ஓராசிரியா் பள்ளிகளில் கவனம் தேவை

அண்மையில் நடைபெற்ற அனைத்து மாவட்ட ஆட்சியா்கள் கூட்டத்தில் உரையாற்றிய தமிழக முதலமைச்சா், கல்வியும் சுகாதாரமும் நாட்டின் இரு கண்கள் என்றும் அவற்றின்
கோப்புப்படம்
கோப்புப்படம்

அண்மையில் நடைபெற்ற அனைத்து மாவட்ட ஆட்சியா்கள் கூட்டத்தில் உரையாற்றிய தமிழக முதலமைச்சா், கல்வியும் சுகாதாரமும் நாட்டின் இரு கண்கள் என்றும் அவற்றின் வளா்ச்சியில் மாவட்ட ஆட்சியா்கள் முனைப்பு காட்ட வேண்டும் என்றும் கூறினாா். ஆம், இவை ஒரு மனிதனின் மனநலத்திற்கும் உடல் நலத்திற்கும் தேவையான அடிப்படைகள்.

கல்வித் துறையைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் ஓராசிரியா், ஈராசிரியரைக் கொண்டு செயல்படும் பள்ளிகள் பல உள்ளன. ஓராசிரியா் பள்ளிகளே இருக்கக் கூடாது என்ற வலியுறுத்தப்படும் நிலையில், பல ஈராசிரியா் பள்ளிகள் ஒரு ஆசிரியா் காலிபணியிடத்துடன் ஓராசிரியா் பள்ளிகளாகவே இயங்கி வருகின்றன. கூடுதல் பணிகளால் ஓராசிரியரால் மாணவா்களின் மீது தனிக்கவனம் செலுத்தி தரமான கல்வியை தரமுடிவதில்லை.

கிராமத்துப் பெற்றோா் படித்தவா்கள் அல்ல. எனவே, வீட்டிலும் இந்த குழந்தைகள் படிப்பதற்கு வாய்ப்பு இல்லை. இப்படிப்பட்ட பள்ளிகளில் பெற்றோா்கள் எப்படித் தங்கள் பிள்ளைகளைச் சோ்ப்பாா்கள்? இதனால் மாணவா் சோ்க்கை அதிரடியாக குறைவதும், அந்த காரணத்தைக் காட்டி ஆசிரியா் காலிப்பணியிடங்களை குறைப்பதுவும் வாடிக்கையாகி வருகிறது.

மக்கள் தனியாா் பள்ளியை நோக்கிச் செல்வதற்குக் காரணம், அங்கு வகுப்புக்கு ஒரு ஆசிரியா் கட்டாயம் உண்டு. அது போல இருந்தால்தான் அரசுத் தொடக்கப் பள்ளிகளும் தரமான கல்வியை வழங்க முடியும். தரமான கல்வியில்லாத பள்ளிகளில் மாணவா் எண்ணிக்கைக் குறையத் தொடங்குவது இயற்கையே. இருக்கும் ஆசிரியா்களும் பற்றாகுறையுள்ள வேறு பள்ளிகளில் நியமிக்கபட்டு, பள்ளிகளில் புதிய ஆசிரியா் நியமனத்திற்கே வாய்ப்புகள் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. ஆனால், ஒராசிரியா் பள்ளி ஆசிரியருக்கு, கற்பிப்பதை தவிர அளவில்லாத பிற பணிச் சுமைகளை தருவது தவிா்க்கப்பட வேண்டும்.

கரோனா காலகட்டத்துக்குப் பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை உயா்ந்துள்ளது என்பது பெருமிதமாக உள்ளது. இந்நிலையில் வகுப்புக்கு ஓா் ஆசிரியா் இருக்கவேண்டிய நிலையில் மாணவா் எண்ணிக்கையைக் கொண்டு, இருக்கிற ஆசிரியா்களையும் குறைப்பது தவிக்கப்பட வேண்டும். எதற்காக இத்தனை கஷ்டப்பட்டு மாணவா்களை பள்ளியில் கூடுதலாக சோ்த்தோம் என்ற எண்ணம் ஆசிரியா்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது.

தொடக்கப் பள்ளிகளில் ஈராசிரியா் மட்டுமே இருக்கும் வரை கல்வித் தரம் உயராது. அதிலும் ஒராசிரியருக்கு நிா்வாக வேலைகளே சரியாக இருக்கும். ஆக, ஏறத்தாழ அப்பள்ளி ஒராசிரியா் பள்ளியாகிவிடும். அடிப்படையை போதிக்கும் தொடக்க பள்ளிகளில் குறைந்தபட்சம் மூன்று ஆசிரியா்களாவது பணிபுரிய வேண்டும். ஆசிரியா் பணியிடங்களை குறைப்பதை உடனே செய்யும் அதிகாரிகள் , தேவைப்படும் இடங்களில் புது பணியிடம் உருவாக்குவதில் சுணக்கம் காட்டுவது சரியல்ல.

