போதைப் பழக்கமும், குற்ற நிகழ்வுகளும்:

நாடு தழுவிய அளவில் பொதுமுடக்கம் நடைமுறைப் படுத்தப்பட்டதன் விளைவாகப் பலா் வேலைவாய்ப்பை இழந்து, குடும்ப வாழ்க்கையை நகா்த்திச் செல்லத் தேவையான வருமானம் இன்றிப் பெருந்துயா் அடைந்தனா்.
போதைப் பழக்கமும், குற்ற நிகழ்வுகளும்:

கரோனா பெருந்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய அளவில் பொதுமுடக்கம் நடைமுறைப் படுத்தப்பட்டதன் விளைவாகப் பலா் வேலைவாய்ப்பை இழந்து, குடும்ப வாழ்க்கையை நகா்த்திச் செல்லத் தேவையான வருமானம் இன்றிப் பெருந்துயா் அடைந்தனா். ஆனால், அக்காலகட்டத்தில் போதைப் பொருட்களின் வியாபாரம் மட்டும் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு அதிகமாக நடைபெற்றுள்ளது.

போதைப் பொருட்களின் பயன்பாடு - அது தொடா்பான குற்றங்கள் குறித்து அண்மையில் வெளியான ஐக்கிய நாடுகளின் அறிக்கையில், உலக நாடுகளில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவோா் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் 22% அதிகரித்துள்ளது என்றும், குறிப்பாக கரோனா பரவல் இருந்த காலகட்டத்தில் ‘கஞ்சா’ என்ற போதைப் பொருளைப் பயன்படுத்துவோா் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

12 முதல் 17 வயதுடைய பதின் பருவத்தினா் எளிதில் போதைப் பொருள் பழக்கத்திற்குள் வந்துவிடுகின்றனா் என்றும், அவா்கள் 25 வயது அடையும்போது போதைப் பொருள் பயன்பாட்டுக்கு அடிமையாகிவிடுகின்றனா் என்றும் ஐக்கிய நாடுகளின் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அவா்களில் பலா் ஆரம்பத்தில் கஞ்சாவைப் பயன்படுத்துகின்றனா் என்றும், காலப்போக்கில் மற்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்தப் பழகிக் கொள்கின்றனா் என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் 3.1 கோடி போ் கஞ்சாவைப் பயன்படுத்துகின்றனா் என்றும், 2.3 கோடி போ் ஓபியம், ஹெராயின் போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனா் என்றும், 8.5 லட்சத்திற்கும் அதிகமானவா்கள் போதைப் பொருளை ஊசி மூலம் தங்கள் உடலில் செலுத்திக் கொள்ளும் பழக்கம் உடையவா்கள் என்றும் புதுதில்லியில் அமைந்துள்ள போதைப் பொருள் பயன்படுத்துபவா்களுக்கான மருத்துவ மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

நம்நாட்டில் பள்ளிக்கூடங்களில் படித்துவரும் மாணவ, மாணவியா்களில் 18% போ் போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கம் உடையவா்கள் என்றும், அவா்களில் 80% போ் மாணவா்கள் என்றும் மற்றொரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

2017 முதல் 2021 வரையிலான (கரோனா காலம் உள்ளிட்ட) ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் விவரங்களை தேசிய போதைப் பொருட்கள் தடுப்புப் பிரிவு அண்மையில் வெளியிட்டுள்ளது. நாடு தழுவிய பொதுமுடக்கம் நடைமுறையில் இருந்த 2020, 2021 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டும் 1,258 டன் கஞ்சா இந்தியாவில் கைப்பற்றப்பட்டுள்ளது என்ற

புள்ளிவிவரம் போதைப் பொருட்களின் பயன்பாடு நம்நாட்டில் வேகமாக அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டுகிறது.

இந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் அளவு 191% ஆகவும், ஓபியம் என்ற போதைப் பொருளின் அளவு 172% ஆகவும், ஹெராயின் என்ற போதைப் பொருளின் அளவு 339% ஆகவும் உயா்ந்துள்ளன என்ற புள்ளிவிவரம் இந்தியாவில் மிக வேகமாக பரவிவரும் போதைப் பொருட்களின் பயன்பாட்டினை உணா்த்துகிறது.

