நேட்டோ அமைப்பில் ரஷியா இணைந்திருந்தால்...

நேட்டோ அமைப்பில் ரஷியா இணைந்திருந்தால்...

 உக்ரைனில் நடந்துவரும் போருக்கான காரணம் பலருக்கும் தெரிந்திருக்கும். "நேட்டோ' என்று சுருக்கமாக அழைக்கப்படும் "நார்த் அட்லான்டிக் ட்ரீட்டி' அமைப்பில், அண்டை நாடான உக்ரைன் இணையக் கூடாது என்று ரஷியா கூறி வந்தது. ஆனால், நேட்டோவில் இணைக்க தற்போதைய உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ùஸலென்ஸ்கி தலைமையிலான அரசு விருப்பம் தெரிவித்து வந்தது. அதனைத் தடுத்து நிறுத்தும் நோக்கில்தான் உக்ரைன் மீது போர் தொடுக்கப்பட்டுள்ளது.
 இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவுக்கே சவால் விடும் வகையில் வலிமை பெற்று விளங்கிய சோவியத் யூனியன், மற்ற ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிப்பதைத் தடுத்து நிறுத்துவதற்காக 1949-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது நேட்டோ.
 ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் இவற்றுடன் தொடங்கப்பட்ட அந்த அமைப்பு, சோவியத் யூனியன் சிதறி வலுவிழந்த பிறகு கலைக்கப்படுவதற்கு பதில் மேலும் மேலும் உறுப்பினர்களை சேர்த்துக்கொண்டு தனது பலத்தை பெருக்கியது.
 தொடக்கத்தில் 12 உறுப்பு நாடுகளைக் கொண்டிருந்த நேட்டோவில் தற்போது 30 நாடுகள் உள்ளன.
 அதிலும், எந்த சோவியத் யூனியனுக்கு எதிராக நேட்டோ தொடங்கப்பட்டதோ, அதே சோவியத் யூனியனில் அங்கம் வகித்த நாடுகளையும் நேட்டோ தன்னுடன் இணைத்துக்கொண்டது.
 இப்படி நேட்டோ அமைப்பு தங்களை நாலாபுறமும் சுற்றிவளைப்பதற்கு ரஷியா நீண்ட காலமாகவே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அந்த எதிர்ப்பின் உச்சம்தான் உக்ரைனில் தற்போது நடைபெறும் போர்.
 நேட்டோவில் உக்ரைன் இணையும் விவகாரத்தால்தான் இந்தப் போர் வெடித்தது என்பது தெரிந்த பலருக்கும், ரஷியாவே நேட்டோவில் இணைவதற்கான வாய்ப்புகள் இருந்தது தெரிந்திருக்காது.
 ஆம், சோவியத் யூனியன் சிதறியதற்குப் பிறகு, ரஷியாவும் நேட்டோவில் இணைவது குறித்து பரிசீலிக்கப்பட்டது.
 நேட்டோவுக்கு எதிராக தற்போது ருத்ரதாண்டவம் ஆடி வரும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினே, "உங்கள் அமைப்பில் இணைய எங்களுக்கு எப்போது அழைப்பு விடுக்கப்போகிறீர்கள்' என்று கடந்த 2000-ஆம் ஆண்டில் அப்போதைய நேட்டோ தலைவர் ஜார்ஜ் ராபர்ட்சனிடம் கேட்டார்.
 அப்போது ரஷியாவின் இடைக்கால அதிபராக இருந்த அவர், அதற்கு முன்னதாக "ரஷியா என்பது ஐரோப்பிய கலாசாரத்தின் ஓர் அங்கம். எனது நாடு ஐரோப்பாவிலிருந்து தனிமைப்படுத்தப்படுவதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது' என்றார்.
