போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது!

போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது!

 இந்திய மாணவர் ஒருவர், மருத்துவப் படிப்பிற்கு இந்தியாவில் செலவிடும் தொகையில் பாதியளவு செலவழித்தாலே, உக்ரைனில் மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட முடியும். தம் பெற்றோரைப் பிரிந்து, கடும் குளிரைத் தாங்கிக்கொண்டு உக்ரைனில் உறையும் மாணவர்கள், இன்று பதுங்குக் குழிகளிலும், ரயில்வே ஸ்டேஷனிலும் அகதிகள் போல் காத்துக் கிடக்கும் நிலைமை யாரால் விளைந்தது? ஒரு முதலாளி தொழிலாளியைச் சுரண்டுவது மட்டும் சுரண்டல் அன்று; ஒரு வல்லரசு, ஒரு குடியரசைச் சூறையாடுவதும் சுரண்டல்தான்.
 1965-க்கு முன் சிங்கப்பூர், மலேசியாவுடன் சேர்ந்தே இருந்தது. சிங்கப்பூருடன் சேர்ந்திருந்தால், மலேசியாவில் மலாய்க்காரர்களை விடச் சீனர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடும் எனப் பயந்த துங்கு அப்துல் ரஹ்மான், சிங்கப்பூரைக் கத்தரித்து விட்டார். அப்போது சிங்கப்பூரின் பிரதமராக இருந்த லீகுவான் யூ, துங் அப்துல் ரஹ்மானிடம் தங்களைத் துண்டித்துவிட வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டார்.
 "நாங்கள் தண்ணீருக்குக்கூட மலேசியாவைத்தான் நம்பி இருக்கிறோம்; இதுவொரு மீன்பிடித் தீவு; எங்களைத் தனித்து விடாதீர்கள்' என்று வேண்டினார். ஆனால், மலாக்காவுக்கு வந்த துங்கு அப்துல் ரஹ்மான், சிங்கப்பூருக்குச் சுதந்திரம் என வானொலி மூலம் பிரகடனம் செய்தார். அதனைச் செவிமடுத்த லீகுவான் யூவின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது.
 ஆனால், அக்டோபர் புரட்சிக்குப் பிறகு சோவியத் நாட்டோடு இணைந்திருந்த குடியரசுகள், ஒவ்வொன்றாகப் பிய்த்துக் கொண்டு போனது ஏன் எனச் சிந்தித்துப் பார்த்தால் புரியும்.
 "துக்கத்தால் சூழப்பட்ட நாம், துக்கத்தையே சுவாசிக்கின்றோம்' என்றொரு பழமொழி ரஷியாவில் உண்டு. இன்றைக்கு 5,000 ரஷிய வீரர்கள் உக்ரைன் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். 193 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா. சபை "ரஷியாவின் ராணுவ நடவடிக்கை, உக்ரைனின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் மீறிய செயல்' எனக் கண்டிக்கின்றது.
 ஆனால், ரஷியா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, தீர்மானத்தை மறுதலித்திருக்கிறது. சோவியத் நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருக்கிறது. இரண்டாம் உலகப் போரின்போது, நாசிசத்தையும், பாசிசத்தையும் தோற்கடித்த நாடு, இன்று அந்த இசங்களுக்குத் துணை போகலாமா?
 "இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி என்ற பெயரிட்டழைக்கப்படும் பலாத்காரத்துக்கும் கொள்ளைக்கும் முடிவே இல்லை' என்று எழுதினார் மாவீரன் லெனின் (ரஜனி பாம்தத், இன்றைய இந்தியா). அந்தப் புரட்சித் தலைவரால் கண்டிக்கப்பட்ட செயலை, இன்றைய ரஷியா, உக்ரைனில் காட்டுவானேன்?
