ஞாலம் கருதினும் கைகூடும்! 

கால தாமதத்திற்கு புகழ் பெற்ற இந்திய ரயில்வே துறையே மாறிவிட்டது, நாம் மாற வேண்டாமா? நாம் மாறினால் நாடே மாறிவிடும்.
ஞாலம் கருதினும் கைகூடும்! 

உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு காலை ஏழு மணிக்குக் கிளம்ப வேண்டுமென உங்கள் மனைவியிடமும், குழந்தைகளிடமும், முந்தைய நாள் இரவு சொல்லிவிட்டு நீங்கள் மறுநாள் காலை ஏழு மணிக்கு தயாராகிவிடுவீர்கள். குழந்தைகள் காலை ஏழு மணிக்கு குளித்து கூட இருக்கமாட்டார்கள். உங்கள் மனைவி எந்த நகை போட்டுக்கொள்வது, எந்த புடவையை கட்டிக்கொள்வது என்ற அதீத சிந்தனையில் இருப்பார். 

எட்டு மணிக்கு நீங்கள் அதட்டல் போட, அடுத்த சில நிமிடங்களில் குடும்பம் ஒரு மணி நேர தாமதத்தில் பயணிக்க தயாராகிவிடும். ஆனால், பத்து மணிக்கு வரச் சொன்ன பணியாளர் பதினொரு மணிக்கு வர ஏன் தாமதம் என கேட்டால் பொட்டில் அடித்தாற்போல் பதில் வரும் "லேட்டாயிடுச்சு சார்'.

பொதுவாக இந்தியர்களையும், இந்தியாவையும் பற்றி வைக்கப்படும் முதல் குற்றச்சாட்டு காலதாமதம்தான். "காலம் பொன்னானது கடமை கண்ணானது' என்று வசனம் பேசும் ஒரு நாட்டில் எதுவும் நேரத்திற்கு நடப்பதில்லை என்பதுதான் சோகம். மத ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் இங்கே நேரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. 

ஆனாலும், ஒரு திருமணத்திற்கு ஜோசியரிடம் நேரம் குறித்து பத்திரிக்கை அடித்து, முகூர்த்த நேரம் குறித்தாலும், அந்த நேரம் கடந்த பின் நடக்கும் திருமணங்கள் பல. மெஹந்தி போடவும், சீர்வரிசை பற்றி பேசவும், மாப்பிள்ளை, பெண் குடும்பங்களைப் பற்றி அலசி ஆராயவும் நேரத்தை செலவு செய்பவர்கள் முகூர்த்த நேரத்தை கோட்டை விட்டு விடுவார்கள். 

மாறும் உலகச் சூழலில் இந்தியாவிலும் பல மாற்றங்கள் வந்துள்ளன. ஒருநாள் காலை 10 மணிக்கு ரயிலை பிடிக்க ஒரு நண்பருடன் ஏழு மணிக்கே மதுரை ரயில் நிலையம் சென்று விட்டேன். ரயில்கள் என்றால் காலதாமதம்தான். ரயில்வே டைம் டேபிள் என்பது ரயில்கள் எவ்வளவு நேரம் தாமதமாக வரும் என்பதை அறிவிக்கும் புத்தகம் என்ற கருத்துக்களையெல்லாம் சிதறடிக்கும் விதமாக 15 நிமிடத்திற்கு ஒரு முறை ரயில்கள் மதுரை ரயில் நிலையத்திற்குள் வந்து கொண்டோ புறப்பட்டுக் கொண்டோ இருந்தன. 

இரட்டை ரயில் பாதையாக மாற்றப்பட்டதால்தான் இது சாத்தியமானது  என்றாலும் இன்றைய சூழ்நிலையில் எதிர்பாராத பருவநிலை கோளாறு அல்லது திடீர் போராட்டங்கள் என்ற காரணங்களை தவிர்த்து, ரயில் பயணங்கள் தாமதிக்கப்படுவதில்லை என்பதுதான் உண்மை. 

இதே போல், விமானங்களும் குறித்த நேரத்தில் பயணங்களை முடிக்கின்றன என்பது சாதாரண செய்தி. விமானத்துறையில் போட்டி நிறைந்து விட்டதால் வியாபாரத்தை இழக்க வேண்டும் என்கிற நிலை நிலவுகிறது. இதனால்தான்  பல முறை விமானம் தரையிறங்கும் போது  மீண்டும் ஒரு முறை எங்கள் விமானம் தன்னுடைய இடத்தை குறித்த நேரத்தில் அடைந்துவிட்டது என விமானி தன்னையும், தன்னுடைய விமான நிறுவனத்தையும் பாராட்டிக் கொள்கிறார். 

