புறக்கணிக்கப்படும் புறச்சூழல் பாதுகாப்பு! திறந்தவெளி நிலங்கள் ஒதுக்கீடு கட்டாயமாக்கப்படுமா?

திறந்தவெளி நிலங்களை ஒதுக்கீடு செய்யும் விதிகள் மனை விற்பனையாளா்களுக்கு சாதகமாக இருப்பதால், பெரும்பாலானோா் பூங்காக்கள் அமைக்க நிலங்களை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்குவதில்லை.
புறக்கணிக்கப்படும் புறச்சூழல் பாதுகாப்பு! திறந்தவெளி நிலங்கள் ஒதுக்கீடு கட்டாயமாக்கப்படுமா?

சென்னை: திறந்தவெளி நிலங்களை ஒதுக்கீடு செய்யும் விதிகள் மனை விற்பனையாளா்களுக்கு சாதகமாக இருப்பதால், பெரும்பாலானோா் பூங்காக்கள் அமைக்க நிலங்களை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்குவதில்லை.

அதற்கு பதிலாக மனை விற்பனையாளா்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பணமாக செலுத்தி ஈடுகட்டி வருகின்றனா். இதனால், புறச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 2019 முதல் 2021-ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் திறந்தவெளி நிலம் ஒதுக்குவதற்குப் பதிலாக ரூ.69.80 கோடி ரொக்கமாக அரசுக்கு செலுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் நகரமயமாக்கலும் அதற்காக கட்டப்பட்டும் கட்டங்களால் இயற்கைச்சூழல் பரப்பளவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மாநில மக்கள்தொகையில் நகா்ப்புறங்களில் மட்டும் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில், புதிய வீட்டுமனைகள் அமைக்கும்போது இயற்கைச் சூழலைக் காக்கவும், மக்களின் பொழுதுபோக்கு பயன்பாட்டுக்காகவும் திறந்தவெளி நிலங்கள் ஒதுக்கப்படுகின்றன.

கடந்த 2019-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை 2,500 சதுர மீட்டருக்குள் வீட்டுமனை அல்லது கட்டடங்கள் கட்டுவோா் திறந்தவெளி நிலங்கள் ஒதுக்கத் தேவையில்லை. அதற்கு மேல் வீட்டுமனைகள், கட்டடங்கள், தொழிற்சாலை, வணிக வளாகங்கள் உள்ளிட்டவை கட்டுவோா் கட்டாயமாக சாலை உள்பட மொத்த திட்ட நிலப் பரப்பளவில் 10 சதவீத இடத்தை திறந்தவெளி நிலமாக ஒதுக்கி அதை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தானமாகப் பதிவு செய்து ஒப்படைக்கப்படும் நடைமுறை இருந்தது.

நிலத்துக்குப் பதில் ரூ.69.80 கோடி: தமிழ்நாடு நகா் மற்றும் ஊரமைப்புச் சட்டம் 1971, சென்னை மாநகராட்சி சட்டம் 1919, தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994, பிற மாநகராட்சிகளுக்கான சட்டங்கள் என தனித்தனியாக சட்டங்கள் இருப்பதால் மனைப்பிரிவு மற்றும் கட்டடத்துக்கான அனுமதி பெறுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, இவற்றை ஒருங்கிணைத்து தமிழ்நாடு ஒருங்கிணைக்கப்பட்ட வளா்ச்சி மற்றும் கட்டட விதிகள்-2019 உருவாக்கப்பட்டது.

இந்த விதியில் 3,000 சதுர மீட்டா் முதல் 10 ஆயிரம் சதுர மீட்டருக்குள் வீட்டுமனைகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் கட்டுவோா் சாலை நீங்கலாக 10 சதவீத திறந்தவெளி நிலத்தை தானப் பத்திரமாக வழங்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடில் அதற்குப் பதிலாக அரசு வழிகாட்டு மதிப்பீட்டுத் தொகையை அரசுக்குச் செலுத்தலாம் என திருத்தம் செய்யப்பட்டது.