 ஜார் ஆட்சி, வேண்டுமென்றே ஜனங்களைக் கல்லாமை என்ற காரிருளில் அடைத்து வைத்திருந்தது. ஜார் ஆட்சியில் 100-க்கு 78 பேருக்குப் படிப்பு வாசனையில்லை. ஆனால், அக்டோபர் புரட்சிக்குப் பிறகு, கல்லாதவர்களின் எண்ணிக்கை 100-க்கு 7 ஆகக் குறைந்துவிட்டது. சகலருக்கும் 7 வருஷக் கல்வி கட்டாயமாய் அளிக்க வேண்டும் என்று 1934-இல் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், அந்த ரஷியாவால், உக்ரைனில் 25 பல்கலைக்கழகங்களில் படிக்கும் இந்திய மாணவர்கள் பதுங்குக் குழிகளில் பதுங்கிக் கிடக்கிறார்கள். சாலை வழியாக 300 கி.மீ. நடந்து, போலந்துக்கும் ருமேனியாவுக்கும் சென்று சேருகின்றனர்.
 அக்டோபர் புரட்சியை "யுகப்புரட்சி' என முதலில் அறிவித்த மகாகவி பாரதி, "சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்' என இந்திய இளைஞர்களுக்கு அறிவுறுத்திய பாரதி, இன்றிருந்தால் கண்ணீர் வடிக்க மாட்டாரா?
 "1905 ஜனவரி 9-ஆம் தேதியன்று ஜார் மன்னனிடம் மனு கொடுப்பதற்காகத் தொழிலாளர்கள் குளிர்கால அரண்மனைக்கு ஊர்வலமாகச் சென்றார்கள். அந்த ஊர்வலத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யுமாறு ஜார் மன்னர் துருப்புகளுக்கு உத்தரவிடுகிறார். அதன் காரணமாக ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டார்கள்; சுமார் 5000 தொழிலாளர்கள் காயம் அடைந்தார்கள். அந்த ஞாயிற்றுக்கிழமையை ரத்த ஞாயிறு என்று அழைத்தார்கள்' என லெனின் வருத்தப்பட்டு எழுதுகிறார்.
 உக்ரைன் தலைநகரை நோக்கி 65 கி.மீ.க்கு ரஷியா பீரங்கிகளை நிறுத்தியிருக்கிறது. பெலாரஸ் - உக்ரைன் எல்லையில் ஒரு லட்சம் போர் வீரர்களை நிறுத்தியுள்ளது. ஜார் ஆட்சியில் சோஷலிஸ்டுகள் அனுபவித்த கொடுமைகளை, ரஷிய மொழி பேசும் உக்ரைன் மீது காட்டுவதுதான் சோஷலிசமா? "மக்களுக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்தியவர்கள் மீது, மக்களே வன்முறையைப் பிரயோகிப்பார்கள்' எனக்கூறிய லெனின் வாக்கை, இவ்வளவு சீக்கிரமா ரஷியா மறப்பது?
 அறுபதுகளில் பிடல் காஸ்ட்ரோ கியூபாவை அமெரிக்காவின் பிடியிலிருந்து தனி நாடாகப் பிய்த்து எடுக்கப் போராடிய காலத்தில், அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி ஆத்திரம் கொள்ளவில்லை; அவசரப்படவில்லை. "நம்மை அவர்கள் (பிடல் காஸ்ட்ரோ) ஒருமுறை முட்டாள் ஆக்கினால், அவர்கள் முட்டாள்கள்; இரண்டாவது முறையும் அவர்கள் முயலுவார்களேயானால் நாம் முட்டாள்கள்' என்றார் ஜான் கென்னடி. அந்தப் பொறுமை இன்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு இல்லை.
 கியூபா எனும் சிறு தீவு சுதந்திரத்திற்குப் போராடியபோது, அதனை ஆதரித்து கியூபாவைச் சுற்றிலும் போர்க்கப்பல்களை நிறுத்தி, நேசக்கரம் நீட்டினார், அதிபர் குருசேவ்.
 ஒரு காலத்தில் ஒரு நாட்டின் விடுதலைக்குப் பக்கபலமாக நின்ற சோவியத் வல்லரசு, இன்று ஒரு சுதந்திர நாட்டின் அமைதியைக் குலைப்பது ஏன்?