உண்மையில் குறித்த நேரத்தில் கிளம்பி குறித்த நேரத்தில் இறங்க வேண்டிய இடத்திற்கு கூட்டிச் செல்வதாக உறுதி அளித்துதான் விமான நிறுவனங்கள் பயணத்துக்கான டிக்கெட்டுகளை விற்கின்றன. 

ஒரு விமானமோ ரயிலோ குறித்த நேரத்தில் கிளம்பி குறித்த நேரத்தில் இடத்தை அடைவது  ஓட்டுநர் கையில் மட்டும் இல்லை. அந்தப் பயணத்தின் பின்னால் இயங்கும் அத்தனை பணியாளர்களும், அதாவது துப்புரவுப் பணியாளர் தொடங்கி விமானி, விமான நிலைய அதிகாரிகள்  என்று ஒவ்வொருவரும் தங்களுடைய கடமையை குறித்த நேரத்தில் செய்து முடித்தால்தான் விமானப்பயணம் குறிப்பிட்டபடி அமையும். 

"ஞாலங் கருதினும் கைகூடும் காலங் கருதி இடத்தாற் செயின்' என்ற வள்ளுவனின் குறளை நம்மில் எத்தனை பேர் செயலில் காட்டுகிறோம் ? பல பேர் "இந்தியாவில் குறித்த நேரம் என்பது 30 முதல் 60 நிமிட கால தாமதம்' என்று சொல்லிச் சிரிப்பார்கள். 

காலதாமதம் என்பது சோம்பேறித்தனத்தின் விளைவு. குறித்த நேரத்தில், குறித்த வேலையை செய்ய வேண்டும் என்பது ஒரு அடிப்படை நாகரிகம். இதை நம்மில் பலபேர் கடைப்பிடிப்பதில்லை என்பதுதான் உண்மை. காலம் தவறி செய்வதையே சிலர் தங்களுடைய வாழ்வின் லட்சியமாகக் கூடக்  கொண்டுள்ளனர் என்று சொன்னால் மிகையல்ல. 

குற்றாலம் சுழற்கழகத்தில் மூன்று முக்கிய உறுப்பினர்கள் என் தந்தை வக்கீல்  இராமநாதய்யர்,  எனது குடும்ப டாக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, செண்பகராமன். தென்காசியில் இவர்கள் மூவரும் தங்கள் தொழிலில் ஜாம்பவான்கள். கடுமையான உழைப்பாளிகளான இவர்களுக்கு ஒரு நாளைக்கு  24 மணி நேரம் போதாது என நான் பல முறை நினைப்பேன். 

செவ்வாய்க்கிழமை மாலை குற்றாலத்தில் நடக்கும் சுழற்கழகக் கூட்டத்திற்கு மாலை ஏழு மணிக்கு "டான்' என்று ஆஜராகி விடுவார்கள். விவசாயம், லேவாதேவி அல்லது எந்தத் தொழிலிலும் இல்லாத பணக்காரர்கள் அல்லது ஓய்வில் இருக்கும் உறுப்பினர்கள் கூட லேட்டாக வருவார்கள் அல்லது வருவதே இல்லை. 

இது குறித்து டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சொன்னதை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். அவர் சொன்னார் "சுறுசுறுப்பாக இயங்குபவர்களுக்கு எல்லாவற்றையும் முடிக்க நேரம் இருக்கும். ஆனால் சோம்பேறிகளுக்கு படுக்கையை விட்டு எழுந்திருக்கக் கூட நேரம் இருக்காது'.

பாரத பிரதமராக இருந்த இந்திரா காந்தி, நரசிம்ம ராவ் ஆகியோரையும், குடியரசுத் தலைவராக பதவி வகித்த ஆர். வெங்கட்ராமனையும் அவர்கள் பதவியில் இருந்த காலத்தில் பலமுறை சந்தித்திருக்கிறேன். அவர்களை சந்திக்க வேண்டுமென நேரம் கேட்டு உதவியாளர்களுக்கு தொலைபேசியில் தகவல் சொன்னால், நம்முடைய வருகையின் காரணத்தை கேட்டுக் கொண்டு மறுநாள் அழைத்து சந்திக்க வேண்டிய இடம் மற்றும் நேரத்தை சொல்லி
விடுவார்கள். 

நாம் பத்து, பதினைந்து நிமிடங்களுக்கு முன்னால் சென்றால் பாதுகாவலர் நம்மை விசாரித்து விட்டு சந்திக்க வருபவர்கள் பட்டியலில் நம் பெயரை டிக் செய்துகொண்டு, குறிப்பிட்ட நேரத்தில் உள்ளே அனுப்புவார்கள். 

