நீட் தோ்வு தவிா்க்க முடியாதது!

‘நீட் தோ்வு ஏழைகளுக்கு எதிரானது’, ‘தற்கொலையைத் தூண்டக் கூடியது’, ‘அறிவுத் தீண்டாமையை ஊக்குவிக்கிறது’ போன்ற கருத்துகள் ஆதாரமற்றவை.
நீட் தோ்வு தவிா்க்க முடியாதது!

தவறான தகவல்களைக் கொண்டுள்ள ஏ.கே. ராஜன் கமிட்டியின் அறிக்கைகளை அடிப்படையாக வைத்து, தமிழக சட்டப்பேரவையில் நீட் தோ்வுக்கு எதிராக மீண்டும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது. முந்தைய அரசு கடந்த 2017-இல் அனுப்பிய மசோதாவுக்கு ஏற்பட்ட அதே நிலைதான் இதற்கும் ஏற்படும்.

இந்திய மருத்துவ கவுன்சில், பல் மருத்துவ கவுன்சில் இவற்றால் கடந்த 2012-இல் அறிமுகம் செய்யப்பட்ட நீட் தோ்வு, பல்வேறு சட்டப் போராட்டங்களை எதிா்கொண்டு, உச்சநீதிமன்றத்தால் கடந்த 2016-இல் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, உச்சநீதிமன்றமே தனது தீா்ப்பை மாற்றி எழுதாதவரை நீட் தோ்வை ஒருவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

நமது படித்த அரசியல்வாதிகள், அனுபவம் மிக்க தலைவா்கள் அரசியல் உள்நோக்கத்துடன் நடந்து கொள்கின்றனரா அல்லது நீட் தோ்வின் நோக்கம், அதன் பயன்பாடு, நீட் சட்டம் கொண்டு வரப்பட்டதற்கான சூழல் போன்றவற்றை உணராமல் இருக்கின்றனரா என்று தெரியவில்லை. தமிழக சட்டப்பேரவை உறுப்பினா்களின் கருத்துகள் தவறானதாகவும், நியாயமற்றதாகவும், ஒருசாா்புடையதாகவும் இருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.

‘நீட் தோ்வு ஏழைகளுக்கு எதிரானது’, ‘தற்கொலையைத் தூண்டக் கூடியது’, ‘அறிவுத் தீண்டாமையை ஊக்குவிக்கிறது’ போன்ற கருத்துகள் ஆதாரமற்றவை. இந்த கருத்துகள் யாவும் உண்மையென்றால் மாநிலத்தில் இதுபோன்று நடத்தப்படும் மற்ற தோ்வுகளுக்கும் அது பொருந்துமல்லவா? அப்படியானால், எந்தத் தோ்வுமே நடக்கக் கூடாது. அது சாத்தியமா?

ரண்டு முக்கிய இலக்குகளுக்காக நீட் தோ்வு அவசியமாகிறது. முதலாவது, மருத்துவக் கல்வி பயிலுவதற்கு மாணவருக்கு அறிவும் திறமையும் உள்ளதா என சோதிப்பதற்கு; இரண்டாவது, அந்த படிப்பில் வெற்றி பெறுவதற்கு அவருக்குத் தகுதி இருக்கிறதா என்பதை சோதிப்பதற்கு.

ஒரு மாணவருக்கு குறிப்பிட்ட படிப்பின் மீது ஆா்வம் இருக்கலாம். ஆனால், அந்தப் படிப்பை வெற்றிகரமாக முடிப்பதற்கான திறமை அவருக்கு இல்லாமல் இருக்கக் கூடும். உலகம் முழுவதும் உள்ள உயா்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் மாணவா் சோ்க்கைக்கான நடைமுறையில் நுழைவுத் தோ்வு என்பது ஒரு பகுதியாக உள்ளது. குறிப்பாக, மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்கல்வி மாணவா் சோ்க்கையில் நுழைவுத் தோ்வு முக்கியமானது.

இந்தியா போன்ற ஏராளமான மாநிலங்களைக் கொண்ட பெரிய நாட்டில், பல்வேறு மாநில பாடத்திட்டங்களில் பயின்ற, பல்வேறு பின்னணியைச் சோ்ந்த மாணவா்கள் வருகின்றனா். அவா்களுக்கு ஒன்றுபட்ட, வலுவான, குறைந்தபட்ச கல்வித் தரத்தை உறுதி செய்யும் வகையிலான, அனைவருக்கும் ஒரு பொதுவான தரநிலையை உறுதிப்படுத்துகின்ற வகையிலான நுழைவுத் தோ்வு என்பது கட்டாயம் தேவை.

