ரிசர்வ் வங்கியின் செயல்பாடு சரியா?

ரிசர்வ் வங்கியின் செயல்பாடு சரியா?

 வங்கிகள் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டியது, "நாம் பொதுமக்களின் நிதியைக் கையாள்கிறோம், அதனை சரியான முறையில் நிர்வகித்து ஒப்பந்தப்படி திருப்பித் தர வேண்டும்' என்பதே. வங்கிகள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட வரைமுறைக்குட்பட்டே டெபாசிட் வாங்கி கடன் கொடுக்க முடியும். வாங்கும் டெபாசிட்டில் 4% கேஷ் ரிசர்வ் ரேஷியோ அனுசரிக்கவேண்டும். மேலும் பதினெட்டு சதவீதம் அரசு பத்திரம் முதலியவற்றில் முதலீடு செய்யவேண்டும். இதுபோக மீதி உள்ள நிதியிலேயே கடன் வழங்க முடியும்.
 கடன் வழங்குவதிலும் பல கட்டுப்பாடுகள் உண்டு. முன்னுரிமை கடன்களுக்கும் விவசாய கடன்களுக்கும் தனித்தனி குறியீடுகள் உண்டு. ஒரே நபருக்கோ ஒரே நிறுவனத்திற்கோ தொடர்புடைய நிறுவனங்களுக்கோ கடன் வழங்குவதில் கட்டுப்பாடுகள் உண்டு. பிணையில்லாமல் கடன் வழங்குவதற்கும் கட்டுப்பாடுகள் உண்டு. இவ்வளவு கட்டுப்பாடுகளுக்கும் காரணம், வங்கிகள் எந்தக் காரணம் கொண்டும் திவாலாக கூடாது என்பதே.
 வங்கிகள் தொடர்ந்து ரிசர்வ் வங்கிக்கு அறிக்கைகளை அளிக்கின்றன. அந்த அறிக்கையில் அந்தந்த வங்கிகளின் நிதிநிலை துல்லியமாக தெரிவிக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கிக்கு எல்லா வணிக வங்கிகளின் மீதும் பலவித அதிகாரங்கள் உண்டு. வங்கிகளை மேற்பார்வையிடவும், தரவுகளைப் பெறவும், கட்டுப்பாடுகளை விதிக்கவும், தன் சார்பாக இயக்குநர்களை பணியில் அமர்த்தவும் ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் உண்டு. உண்மையில் ரிசர்வ் வங்கிக்கு வானளாவிய அதிகாரம் உண்டு.
 ரிசர்வ் வங்கிக்கு இவ்வளவு அதிகாரங்கள் இருந்தும், சமீபத்தில் சில வங்கிகள் திவாலாகும் நிலைமைக்கு உள்ளானது அதிர்ச்சிகரமானது. கடந்த சில வருடங்களாக எஸ் வங்கியும் லட்சுமி விலாஸ் வங்கியும் எவ்வாறு நடைபெற்றன என்பதும் இந்த வங்கிகளை ரிசர்வ் வங்கி எவ்வாறு தன்னிச்சையாக செயல்பட அனுமதித்தது என்பதும் அலசப்பட வேண்டிய விஷயம்.
 மார்ச் 5, 2020 அன்று, வங்கியின் சரிவைத் தவிர்க்கும் முயற்சியில் யெஸ் பேங்க் லிமிடெட்டின் கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி எடுத்தது. யெஸ் பேங்க் லிமிடெட் அதிக அளவு வாராக்கடன்களைக் கொண்டிருந்தது. வங்கி டெபாசிட்டிற்கு பொருத்தமில்லாத அதிக கடன் (கிரெடிட் டெபாசிட் ரேஷியோ) வழங்கியிருந்ததை ரிசர்வ் வங்கி கவனிக்கத் தவறிவிட்டது.
 மார்ச் 2017, மார்ச் 2018, மார்ச் 2019, மார்ச் 2020 நிலவரப்படி, அனைத்து வங்கிகளின் கடன் வைப்பு வீதம் (கிரெடிட் டெபாசிட் ரேஷியோ) முறையே 73.15%, 75.66%, 77.93%, 76.59%-ஆக இருந்தது. ஆனால் யெஸ் பேங்க் லிமிடெட் 92%, 101%, 106%, 162% கடன் வைப்பு விகிதத்தைக் கொண்டிருந்தது. இது அவர்களின் நிதித் தேவையில் 14%, 27%, 43%, 66% என சந்தையில் கடன் வாங்கியிருந்ததை தெரிவிக்கிறது.
 மார்ச் 2020-இல் ஒட்டுமொத்த வங்கி அமைப்பும் ரூ.3,13,946 கோடி கடன் வாங்கியபோது, யெஸ் பேங்க் லிமிடெட் மட்டும் ரூ.1,13,791 கோடி கடன் வாங்கியது. இந்தப் பொருத்தமின்மை குறித்து ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கவில்லை.
