உழைப்பைப் போற்றுவோம்

பதினெட்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழில் புரட்சி உலகின் பல பகுதிகளிலும் தொழிற்சாலைகளை நிறுவி உற்பத்தியை அதிகரிக்க வழிகோலியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பதினெட்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழில் புரட்சி உலகின் பல பகுதிகளிலும் தொழிற்சாலைகளை நிறுவி உற்பத்தியை அதிகரிக்க வழிகோலியது. அதிகமான தொழிலாளர்கள் தொழிற்சாலைகளில் பணியமர்த்தப்பட்டனர். பெண்களும் குழந்தைகளும் குறைந்த கூலியில் வேலைக்கு சேர்க்கப்பட்டனர். அவர்களின் உழைப்பு சுரண்டப்பட்டது. எனினும் வெளிப்படையாக அவர்கள் தங்களின் உரிமைக்கு குரல் கொடுக்க முடியாத நிலை இருந்து வந்தது. 

1866-இல் அமெரிக்காவில் முதல் தொழிற்சங்கம் தொடங்கப்பட்டது. ஃபிலடெல்ஃபியாவில் உள்ள தையல் தொழிலாளர்களைக் கொண்டு 1869-இல் உரியா ஸ்மித் ஸ்டீபன் என்பவர் "தொழிலாளர் போர் வீரர்கள்' என்ற தொழிற்சங்கத்தை ரகசியமாகத் தொடங்கினார். 1886-இல் அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு உதயமானது. 14 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய இந்தக் கூட்டமைப்பில் மூன்று லட்சம் உறுப்பினர்கள் இருந்தனர். 

ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை என்பது இக்கூட்டமைப்பின் தலையாய கோரிக்கையாக இருந்தது. இதனை வலியுறுத்தி 1886 மே 1-ஆம் தேதி அமெரிக்காவில் 13 ஆயிரம் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் மூன்று லட்சம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். 

சிகாகோ நகரில் உள்ள ஹே மார்க்கெட் சதுக்கத்தில் தொழிலாளர்களுக்கு ஒரு நாளில் எட்டு மணி நேர வேலையை வலியுறுத்தி 1886 மே 4-ஆம் தேதி சுமார் 1,500 தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க முயன்ற காவல்துறை மீது வெடிகுண்டு வீசப்பட்டது. அதைத் தொடர்ந்து காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமுற்றனர். தொழிலாளர்கள் நான்கு பேர் கலவரத்தைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். இந்தப் போராட்டத்தின் விளைவாக ஒரு நாளில் எட்டு மணி நேர உழைப்பு என்பது நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தொழிலாளர்கள் ஒற்றுமையைப் போற்றவும் இறந்த தொழிலாளர்களுக்கு வீரவணக்கம் செலுத்தவும் 1889-இல் பாரீஸில் கூடிய தொழிலாளர் சம்மேளனத்தில் மே முதல் நாள் தொழிலாளர் தினமாக அறிவிக்கப்பட்டது. அது முதல் மே 1-ஆம் தேதி உலகின் பெரும்பாலான நாடுகளில் தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்காவிலும் கனடாவிலும் செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கள்கிழமையிலும், ஆஸ்திரேலியாவில் அக்டோபர் முதல் திங்கள்கிழமையிலும் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது.

1919-இல் முதல் உலகப் போரின் இறுதியில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு சுவிட்ஸர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் தோற்றுவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ) மாநாடு நடத்தி உலக அளவில் உள்ள தொழிலாளர் பிரச்னைகளை அலசி ஆராய்ந்து வருகிறது .

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பஞ்சாலை - ஜவுளித் தொழில் பம்பாய், கல்கத்தா, சூரத், மெட்ராஸ் ஆகிய இடங்களில் பெரும் முதலீட்டுடன் தொடங்கப்பட்டது. இத்தொழிலில் ஈடுபட்டிருந்த பணியாளர்களைக் கொண்டு 1918-இல் இந்தியாவில் முதன் முதலாக மெட்ராஸ் தொழிற்சங்கம் தொடங்கப்பட்டது. அச்சங்கத்திற்கு வாடியா தலைவராக இருந்தார். 

1923 மே 1-இல் அத்தொழிலாளர்களை ஒருங்கிணைத்து சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையிலும், உயர்நீதிமன்றத்தின் அருகிலுள்ள கடற்கரையிலும் மே தின கூட்டங்களை தொழிற்சங்கவாதியான சிங்காரவேலர் நடத்தினார். இக்கூட்டத்தில்தான் முதன் முதலாக இந்தியாவில் செங்கொடி பயன்படுத்தப்பட்டது.

 கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளை சுதந்திரப் போராட்ட தியாகி மட்டுமல்ல, மிகச்சிறந்த தொழிற்சங்கவாதியும்கூட. 1908-இல் தூத்துக்குடியில் கோரல் மில் என்ற ஆங்கிலேய பஞ்சாலை நிறுவனம் செயல்பட்டு வந்தது. 
அங்கு 14 முதல் 16 வயது சிறுவர்களைப் பணிக்கு அமர்த்தி காலை 5 மணியிலிருந்து இரவு 7 மணி வரை அவர்களிடம் வேலை வாங்கினார்கள்.

அவர்களுக்கு குறைந்த அளவே கூலி வழங்கினர். விடுப்பு என்பதே கிடையாது. 
இதனை வ.உ.சி. தலைமையில் மக்கள் எதிர்த்தனர். 23.2.1908-இல் வ.உ.சி. யின் சொற்பொழிவைத் தொடர்ந்து கோரல் மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரல் மில் நிர்வாகத்தின் சார்பில் வ.உ.சி. யுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கூலி உயர்வும், பணிநேரக் குறைப்பும், ஞாயிறு விடுமுறையும் நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1950 ஜனவரி 26-இல்  இந்திய அரசமைப்பு சட்டம் இயற்றப்பட்டது. அரசியல் அமைப்பின் 16-ஆவது பிரிவு வேலை வாய்ப்பில் சம வாய்ப்பு தரப்பட வேண்டும் என்பதையும் 19(1) (இ) பிரிவு, சங்கம் அமைப்பதற்கான உரிமையையும் 38(2) பிரிவு, வருமானத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களைதல் குறித்தும் 41-ஆவது பிரிவு வேலைவாய்ப்பிற்கான உரிமையையும் 42-ஆவது பிரிவு பணி செய்யும் இடத்தில் வேலை செய்வதற்கு உகந்த சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் 43-ஆவது பிரிவு தரமான வாழ்க்கை நடத்தத் தகுந்த கூலி வழங்கப்பட வேண்டும் என்றும் 43(அ) பிரிவு தொழிலாளர் தாங்கள் பணி  செய்யும் நிர்வாகத்தில் பங்கேற்கும் நிலை ஏற்பட வேண்டும் என்றும் கூறுகிறது. 23-ஆவது பிரிவு கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதைத் தடை செய்கிறது. 

இந்தியாவில் 1926-இல் தொழிற்சங்க சட்டம் இயற்றப்பட்டது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இச்சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு கோடிக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.

இவர்களுக்கென்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, தொழிலாளர் காப்புறுதி அமைப்பு  ஆகியவை ஏற்படுத்தப்பட்டு தொழிலாளர் நலன் பேணப்படுகிறது.

தேசத்தின் உயர்வு தொழிலாளர்கள் கரங்களில்தான் உள்ளது; அவர்கள் உழைப்பைப் போற்றுவோம்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com