இதே நினைப்பில் நான் சட்டப்பேரவை உறுப்பினரான பிறகு அன்றைய அமைச்சர் ஒருவரின் உதவியாளரை அழைத்து,  அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டேன். சற்று ஆச்சரியப்பட்ட அந்த உதவியாளர், "உங்களுக்கு எல்லாம் எதுக்கு சார் அப்பாயின்மென்ட். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம்' என்றார்.  

நான் விடாமல் "எனக்கு பல வேலைகள் இருக்கின்றன. காலை அல்லது மாலையில் நேரம் ஒதுக்கினால் அமைச்சரை சந்திக்க குறித்த நேரத்தில் வருகிறேன்' என்றேன். "சரி காலை ஒன்பது மணிக்கு வந்து விடுங்கள். அமைச்சரை சந்திக்கலாம்' என உறுதி தந்தார் அந்த உதவியாளர். 

நான் அமைச்சர் வீட்டிற்குச் சென்று வரவேற்பறையில் உட்கார்ந்தபோது கடிகாரம் சரியாக ஒன்பது முறை அடித்தது. ஆனால், 10 மணி வரை அமைச்சர் வருவதற்கான அறிகுறியே இல்லை. வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட அமைச்சர் சார்ந்த கட்சிக்காரர்களும், மனுவுடன் மந்திரியைப் பார்க்க நின்றவர்களும் அழைக்கப்பட்ட போது மணி 10-30. 

நான் சட்டப்பேரவை உறுப்பினர் என்பதால் முதலில் உள்ளே அனுப்பப்பட்டேன். இது போன்ற சில சம்பவங்கள் தொடர்ந்து நடக்க நடக்க காலதாமதம் என்பது அமைச்சர்களின் மரபணுவில் உள்ளது என்பதை நான் புரிந்து கொண்டு, அமைச்சர்களை வீட்டில் சந்திப்பதை நிறுத்திவிட்டேன்.

சரியாக நேரத்தைக் கடைப்பிடிக்க என்ன செய்ய வேண்டும்? முதலில் முறையான திட்டமிடல் மிக மிக அவசியம். காலையில் எழுந்தவுடன் அன்று செய்ய வேண்டிய பணிகளை மனதில் ஓடவிட வேண்டும்.

நம்மை சந்திக்க வருபவர் யார் , நாம் யாரை சந்திக்க போகிறோம் போன்ற தெளிவான திட்டமிடல் முக்கியம். நாம் ஒருவரை சந்திக்கச் செல்வதாக இருந்தால், அவரிடம் பேச வேண்டிய விஷயம், பயணிக்கும் தூரம் என மனதில் தெளிவாக திட்டமிட்டுக்கொண்டு செயல்பட வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் பேச வேண்டிய விஷயத்திற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.  

நடிகர் சிவாஜி கணேசன் படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வந்து விடுவார் என்பதால், மொத்த படப்பிடிப்புக் குழுவுமே அவருக்கு முன் படப்பிடிப்பிற்கு தயாராக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். 

தவிர்க்க முடியாத ஏதாவது ஒரு காரணத்தினால் உங்களால் குறித்த நேரத்தில், குறித்த காரியத்தை செய்யா முடியாமலோ சந்திக்க வேண்டியவரை சந்திக்க முடியாமலோ போனால் சம்பந்தப்பட்டவரை அழைத்து காலதாமதத்தை  அவரிடம் தெரிவிப்பதுதான் நாகரிகம். 

தினமும் காலையில் நாம் படிக்கும் நாளேடு தயாராக எத்தனை பேரின் உழைப்பு இருக்கிறது தெரியுமா? செய்தி சேகரித்து அனுப்பும் நிருபர் தொடங்கி, அதைப் படித்து எடிட் செய்யும் உதவி ஆசிரியர், அதை வெளியிடத் தீர்மானிக்கும் ஆசிரியர், தட்டச்சு செய்பவர், அச்சடிப்பவர், வாகன ஓட்டிகள் என்று பத்திரிகையின் பின் ஒரு உலகமே இயங்குகிறது. இதில் எந்த ஒரு இடத்தில் காலதாமதம் நடந்தாலும் காலை ஆறு மணிக்கு வரவேண்டிய பத்திரிக்கை 10 மணிக்குத்தான் வரும். 

"குறித்த நேரத்திற்கு நாம் தயாராக இருப்பதில் உள்ள ஒரே சிரமம் நாம் மற்றவருக்காக காத்திருக்க நேரும் என்பதுதான்' என்று சொல்வார்கள். கால தாமதத்திற்கு புகழ் பெற்ற இந்திய ரயில்வே துறையே மாறிவிட்டது, நாம் மாற வேண்டாமா? நாம் மாறினால் நாடே மாறிவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com