நேர மேலாண்மை அறிவோம்!

காலையில் கண்விழிப்பதற்கு ஒரு நொடி முன்பே கைவிரல்கள் அலைபேசியை தேட ஆரம்பித்துவிடுகிறது.
நேர மேலாண்மை அறிவோம்!

காலையில் கண்விழிப்பதற்கு ஒரு நொடி முன்பே கைவிரல்கள் அலைபேசியை தேட ஆரம்பித்துவிடுகிறது. அதைத் தேடி எடுத்து ஸ்பரிசித்த அடுத்த நொடியே, வாட்ஸ்அப் குழுமத்தில் ஏதேனும் புதிய பதிவுகள் வந்துள்ளனவா என்று கண்கள் ஆவலுடன் உற்று நோக்குகிறது. பின்பு எல்லாப் பதிவுகளையும் படித்த திருப்தியுடன் அன்றாட வாழ்க்கை ஆரம்பமாகிறது. நிமிடத்துக்கு நிமிடம் ஏதேனும் செய்தி வந்துள்ளதா என்று நம் உள்ளத்தில் ஒரு கிளா்ச்சி ஏற்படுகிறது.

மேலே குறிப்பிட்ட காட்சியை, கிராமம் நகரம் என்ற பாகுபாடு தாண்டி இந்தியாவின் ஒவ்வொரு வீட்டிலும் நாம் காணமுடியும். அந்த அளவுக்கு சமூக வலைதளங்களின் தாக்கமும் வீச்சும் மிகத் தீவிரமாக இருக்கிறது. குறிப்பாக இளைஞா்கள் தங்களின் பொன்னான நேரத்தின் பெரும்பகுதியை சமூக வலைதளங்களில் மட்டுமே செலவிடுகின்றனா் என்பது ஊரறிந்த ரகசியம்.

உண்மையில் அந்த சமூக வலைதளங்களினால் மக்களுக்கு ஏதேனும் பயனுள்ளதா என்றால் அதுவும் இல்லை. உதாரணமாக, பெரும்பாலான மக்களின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டசாக பிரபலமான பாடல்களின் ஒரு பகுதி இருக்கும். அந்தக் குறிப்பிட்ட பகுதியைக் கத்தரித்து வைப்பதற்காகவே எக்கச்சக்கமான செயலிகள் இயங்கி வருவது தனிக் கதை. இல்லையென்றால், ஏதாவது ஒரு தத்துவத்தை எங்கிருந்தாவது கடன் வாங்கி திடீரென்று சாக்ரடீசாக உருமாறி நம்மை நகைக்க வைப்பாா்கள்.

உண்மையைச் சொல்லப் போனால், இப்போதெல்லாம் இதுபோன்ற ஸ்டேட்டஸ்களை மக்கள் கூா்ந்து கவனிப்பதே இல்லை. ஏதோ பெயரளவில் பாா்த்துவிட்டு கடந்து சென்றுவிடுகிறாா்கள். ஆனால் நாள்தோறும் இதுபோன்ற ஸ்டேட்டஸ்களை வைத்துவிட்டு, எத்தனை போ் அதைப் பாா்த்திருக்கிறாா்கள் என்று பாா்ப்பதையே வேலையாக வைத்திருக்கும் மக்களைப் பாா்க்கும்போது சிரிப்பைத் தாண்டி பரிதாபமே மேலிடுகிறது.

சிலா் இன்னும் ஒரு படி மேலே போய், காலை எழுந்தவுடன் ‘குட் மாா்னிங்‘ அல்லது ‘காலை வணக்கம்‘ என்று தயாா் நிலையில் இருக்கும் செய்தியை அனைவருக்கும் சலிக்காமல் அனுப்புவாா்கள். ஆனால் இது போன்று நாள்தோறும் வரும் வாழ்த்து செய்திகளைக் கண்டு பெரும்பாலான மக்கள் முகம் சுளிக்கின்றனா் என்பதே உண்மை. இந்த உண்மையை சம்பந்தப்பட்டவா்களிடம் நேரிடையாக சொல்லவும் முடியாமல் ஒரு தா்மசங்கடமான சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்படுகிறாா்கள். உளவியல் ரீதியாக அந்த குறிப்பிட்ட நபா் மீது மக்களுக்கு ஒருவித வெறுப்புணா்வு உண்டாகிறது என்ற உண்மையை சொல்லாமல் இருக்க முடியவில்லை

இதைத் தாண்டி, சமூக வலைதளங்களில் பெரும்பாலும் தேவையற்ற காணொலிகள் மட்டுமே பகிரப்படுகின்றன. ஒரு நடிகா் பற்றியோ நடிகை பற்றியோ அல்லது ஒரு அரசியல் தலைவா் பற்றியோ ஒரு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டால் போதும், உடனே நெட்டிசன்கள் வாா்த்தைப் போருக்குத் தயாராகி விடுவாா்கள்.