 சோஷலிஸ்டுகள் அடிமைப்பட்ட நாட்டிற்குச் சுதந்திரம் கிடைக்கத்தான் போராடுவார்கள். சே குவேரா, கியூபாவின் விடுதலைக்கு பிடல் காஸ்ட்ரோவோடு தோளோடு தோள் நின்று போராடினார். விடுதலை பெற்றதும் சே குவேராவிற்கு ஒரு பதவியும் கொடுத்தார், காஸ்ட்ரோ. ஆனால் சே குவேரா அதனை மறுத்து பொலிவியாவின் விடுதலைக்குப் போராடப் புறப்பட்டார்.
 சே குவேராவைப் பார்த்து நிருபர்கள் "உங்கள் தாய்நாடு எது' என்று கேட்டபோது, "அடிமைப்பட்ட நாடே என் தாய்நாடு; அந்த நாட்டிற்கு விடுதலையைத் தேடித்தரும் போராளி நான்' என்றார். ஆனால், இன்று சோவியத் நாடு அடிமைப்பட்ட நாட்டிற்குச் சுதந்திரத்தை வழங்குவதற்கு பதிலாக, சுதந்திரம் பெற்ற ஒரு குடியரசை அடிமை நாடாக ஆக்க முயலுகிறது.
 கியூபா விடுதலை பெற்றவுடன், சோவியத் நாட்டிற்குத் தன் விசுவாசத்தைக் காட்டியதே தவிர, அதனோடு ஒன்றிப் போகவில்லை. அதற்கு காஸ்ட்ரோ சொன்ன காரணம், "ஒரு நாட்டின் வழிமுறையை இன்னொரு நாடு அப்படியே ஏற்க முடியாது; கூடாது. ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தன்மைகள் உள்ளன.
 அரசியல், பொருளாதாரம், பண்பாட்டு நிலைகளில், ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு கட்டுமானம் இருக்கும். அவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்; இல்லாவிடில் பெரும் சேதமும் பின்னடைவும் தவிர்க்க முடியாததாகிவிடும். "மண்ணுக்கேற்ற மார்க்ஸியம்' தேவை என்ற கருத்தாக்கம் எங்கும் பரவி வருகிறது' என்றார். அன்று பிடல் காஸ்ட்ரோ சொன்ன காரணம் இன்று உக்ரைனுக்கும் பொருந்தும் அல்லவா?
 மனித உயிர்கள் புழுக்களைப் போல் கொல்லப்படுவதைப் பார்த்து, போப் பிரான்சிஸ் ரஷிய தூதரகத்திற்கே சென்று கருணை மனுவை வழங்கினார். சுரண்டல், அடிமைத்தனத்தை ஒழித்தல், ஏகபோக முதலாளித்துவத்தைத் தடுத்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றல் போன்ற கொள்கைகள்தாம் சோஷலிசம், கம்யூனிஸம் என்று எண்ணிக் கொண்டிருந்தவர்கள், இன்று ஏமாந்து கிடக்கின்றனர்.
 "உலகத் தொழிலாளர்களே! ஒன்றுபடுங்கள்; இழப்பதற்கு விலங்குகளைத் தவிர வேறொன்றுமில்லை' என்றார் கார்ல் மார்க்ஸ். ஆனால், இன்று சுதந்திர நாட்டின் பிரஜைகளே விலங்கு மாட்டி அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
 கம்யூனிஸம் பேசும் சீனா, திபெத்தை ஆக்கிரமித்து, புத்த பிக்குகளை வெளியேறச் செய்துவிட்டது. இந்தியாவின் லடாக் பகுதியை ஆக்கிரமித்ததோடு, அருணாசல பிரதேசத்திலும் தமது கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துவிட்டது. இலங்கையிலே கடலைத் தூர்த்து, கடல்தளம் கட்டத் தொடங்கிவிட்டது. தைவானை உலகப்படத்தில் இல்லாமல் போகும்படி செய்து கொண்டிருக்கிறது.
