அறிவுப் பசிக்கு உணவாகும் புத்தகங்கள்!

சென்னையை நோக்கி அனைவரையும் வரவழைத்த புத்தகத் திருவிழா இப்போது மாவட்டந்தோறும் நடைபெற்று வருகிறது.
அறிவுப் பசிக்கு உணவாகும் புத்தகங்கள்!


சென்னையை நோக்கி அனைவரையும் வரவழைத்த புத்தகத் திருவிழா இப்போது மாவட்டந்தோறும் நடைபெற்று வருகிறது. காண்பதற்கும் கருதுவதற்கும் உரிய நிலையில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. வாசிப்புக்குரிய தூண்டுதலை உண்டாக்கும் பேச்சாளர்களின் உரைகள் இடம்பெறுகின்றன. எல்லாத் திருவிழாக்களிலும் இடம்பெறும் பட்டிமன்றங்கள் இந்தவிழாக்களிலும் தவறாமல் இடம்பெற்றுவிடுகின்றன.
ஆனாலும், சென்னை அளவிற்கு இங்கெல்லாம் கூட்டம் வரவில்லை, விற்பனையும் நடைபெறவில்லை. எந்த ஒன்றும் தொடக்கத்தில் அப்படித்தான் இருக்கும். காலம் செல்லச் செல்ல, நிகழ்ச்சிகளின் சிறப்பும் பங்கேற்பாளர்களின் வருகையும் உறுதியாய் வளர்ச்சியை நோக்கித்தான் அமையும் என்பதில் ஐயமில்லை.

சென்னையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவுக்குத் தென்பகுதி மக்கள் திரண்டு வருவதுபோல், திருநெல்வேலி, திருவள்ளூர், பெரம்பலூர், சிவகங்கை என்று ஊர்தோறும் நடைபெற்றுவரும் இந்த விழாக்களுக்கு வடதமிழகத்து மக்கள் சென்று வருவதையும், அது குறித்த பதிவுகளை முகநூல்களில் பதிவிடுவதையும் அறிகிறபோது உற்சாகம் எழுகிறது.
ஆனாலும், வந்து பார்ப்பவர்கள் அனைவரும் வாங்குபவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. பார்த்தவற்றுள் தன் வாழ்வுக்கு இது இன்றியமையாதது என்னும் கருத்தை எந்தப் புத்தகம் ஏற்படுத்துமோ, அந்தப் புத்தகம்தான் அவர்கள் வசமாகும். அதற்கான காலமும் சூழலும் கனிந்து வர வேண்டும் என்பதோடு, அதற்கான முக்கியத்துவமும் உணர்த்தப்பட வேண்டும்.

இன்றைக்கு ஏராளமான எழுத்தாளர்கள், பதிப்பகத்தார்கள் உருவாகியிருக்கிறார்கள்; எழுதுகிறவர்களின் எண்ணிக்கைக்கும், வெளிவரும் புத்தகங்களின் எண்ணிக்கைக்கும் ஒப்ப, வாசகர்கள் எண்ணிக்கை வளர்ந்திருக்கிறதா என்பது ஐயமே. ஆனாலும், எழுத்துக்கும் புத்தகத்துக்கும் இருக்கிற கவர்ச்சி குறையவில்லை; விலையும் குறைய வாய்ப்பில்லை. நாளுக்கு நாள் தாளின் விலை ஏறிக்கொண்டிருக்கும்போது இது அதிகரிக்கத்தான் செய்யும். இது பதிப்பாளர்களுக்கும் வாசகர்களுக்கும் ஏற்பட்டிருக்கிற நெருக்கடி மட்டுமல்ல, வாசகர்களுக்கும்தான். 
விரும்பிய புத்தகங்களை வாங்கிப் படிக்க முடியாத அளவிற்கு விலை ஏற்றம். "புத்தகமோ பத்திரிகையோ படிக்காமல் பொழுது விடிவதில்லை' என்கிற அளவிற்கு, வாசிப்பை நேசிக்கும் அன்பர்கள் இருக்கிறார்கள். அன்றாட வாசிப்பு இவர்களுக்கு அவசியம். உடல் இயக்கத்திற்கு நடைப்பயிற்சி எவ்வளவு அவசியமோ, அதுபோல் உள்ள விரிவிற்கு வாசிப்பு இன்றியமையாதது என்பதை நன்குணர்ந்தவர்கள் இவர்கள். என்னதான் காட்சி ஊடகங்கள் செய்திகளை உடனுக்குடன் வழங்கினாலும், செய்திக்குப் பின் விரியும் சிந்தனையின் விழுமியங்களை நுட்பமாய் உணர்ந்தவர்கள். 
பார்வைக்குப் பந்திவைக்கும் காட்சி ஊடகங்களின் பதிவுகளைவிட, பார்வைக்குப் பார்வை உண்டாக்கும் அச்சு ஊடகங்கள் கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துபவை; விழித்திரையின் காட்சிகளைவிடவும், மனத்திரையில் விரியும் சித்திரங்கள் மகத்தானவை. கண்ட காட்சிகள், திரும்பத் திரும்பத் தம்மையே காட்டிக் கொண்டிருப்பவை; ஆனால், வாசித்துப் பெற்ற அனுபவ அலைகளோ கற்பனைக்கும் சிந்தனைக்கும் களம் அமைத்துக் கொடுக்கவல்லவை. 