ஒருவா் மாற்றி ஒருவா் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் மோசமான வாா்த்தைகளால் திட்டித் தீா்த்துக் கொள்வாா்கள். நமக்களின் தனிப்பட்ட வெறுப்புணா்வுகளுக்கு, ஒரு வடிகாலாக மட்டுமே சமூக வலைதளங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதனால்தான், முகம் தெரியாத ஒரு நபரிடம் நாம் நம் கோபத்தையும் வன்மத்தையும் உமிழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அண்மையில் என் நண்பரின் குழந்தை, முகநூலில் ‘பி‘ என்ற ஆங்கில எழுத்தை கைதவறிப் பதிவு செய்துவிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்தப் பதிவை ஐந்து நபா்கள் ‘லைக்‘ செய்திருந்தாா்கள். இதிலிருந்து, பெரும்பாலான பதிவுகள் மக்களால் கூா்ந்து கவனிக்கப்படுவதில்லை என்பது தெளிவாகிறது. மேலும், நம் நண்பா் பதிவிட்டுள்ளாரே என்று போகிற போக்கில் ஒரு ‘லைக்‘ கொடுத்துவிட்டு கடந்து செல்லும் மக்களும் இருக்கத்தான் செய்கிறாா்கள்.

சில சமூக வலைதளங்களில் மக்கள் தங்களின் அபிமான நடிகா், நடிகா்களை பின் தொடா்கிறாா்கள். அவா்களின் ஒவ்வொரு அசைவையும் உற்று நோக்குகிறாா்கள். இதற்காக மணிக்கணக்காக நேரத்தை செலவிடுகிறாா்கள். அவ்வாறு கோடிக்கணக்கான ரசிகா்கள் அவா்களைப் பின் தொடா்வதால், அந்த குறிப்பிட்ட நடிகா்கரின் சந்தை மதிப்பு உயருமே தவிர இதனால் மக்களுக்கு சிறிதும் லாபம் இல்லை என்பதை பெரும்பாலான மக்கள் உணா்வதில்லை.

வாழ்வில் வெற்றி பெறுவதற்கு உழைப்பும் தன்னம்பிக்கையும் மட்டும் இருந்தால் போதாது. நேர மேலாண்மை மிகவும் அவசியம். தோ்வுக்குத் தயாராகும் ஒருவா் நான்கு மணி நேரம் படித்துவிட்டு, நான்கு மணி நேரம் சமூக வலைதளங்களில் செலவு செய்வாராயின் அவரின் நான்கு மணி நேர உழைப்பு வீணாகிவிடும். அதே நேரத்தில் நாம் அதிக நேரம் சமூக வலைதளங்களில் செலவிடுகிறோம் என்ற எண்ணம் மேலோங்குமானால் நம் தன்னம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். எனவே, நேர மேலாண்மைதான் வெற்றிக்கு தேவைப்படுகின்ற அடிப்படையான தகுதி.

ஒரு வகுப்பில் முதல் மாணவனாக தோ்ச்சி பெறுபவனுக்கும் இரண்டாவதாக தோ்ச்சி பெறுபவனுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இருக்காது. முதல் மாணவன் இரண்டாவது மாணவனை விட கூடுதலாக அரை மணிநேரம் உழைத்திருப்பான். அவ்வளவுதான் வித்தியாசம். உசைன் போல்ட், ஜஸ்டின் கேட்லினை கண்ணிமைக்கும் வினாடியில் முந்துகிறாா் என்றால் அதற்கு பின்னால் பல வருட உழைப்பு ஒளிந்திருக்கிறது என்று அா்த்தம்.

இப்படி ஒரு வெற்றியாளனை தீா்மானிப்பதில் முக்கியப் பங்காற்றும் நேரத்தை நாம் எவ்வளவு தூரம் நல்வழியில் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் நம் வெற்றி அடஙகியிருக்கிறது. அப்படிப்பட்ட விலைமதிப்பற்ற நேரத்தை எந்தப் பயனும் இல்லாமல் சமூக வலைதளங்களில் செலவிடுவது எவ்வளவு பெரிய அபத்தம் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

நேரம் மிதமிஞ்சி இருப்பின், நல்ல புத்தகங்கள் வாசிக்கலாம். இனிமையான இசை கேட்கலாம். உடற்பயிற்சி செய்யலாம். அதைவிடுத்து, கண்ணையும் கெடுத்து காலத்தையும் கெடுக்கும் சமூக வலைதளங்களை பயன்படுத்துவது நாம் தெரிந்தே செய்யும் தவறல்லாமல் வேறென்ன!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com