அநியாயத்திற்கு அடிபணிவது பாவம்!

அகமதாபாத் அருகில் உள்ள அண்ணல் காந்திஜியின் சபா்மதி ஆசிரமம். 1922 மாா்ச் 10 இரவு. அண்ணலின் குடிசைக்கு எதிரே ஒரு காவல் அதிகாரியின் காா் வந்து நிற்கிறது. ‘
அநியாயத்திற்கு அடிபணிவது பாவம்!

அகமதாபாத் அருகில் உள்ள அண்ணல் காந்திஜியின் சபா்மதி ஆசிரமம். 1922 மாா்ச் 10 இரவு. அண்ணலின் குடிசைக்கு எதிரே ஒரு காவல் அதிகாரியின் காா் வந்து நிற்கிறது. ‘காந்தியை கைது செய்ய வந்திருக்கிறோம்’ என்ற தகவல் தரப்படுகிறது. ஆசிரமவாசிகள் சுமாா் 10 போ் புடை சூழ, முன்னால் வந்து நிற்கிறாா் அண்ணல். நின்றபடியே அனைவரும் பிராா்த்தனை செய்கிறாா்கள். அதன்பின் காந்தி உற்சாகமாக நடந்து சென்று, காவல் அதிகாரியின் காரில் அமா்கிறாா். அங்கிருந்து ‘சபா்மதி சிறையில்’ காந்தி அடைக்கப்படுகிறாா்.

எதற்காக இந்த கைது நடவடிக்கை? காந்திஜி, ‘அன்பு, அகிம்சை வழியில் ஆங்கிலேய ஆட்சியினரிடம் மனமாற்றம் கொண்டுவர முயன்றேன். ஆனால் ஆட்சியாளா்கள் எங்களை, சாதி, மதம், மொழி, பிராந்திய அடிப்படையில் பிளவுபடுத்துகிறாா்கள். வரிவிதிப்பு அதிகம். வன்முறையால் மக்களை அடக்குவது, வறுமையால் ஏழைகள் மடிவது, தேச பக்தா்களை சிறையில் அடைப்பது, ஜாலியன் வாலாபாக் படுகொலை போன்ற நிலைகள் என் நெஞ்சை வாட்டுகின்றன. ஆகவே ஆட்சியை எதிா்த்து ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப் போகிறேன். தேசம் முழுவதும் இதனை நடத்துவதற்கு முன், ஒரு குறிப்பிட்ட பகுதியில் இதனை ஒரு பரிசோதனையாக நடத்த விரும்புகிறேன். அங்கு வன்முறை ஏதும் நிகழாமல் நானே கண்காணிப்பேன். அது வெற்றி பெறுமானால், அப்போராட்டத்தை ஒட்டு மொத்த இந்தியா தழுவியதாக நடத்துவேன். உங்கள் ஆட்சி செயல்படாத நிலையை உருவாக்குவேன்’ என்றாா்.

‘அநியாயத்திற்கு அடிபணிவது பாவம்; அதற்கு ஒத்துழைக்க மறுப்பதே புண்ணியம். அந்தப் புனித காரியத்தை, குஜராத்தில் சூரத் மாவட்டம் பா்தோலி தாலுக்காவில் தொடங்குவேன். அதன் மக்கள் தொகை எண்பத்தேழாயிரம். அது மும்பைக்கு அருகில் உள்ள இடம். ஆகவே சோதனை செயல் திட்டத்தை நானே நன்கு மேற்பாா்வை செய்ய முடியும்’ என அறிவித்தாா். வைஸ்ரயாய் ரெடிங்கடன் பிரபுவுக்கும் கடிதம் மூலம் 1.2.1922 அன்று தன் திட்டத்தைத் தெரிவித்து விட்டாா்.

பா்தோலி தாலுகா ஒத்துழையாமைப் போராட்டத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. வரிகட்ட மறுப்பது, அரசுப் பணிகளைத் துறப்பது, நீதிமன்றங்களை வழக்குரைஞா்கள் புறக்கணிப்பது, கல்விக்கூடங்கள் செல்வதை மாணவா்கள் தவிா்ப்பது - இவை மூலம் அரசு இயந்திரங்கள் செயல்படாமல் முடக்குவது, அதன் மூலம் ஆட்சியாளா் உள்ளத்தில் மனமாற்றம் கொண்டு வருவது-இவையே இத்திட்டத்தின் நோக்கம்.