எழுத்தின் சவாலை ஏற்றுக்கொண்டு வாசிக்கத் தொடங்கும்போது ஏற்படும் மலர்ச்சியை, இந்த நுண்கலைதான் கொடுக்கும்.
"வெள்ளைக் கமலத்திலே, அவள் வீற்றிருப்பாள்' என்று சொல்லிக் காட்டிய பாரதியின் வாசகத்தை ஓவியமாகத் தீட்டும்போது கலைவாணி தோன்றிவிடுகிறாள். தற்காலப் பெண்ணுக்கு ஒப்பனை செய்து, அதுபோலக் காட்டிவிடலாம். ஆனால், "புகழ் ஏற்றிருப்பாள்' என்கிற கருத்தை எப்படிச் சித்திரப்படுத்துவது? "அவள் நெற்றி, குளிர் நிலவு; சிந்தனையே அவளது கூந்தல்; இருசெவிகளிலும் இருக்கும் தோடுகள், வாதமும் தருக்கமும்; கற்பனையே அவளது தேன் இதழ்கள்' என்று மகாகவி பாரதி தீட்டும் சொற்சித்திரத்தில், கலைவாணி எழுந்தருளும் காட்சியை எந்தக் காட்சிச் சித்திரம் அப்படியே காட்டிவிட இயலும்? 
இவை யாவும் புறச்சித்திரங்கள்; புன்னகை சிந்தும் மெல்லிதழ்களுக்கு உள்ளே தவமிருக்கும் அன்னையின் செந்நாச் சிறப்பை,                                                                                                                                        
சொற்படு நயம் அறிவார் - இசை
தோய்ந்திடத் தொகுப்பதின் சுவைஅறிவார்
விற்பனத் தமிழ்ப்புலவோர் - அந்த
மேலவர் நாவு எனும் மலர்ப்பதத்தாள்
என்று காட்டும் அழகின் நுட்பத்தை, எழுத்தின் வழிதானே உணர்ந்து அனுபவிக்க இயலும்? இங்கே சொற்பதம் கடந்த அற்புதம் நிகழ்ந்துவிடுகிறதே. இதுதான் வாசிப்புத் தரும் உயிரனுபவம். 
இது, மனித குலத்திற்கே வாய்த்த உயரனுபவம். அதனால்தான்,
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்
என்றார் திருவள்ளுவர்.

இவர்களுக்கு நடுவே, இன்னமும் பொழுதுபோக்குப் பழக்கமாகவே வாசிப்பைக் கருதுபவர்கள் இருக்கிறார்கள். போக்காவிட்டாலும் பொழுது போகத்தான் செய்யும்; ஆனால், அதனைப் பயனுள்ள வண்ணம் போக்குதற்குப் புத்தகங்கள்தாம் பெருந்துணை. அப்படிப்பட்ட புத்தகங்களை, இணையவழியில் இறக்குமதி செய்து கைப்பேசி, கணினித்திரைகளில் கண்டு படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது. ஆனாலும், அவை பார்வைக்கு உகந்ததாக இருக்குமா? 

மனத்திரையில் எழுச்சியுண்டாக்கும் எழுத்துகள், இந்த ஒளித்திரையின் வழியாக விழித்திரைகளைத் தொடும்போது ஏற்படும் விழியியல்சார் தாக்கங்கள் ஆரோக்கியமானதாக இருக்குமா? புத்தகங்களின் பக்கங்களைப் புரட்டிப் புரட்டிப் படிக்கிற மாதிரி, இந்த ஒளித்திரைகளின் வாயிலாக நெடுநேரம் வாசிக்க இயலுமா? அது நல்லதுதானா? 
அச்சு ஊடக பிரதிகளை, காட்சி ஊடகங்களின் வாயிலாகக் காண்பது எளிது;  கற்பதும்கூட எளிதாக இருக்கலாம். ஆவணமாக வைத்திருந்து மீளத் தேடிப் படிக்கவும், வேண்டும்போது வேண்டும் பக்கங்களைப் பார்க்கவும், மிகத் தேவையானவற்றை அடிக்கோடிட்டு வைத்துச் சிந்திக்கவும் தூண்டுகிற செயலைப் புத்தகத்தால்தான் செய்ய முடியும். இதனை உணராத நிலையில் சமூக ஊடகங்களில் கண்டதையெல்லாம் வாசித்துக் கடந்துவிடுகிறவர்கள் இருக்கிறார்கள்; அவர்களைப் பொறுத்தவரையில், ஓரிரு பத்திகள், அதிகம் போனால், சில நூறு வார்த்தைகளுக்குமேல் படிக்க இயலாத மனநிலை.
வயிற்றுப் பசிக்கு உணவுபோல, அறிவுப்பசிக்கு புத்தகம். நொறுக்குத் தீனிகள் சுவைபயக்கும்; ஆனால், அவையே உணவாகிவிடாது. அது போல்தான் இந்தத் துணுக்குகள். தூறலால் பயிர்கள் விளைந்துவிடுவதில்லை; பெருமழை மட்டுமே உயிர்வளர்க்கும் வானமுதம்; புத்தகங்களுக்கும் இது பொருந்தும்.
எல்லாம் சரி. பதிப்பாளர்களுக்கும் வாசகர்களுக்கும் வேண்டிய வண்ணம், தன்னை உருக்கி, தன் காலத்துக்கான விழுமியங்களை நுண்ணிதாய் உணர்த்தி, கூடுவிட்டுக் கூடுபாய்ந்து கொடுக்கும் எழுத்தாளனுக்கு என்ன செய்துவிடமுடியும், இந்தச் சமுதாயம்?

