இரு வெளியேற்றங்கள்

தில்லியிலும், பரபரப்புச் செய்திகளுக்குப் பஞ்சமில்லாத மகாராஷ்டிர மாநிலத் தலைநகராகிய மும்பையிலும் அரங்கேறிய இரண்டு வெளியேற்றச் சம்பவங்கள் தேசிய அளவில் பரவலான விவாதங்களை உருவாக்கியுள்ளன
இரு வெளியேற்றங்கள்

நமது தேசியத் தலைநகராகிய தில்லியிலும், பரபரப்புச் செய்திகளுக்குப் பஞ்சமில்லாத மகாராஷ்டிர மாநிலத் தலைநகராகிய மும்பையிலும் அரங்கேறிய இரண்டு வெளியேற்றச் சம்பவங்கள் தேசிய அளவில் பரவலான விவாதங்களை உருவாக்கியுள்ளன.

தொண்ணூறு வயது நிரம்பிய குச்சுப்புடி நடனக் கலைஞர் மாயாதர் ரெளத் தமக்கு வழங்கப்பட்ட அரசுக் குடியிருப்பிலிருந்து கடந்த ஏப்ரல் மாதக் கடைசியில் வெளியேற்றப்பட்டிருக்கிறார். இத்தனைக்கும் மத்திய அரசினால் பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டவர் அந்த வயதான குச்சுப்புடிக் கலைஞர். அரசு அதிகாரிகளால் அந்தக் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்ட அவருடைய வீட்டு உபயோகப் பொருட்களுடன் அவருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதுக்கான பட்டயமும் தெருவில் கிடந்த காட்சியை ஊடகங்களில் பார்த்த எவருக்கும் மனம் கலங்கியிருக்கும்.

1980-களில் இருபதாயிரம் ரூபாய்க்குக் குறைவான மாத வருமானம் உடைய கலைஞர்களுக்கு மத்திய கலாசார அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் ஆசிய விளையாட்டு கிராமம் உள்ளிட்ட மத்திய அரசுக்கு சொந்தமான இடங்களில் கலைஞர்களுக்கு வசிப்பிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. மோகினி ஆட்டம், பரதநாட்டியம், கதக், இசைத்துறையைச் சேர்ந்த இக்கலைஞர்களில் சிலர் பத்ம விருதுகளைப் பெற்றவர்களும் கூட.  

காலம் தொடர்ந்து அவர்களுக்குக் கருணை புரியவில்லை. கடந்த 2014-ஆம் ஆண்டு இந்த ஒதுக்கீடுகளை ரத்து செய்த நகர்ப்புற வளர்ச்சித் துறை, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை விட்டு வெளியேறுமாறு அக்கலைஞர்களுக்கு அறிவிப்பாணை அனுப்பியுள்ளது. அந்த உத்தரவை எதிர்த்து மேற்கண்ட கலைஞர்கள் தொடர்ந்த வழக்கில் கிடைத்த தடையுத்தரவு கடந்த பிப்ரவரி மாதம் தில்லி உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வினால் ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. 
கலைஞர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை காலி செய்ய மேற்கொண்டு இரண்டு மாத காலம் மட்டுமே அவகாசம் அளிக்கப்படும் என்றும், அதற்குப் பிறகும் வெளியேறாதவர்களை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அந்த உத்தரவு தெளிவுபடுத்திவிட்டது.

வீடு ஒதுக்கீடு செய்யப்பட்ட கலைஞர்களில் பெரும்பாலானோர் எழுபது, எண்பது வயதைக் கடந்தவர்கள். முன்பு போல ஓடியாடி கலைநிகழ்ச்சிகள் நடத்தி பணம் சம்பாதிக்க வழியில்லாதவர்கள். கடந்த இரண்டு வருடங்களாக இவ்வுலகையே ஆட்டிப்படைத்த கரோனா தீநுண்மியின் விளைவாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் இப்பெரும் கலைஞர்களையும் பெருமளவில் பாதிக்கவே செய்திருக்கும். 

அன்றாட வாழ்வுக்கு மிக அதிகமான பணம் தேவைப்படுகின்ற தில்லி போன்ற பெருநகரங்களில் புதிதாக ஓர் இருப்பிடம் தேடுவதென்பது எத்தனை சிரமமான காரியம் ? இருந்தபோதிலும், தாங்கள் கழுத்தைப் பிடித்துத் தள்ளப்படுவதற்கு முன்பு கெளரவமாக வெளியயேறிவிட வேண்டும் என்று நினைத்த இருபது கலைஞர்கள் வேறு இடம் பார்த்துக்கொண்டு தங்களின் குடும்பத்தினருடன் கிளம்பிவிட்டனர். மற்றவர்களில் சிலர் அரசின் கருணையை எதிர்நோக்கி மனு போட்டுக் காத்திருந்தனர், மாயாதர் ரெளத் உட்பட. மற்றொரு குச்சுப்புடி கலைஞரான குரு ஜயராம ராவ் என்பவரின் குடும்பம் மூட்டை முடிச்சுகளைத் தயார் செய்து கொண்டிருந்தது. அவர்கள் கேட்டதெல்லாம் மேற்கொண்டு ஒன்றிரண்டு நாட்கள் அவகாசம் மட்டுமே. 
ஆனால், அரசு அதிகாரிகள் வந்தார்கள், அவர்களை வெளியேற்றினார்கள். அவ்வளவே.

