தேர்தல் முடிவுகள் தரும் படிப்பினை!

ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளையும், ஊகங்களையும் தாண்டி ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளையும், ஊகங்களையும் தாண்டி ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன. குறிப்பாக, கோவாவில் தொங்கு சட்டப்பேரவைதான் அமையும் என்று கருத்துக் கணிப்புகள் கூறியிருந்தன. ஆனால், அந்த எதிர்பார்ப்பு பொய்த்துப்போய்விட்டது.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர் ஆகிய மூன்று மாநிலங்களில் பா.ஜ.க. பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

உத்தரகண்டில் பா.ஜ.க.வுக்கு எதிரான சூழல் இருந்தது உண்மைதான். ஏனென்றால், கடந்த ஐந்து ஆண்டுகளில் அம்மாநிலத்தில் மூன்று முதல்வர்கள் மாறியிருக்கிறார்கள். அப்படியிருந்தும், அம்மாநில மக்கள் தேர்தலில் மீண்டும் பா.ஜ.க.வையே தேர்ந்தெடுத்திருக்கின்றனர். 

ஏற்கெனவே கணிக்கப்பட்டதைப் போலவே மணிப்பூரில் பா.ஜ.க. ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே திரிபுராவிலும் பா.ஜ.க.வின் ஆட்சியே உள்ளது. "ஏழு சகோதரிகள்' என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுலா மேம்பாடு என்பதையும் தாண்டி பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து, அம்மாநிலங்களை மேம்படுத்த மத்திய அரசு முனைந்ததால்தான், அந்த மாநிலங்களிலுள்ள மக்கள் ஆதரவளித்திருக்கிறார்கள் என்றே கருத வேண்டியிருக்கிறது.  

தேர்தல் நடைபெற்ற ஐந்து மாநிலங்களில், நான்கில் பா.ஜ.க. வெற்றிபெற முக்கியமான காரணம், வலுவான தலைமையற்றுத் தடுமாறிக் கொண்டிருக்கிற காங்கிரஸ் கட்சியாகும். தேசிய அளவில் இன்னும் இடைக்காலத் தலைவரை வைத்துக் கொண்டே அரசியல் செய்யும் காங்கிரஸ் கட்சி, கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்துவருகிறது. இனியும் கட்சியின் தலைவர் யார் என்பதை காங்கிரஸ் அறிவிக்காவிட்டால், அக்கட்சி தொடர்ந்து பின்னடைவையே சந்திக்க நேரும். அதனை எவராலும் தடுக்க முடியாது. 

பிரியங்கா வதேரா உத்தர பிரதேசத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தும் காங்கிரஸுக்கு வெற்றி கிட்டவில்லை. அம்மாநிலத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாக வாக்குறுதி அளித்த காங்கிரஸுக்கு தேர்தல் முடிவு பெருத்த ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. 

அம்மாநிலத்தில் காங்கிரஸ் இரண்டு தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி அதல பாதாளத்தில் வீழ்ந்திருக்கிறது. உத்தர பிரதேசத்தில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பா.ஜ.க. ஆட்சியை தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. அந்த மாநிலத்தில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சி அமைக்கும் கட்சியாக பா.ஜ.க. உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

உத்தரகண்டிலும், மணிப்பூரிலும்  பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது. கோவாவில் பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து விட்டது. உத்தரகண்டைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க.வின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் ஜாதி அரசியலை மக்கள் நிராகரித்து விட்டனர்.

பா.ஜ.க.வின் முக்கியப் போட்டியாகக் கருதப்பட்ட சமாஜவாதி கட்சி 111 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில், சமாஜவாதி கட்சி கூடுதல் தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தாலும், அவை ஆட்சி அமைப்பதற்கு போதுமானவையாக இல்லை. இருந்தபோதிலும், பலமிக்க எதிர்க்கட்சியாக சமாஜவாதி கட்சி உருவெடுத்திருப்பதை மறுப்பதற்கில்லை. 

உத்தரகண்டில் பா.ஜ.க.வே ஆட்சி அமைக்க இருக்கிறது. அம்மாநில ஒட்டுமொத்த மக்களின் ஆதரவை பா.ஜ.க. பெற்றுள்ளதாகவே இதைப் பார்க்க வேண்டும். மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தேர்தலில் தோல்வி அடைந்த போதிலும், மொத்தம் உள்ள 70 இடங்களில் 47 இடங்களைக் கைப்பற்றியுள்ளது பா.ஜ.க. இதற்குக் காரணம், அரசு செயல்படுத்திய பல்வேறு கட்டமைப்பு திட்டங்களும், மக்கள்நலத் திட்டங்களுமே என்று கூறப்படுகிறது. 

கோவாவில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பா.ஜ.க. பெற்றிருக்கிறது. 40 தொகுதிகள் அடங்கிய அந்த மாநிலத்தில் சரிபாதியாக 20 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது பா.ஜ.க. அதைப்போல மணிப்பூரில் மொத்தம் உள்ள 60 இடங்களில் 32 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியிருக்கிறது. 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரûஸ அகற்றிவிட்டு, முதன்முறையாக பா.ஜ.க.வுக்கு அம்மாநில மக்கள் வாய்ப்பு வழங்கியிருக்கிறார்கள். 

தேர்தல் முடிவுகளில் வியப்புக்குரிய செய்தி, பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரûஸ தோற்கடித்து ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றிருப்பது. மொத்தம் உள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி 92 இடங்களைக் கைப்பற்றி ஒரு வரலாற்று வெற்றியைப் பெற்றிருக்கிறது.