இயல்பாய்க் கிட்டும் உலக இன்பங்களுக்குப் பெரிதும் ஆட்படாமல், தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு, எழுத்துத் தவம் இயற்றும் எழுத்தாளுமைக்குக் குறைந்தபட்சம் பாராட்டையேனும் நல்குவது பயனுள்ளதாய் இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. சென்னையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில், துறைதோறும் சிறந்து விளங்கும் எழுத்தாளர்களுக்குப் பரிசும் பாராட்டுப் பட்டயமும் கொடுப்பதுபோல, மாவட்டங்களில் நடைபெறும் புத்தகத் திருவிழாக்களில், அப்பகுதிசார் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்திப் பாராட்டுச் செய்யலாமே?

சங்க காலம் தொடங்கி, சமீப காலம் வரைக்கும் தமிழுக்குத் தகுஉயர்வளிக்கும் படைப்பாளிகள் எல்லா மாவட்டங்களிலும் இருப்பார்கள்; அவர்களில் தற்காலத்தில் வாழ்வோர்க்குப் பாராட்டும் பரிசும் கொடுப்பதுபோல, மறைந்த எழுத்தாளர்களின் நிழற்படங்களைக் காட்சிக்கு வைத்து, அவர்கள் குறித்த தகவல்களைச் சிறு கையேடாகத் தயாரித்து வழங்குவதன்மூலமாக, ஒரு வரலாற்றுப் பதிவை நிரந்தரப்படுத்தலாமே. 
புத்தகத் திருவிழா முடிந்த கையோடு, நிழற்படங்களையும் குறிப்புகளையும் அந்தந்த மாவட்டத் தலைமை நூலகங்களில் வைத்துப் பாதுகாக்கலாமே?
எழுத்து என்பது கலைசார்ந்த வடிவம் மட்டுமல்ல, அறிவுசார்ந்த இயக்கமும்தான். குழந்தைமை தொடங்கி, முதுமை வரை உடன் வரக்கூடிய நடைவண்டியும் ஊன்றுகோலும் எழுத்தே ஆகும். அதனால்தான்,
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் 
என்றார் திருவள்ளுவர். 

புத்தகத்திருவிழா ஓர் அறிவுசார் இயக்கம். ஆண்டுக்கு ஒருமுறை கூடி நடத்தும் கோலாகலத்தால் ஈர்க்கப்பட்டுப் புதிய தலைமுறை, பொதுமைசார் தலைமுறையாக உருவாகக் கூடும்; வாசகர்களை மையமிட்டு, எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும் கூடிக் கலந்து பேசி, மகிழும்போது எழும் முக்கோண உறவு, பல மனக்கோணல்களையும் சரியாக்கக் கூடும். 
வகுப்பறைகளில் பெற முடியாத அரிய நுட்பங்களை, வாழ்க்கை கற்றுக் கொடுத்திருக்கும்; அவற்றைச் சீர் தூக்கிப் பார்த்துச் சிறப்புக்குரியவற்றை மேலெடுத்துச் செல்ல, இத்தகு நிகழ்வுகள் உதவும். சாதி, சமய, இன பேதங்கள் கடந்து மொழியின் அடிப்படையில் ஒருங்கு திரளும் இவ்விழாக்களில், மொழிபெயர்ப்பாக்கங்களுக்கும் சிறப்பிடம் இருப்பதால், உலகப் பொது மனித அறம் சார்ந்த விழுமியங்கள் நிலைபெறக் கூடும்.

புகழுடையவர்களின் வாழ்க்கை, புத்தகங்களில் பொதிந்திருக்கின்றது. எடுத்துப் படிக்கிறபோது, அவர்கள் மறுபடியும் பிறக்கிறார்கள்; நம்மையும் பிறப்பிக்கிறார்கள். நாளும் புதிதாய், நம்மைப் பிறப்பித்துக்கொள்ள, தாயினும் சாலப் பரிந்து அறிவூட்டும் நல்ல புத்தகம் ஒவ்வொன்றும் நற்றாய்; பத்திரிகைகள், செவிலித்தாயார். காட்சி ஊடகங்கள் நம் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து நெறிப்படுத்தும் தோழமைகள் எனக் கொள்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com