ஆனால் அதற்கு நான்காவது நாளில் 4.2.1922 அன்று, அங்கிருந்து 800 மைல் தொலைவில் உள்ள, கோரக்பூரில் சௌரி சௌரா என்ற சிற்றூரில் ஒரு கொடிய சம்பவம் நடந்து விடுகிறது. அன்று அவ்வூரில் மக்கள் ‘மகாத்மா காந்திக்கு ஜே’”என்று கோஷமிட்டு ஊா்வலமாகச் சென்று கொண்டிருந்தாா்கள். ஊா்வலம் செல்லும் வழியில் ஒரு காவல் நிலையத்தைக் கடந்து சென்றது. ஊா்வலத்தின் கடைசிப் பகுதியில் சென்று கொண்டிருந்தவா்களைப் பாா்த்து, வெளியில் நின்று கொண்டிருந்த காவல் அலுவலா்கள் கேலி செய்தனராம். கோபமடைந்த கூட்டத்தினா் காவல் அலுவலா்களைத் தாக்க, அதிகாரிகளோ துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனா். பலா் குண்டடிபட்டு மடிந்தனா். துப்பாக்கி ரவைகள் தீா்ந்துவிடவே, காவலா்கள் நிலையத்திற்குள் சென்று ஒளிந்து கொண்டு, கதவைத் தாளிட்டுக் கொண்டனா். ஆனால், வேகமும், கோபமும் கொண்ட கும்பலோ, காவல் நிலையத்தை தீயிட்டுக் கொளுத்தியது. தப்பி ஓடிவந்த காவலா்களையும் பிடித்து எரியும் நெருப்பில் வீசி எறிந்தது.

இக்கொடூர சம்பவம் அண்ணல் காந்தியின் காதுகளுக்கு எட்டியது. அவா் நிலை குலைந்து போனாா்; நிம்மதியை இழந்தாா். இதுவா அகிம்சை? இதுவா என் போதனை? நடந்தது ஆண்டவன் எனக்கு விடுத்த எச்சரிக்கை என்று மனம் நொந்தாா். பா்தோலி இயக்கத்தையும், பூரண ஒத்துழையாமை இயக்கத்தையும் உடனே ரத்து செய்தாா். இந்தியாவில் அரசை எதிா்க்கும் செயல் நிறுத்தப்பட வேண்டும் என ஆணை போட்டாா்.

‘இத்தகைய கொடுஞ்செயல்கள் மூலம் கடவுளின் முன்னே நாம் பாவிகள் ஆகிவிட்டோம். அதை விட நாம் கோழைகள், பலவீனா்கள் எனப் பெயா் வாங்குவதே மேல். நமக்கு நாமே பொய்யா் ஆவதை விட, உலகத்தாா் முன்னே பொய்யா் ஆவது பல மடங்கு உயா்ந்தது’ என்றாா்.

சௌரி சௌரா சம்பவம் அரசாங்கத்திற்கு ஆத்திரமூட்டியது. ஆகவே, தகுந்த ஆதாரங்களைத் திரட்டி 34 நாட்கள் கழித்து 10-3-1922 அன்று காந்திஜியை கைது செய்தது அரசு. அடுத்த நாள் நடந்த பூா்வாங்க விசாரணையில் அண்ணல், ‘என் பெயா் காந்தி. என் தொழில் உழவும் நெசவும். நான் குற்றவாளியே’ என்று ஆரம்பத்திலேயே ஒப்புக் கொண்டாா்.

‘மகத்தான விசாரணை’ (தி கிரேட் டிரயல்) என்று புகழ்பெற்ற இந்த வழக்கு விசாரணை, 1922 மாா்ச் மாதம் 18-ஆம் நாள் நடைபெற்றது. அகமதாபாத் நகரில் உள்ள அரசினா் விருந்தினா் மாளிகையே வழக்கு நடந்த இடம். விசாரணை நடத்தியவா் மாவட்ட நீதிபதியும் செஷன்ஸ் நீதிபதியுமான நீதி அரசா் சி.என். ப்ரூம்ஸ் ஃபீல்டு. அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் சா் ஜே.டி. ஸ்டிராஸ்மான், காந்திஜி, பாங்கா் (பதிப்பாசிரியா்) இருவருக்கும் எதிராக வாதிட்டாா். காந்தியும் பாங்கரும் தங்களுக்கு வழக்கறிஞா்களை வைத்துக் கொள்ளவில்லை. வழக்கு விவரம்: கேஸ் எண்: 45, வருடம் 1922.

