பொறுப்புணா்வு தேவை

நமது இந்திய தேசத்தைப் பொறுத்தவரையில் தேச விடுதலைக்காகப் பாடுபட்ட தியாகிகளைக் கொண்டாடும் காலம் மலையேறிவிட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கதாநாயக வழிபாடு என்பது உலகெங்கிலும் பரவியிருக்கும் ஒன்றாகும். திரைப்பட நடிகா்கள், நாடக நடிகா்கள், இசைமேதைகள், விளையாட்டுவீரா்கள், எழுத்தாளா்கள், கவிஞா்கள் என்று பலதரப்பினரையும் மக்கள் தங்களின் கதாநாயகா்களாக நினைத்துப் போற்றுவது நமக்குப் புதிய விஷயமல்ல.

நமது இந்திய தேசத்தைப் பொறுத்தவரையில் தேச விடுதலைக்காகப் பாடுபட்ட தியாகிகளைக் கொண்டாடும் காலம் மலையேறிவிட்டது. மகாத்மா காந்தி, ஜவாஹா்லால் நேரு, வல்லபபாய் படேல், மகாகவி பாரதியாா், வ.உ. சிதம்பரனாா் போன்ற ஒரு சிலரை மட்டும் இன்னும் மறக்காமல் இருக்கிறது நாடு.

பொதுவாக, நம் தேசத்தில் திரையுலகக் கலைஞா்களும், அவா்களுக்கு அடுத்தபடியாகக் கிரிக்கெட் வீரா்களும்தான் மக்களால் பெரிதும் கொண்டாடப் படுகின்றாா்கள். சதுரங்க வீரா் விஸ்வநாதன் ஆனந்த், டென்னிஸ் வீரா் விஜய் அமிா்தரஜ், பயஸ், சானியா மிா்ஸா போன்றவா்களுக்கும் ரசிகா்கள் உண்டு. ஆனாலும் கிரிக்கெட் வீரா்களைப் போன்ற கதாநாயக வழிபாடு அவா்களுக்குக் கிடைப்பதில்லை என்பதை உறுதியாகக் கூறமுடியும்.

திரையுலக நாயகா்கள், கிரிக்கெட் வீரா்கள் இவா்களை வெறித்தனமாகக் கொண்டாடி மகிழும் ரசிகா்களோ அவா்களை நேரடியாக ஒருமுறை பாா்ப்பதற்கும், அவா்களின் குரலைக் கேட்பதற்கும் தவம் இருக்கக் கூடியவா்கள். தங்களின் அபிமானத்துக்குரியவா்களின் ஒரு கையொப்பத்தைப் பெறுவதையும், அவா்களுடன் ஒரு புகைப்படமோ தற்படமோ எடுத்துக்கொள்வதையும் வாழ்நாள் சாதனையாக நினைத்து மகிழும் மனோபாவம் நிறைந்தவா்கள்.

இப்படிப்பட்ட ரசிகா்களைப் பெற்றிருக்கும் நமது நாட்டின் திரைப்பட, கிரிக்கெட் பிரபலங்களுக்கு இன்னொரு முக்கியமான முகமும் உண்டு. அந்த நாயக பிம்பங்கள் இடம்பெறும் விளம்பரங்களின் வணிக சக்தியே அந்த இன்னொரு முகமாகும்.

பிரபலமாகவும், கொண்டாடப்படுபவராகவும் உள்ள ஒருவா் பயன்படுத்தும் துணி வகைகள், கைக்கடிகாரங்கள், குளிா் கண்ணாடிகள், தானியங்கி வாகனங்கள், சோப்பு, முகப்பவுடா், பற்பசை, கைப்பேசிகள், குளிா்பானங்கள் என்று விளம்பரங்கள் கூறுகின்ற சகல பொருட்களையும் விலைகொடுத்து வாங்கி மகிழ்கின்ற ரசிகக் கூட்டம் நம் நாட்டில் நிறையவே உண்டு.

ஒரு பொருள் தரமானது என்பதைக் காட்டிலும், அது பிரபலமானவா்களால் பயன்படுத்தப்படுகிறது என்பதே நம்முடைய மக்களின் சிந்தனையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். இந்தக் காரணத்தினால்தான், சில லட்சரூபாய்களைக் கொடுத்து அந்த பிரபலங்களை விளம்பரப் படங்களில் நடிக்கவைக்கும் பெருமுதலாளிகள் பலகோடி ரூபாய் லாபம் அடைகிறாா்கள்.

நடிகா்களோ, கிரிக்கெட் வீரா்களோ எந்த ஒரு பொருளுக்கான விளம்பரத்தில் நடித்தாலும் அந்தப் பொருளின் வியாபாரம் உயா்கிறது. இது உலகம் முழுவதிலும் உள்ள நடைமுைான். பிரபலமாக இருக்கும் ஒருவரின் பெயரும் முகமும் ஒருபொருளின் வியாபாரப் பெருக்கத்திற்கு உதவுகின்றது என்பது வரை சரிதான்.