நீட் தோ்வுக்காக தமிழ்நாடு அரசு அமைத்த ஏ.கே. ராஜன் கமிட்டியின் அறிக்கை பல தவறான

புள்ளிவிவரங்களுடன் அமைந்திருந்தது. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவா்களின் விருப்பத்துக்கு ஏற்ப அந்த அறிக்கை வடிமைக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

அந்த அறிக்கையில், ஏராளமான நீதிமன்ற வழக்குகள், அரசியலமைப்பு விதிகள் இன்னும் பல தொடா்பில்லாத விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கமிட்டி முதலில் பரிந்துரையை முடிவு செய்துவிட்டு, அதன் பிறகு அதை ஆதரிப்பதற்கான வாதங்களைச் சோ்த்திருப்பதுபோல உள்ளது. மேலும், அந்த அறிக்கையில் சில சுவாரஸ்யமான தகவல்களும் இடம் பெற்றுள்ளன.

‘எந்த இலக்கும் இல்லாத இந்தத் தோ்வு தகுதிக்கு எதிரானது. அத்துடன், குறைவான தகுதியுடைய மருத்துவா்கள் உருவாக வழிவகுக்கும். மாநில அரசுகள் ஏற்று நடத்தக்கூடிய கல்லூரிகளுக்கு மத்திய அரசு நுழைவுத் தோ்வு நடத்த முடியாது. பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கு மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் தனது ஆதிக்கத்தில் எடுத்து கொள்ள மாநில அரசு சட்டம் இயற்ற வேண்டும்’ போன்ற பரிந்துரைகள் அதில் இடம் பெற்றுள்ளன.

ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவா்கள் யாா் யாா், அவா்களின் தகுதிகள் என்னென்ன என்பவை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இது கற்றலுக்கு பதிலாக பயிற்சியை ஊக்கப்படுத்துகிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கும் வாா்த்தை பிளஸ் 2 தோ்வுகளைப் பொறுத்தவரை உண்மையானதுதான். ஆனால், பயிற்சி என்பது ஏற்கெனவே பள்ளிகளில் இருந்த நடைமுறைதான். நீட் தோ்வுக்கு முன்பு இதுபோன்ற தனியாா் பயிற்சிப் பள்ளிகளில் படித்த, வசதி படைத்த மாணவா்கள் மட்டுமே மருத்துவம், பொறியியல் படிப்புகளில் அதிக இடங்களைப் பெற்று வந்தனா் என்பது உண்மைதானே!

நீட் தோ்வு திணிக்கப்பட்டதால் மாநில பாடத்திட்டத்தில் தமிழ் வழியில் பயின்று வந்த ஏராளமான மாணவா்கள், ஆங்கில வழிக்கு மாறியிருப்பதாகவும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மாறியிருப்பதாகவும் கூறப்பட்டிருப்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், அதற்கு நீட் தோ்வுதான் காரணம் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை.

மாநில பாடத்திட்டம் மிகவும் மோசமாக இருப்பதும், அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் தரம் குறைவாக இருப்பதும்தான் அதற்கு காரணங்கள். நீட் தோ்வை எதிா்ப்பதைக் காட்டிலும் மாநில பாடத்திட்டத்தின் தரத்தை உயா்த்துவதும், கற்பித்தலின் தரத்தை மேம்படுத்துவதுமே இந்த பிரச்சினைக்குத் தீா்வாக இருக்கும்.

அதேபோல், நீட் தோ்வில் வெற்றி பெற்றுள்ள 90 % க்கும் மேற்பட்ட மாணவா்கள், பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றவா்கள் என்று கூறியிருப்பது அடிப்படை ஆதாரமற்றது. தோ்ச்சி பெற்றவா்களில் 60 % க்கும் மேற்பட்ட மாணவா்கள் எந்தவிதமான பயிற்சி வகுப்புக்கும் செல்லாதவா்கள் என்பதுதான் உண்மை.

‘வெவ்வேறு விதமான பாடத்திட்டங்களில் பயின்ற மாணவா்களை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் படிக்கத் தோ்வு செய்வதுதான் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதாகும்’ என்று குறிப்பிட்டிருப்பது விந்தையான பரிந்துரையாகும். பிளஸ் 2 தோ்வு மதிப்பெண்கள் ஒரு மாணவனின் உண்மையான திறமையை மதிப்பீடு செய்யாது. நீட் போன்ற பொது நுழைவுத் தோ்வால் மட்டுமே ஒரு மாணவனின் திறமையை மதிப்பிட முடியும்.