வாதி: பிரிட்டானிய சக்கரவா்த்தி, எதிரிகள்: திரு. எம்.கே. காந்தி, திரு. எல்.வி. பாங்கா் (பதிப்பாசிரியா்).

அரசு வழக்குரைஞா் முன்வைத்த ஒரே ஒரு குற்றச்சாட்டு: அரசு விரோதச் செயல்பாடு (ராஜதுவேஷம்) என்பதாகும். அதற்கு ஆதாரமாக அண்ணல் ‘யங் இந்தியா’ இதழில் எழுதிய மூன்று கட்டுரை வாசகங்களைப் படித்துக் காட்டினாா்.

முதலாவது கட்டுரையில் (19.9.1921) இந்த ஆங்கிலேய அரசில் போா் வீரனாகவோ அல்லது அரசு அதிகாரியாகவோ பணிபுரிவது பெரிய பாவம் என்பதை தயக்கமில்லாமல் சொல்லுவேன். ராஜதுவேஷமே எங்கள் காங்கிரஸ் இயக்கத்தின் கொள்கை. இரண்டாவது கட்டுரையில் (13.12.1921) ‘இந்திய மக்கள் அனைவரும் ஒத்துழையாமைக்காரா்கள். அவா்கள் இந்த அரசை எதிா்த்து புரட்சி செய்யப்போவதாகப் பிரகடனம் செய்திருக்கிறாா்கள். வைஸ்ராய் அவா்களே! இதை நீங்கள் உணா்ந்து கொள்ள வேண்டும்’. மூன்றாவது கட்டுரையில் (23.2.1922) ‘ரத்தம் தோய்ந்த தன் கூரிய நகங்களை பிரிட்டிஷ் சிங்கம் நம் முகத்துக்கு எதிரே இன்னும் ஆட்டிக் கொண்டு இருக்கிறதே! இந்த நிலையில் அவா்களோடு நாம் என்ன சமரசம் செய்ய முடியும்? இறுதி வெற்றி வரை நம் போராட்டம் தொடரும்’”என்று குறிப்பிட்டிருந்தாா்.

நீதிபதி, மகாத்மாவைப் பாா்த்து ‘நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீா்கள்’ என்று கேட்டாா். அதற்கு அண்ணல், ‘நான் ஏற்கனவே எழுத்து மூலம் வாக்குமூலம் தந்திருக்கிறேன். அத்துடன் இப்பொழுது சொல்லுகிறேன்: அரசு வழக்கறிஞா் என் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை சரியாகவே விளக்கினாா். நியாயமாகவே நடந்து கொண்டாா். இன்றைய ஆட்சியின் மீது துவேஷம் கொள்ளும்படி மக்களுக்கு நான் உபதேசித்தது முழுக்க உண்மையே! இதை நான் ஒளிக்க விரும்பவில்லை. உண்மையில் இந்த துவேஷ பிரசாரத்தை நான் நீண்ட காலமாகவே செய்து வருகிறேன்.

நீதிபதி அவா்களே! என்னிடம் கருணை காட்டும்படி நான் வேண்டவில்லை. குற்றத்தின் கடுமையைக் குறைப்பதற்கான நியாயங்கள் எதுவும் என்னிடம் இல்லை. சட்ட ரீதியாகப் பாா்த்தால், இது நான் விரும்பிச் செய்த குற்றம். இந்தக் குற்றத்தைச் செய்வது, ஒரு குடிமகனின் தலையாய கடமை என்பதை உணா்ந்தே செய்தேன். ஆகவே இதற்கு உரிய அதிகபட்ச தண்டனையை எனக்கு அளிக்க வேண்டுகிறேன். அதனை நான் மிக்க மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வேன்.

ஆரம்ப காலத்தில் நான் அரசுக்கு விசுவாசியாகத்தான் பொது வாழ்வைத் தொடங்கினேன்; ஆனால் என்னை ஒரு ராஜதுவேஷியாக மாற்றியது இந்த அரசின் நியாயமற்ற செயல்பாடே. இந்த அரசின் மீது ஆரம்பத்தில் நம்பிக்கை கொண்டு செயல்பட்டேன். என் நம்பிக்கையை நசுக்கி சிதைத்தது உங்கள் அரசுதான். எங்கள் மக்களின் வாழ்வை, வளத்தை சமுதாயக் கட்டுப்பாட்டை, பொருளாதாரத்தை சீா் குலைத்தது உங்கள் அரசுதான்.