 அப்படி இருக்கையில், நேட்டோவில் ரஷியா இணையாததற்குக் காரணம், நேட்டோதான் என்கிறார்கள் ஒரு தரப்பினர். நேட்டோவில் இணைவதற்கான அழைப்பு குறித்து விளாதிமீர் புதின் கேட்டதற்கு, "அமைப்பில் இணையவேண்டுமென்றால் விண்ணப்பம் செய்யுங்கள். உங்களை நாங்களே அழைக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்' என்று ஜார்ஜ் ராபர்ட்சன் பதிலளித்ததை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். பனிப்போர் முடிவுக்கு வந்துவிட்டாலும், அதில் தாங்கள்தான் வெற்றி பெற்றதாக மேற்கத்திய நாடுகள் கருதின. அதனால், தங்களிடம் தோற்றுப்போன ரஷியாவை நேட்டோவில் இணைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று அந்த நாடுகள் கருதியிருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
 புதினுக்கு முன்னரே, 1990-களில் சோவியத் யூனியனின் கடைசி அதிபர் மிகையீல் கோர்பசேவும் அதனைத் தொடர்ந்து 2000-களில் ரஷியக் கூட்டமைப்பின் முதல் அதிபர் போரிஸ் யெல்ட்சினும் நேட்டோவில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்தனர்.
 அதனை ஏற்று, மேற்கத்திய நாடுகள் அப்போதே ரஷியாவை நேட்டோவில் இணைத்துக்கொண்டிருந்தால் இப்போது இந்த உக்ரைன் போருக்கான தேவையே எழுந்திருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
 ஐரோப்பிய யூனியனில் துருக்கியை இணைத்துக்கொள்வதற்கு மேற்கத்திய நாடுகள் இழுத்தடித்து வருவதைப் போலவே, தங்களுக்கு சமமில்லாத நாடு என்று அந்த நாடுகள் கருதிய ரஷியாவை நேட்டோவில் இணைத்துக்கொள்ளவும் அவை தயக்கம் காட்டின. இதனால்தான் ரஷியாவால் நேட்டோவில் இணைய முடியவில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.
 எனினும், வேறு சிலர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. ரஷியாவில் நிலவிய மேற்கத்திய எதிர்ப்பு உணர்வும் அதற்குக் காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர். பனிப்போர் முடிவுக்கு வந்தாலும், பல ரஷிய ராணுவ அதிகாரிகள், அரசியல்வாதிகள் மேற்கத்திய நாடுகளை வெறுத்தனர். மேலும், மேற்கத்திய எதிர்ப்பு அலையைக் கொண்டுதான் விளாதிமீர் புதினே தேர்தலில் வெற்றி பெற்றார்.
 அத்துடன், ரஷியாவின் எதிர்ப்பை அலட்சியம் செய்து நேட்டோ அமைப்பு, கிழக்கு நோக்கி தன்னை தொடர்ந்து விரிவுபடுத்தி வந்தது. தங்களைத் தவிர மற்ற அனைத்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் நேட்டோ இணைத்து வந்ததால் அந்த அமைப்பின் மீதான புதினின் விரோதம் வளர்ந்தது.
 அது மட்டுமின்றி, செசன்யா பிரிவினைவாதம், ஜார்ஜியா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் ரஷிய ஆதரவு அரசுகளுக்கு எதிரான போராட்டங்கள் போன்றவற்றுக்கு மேற்கத்திய நாடுகள் ஆதரவளித்தன. இது, பிராந்தியத்தில் தங்களது செல்வாக்கைக் குலைப்பதற்கான நடவடிக்கை என்று ரஷியா கருதுகிறது. நேட்டோவில் அந்த நாடு இணைவதற்கு இதுவும் ஒரு தடைக்கல்லானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
 இரண்டாம் உலகப் போரின்போது தீய சக்திகளான நாஜிக்களை மேற்கத்திய நாடுகளும் சோவியத் யூனியனும் இணைந்து நின்று தோற்கடித்தன. ஆனால், அதற்குப் பிறகு உலகில் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டும் போட்டியில் இரு தரப்பும் பனிப்போரில் இறங்கின. இதனால் பல நாடுகளில் பல்லாயிரக்கணக்கானோர் மாண்டனர்.
 அந்தப் பனிப்போர் ஒருவழியாக முடிவுக்கு வந்தாலும், ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் மனப்பான்மை மட்டும் முடிவுக்கு வரவில்லை. அந்த மனப்பான்மைதான் இப்போதும் மனித உயிர்களை பலிவாங்கிக்கொண்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com