ஆம் ஆத்மி கட்சி முதல் முறையாக தில்லிக்கு வெளியே ஒரு மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. தில்லி யூனியன் பிரதேசத்தில் மட்டுமே ஆட்சி செய்து கொண்டிருந்த ஆம் ஆத்மி கட்சிக்கு,  பஞ்சாப் மாநிலத்தை ஆட்சி செய்யும் மிகப்பெரிய வாய்ப்பைத் தந்திருக்கிறார்கள் அம்மாநில மக்கள்.

உட்கட்சிப் பூசலால் பலவீனமடைந்திருக்கும் காங்கிரஸ் மீது மக்கள் அவநம்பிக்கை கொண்டதால், பஞ்சாபில் அக்கட்சி 18 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது. அம்மாநிலத்தில் சரண்ஜீத் சிங் சன்னி, தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலுமே தோல்வியை சந்திக்க வேண்டியதாகிவிட்டது. ஆனாலும், எதிர்க்கட்சி அந்தஸ்து காங்கிரஸுக்குக் கிடைத்திருக்கிறது. 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியின் எல்லைப்பகுதியில் முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தி ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்தார்கள் பஞ்சாப் மாநில விவசாயப் பெருங்குடி மக்கள். அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர எண்ணி, மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆயினும், பேச்சுவார்த்தை பயனளிக்கவில்லை. எனவே, மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொண்டது. ஆனாலும், விவசாயிகளின் ஆதரவை பா.ஜ.க.வால் இத்தேர்தலில் பெற முடியவில்லை. 

பஞ்சாபில் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்குடன் பா.ஜ.க. கூட்டணி வைத்தது. ஆனால், தேர்தலில் அவரே தோற்று விட்டார். நவ்ஜோத் சிங் சித்துவின் வழிகாட்டுதலில், சரண்ஜித் சன்னியின்  தலைமையில் காங்கிரஸ் கட்சி, தேர்தலை எதிர்கொண்டதுகூட ஆம் ஆத்மியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்திருக்கும். பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக விவசாய சங்கங்கள் நடத்திய பிரசாரம், தேர்தல் முடிவுகளில் முக்கிய பங்கு வகித்தது என்பது தெளிவாகிறது. 

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்,  ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் ஒரு படிப்பினையைக் கற்றுத் தந்திருக்கிறது. இதுபோன்றே வெற்றி தோல்விகள் வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் அமையுமா  என்பது அந்தந்த மாநில அரசுகளின் செயல்பாட்டைப் பொறுத்தே இருக்கிறது. 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற ஜூலை 24}ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கிறது. ஜூலை மாதத் தொடக்கத்தில் புதிய குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேர்தல் நடைமுறைகள் தொடங்கி விடும். மக்கள் பிரதிநிதிகளால் மறைமுகத் தேர்தல் முறையில் நடைபெற இருக்கும் அத்தேர்தலில் இந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். 

உத்தர பிரதேசத்தில் 83,824 வாக்கு மதிப்புகளும், பஞ்சாப்பில் 13,572 வாக்கு மதிப்புகளும், உத்தரகண்டில் 4,480 வாக்கு மதிப்புகளும், மணிப்பூரில் 1,080 வாக்கு மதிப்புகளும், கோவாவில் 800 வாக்கு மதிப்புகளும் இருக்கின்றன. மொத்தத்தில்  1 லட்சத்து 3 ஆயிரத்து 756 வாக்கு மதிப்புகள் உள்ளன. இவற்றில் 80% வாக்கு மதிப்புகளை பா.ஜ.க. பெற்றால்தான் இந்தியாவின் குடியரசுத் தலைவராக அக்கட்சி விரும்புபவர் வரமுடியும். ஆயினும், இந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு நம்பிக்கைக் கதவுகளைத் திறந்திருக்கின்றன என்றே கூறலாம்.  

தமிழகத்தில் தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்லும் அரசியல்வாதியின் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்று அரசியல்வாதிகளுக்கு பயம் இருக்கிறது. அதைப்போல உத்தர பிரதேசத்தில் உள்ள நொய்டாவுக்குச் செல்லும் அரசியல்வாதியின் பதவி பறிபோய்விடும் என்கிற பயம் அம்மாநில அரசியல்வாதிகளிடையே இருக்கிறது. 2018இல் மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்கி வைக்க, இந்திய பிரதமரும், அம்மாநில முதல்வரும் நொய்டாவுக்குச் சென்றனர். அங்கு சென்றவர்கள் தேர்தலில் தோற்றுவிடுவார்கள் என்கிற நம்பிக்கை வெறும் மூடநம்பிக்கை என்பதை தேர்தல் முடிவு காட்டிவிட்டது.  

தேர்தல் வியூகங்களும், கூட்டணியை கவனமாக அமைப்பதும், எதிரணியில் நிற்பவர்களின் வாக்குகளைப் பிரிக்கக் கூடிய அளவிற்கு வலுவான அணியை உருவாக்குவதும் தேர்தல் வெற்றிக்கு இன்றியமையாதவை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. 

மக்களின் நம்பிக்கைகளைப் பெறுதல், அவர்களுக்கான நலத்திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள், தொலைநோக்குத் திட்டங்களை உருவாக்குதல், பலமிக்க கூட்டணியை அமைத்தல், எதிர்க்கட்சிகளின் வாக்குகளை சிதறடிக்கும் வகையில் ஒரு மாற்று சக்தியை உருவாக்குதல் இவற்றை சரியாகச் செய்வதன் மூலமே தேர்தலில் வெற்றிக்கனியைப் பறிக்க முடியும் என்கிற பாடத்தை இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் அரசியல்வாதிகளுக்குக் கற்றுத்தந்துள்ளன. அரசியல்வாதிகள் அப்பாடத்தைப் படிப்பார்களா? 

கட்டுரையாளர்:

முன்னாள் அமைச்சர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com