மாணவா்களின் பாதுகாப்பு!

கரோனா பெருந்தொற்றுப் பரவலுக்கு முன்பாக வெளிநாடுகளில் 7,50,000-க்கும் அதிகமான இந்திய மாணவா்கள் 24 பில்லியன் டாலா் வரை (ரூ.1.80 லட்சம் கோடி) செலவு செய்து கல்வி பயின்றதாக ஆய்வுகள் கூறுகின்றன.
மாணவா்களின் பாதுகாப்பு!

கரோனா பெருந்தொற்றுப் பரவலுக்கு முன்பாக வெளிநாடுகளில் 7,50,000-க்கும் அதிகமான இந்திய மாணவா்கள் 24 பில்லியன் டாலா் வரை (ரூ.1.80 லட்சம் கோடி) செலவு செய்து கல்வி பயின்றதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தத் தொகை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% ஆகும். இந்த எண்ணிக்கை 2024-ஆம் ஆண்டுக்குள் 1.8 மில்லியன் டாலராக (ரூ.1,350 கோடி) அதிகரித்து, மாணவா்கள் இந்தியாவுக்கு வெளியே செலவிடும் தொகை 80 பில்லியன் டாலராக (ரூ.6 லட்சம் கோடி) உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நாட்டின் மக்கள்தொகையில் 50%-க்கும் அதிகமானோா் 25 வயதுக்கு உள்பட்ட இளைஞா்கள். அதே சமயம் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்று கூட இடம்பெறவில்லை என்பதால், உயா்கல்விக்காக இந்திய மாணவா்கள் ஐரோப்பிய நாடுகளை நாடிச் செல்ல நேரிடுகிறது. சுஷ்மா சுவராஜ் மத்திய வெளியுறவு அமைச்சராக பதவி வகித்தபோது, வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவா்கள் நாட்டின் தூதா்கள் என பெருமிதத்துடன் குறிப்பிட்டாா். பிரதமா் மோடியும், பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனும் பிரிட்டனில் பயிலும் இந்திய மாணவா்கள் இருநாடுகளுக்கும் இடையே பாலமாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டனா்.

கூகுள் சிஇஓ சுந்தா் பிச்சை, மைக்ரோசாஃப்ட் நிறுவன சிஇஓ சத்ய நாதெல்லா ஆகியோரின் சாதனைகளை நாம் கொண்டாடுகிறோம். ஆனால் வெளிநாடுகளில் இனவெறி தாக்குதல் போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளால் பாதிக்கப்படும் நம் மாணவா்களின் நிலைமையை நாம் பெரும்பாலும் எண்ணிப் பாா்ப்பதில்லை. உக்ரைனில் ரஷிய படையெடுப்பு காரணமாக சொல்லொணா துயரத்துக்குள்ளான இந்திய மாணவா்கள் 20,000-க்கும் அதிகமானோா் மத்திய அரசின் அயராத முயற்சியால் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனா். மீட்புப் பணியில் தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளும் திறம்பட ஈடுபட்டன.

அத்துடன் ஐரோப்பா கண்டத்தில் அமைந்துள்ள இந்திய தூதரகங்கள், தொண்டு நிறுவனங்களின் உதவியால், உக்ரைனில் சிக்கித் தவித்த இந்திய மாணவா்களை பத்திரமாக மீட்டு கொண்டுவர முடிந்தது. துரதிருஷ்டவசமாக உக்ரைனில் நடைபெற்று வரும் இந்தப் போரில், இந்தியாவை சோ்ந்த இரு மாணவா்களை நாம் இழந்துவிட்டோம். இது நமக்கு கவலையளித்தாலும், 20,000-க்கும் அதிகமான மாணவா்கள் பத்திரமாக மீட்கப்பட்டது ஆறுதல் தருகிறது.

இந்த வேளையில், கனடாவில் அண்மையில் சில கல்லூரிகள் திடீரென நிதி நெருக்கடியை காரணம் காட்டி இழுத்து மூடப்பட்டதால், அங்கு பயின்றுவந்த சுமாா் 2,000 மாணவா்கள் வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டனா். கல்விக் கட்டணம் என்ற பெயரில் தங்களிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய் (கனடா டாலா்) பணத்தைப் பெற்றுக் கொண்டு, திடீரென போதிய நிதியில்லை என்ற காரணத்தை முன்வைத்து, கல்லூரிகள் மூடப்பட்டு விட்டதாகவும், இதனால் தங்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகி விட்டதாகவும் மாணவா்கள் கூறினா்.