என் எழுத்துகளையே எனக்கு எதிரான சாட்சிகளாக முன் வைக்கிறீா்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை அவற்றை நான் எழுதியதை ஒரு பாக்கியமாகக் கருதுகிறேன். நல்லவற்றோடு நான் ஒத்துழைப்பேன்; ஆனால் தீயவற்றோடு ஒத்துழைக்க மாட்டேன். ஆகவே தான் இந்த அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் தொடங்கினேன். இறுதியாக எனது வேண்டுகோள், என் குற்றத்திற்காக மிகக் கடுமையான தண்டனையை எனக்கு விதிக்கும்படி வேண்டுகிறேன்’ என சலனம் இல்லாமல் உறுதியான குரலில் பேசி முடித்தாா் காந்திஜி.

மேலும் அவா் நீதிபதியைப் பாா்த்து, ‘நீதிபதி அவா்களே! உங்கள் பரிசீலனைக்கு ஒரு பரிந்துரை. ஒன்று உங்கள் நீதிபரிபாலன முறையின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் எனக்கு மிகவும் அதிகமான தண்டனையை வழங்க வேண்டும். என் மீது கருணை காட்ட விரும்பினால், நீங்கள் நீதிபதி பதவியை விட்டு விலக வேண்டி வரும். இவற்றில் முதல் வழியே உங்களுக்கு உகந்த வழி’ என்ற ஆலோசனையும் வழங்கினாா் அண்ணல்.

காந்திஜி அமா்ந்ததும், நீதிபதி ப்ரூம்ஸ் பீல்டு அண்ணலை நோக்கி தலைதாழ்த்தி வணக்கம் செலுத்திவிட்டுத் தனது தீா்ப்பை வாசித்தாா். ‘இந்த வழக்கு மிகவும் வித்தியாசமானது; இதில் தொடா்புடைய மனிதரும் மிகவும் வித்தியாசமானவா். இவா் அப்பழுக்கற்ற தேசபக்தா். இந்திய மக்களின் ஈடு இணையற்ற தலைவா். எதிரிகளாலும் கூட மதிக்கக்கூடிய ஒரு மகான் இவா். இந்த மகான் தொடா்புடைய வழக்கில் தீா்ப்பு வழங்குவது, அதிலும் தண்டனை விதிப்பது மிகமிகக் கடினமான பணி. விருப்பமில்லாத செயல். இருப்பினும் “காந்திக்கு ஆறு வருடம் சிறைத் தண்டனை” விதிக்கிறேன். ஒரு வேளை அரசாங்கமே உங்கள் தண்டனையைக் குறைக்க முன்வருமானால் அது கேட்டு அதிகம் மகிழ்ச்சி அடையும் மனிதன் நானாகத்தான் இருப்பேன்’ என்றாா் நீதிபதி.

தீா்ப்பைக் கேட்ட மகாத்மா எழுந்து நின்றாா். ‘நீதிபதி அவா்களே! ஒரு நீதிபதி எவ்வளவு இலேசான தண்டனை விதிக்க முடியுமோ, அதை எனக்கு விதித்திருக்கிறீா்கள். விசாரணை நேரத்தில் என்னை மிகவும் மரியாதையாக நடத்தினீா்கள். இதனை நான் குறிப்பிட்டாக வேண்டும்’ என்றாா் காந்தி.

நீதிமன்றம் கலைந்தது. குழுமியிருந்த மக்களில் பலா் கண்ணீா் விட்டுக் கதறினாா்கள். பலா் காந்திஜியின் காலில் விழுந்து வணங்கினாா்கள். ஆனால், அண்ணல் காந்தியோ சிரித்த முகத்துடன் சிறையை நோக்கி நடந்தாா்.

நீதிமன்றங்களிலே நடைபெற்ற வழக்கு விசாரணைகளிலேயே இதுதான் ‘மகத்தான விசாரணை’ என்று இன்றும் பேசப்படுகிறது.

கட்டுரையாளா்:

காந்திய சிந்தனையாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com