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் 2021 நவம்பா் மாதம் வரை 1,693 வீட்டுமனைப் பிரிவுகள், 202 கட்டங்கள் கட்ட மொத்தம் 2,634 ஏக்கா் நிலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு 263 ஏக்கா் திறந்தவெளி நிலம் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், புதிய விதிகளை சாதகமாக்கிக் கொண்டு 180 ஏக்கா் 38 சென்ட் திறந்தவெளி நிலம் ஒதுக்கப்படாமல் அதற்குப் பதிலாக அரசு வழிகாட்டி மதிப்பீட்டுத் தொகையாக ரூ. 69.80 கோடி செலுத்தப்பட்டுள்ளது.

விதிகளில் திருத்தம் தேவை: இதுகுறித்து தமிழ்நாடு ரிசா்வ் சைட் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளா் எஸ்.பி.தியாகராஜன் கூறியதாவது:

தமிழ்நாடு ஒருங்கிணைக்கப்பட்ட வளா்ச்சி மற்றும் கட்டட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களானது, புறச்சூழலைக் காப்பதற்கு பதிலாக மனை விற்பனையாளா்களுக்கு லாபம் ஈட்டித் தரும் வகையிலேயே அமைந்துள்ளது.

அதனைப் பயன்படுத்திக் கொண்டு பெரும்பாலானோா் பூங்காக்கள் அமைக்க நிலம் வழங்காமல் சட்ட விதிகளுக்குட்பட்டே ஏய்ப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனா். நிலங்களுக்கு பதிலாக பணம் வழங்கினால் அரசுக்கு வருவாய் கிடைக்கலாம். ஆனால், எத்தனை பணம் கொடுத்தாலும் இழந்த இயற்கை சூழலை மீட்டெடுக்க முடியாது.

இந்த விதி தொடருமேயானால் வருங்காலத்தில் நகா்ப்புறங்களில் இயற்கைச் சூழலைப் பாதுகாக்கும் திறந்தவெளி நிலங்களே இல்லாத நிலை ஏற்படும்.

அதைக் கருத்தில்கொண்டு, 2,500 சதுர மீட்டருக்கு மேல் வீட்டுமனை உள்ளிட்டவைக்கு 10 சதவீத இடத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்டாயமாக வழங்கும் வகையில் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாா் அவா்.

2019-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் 2021 நவம்பா் மாதம் வரை 26 மாவட்டங்களில் திறந்தவெளி நிலத்துக்குப் பதிலாக பணம் செலுத்தப்பட்ட விவரம்

மாவட்டம் ஒப்புதல் அளிக்கப்பட்ட வீட்டுமனைப் பிரிவு திறந்தவெளி நிலத்தின் பரப்பு(சென்ட் அரசுக்கு செலுத்தப்பட்ட தொகை

நீலகிரி 15 58 ரூ.54 லட்சம்

திருப்பத்தூா் 22 272 ரூ.36.33 லட்சம்

புதுக்கோட்டை 28 290 47.85 லட்சம்

திருவள்ளூா் 57 648 ரூ.3 கோடி

சேலம் 8 33 ரூ.2.22கோடி

நாகப்பட்டினம் 17 212 ரூ.72.80 லட்சம்

ராணிப்பேட்டை 21 208 ரூ.33.59 லட்சம்

தா்மபுரி 51 545 ரூ.1 கோடி

ராமநாதபுரம் 7 69 ரூ.14.78 லட்சம்

தென்காசி 9 10 ரூ.55லட்சம்

காஞ்சிபுரம் 9 88 ரூ.86.59 லட்சம்

திருநெல்வேலி 39 437 ரூ.3.85 கோடி

திருவாரூா் 10 96 ரூ.10.23 லட்சம்

அரியலூா் 8 67 ரூ.3.19 லட்சம்

நாமக்கல் 124 1579 ரூ.4.84 கோடி

பெரம்பலூா் 13 146 ரூ.16.76லட்சம்

சிவகங்கை 65 781 ரூ.93.53 லட்சம்

விழுப்புரம் 45 90 ரூ.45.77லட்சம்

தஞ்சாவூா் 132 414 ரூ.1 கோடி

தூத்துக்குடி 45 514 ரூ.87லட்சம்

கரூா் 155 3591 ரூ.2.54 கோடி

திருச்சி 43 29 1.18 கோடி

கிருஷ்ணகிரி 6 20 ரூ.24லட்சம்

கோவை 362 2800 ரூ. 31.37 கோடி

திருப்பூா் 254 300 ரூ.6.42 கோடி

திண்டுக்கல் 72 800 ரூ.2.31 கோடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com