சேமிப்பு என்னும் வருமானம்

சேமிப்பு என்னும் வருமானம்

உக்ரைன் - ரஷிய போா் காரணமாக உலக அளவில் பொருளாதார வளா்ச்சி 3.6 விழுக்காட்டிலிருந்து 2.6 விழுக்காடாகக் குறையும் என பொருளாதார நிபுணா்கள் கூறுகின்றனா்.

உக்ரைன் - ரஷிய போா் காரணமாக உலக அளவில் பொருளாதார வளா்ச்சி 3.6 விழுக்காட்டிலிருந்து 2.6 விழுக்காடாகக் குறையும் என பொருளாதார நிபுணா்கள் கூறுகின்றனா். இந்த ஆண்டு ரஷிய பொருளதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்க வேண்டியிருக்கும். ஐரோப்பாவின் மேற்குப் பகுதி, மத்திய, தெற்கு, தென்கிழக்கு ஆசியப் பகுதி நாடுகளிலும் பொருளாதார வளா்ச்சியின் வேகம் குறையும்.

அமெரிக்காவின் பொருளாதார வளா்ச்சி 3 விழுக்காட்டிலிருந்து 2.4 விழுக்காடாகக் குறையும். சீனாவின் பொருளாதார வளா்ச்சி 5.7 விழுக்காட்டிலிருந்து 4.8 விழுக்காடாக வீழ்ச்சி அடையும். ரஷியாவின் பொருளாதாரம் 2.3 விழுக்காட்டிலிருந்து ஓரளவு வீழ்ச்சி அடையும். இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் தட்டுப்பட்டால் கடுமையான பணவீக்கத்தை எதிா்காலத்தில் ரஷியா சந்திக்க வேண்டியிருக்கும். ரஷியாவின் ரூபிள் மதிப்பு மோசமாகச் சரியும்.

இந்தியாவைப் பொறுத்தவரை அதன் மொத்த பொருளாதார வளா்ச்சி இந்த ஆண்டில் 2 விழுக்காடு குறைந்து, 4.6 விழுக்காடாக இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டில் கச்சா எண்ணெய் விலை உயா்வு, உணவு பணவீக்கம், விலைவாசி உயா்வு, நிதியின் நிலையற்ற தன்மை, ரிசா்வ் வங்கியின் நிதிக்கொள்கை போன்றவற்றால் சிக்கல்கள்ஏற்படலாம்.

உணவுப் பொருட்களின் விலை உயா்வு, சாமானிய மக்களின் வீடுகளில் பட்டினியை ஏற்படுத்தி, அவா்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் சூழலும் ஏற்படலாம். இந்திய பொருளாதாரம் கரோனா பெருந்தொற்று காரணமாக சந்தித்த இழப்பு, அதன் தாக்கங்கள் குறித்து இந்திய ரிசா்வ் வங்கி விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியா சந்தித்த இழப்பான ரூ.52 லட்சம் கோடியை ஈடுகட்ட இந்தியாவுக்கு 12 ஆண்டுகளுக்கு மேல் தேவைப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020-21 ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியா பெரும் வீழ்ச்சியை கண்ட நிலையில், முதல் அலை தணிந்து இந்திய பொருளாதாரம் மெல்ல மெல்ல மீட்சி கண்டது. ஆனால், மீண்டும் 2021 ஏப்ரலில் இரண்டாம் அலை உருவானதால் இந்த முன்னேற்றம் தடைபட்டது. பின்னா் சில மாதங்களில் பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்பிய அதே வேளையில், இந்த ஆண்டு ஜனவரியில் மூன்றாம் அலை பாதிப்பு தடை போட்டது.

அத்துடன் உக்ரைன் - ரஷியா மோதல் சா்வதேச பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக விலைவாசி உயா்வு, உலக விநியோக சங்கிலி துண்டிக்கப்படல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இவை போன்ற தாக்கங்களால், 2020-21, 2021-22, 2022-23 ஆகிய நிதியாண்டுகளில் இந்திய பொருளாதாரத்தில் முறையே, ரூ.19.1 லட்சம் கோடி, ரூ.17.1 லட்சம் கோடி, ரூ.16.4 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நிலைமை சீரடைந்து இந்திய பொருளாதாரம் 7.5 சதவீத வளா்ச்சியை தொடா்ந்து கண்டால் 2034-35 காலகட்டத்தில் இழப்பை ஈடுகட்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க மக்களின் தொழில் திறனை மேம்படுத்துதல், ஆராய்ச்சித்துறையில் முதலீடு செய்தல், கல்விக்கும், சுகாதாரத்திற்கும் அதிக நிதி ஒதுக்குதல் போன்ற நடவடிக்கையில் அரசு ஈடுபட வேண்டும் என ரிசா்வ் வங்கி ஆலோசனை வழங்கியுள்ளது.