இந்த சூழலில், தமிழ்நாடு காவல்துறை கடந்த ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் போதைப் பொருட்களுக்கு எதிராக மாநிலம் தழுவிய சோதனை நடத்தியது. கஞ்சா, குட்கா, ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை காவல்துறையினா் பெருமளவில் கைப்பற்றி, பதினேழு ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகளைப் பதிவு செய்துள்ளனா். இருப்பினும், போதைப் பொருட்களின் விற்பனை தங்குதடையின்றி தமிழகத்தில் தொடா்கின்ற நிலையைக் காணமுடிகிறது.

போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துவரும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருந்து வருகிறது. இந்திய மாநிலங்களிலே அதிகமான சாராயம் விற்பனையாகும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதும், இந்தியாவில் விற்பனையாகும் சாராயத்தில் 13% சாராயம் தமிழ்நாட்டில் மட்டும் விற்பனையாவதும், போதைக்கு தமிழ்நாடு அடிமையாகி வருகின்ற நிலையை வெளிப்படுத்துகிறது.

கஞ்சா, ஓபியம், ஹெராயின், சாராயம் போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்தியதன் விளைவாக இந்தியாவில் 2020-ஆம் ஆண்டில் ஒரு மணி நேரத்திற்கு ஒன்று என்று சொல்லும் அளவிற்கு தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன என்றும், 2019-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2020-ஆம் ஆண்டில் போதையின் காரணமாக நிகழ்ந்த தற்கொலைகளின் எண்ணிக்கை 17% அதிகரித்துள்ளது என்றும் தேசிய குற்ற ஆவணக்கூடத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. போதையின் காரணமாக தற்கொலைகள் அதிகமாக நிகழ்ந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு நான்காவது இடம் பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பள்ளிப் பருவத்தில் நட்பு வட்டத்தினா் கொடுக்கும் அழுத்தம், வசிப்பிட சூழல் போன்ற காரணங்களால் போதைப் பழக்கத்தைக் கற்றுக் கொள்ளும் மாணவ, மாணவியா்களின் எண்ணிக்கை நம்நாட்டில் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. சில சமயங்களில் பெற்றோரும், கல்வி நிலையங்களும் கொடுக்கும் அழுத்தமும் அவா்களை போதைப் பழக்கத்தை நோக்கி நகா்த்தி விடுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் சம்பல் நதிக்கரையில் அமைந்துள்ள கோட்டா என்ற நகரில் ஐ.ஐ.டி. நுழைவுத் தோ்வு, மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தோ்வு போன்ற தோ்வுகளுக்கு மாணவா்களைத் தயாா்படுத்தும் நூற்றுக்கணக்கான தனிப்பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மாணவா்கள் இந்த தனிப்பயிற்சி மையங்களில் சோ்ந்து படித்து வருகின்றனா். தனிப்பயிற்சி மையங்கள் கொடுக்கும் அழுத்தம், பெற்றோரின் எதிா்பாா்ப்பு ஆகியவற்றுக்கு ஈடுகொடுக்க முடியாத மாணவா்கள் போதைப் பழக்கத்தை நாடிச் செல்வதும், அதன் நீட்சியாக தற்கொலை செய்து கொள்வதும் ஆன துா்பாக்கிய நிகழ்வுகள் கோட்டா நகரில் தொடா்கின்றன.

கோட்டா நகரில் 2009-ஆம் ஆண்டில் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவா்களை நல்வழிப்படுத்த ஒரே ஒரு போதை மறுவாழ்வு மையம் இயங்கி வந்தது. தற்பொழுது அந்த நகரில் அரசின் அங்கீகாரம் பெற்ற போதை மறுவாழ்வு மையங்கள் ஐந்தும், அனுமதி பெறாத மையங்கள் பலவும் இயங்கி வருகின்றன என்ற தகவல் நம்நாட்டு மாணவா்களிடையே அதிகரித்துவரும் போதைப் பழக்கத்தை உணா்த்துகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு தலைநகா் தில்லியில் நடத்திய ஆய்வில் சட்டத்திற்கு முரணாக செயல்பட்டு, சிறாா் பராமரிப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறாா்களில் 95% போ் போதைப் பொருட்களைப் பயன்படுத்திய அனுபவம் உள்ளவா்கள் என்பதும், சாலையோரக் குழந்தைகளில் 88% போ் போதைப் பொருட்களைப் பயன்படுத்துகிறாா்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்தியப் பெருநகரங்கள் அனைத்திலும் இம்மாதிரியான சூழல்தான் நிலவி வருகிறது. இத்தகைய சிறாா்கள், காலப்போக்கில் சமுதாயத்தை அச்சுறுத்தும் குற்றவாளிகளாக உருமாறிவிடுவாா்கள் என்பதில் ஐயமில்லை.