 ஒரு காலத்தில் விருதுகள் கொடுத்து, உறைவிடமும் கொடுத்து ஆராதித்த அதே நிர்வாகம், இப்போது அந்த மகத்தான கலைஞர்களைக் கழுத்தைப் பிடித்து வெளியேற்றி உள்ளது. அரசுக்கு சொந்தமான இடங்களை தலைமுறை தலைமுறையாக யாருக்கும் கொடுத்துவிட முடியாது என்பது உண்மைதான். ஆனால், ஒருமுறை ஒதுக்கப்பட்ட உறைவிடங்களில் குறைந்தபட்சம் அந்தக் கலைஞர்கள் வாழும் வரையிலாவது இருக்க அனுமதிக்கலாம் அல்லவா ? 
மத்திய கலாசாரத் துறையும், நகர்ப்புற வளர்ச்சித் துறையும் இவ்விஷயத்தை இன்னும் கூடுதலான மனிதாபிமானத்துடன் அணுகியிருக்கலாம் என்றே தோன்றுகின்றது. 

இதே போல மகாராஷ்டிர தலைநகரான மும்பையில் அரங்கேறியுள்ள இன்னொரு வெளியேற்றம் நமது புருவங்களை உயர்த்த வைக்கிறது. திரைப்படக் கலைஞர்களுக்கு நிகராக நம்முடைய கிரிக்கெட் வீரர்களைப் போற்றுபவர்கள் நாம் என்பது தெரிந்த விஷயம்தானே? 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், சாதனைகள் பல புரிந்த மட்டையாளருமாகிய சுனில் காவஸ்கருக்கு 1988-ஆம் வருடம் அப்போதைய மகாராஷ்டிர மாநில அரசு 21,348 சதுர அடி நிலத்தை வழங்கியது. 
மும்பையின் பாந்த்ரா பகுதியிலுள்ள விலைமதிப்பு மிக்க அந்த நிலம் "சுனில் காவஸ்கர் கிரிக்கெட் ஃபவுண்டேஷன் டிரஸ்ட்' என்ற அறக்கட்டளைக்கு அறுபது வருட குத்தகை  அடிப்படையில் வழங்கப்பட்டது. இளைஞர்களிடையே கிரிக்கெட் திறமையை வளர்ப்பதற்கான பயிற்சி நிலையம் ( அகாதெமி ) ஒன்றை அமைப்பதற்காக இந்த நிலம் வழங்கப் பட்டது. 

ஆனால், முப்பத்து மூன்று ஆண்டுகள் கடந்தும் அந்த இடத்திற்கு ஒரு சுற்றுச்சுவர் கூட எழுப்பப்படவில்லை என்று உள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர் கேள்வி எழுப்ப, மகாராஷ்டிர வீட்டுவசதித்துறை அமைச்சர் ஜிதேந்திர அவாத், இவ்விஷயத்தில் கவனம் செலுத்தினார். ஒரு கட்டத்தில் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து தான் அந்த அகாதெமியை நடத்த இருப்பதாகக் கூறி மகாராஷ்டிர முதல்வரை சந்தித்த சுனில் காவஸ்கர், ஒருவழியாக அந்த நிலத்தை மாநில அரசுக்கே திருப்பி அளித்திருக்கிறார். 
பதவிக் காலம் முடிந்து பல வருடங்களானாலும் அரசுக் குடியிருப்புகளை விட்டு வெளியேறாத அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இருப்பதை நாம் அறிவோம். கிரிக்கெட் வீரர் சுனில் காவஸ்கர் சுமார் நூறுகோடி ரூபாய் மதிப்புள்ள அரசுநிலத்தைத் தமக்கே பட்டா போட்டுக் கொள்ளாவிட்டாலும், ஒப்புக்கொண்ட பணியை மேற்கொள்ளாமல் காலம் கடத்தியிருக்கிறார்.
ஆனால், நாட்டுக்குப் பெருமை சேர்த்த அற்புதக் கலைஞர்கள் மட்டும் தங்களின் வயோதிக காலத்தில் அரசு ஒதுக்கிய வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். 
இந்தியாவில் மட்டும்தான் இப்படியெல்லாம் நடக்கும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com