.  நம் குறைகளைப் பற்றி கூறும்போது மனம் தளர்வுறலாம். எதிர்மறை விமர்சனங்கள் நம் ஆற்றலைக் குறைக்கலாம். ஆனால் அந்த நிலையில் இருந்து மீண்டு, நாம் வேகமாக பழைய நிலைக்குத் திரும்புவதே நம் வெற்றியின் வீரியத்தை அதிகமாக்கும்.

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை எத்தனை முறை சாய்த்தாலும், அது உடனே தன் பழைய நிலைக்கு வந்து விடும். அதுவே உயர்வான வாழ்க்கைக்கான தத்துவம் ஆகும். எதிர்ப்புகளைத் தாண்டி தன் பழைய நிலையை  அடையும் விசையை தலையாட்டி பொம்மை வைத்திருப்பதே அதன் ரகசியம் ஆகும். 

யார் ஒருவர் வீழ்ந்தவுடன் மீண்டெழும் சக்தியைப் பெறுகிறாரோ அவரே வாழ்வின் உச்சியை அடைகிறார். எவ்வளவு பெரிய விசையையும் சமன் செய்து மீண்டும் தன்னிலைக்கு வரும் உந்துசக்தி நம்மிடமே உள்ளது. இதனை எடுத்துக் கூறுவதே தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை.

சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணிக்கும் பெண்கள் பலர், தங்கள் திருமணத்திற்குப் பின்பு, குடும்பம் மட்டுமே தங்கள் முன்னுரிமை; தங்களால் குடும்பம், லட்சியம் இரண்டிலும் பயணிக்க முடியாது என்று எண்ணி தங்கள் கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகின்றனர். அவ்வாறு எண்ணுவது தவறு என்பதை மதுரையைச் சேர்ந்த பத்மாவதி ஹரிஹரன் என்ற 86 வயதுப் பெண்மணியின் சாதனை நமக்கு உணர்த்துகிறது.

இளம் வயதில் திருமண பந்தத்தில் இணைக்கப்பட்ட பத்மாவதி, கல்வியின் மீது கொண்ட தீராத ஆர்வத்தால் பின்னர், பி.காம் படித்து முடித்தார். பின் தனது 45-ஆவது வயதில் சி.ஏ எனப்படும் பட்டயக் கணக்காளர் தேர்வில் வெற்றி பெற்றார். அவர் தன்னுடைய அனுபவப் பகிர்வில், சில நாட்களில் காலையில் சி.ஏ தேர்வையும், மாலையில் பட்டமேற்படிப்பான எம்.காம் தேர்வையும் எழுதியதாகக் குறிப்பிட்டுகிறார்.  

இவர், இல்லத்தரசியாக இருந்தபோதிலும், இசையிலும் ஈடுபாடு கொண்டு திறமையான இசைக்கலைஞராகவும் ஆனார். ஒரு பெண் நினைத்தால் வெற்றிகரமாக வாழ்ந்து காட்ட முடியும் என்பதற்கு உதாரணமாக பத்மாவதி திகழ்கிறார்.

"காதல் செய்யும்  மனைவியே சக்தி கண்டீர்' என்று மகாகவி பாரதியாரும், "இடும்பை தீர்ப்பவள் என் மனை, அவள் என் குடும்ப விளக்கு' என்று பாரதிதாசனும் பெண்மையைப் போற்றினர்.  

எனவே, சிறிய எல்லைக்குள் உலகம் காணும் கிணற்றுத் தவளையாக இல்லாமல் பருந்துப் பார்வை கொண்டு உலகம் காண்போம் பெண்களே! பெரிதினும் பெரிது காண்போம்.

இன்று (மார்ச் 8) உலக மகளிர் நாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com