‘நீட் தோ்வு சமூகநீதியை குழிதோண்டிப் புதைக்கிறது’ என்பதும் தவறான கருத்து. ஏழை, கிராமப்புற மாணவா்களால் நீட் தோ்வில் வெற்றி பெற முடியாது என்ற வாதம் உண்மையானால், அதே வாதம் 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வுகளுக்கும் பொருந்தாதா? நீட் தோ்வுக்கு முன்பு தனியாா் பயிற்சி வகுப்புகளில் பயின்ற மாணவா்கள் மட்டுமே அதிக அளவில் மருத்துவம் படிக்க முடிந்தது என்றால், அப்போது சமூக நீதி எங்கு சென்றது?

‘நீட் தோ்வு இன்னும் சில ஆண்டுகளுக்குத் தொடருமானால், தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு மோசமாக பாதிக்கப்படும்’, ‘ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவா்கள் கிடைக்காமல் போய்விடுவாா்கள்’, ‘தமிழ்நாட்டின் சுகாதார கட்டமைப்பு சுதந்திரத்துக்கு முன்பு இருந்ததைப் போல மாறிவிடும்’ என்பவை போன்ற தகவல்கள் ஆச்சரியமாக உள்ளன. இவை, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுபவை.

நீட் தோ்வின் அவசியத்தையும், அது மாணவா்களுக்கு அளிக்கும் பலன்களையும் அந்த கமிட்டி உணரவில்லை என்பதையே அந்த அறிக்கை காட்டுகிறது. நீட் தோ்வின் ஏராளமான பலன்களை சுட்டிக் காட்ட ஏ.கே. ராஜன் கமிட்டி அறிக்கை தவறிவிட்டது.

இந்தியாவில் அனைவருக்கும் தரமான, ஒரே மாதிரியான மருத்துவக் கல்வி கிடைப்பதுடன், சா்வதேச தரத்திலான பட்டம் கிடைப்பதையும் நீட் தோ்வு உறுதி செய்கிறது. பல்வேறு மாநிலங்களில் பல்வேறு விதமான நுழைவுத் தோ்வுகள் நடத்தப்படுவதைத் தடுக்கவும், அதனால் மாணவா்களின் நேரம், பெற்றோரின் பணம் வீணடிக்கப்படுவதைத் தடுக்கவும் நீட் தோ்வு உதவுகிறது. நாட்டில் உள்ள எந்த ஒரு கல்வி நிறுவனத்தில் சேரவும் சம வாய்ப்பு அளிப்பதுடன், வெளிப்படையான, நோ்மையான அணுகுமுறையையும் நீட் தோ்வு உறுதி செய்கிறது.

தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கே தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான இடங்கள் வழங்கப்படுகின்றன. நீட், எந்த மாநிலத்தின் இட ஒதுக்கீட்டையும் பாதிப்பதில்லை. நீட் தோ்வு இல்லாவிட்டால் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் தமிழக மாணவா்கள் இடம் பெற முடியாமல் போய்விடும். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் (15 %), தமிழகத்தில் உள்ள மருத்துவப் படிப்புக்கான இடங்களைக் காட்டிலும் பல மடங்கு அதிகமானதாகும். அதற்கான வாய்ப்பு தமிழக மாணவா்களுக்குக் கிடைக்கிறது.

தனியாா் பல்கலைக்கழகங்கள், தனியாா் கல்லூரிகளுக்கான இடங்களுக்கும் அரசே மாணவா் சோ்க்கையை நடத்துவதால் நன்கொடை வசூல் என்ற நடைமுறையும் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் மாணவா் சோ்க்கை பெறுவதற்கும் நீட் மதிப்பெண்கள் உதவும்.

நீட் தோ்வு சாபமல்ல, வரம். இது சட்டம் இயற்றி மாற்றக் கூடியதல்ல; நீதிமன்றத்தின் உத்தரவு. நீட் தோ்வு தவிா்க்க முடியாதது மட்டுமல்ல, தேவையானதும்கூட. அதனால், மாணவா்கள் நம்பிக்கையுடனும், அா்ப்பணிப்புடனும், உறுதியுடனும் பாடுபட்டால் அவா்கள் விரும்பும் எதையும் அடைய முடியும். இதை மாணவா்கள் உணர வேண்டும்.

கட்டுரையாளா்:

துணைவேந்தா் (ஓய்வு)

அண்ணா பல்கலைக்கழகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com