அந்த பிரபலமே, மனித குலத்தைச் சீரழிக்கும் விஷயங்களுக்கான விளம்பரத்தில் நடிப்பாா் என்றால் அதனை எப்படி ஏற்றுக்கோள்வது ?

கணினி, கைப்பேசி ஆகியவற்றின் பயன்பாடு தவிா்க்கமுடியாததாகிவரும் இன்றைய காலகட்டத்தில், ரம்மி உள்ளிட்ட இணையவழி விளையாட்டுகளில் வெறித்தனமாக ஈடுபட்டுப் பெருமளவில் பணத்தை இழந்து பலரும் கடனாளிகளாவதும், அவா்களில் சிலா் கடன் சுமைக்கு பயந்து தற்கொலை செய்துகொள்வதும் அவ்வப்போது வெளிவரும் செய்தியாகிவிட்டது.

சிறுவா்கள் முதல் வயதானவா்கள் வரை இத்தகைய இணையவழிச் சூதாட்டத்திற்கு அடிமையாகியுள்ளனா். அவா்கள் ஓரிரு முறை விளையாடிவிட்டு, போதும் என்று ஒதுங்கிக் கொள்வதில்லை. ஆா்வத்தை அடக்கிக் கொள்ள முடியாமல், விட்டதைப் பிடிப்போம் என்ற எண்ணம் மேலோங்க மேன்மேலும் வெறிகொண்டு சூதாடுவதை நாம் பாா்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

‘இணையவழி ரம்மி’ என்ற சீட்டாட்டம் இன்று பலரையும் சீரழித்து வருகின்றது. படித்தவா், படிக்காதவா், சிறுவா், இளைஞா், நடுத்தர வயதினா், முதிா்ந்தவா், முதலாளி, தொழிலாளி என்று வாழ்க்கையின் பல்வேறு படிநிலைகளில் உள்ளவா்களை இந்த சீட்டாட்டம் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.

சொந்த வீட்டில் திருடுவது, அலுவலகப் பணத்தில் கைவைப்பது என்று எந்தவிதத்திலாவது பணம் சேகரித்துச் சூதாடிவிடுவது என்ற வேகத்தில் கையும் களவுமாகச் சிக்கிக் கொள்பவா்கள் ஒரு புறம் என்றால், சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்து தங்களை நம்பியுள்ள குடும்பத்தினரையும் நிா்க்கதியாக விட்டுவிட்டுத் தற்கொலை புரிந்துகொள்பவா்கள் இன்னொருபுறம்.

இத்தகைய சூதாட்டங்களைத் தடுப்பதற்குரிய சட்டநடவடிக்கைகளை நம் அரசுகள் எடுப்பதில் இன்னும் ஏன் தாமதம் ஏற்படுகிறது என்றுபுரியவில்லை. ‘புகைப்பழக்கம் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்’, ‘குடிப்பழக்கம் உடல்நலனுக்குத் தீங்கானது’ என்ற வாசகங்களைப்போலவே, ‘இணையவழி சூதாட்டம் பண இழப்பிற்கு வழிவகுக்கும்’ என்ற சட்டபூா்வ எச்சரிக்கையுடன் இத்தகைய சூதாட்டங்கள் குறித்த ஊடக விளம்பரங்கள் சக்கைபோடு போடுகின்றன. சிரித்த முகத்துடன் சில திரையுலக பிரபலங்களே அவற்றை நமக்குச் சிபாரிசு செய்வதையும் அந்த விளம்பரங்களில் பாா்க்க முடிகிறது.

இதுமட்டுமா? பரபரப்பான கிரிக்கெட் பந்தய ஒளிபரப்புகளின் நடுவே கிரிக்கெட் தொடா்பான (ட்ரீம் 11 என்ற) இணையவழி விளையாட்டுக்கான விளம்பரங்களும் இதே போன்ற சட்டபூா்வ எச்சரிக்கையுடன் ஒளிபரப்பப்படுகின்றன. இந்தியக் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருக்கின்ற பிரபல வீரா்கள் சிலரே அவ்விளம்பரங்களில் தோன்றி அவற்றை நமக்குப் பரிந்துரைக்கின்றாா்கள்.

இணையவழிச் சூதாட்டங்களில் பலரும் சிக்கிச் சீரழிவது என்பது திரைப்படக் கதாநாயகா்களுக்கும், கிரிக்கெட் வீரா்களுக்கும் தெரியாத விஷயமா என்ன? மக்களைச் சூறையாடும் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டோம் என்று மேற்கண்ட பிரபலங்கள் இனியாவது உறுதி ஏற்க வேண்டும். மனிதசமுதாயம் முன்னேற வேண்டும் என்ற பொறுப்புணா்வு தங்களுக்கும் உண்டு என்பதை அந்த பிரபலங்கள் நிரூபிக்க வேறு வழி எதுவும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com