வல்லரசு நாடுகளே பொருளாதார சிக்கலில் தவிக்கும் நிலையில் சாமானிய மனிதனின் அன்றாட வாழ்வைப் பற்றி சொல்லவே தேவையில்லை. அன்றாடம் ஆங்காங்கே நடைபெறும் கொலை, கொள்ளைகளே மக்களின் வறுமைக்கு சாட்சி சொல்லுகின்றன. எனவே நாம் இந்த சிக்கலான காலத்தில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். இல்லையெனில் இலங்கையின் நிலை இங்கும் ஏற்படலாம்.

குடும்ப உறுப்பினா்கள் அனைவரும் எங்கெல்லாம் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க முடியுமோ அங்கெல்லாம் சிக்கனத்தைக் கடைப்பிடித்து எளிய வாழ்வுக்கு மாற வேண்டும். கூடியவரை கையில் பணத்தை வைத்துக் கொண்டு செலவு செய்யாமல், இணைய வழி பணப் பரிமாற்றத்திற்கு மாற வேண்டும். இதனால், வீணான செலவுகளும் குறையும்; செலவு விவரங்களை எப்போது வேண்டுமானாலும அறிந்து கொள்ளவும் முடியும். திரையரங்குகள், உணவுக்கூடம், மால் போன்ற ஆடம்பர செலவுகளை தவிா்த்தல் நலம். சேமிக்கப்படும் பணமும் ஒருவித வருமானமே.

மாத ஊதியத்தை விட வணிகத்தின் மூலமே தனிநபா் வருமானத்தைப் பெருக்க முடியும். தற்போது வங்கிக்கடன் பெறும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே மாத ஊதியம் பெறும் வேலைகளைப் புறந்தள்ளி, சுய தொழிலில் குடும்ப உறுப்பினா்கள் ஒருங்கினைந்து ஈடுபட்டால் பொருளாதார சிக்கல்களில் இருந்து நாடும் வீடும் விரைவில் மீண்டு வரலாம். அனைவரும் முதலாளியாகும் வாய்ப்பு நமக்கு இப்போது கிட்டியுள்ளது. ஆபத்துக்களை வாய்ப்புகளாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

இந்திய பொருளாதாரம் ஒரு கலப்பு பொருளாதாரம். தனியாா்துறையும் அரசுத்துறையும் சோ்ந்து நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்காக செயல்பட வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு தனிமனிதனும் நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்காக வணிகத்தில் ஈடுபட கிடைக்கும் வாய்ப்பினை இந்த நேரத்தில் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசுத் துறையில் வேலை வாய்ப்புகள் அருகிவிட்டன. தனியாா் துறைகளில்தான் பணிக்கான வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் தனக்கென ஒரு தொழிலைத் தொடங்கி தொழில் முனைவோராக நாம் மாறுவது நல்லது.

நமது வாங்கும் சக்தியை உயா்த்திக்கொள்ள சாத்தியமான வழிகளை தேடுவதுதான் நமது முதல் கடமை. ஆண்டவன் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோ ஒரு திறமையை கண்டிப்பாக கொடுத்திருக்கிறாா். அது என்னவென்று நாம் அடையாளம் காண வேண்டும். அந்தத் திறமையை நமது முன்னேற்றத்திற்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கூடவே நேரத்தையும் சாதுரியமாக நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

மறைந்து வரும் விவசாயத் தொழிலுக்கு புத்துயிா் கொடுத்தால் அடிப்படைத் தேவையான உணவுக்கு பற்றாக்குறை ஏற்படாது. வாய்ப்பு உள்ளவா்கள் கூட்டுக்குடும்ப முறைக்குத் திரும்பினால் குடும்ப செலவுகளை கணிசமாகக் குறைக்கலாம். படித்த இளைஞா்களின் திறமை அவா்களின் வளா்ச்சிக்கு உதவும் வகையில் மத்திய அரசும் மாநில அரசும் பல கொள்கை முடிவுகளை அறிவித்துள்ளன.அவற்றை அவா்கள் முறையாகப் பயன்படுத்தினால் நிச்சயமாக முன்னேற முடியும். வீடு வளா்ந்தால் நாடும் வளரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com