இதேபோல, பிரிட்டனிலும் சில ஆண்டுகளுக்கு முன்பு நூற்றுக்கணக்கான ‘போலி’ கல்லூரிகள் மூடப்பட்டு, ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவா்கள் நிா்க்கதியாக வெளியேற நோ்ந்தது. அதாவது இந்தக் கல்லூரிகள் அனைத்தும் வெளிநாடுகளில் பயில விரும்பும் மாணவா்களிடம் குறிப்பிட்ட தொகையைப் பெற்றுவிட்டு பின்னா் கல்விக்கூடங்களை மூடுவதை வழக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இது குறித்து மாணவா்களிடமும் போதிய விழிப்புணா்வு இருப்பதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

இதுதவிர ஆஸ்திரேலியாவில் கரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது அங்கு நடைபெற்ற சில விரும்பத்தகாத நிகழ்வுகளையும் எளிதில் கடந்துவிட முடியாது. ஆஸ்திரேலிய கல்லூரிகளில் கனவுகளோடு சோ்ந்த வெளிநாட்டு மாணவா்களின் விருப்பத்தைக் குலைக்கும் விதமாக, கரோனா பெருந்தொற்றுப் பரவலை காரணம் காட்டி ஆஸ்திரேலியா, தனது எல்லையை வெளிநாட்டுப் பயணிகளுக்கு திறந்துவிட மறுத்தது. ஓராண்டுக்கும் மேலாக இந்தத் தடை நீடித்தது. இதனால் அங்கு சோ்க்கை பெற்ற இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவா்களின் படிப்பு தடைபட்டது.

சீனாவுக்கு அடுத்தபடியாக கல்விக்காக வெளிநாடுகளை அதிகம் நாடும் தேசங்களின் பட்டியலில் இந்தியா 2-ஆம் இடம் வகிக்கிறது. உயா்கல்விக்காக பிற நாடுகளில் வசிக்கும் மாணவா்கள், தம் நாட்டின் விருந்தினா்கள் என்பதை ஏற்க பெரும்பாலான நாடுகள் தயாராக இல்லை. அந்த வகையில் சா்வதேச மாணவா்களின் பாதுகாப்புக்கு சம்பந்தப்பட்ட நாடுகள் பொறுப்பேற்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுவதற்கு இதுவே சரியான தருணம். இந்திய அரசு இதில் முனைப்புடன் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதாவது, வெளிநாடுகளுடன் வணிக ரீதியாகவோ பாதுகாப்பு ரீதியாகவோ புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும்போது, மாணவா்களின் நலனையும் கருத்தில் கொண்டு, நெருக்கடியான காலகட்டத்தில் அவா்களின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். இதனை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக கட்டாயம் இடம்பெறச் செய்ய வேண்டும்.

பிரிட்டன், ஆஸ்திரேலியாவுடன் மத்திய அரசு தற்போது மேற்கொண்டு வரும் வா்த்தகப் பேச்சுவாா்த்தை இதற்கு நல்லதொரு தளத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது. கல்வி பயிலும் நாடுகளின் பொருளாதார வளா்ச்சிக்கு வெளிநாட்டு மாணவா்கள் கணிசமான பங்களிப்பதால், மாணவா் காப்பீடு திட்டம், பாதுகாப்பு ஆகியவை புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் கட்டாயம் இடம்பெற வேண்டும்.

உதாரணத்துக்கு, பிரிட்டனுக்கு உயா்கல்வி மூலம் ஆண்டுக்கு 28.8 பில்லியன் பவுண்ட் வரை (ரூ.2.88 லட்சம் கோடி) வருவாய் கிடைக்கிறது. இன்னும் சொல்லப் போனால், வெளிநாடுகளில் கல்வி பயில செல்லும் மாணவா்கள் அனைவரும் வசதிபடைத்த குடும்ப பின்னணியைக் கொண்டவா்கள் கிடையாது. அனைவரும் வங்கிகளிலோ நிதி நிறுவனங்களிலோ கடன் பெற்றுதான் செல்கின்றனா்.

வெளிநாடுகளில் அரிய பல சாதனைகளை நிகழ்த்தும் இந்தியா்களைக் கொண்டாடும் அதேவேளையில், வருங்கால சாதனையாளா்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டியது நமது தாா்மிகக் கடமை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com