 வங்கியின் மொத்த வாராக்கடன் 2016, 2020 ஆண்டுகளில் பின்வருமாறு நகர்ந்தது: ரூ.748.98 கோடி, ரூ.2,018.56 கோடி, ரூ.2,626.80 கோடி, ரூ.7,882.56 கோடி, ரூ.32,877.59 கோடி. 2016-ஆம் ஆண்டில், வங்கியால் அறிவிக்கப்பட்ட வாராக்கடன் ரூ.748.98 கோடிக்கு எதிராக, ரிசர்வ் வங்கி அதை ரூ.4,925.68 கோடியாக மதிப்பிட்டது. ரிசர்வ் வங்கி இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வங்கிகளிடமிருந்து அறிக்கையைப் பெறுகிறது.
 ரிசர்வ் வங்கி, அதிக அளவு யெஸ் வங்கி கடன் வாங்குவதைக் கண்டறிந்து, அதனை நிறுத்தியிருக்கலாம்; வங்கி அதன் வாராக்கடன் புள்ளிவிவரங்களைக் குறைவாகப் பதிவு செய்தபோது நடவடிக்கை எடுத்திருக்கலாம். ரிசர்வ் வங்கி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மே 2019 முதல் வங்கி நிர்வாக போர்டில் ரிசர்வ் வங்கியின் பிரதிநிதித்துவம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
 அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட யெஸ் வங்கிக்கான இறுதி மறுசீரமைப்புத் திட்டமானது, 100-க்கும் மேற்பட்ட பங்குகளைக் கொண்ட தற்போதைய பங்குதாரர்களுக்கு மூன்று வருட காலத்திற்கு அவர்களின் பங்குகளில் 75% வரை முடக்கப்பட்டுள்ளது.
 அடுத்ததாக லக்ஷ்மி விலாஸ் வங்கி. இவ்வங்கி மீது ரிசர்வ் வங்கி சில திருத்த நடவடிக்கைகளை எடுத்திருக்கக்கூடிய பல சந்தர்ப்பங்கள் இருந்தன. ஒரு வங்கியின் சீரழிவு ஒரே நாளில் நடக்காது. 2016-ஆம் ஆண்டில் வங்கியின் மூலதனம் போதுமான அளவு 11% இருந்தது. இது அடுத்தடுத்த ஆண்டுகளில் 10%, 10%, 7% இறுதியாக மார்ச் 2020-இல் 1% விழுக்காடாகக் குறைந்துள்ளது.
 மொத்த வாராக்கடன்கள் 2016-இல் வெறும் 2% ஆக இருந்தது, 2020-இல் 25% ஆக அதிகரித்துள்ளது . 2016-இல் 1% ஆக இருந்த நிகர வாராக்கடன்கள் 2020-இல் 10.4 % ஆக அதிகரித்துள்ளது.
 2017-இல் வங்கி வாங்கிய கடன் ரூ.1,773 கோடியாக இருந்தது, அடுத்த ஆண்டு ரூ. 4,012 கோடியாக அதிகரித்தது. வங்கியால் கடன் வழங்க தேவையான அளவு வைப்புத்தொகையை உருவாக்க முடியவில்லை. 2018-இல் வங்கியின் வைப்புத் தொகை ரூ.33,309 கோடியாகக் குறைந்தது. 2019-இல் 29,279 கோடியாக குறைந்தது.
 நிதி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைப்புத் திட்டத்தின்படி, நவம்பர் 27, 2020 அன்று அனைத்து பங்கு மூலதனம், கையிருப்பு, எல்விபி-யின் உபரி ஆகியவை தள்ளுபடி செய்யப்பட்டு, பங்குகளின் மதிப்பு பூஜ்ஜியமாக மாறியது.
 இந்த இரண்டு வங்கிகளின் செயல்பாடுகளை கூர்ந்து நோக்கினால் இந்த வங்கிகள் சில ஆண்டுகளாகவே தடுமாறிக்கொண்டிருந்தன என்பது தெளிவாகும். வங்கிகள் திவாலாவது ஒரே நாளில் நிகழ்வதல்ல. அது உடலில் ஏற்படும் நோய் போல கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகும், பரவும். சரியான நேரத்தில் கண்டறிந்து சரி செய்ய வேண்டிய விஷயம்.
 ஆனால் ரிசர்வ் வங்கி உரிய நேரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், எல்லாம் முடிந்த பிறகு தற்போது மாற்று வழியை முன்னெடுத்துள்ளது. பொது நலன் கருதி, உச்சநீதிமன்றம், தானே முன் வந்து ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com