 பொதுவுடமை பேசும் புண்ணியவான்களின் போக்கை அன்றே உணர்ந்திருந்தார் மாவீரன் லெனின். "தோழர் ஸ்டாலின் அளவற்ற அதிகாரத்தைத் தம் வசம் குவித்து வைத்திருக்கிறார். அந்த அதிகாரத்தை எப்போதும் எச்சரிக்கையுடன் அவர் பயன்படுத்துவாரா என்ற பயம் எனக்கு உண்டு.
 ஸ்டாலின் மிகவும் முரட்டுத்தனமானவர். எனவே, அதிக பொறுமையும் கட்டுப்பாட்டுணர்வும் உள்ளவராக, தோழர்களிடம் மென்மையாகவும், அக்கறை உள்ளவராகவும் நடந்து கொள்ளக்கூடிய, முடிவெடுப்பதில் உறுதியானவராகவும் உள்ள ஒருவரைத், தேடிக் கண்டுபிடிப்பது அவசியம்' என எழுதியிருக்கிறார் லெனின்.
 மகாகவி பாரதியார் "இம் என்றால் சிறைவாசம்; ஏன் என்றால் வனவாசம்' எனும்படி ஆட்சிபுரிந்த ஜார் ஆட்சி ஒழிந்துவிட்டது என்று கவிதையிலே ஆவேசப்பட்டுப் பாடிவிடுகிறார். ஆனால், பின்னர் நிகழ்ந்த கொலை பாதகங்களைப் பார்த்துக் கருணை மறவன் லெனினைக் கண்டிக்கவே செய்கிறார். "கொலையாலும், கொள்ளையாலும் அன்பையும் சமத்துவத்தையும் ஸ்தாபிக்கப் போகிறோம் என்று சொல்வோர், தம்மைத்தாமே உணராத பரம மூடர்கள் என்று நான் கருதுகிறேன்.
 "கொலையாளிகளை அழிக்க, கொலையைத்தானே நாம் கைக்கொள்ள நேருகிறது. அநியாயம் செய்வோரை, அநியாயத்தாலே அடக்கும்படி நேரிடுகிறது என்று ஸ்ரீமான் லெனின் சொல்லுகிறார். இது முற்றிலும் தவறான கொள்கை. கொலை, கொலையை வளர்க்குமே தவிர அதனை நீக்கவல்லது ஆகாது. அநியாயம் அநியாயத்தைத்தான் விருத்தி பண்ணுமே தவிர, குறைக்காது.
 அதர்மத்தைத் தர்மத்தால் வெல்ல வேண்டும்... தர்மத்தாலும் கருணையாலும் எய்தப்படும் வெற்றியே நிலைபெற்று நிற்க வல்லதாகும். இதனை அறியாதவர் உலக சரித்திரத்தையும் இயற்கையின் விதிகளையும் அறியாதவர் ஆவர்' எனத் தம் கட்டுரையில் எழுதுகிறார்.
 இப்படி மனித உயிர்கள் மலிவுப்பதிப்புகள் ஆவதைப் பார்த்துச் சகிக்காத இந்திய அரசு, நான்கு மத்திய அமைச்சர்களை உக்ரைனுக்கு அனுப்பி, இந்திய மாணவர்களுக்குப் பாதுகாப்பைத் தந்திருக்கிறது. "ஆபரேஷன் கங்கா' எனும் திட்டத்தின் மூலம், இதுவரை 76 விமானங்கள் மூலம் சுமார் 17,400 மாணவர்கள் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
 இரண்டு உலகப்போர்களிலும் வென்றவர்கள் வாழ்ந்தார்கள்; தோற்றவர்கள் இருப்பதற்கு வழியில்லை. மூன்றாவது உலகப்போர் நடந்தால், வெற்றியைக் கொண்டாட வெற்றியாளர்களும் இருக்க மாட்டார்கள்! "யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின், போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது' எனும் கம்பன் வாக்கை நினைத்தால், சோவியத்தும் வாழும்; உக்ரைனும் வாழும்!
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com