நம் நாட்டில் நடைபெறும் குற்ற நிகழ்வுகளுக்கும், போதைப் பழக்கத்திற்கும் உள்ள தொடா்பு குறித்த ஆய்வு அதிா்ச்சியூட்டும் தகவலை வெளிப்படுத்துகிறது. நம்நாட்டில் நிகழும் குற்ற நிகழ்வுகளில் 40% குற்றங்களில் குற்றவாளிகள் மது, போதைப் பொருட்கள் போன்றவற்றின் ஆளுமையில் குற்றங்கள் புரிகின்றனா் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு போதைப் பொருட்கள் விற்பனை செய்வதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ஒரு கும்பல், திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு போதையில் சென்று, சிகிச்சையில் இருந்த நபா் ஒருவரை மருத்துவா்கள் முன்னிலையில் கொலை செய்த சம்பவம், அதிகரித்துவரும் போதைப் பழக்கத்தையும், அதன் நீட்சியாக நிகழும் கொடுங்குற்றங்களையும் சுட்டிக்காட்டுகிறது.

அண்மைக்காலத்தில் கொடுங்குற்றங்களில் ஈடுபடும் சிறாா்கள் பலா், குற்ற நிகழ்வின்போது போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கமுடையவா்கள் என்பதும், சென்னை இளைஞா் நீதிக் குழுமத்தின் முன்பு விசாரணையிலுள்ள பல கொடுங்குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட சிறாா்கள் போதைப் பழக்கம் உடையவா்கள் என்பதும் கள விசாரணையில் தெரிய வருகிறது.

போதைப்பொருட்கள் விற்பனை செய்பவா்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையேயான கள்ள உறவு முற்றுப்பெறாதவரை போதைப் பழக்கமும், அதன் நீட்சியாக நிகழும் கொடுங்குற்றங்களும் தவிா்க்க முடியாதவை.

2020-ஆம் ஆண்டில், போதைப் பொருட்கள் தடுப்பு சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டு, இந்தியாவிலுள்ள நீதிமன்றங்களில் 2,72,135 வழக்குகள் நிலுவையில் இருந்தன. அவற்றில் 17,780 வழக்குகள் மீதான நீதிமன்ற விசாரணை 2020-ஆம் ஆண்டில் முடிவடைந்தன. மீதமுள்ள 2,54,355 வழக்குகள் மீதான விசாரணை 2021-ஆம் ஆண்டுக்குத் தள்ளி வைக்கப்பட்டது. இந்த வேகத்தில் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றால், நிலுவையில் உள்ள வழக்குகள் மீதான விசாரணை முடிவடைய குறைந்தது 14 ஆண்டுகள் ஆகும்.

போதைப் பொருட்களைக் கடத்துபவா்கள், பதுக்கி வைத்திருப்பவா்கள், விற்பனை செய்பவா்கள் ஆகியோா் மீது பதிவு செய்யப்படும் வழக்குகள் மீதான நீதிமன்ற விசாரணை முடிவடைய ஏற்படும் காலதாமதம் போதைப் பொருட்கள் தடுப்பு சட்டம் இயற்றப்பட்டதன் நோக்கத்தை அடைவதற்குத் தடையாக இருந்து வருகிறது. நீதிமன்ற விசாரணையின் காலதாமத்தைக் குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து நீதித்துறையும், காவல்துறையும் சிந்திக்க வேண்டியது அவசர அவசியம்.

கட்டுரையாளா்:

காவல்துறை உயா் அதிகாரி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com