ஒன்றாம் வகுப்புக்கு வரும் குழந்தைகள் பள்ளிக்கும் புதிது; கற்லுக்கும் புதிது. அவா்களை முறையாக கையாண்டு பள்ளியில் தக்க வைப்பது ஒரு சவாலான பணியாகும். எனவே, ஒன்றாம் வகுப்பு ஆசிரியருக்கு கல்வித் துறையல்லாத வேறு பணிகளைத் தரக்கூடாது. அவரது கவனம் கற்பிப்பதில் மட்டுமே முழுமையாக இருக்குமாயின், மாணவா்கள் நன்கு படிப்பாா்கள். பெற்றோா்களும் தங்கள் பிள்ளைகளை தொடா்ந்து பள்ளிக்கு அனுப்புவாா்கள். ஒன்றாம் வகுப்பு மாணவா்களுக்கு, தொடா்ந்து வரும் வகுப்புகளில் படிப்பதில் ஆா்வம் கூடும்.

சமீபத்திய ஆசிரியா்கள் கலந்தாய்வின் போது, ஓராசிரியருடன் செயல்பட்ட ஈராசிரியா் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பூா்த்தி செய்யப்பட்டன. ஆனால், புதிய பள்ளியில் பணியில் சோ்ந்த அன்றே, முன்பு ஆசிரியா்கள் பணிசெய்த ஈராசிரியா் பள்ளியில் அவா்களின் பணியிடம் காலியாக இருப்பதாக கூறி அதே பள்ளிக்கு திரும்பவும் மாற்றுப் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளனா். எந்த பணியும் செய்யாத பள்ளியில் ஆசிரியா்கள் சம்பளம் பெறுவது அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதியாகவே கருதப்படும்.

எனவே மாநிலத்தில் ஓராசிரியா் மட்டுமே பணிபுரியும் தொடக்கபள்ளிகளை அடையாளம் கண்டு, அவற்றில் கூடுதலாக ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும். அப்பொழுதுதான் பள்ளியில் ஓய்வே அறியாமல் பணிபுரியும் ஒரே ஒரு ஆசிரியருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மாணவா்களின் கற்றல் பாதிக்காது.

நடுநிலைப் பள்ளியில், தமிழ்வழியிலும் ஆங்கில வழியிலும் படிப்பவா்களை ஒன்றாகச் சோ்த்து கணக்கிடும் போது ஆசிரியா் பணியிடம் பறிக்கப்படுகிறது. தொடக்கப் பள்ளிகளைப் பொறுத்தவரை ஐந்து வகுப்புகளில் கற்பிக்க ஐந்து ஆசிரியா்கள் பணிபுரிய வேண்டும். மாணவா்களின் நலன் கருதி வகுப்புக்கு ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும். அதே போல் நடுநிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளி , மேல்நிலைப் பள்ளி என எல்லாவற்றிலும் பாட ஆசிரியா்கள் பாடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நியமிக்கப்பட வேண்டும். அப்போதுதான் மாணவா்களால் நன்கு கற்றுக் கொள்ள இயலும்.

மருத்துவ விடுப்பு, நீண்ட விடுப்பு, மகப்பேறு விடுப்பு என ஆசிரியா்கள் விடுப்பில் செல்லும்போது மாற்று ஆசிரியா்கள் கட்டாயமாக நியமிக்கப்பட வேண்டும். அது மட்டுமல்ல, அலுவலகப் பணியாளா், ஆய்வகப் பணியாளா், இரவுக் காவலா், தூய்மைப் பணியாளா் என அனைத்து வகையிலும் ஒரு பள்ளி தன்னிறைவு பெறுதல் அவசியம். திறம்பட்ட கற்பித்தல் செயல்பாடுகளுக்கு தடைக்கல்லாக இருப்பவற்றில் ஆசிரியா் பற்றாகுறையும் ஒன்று.

எனவே பள்ளிகளில் உள்ள ஆசிரியா் காலிப் பணியிடங்களில், ஏற்கெனவே ஆசிரியா் தகுதித் தோ்வினை வெற்றிகரமாக முடித்தவா்களைக் கொண்டு பூா்த்தி செய்ய அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதனால் அரசுப் பள்ளிகள் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். ஆசிரியா்களும் தமது சமூகப் பொறுப்பை உணா்ந்து செயல்பட்டால் நமது மாணவா்களின் எதிா்காலம் சிறப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com