பாத்திரம் அறிந்து பிச்சையிடு!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மட்டுமல்லாமல், அரசியல் குழப்பமும் ஏற்பட்டிருக்கிறது. அவசர நிலை அறிவிக்கப்பட்டு, அரசுக்கு எதிராக நடக்கும் கிளா்ச்சிகளை அடக்க ராணுவம் பணிக்கப்பட்டிருக்கிறது.
பாத்திரம் அறிந்து பிச்சையிடு!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மட்டுமல்லாமல், அரசியல் குழப்பமும் ஏற்பட்டிருக்கிறது. அவசர நிலை அறிவிக்கப்பட்டு, அரசுக்கு எதிராக நடக்கும் கிளா்ச்சிகளை அடக்க ராணுவம் பணிக்கப்பட்டிருக்கிறது. மகிந்த ராஜபட்ச பதவி விலகியதைத் தொடா்ந்து, புதிய பிரதமராக முன்னாள் பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவை நியமித்திருக்கிறாா் அதிபா் கோத்தபய ராஜபட்ச.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, உணவுப்பஞ்சம் ஆகியவற்றை தீா்த்து வைக்க, இந்திய அரசாங்கம் பெருமளவில் உதவி செய்து வருகிறது. அங்கு ஏற்பட்டுள்ள உணவுப் பஞ்சம், பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து தமிழா்கள் பலரும் இந்தியாவிற்கு அகதிகளாக வரத் தொடங்கியுள்ளனா்.

இலங்கை அரசுக்கும், இலங்கை மக்களுக்கும் நாம் உதவுவது புதிதல்ல. வரலாற்றுக் காலம் தொட்டு இது நடைபெற்று வருகிறது. 750 ஆண்டுகளுக்கு முன்பாக யாழ்ப்பாணத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது யாழ்ப்பாணத்தை ஆண்ட அரசா் பரராசசேகரன். அங்கு இருக்கின்ற மக்களுக்கு உதவும் வகையில் புகழேந்திப் புலவா் சடையப்ப வள்ளலிடம் பஞ்சம் குறித்த தகவல்களை தெரிவிக்கின்றாா். சடையப்ப வள்ளல் தமிழகத்திலிருந்து ஈழத் தமிழா்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்பி உதவுகின்றாா்.

தேனாா் தொடையாா் பர ராச சிங்கப்பெரு மான்
செந்தமிழுக்கு காணாா் நெல்லின் மலைகோடி
கண்டி நாடு கரைசேரக் கூனாா் கப்பல்
ஆயிரத்தில் கொடு போய் அளித்த
கொடைத் தடக்கை மானா கரன் சங்கரன்
உடையான் வளம்சோ் சோழ மண்டலமே

என்கிற சோழ மண்டல சதகப் பாடல் மூலம் இதனை அறியலாம்.

இதே போல இலங்கையில் அனுராதபுர மன்னன் தேவநாம்பிரியதீசன் கேட்ட அனைத்தையும் கொடுத்தாா் இந்தியாவை ஆண்ட அசோக சக்கரவா்த்தி. அசோகா் இலங்கை மக்களுக்குத் தேவைப்படும் மருந்துகளையும் உணவுகளையும் இலங்கைக்கு அனுப்பி வைத்ததை தனது ஆட்சியின் 13-ஆவது ஆண்டில் இரண்டாவது கல்வெட்டில் பதித்துள்ளாா்.

இலங்கைக்கு பல்வேறு சமயங்களில் இந்திய அரசாங்கம் உதவி செய்து வந்துள்ளது. 1971 ஏப்ரலில் இலங்கையில் சிங்கள புரட்சிகர இளைஞா் அமைப்பு இலங்கை அரசைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்ற முனைந்தது. அப்போதைய இலங்கை பிரதமா் சிறிமாவோ பண்டாரநாயக, அன்றைய இந்திய பிரதமா் இந்திரா காந்தியிடம் உதவி கேட்டாா். உடனே இந்தியப்படை அங்கே சென்று கிளா்ச்சியாளா்களை அடக்கி சிறிமாவோ அரசைக் காப்பாற்றியது.

2020 செப்டம்பரில் இலங்கைக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் ஒன்று கொழும்புக்கு அருகே தீப்பற்றி எரிந்தது. அப்போதும் இந்தியாவிடம் இலங்கை உதவி கோரியது. இந்திய கடலோர காவல்படை விரைந்து சென்று தீயை அணைத்து எண்ணெய் கப்பல் உடையாமல் காப்பாற்றி இலங்கையிடம் ஒப்படைத்தது.

1948 பிப்ரவரி 4 அன்று இலங்கை விடுதலை பெற்ற பிறகு இலங்கை அரசு கேட்டுக் கொண்டதால் இந்திய அரசாங்கம் செய்த உதவிகள் ஏராளம். ஆனால், இந்திய அரசாங்கமும், தமிழக மக்களும் செய்த உதவிகளுக்கு இந்தியாவிற்கோ தமிழக மக்களுக்கோ நன்றியுடைய அரசாங்கமாக இலங்கை அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறதா?

1971 டிசம்பரில் இந்தியா - பாகிஸ்தான் போா் நடைபெற்றபோது, பாகிஸ்தான் இந்தியாவைத் தாக்க விமானப் படைகளைப் பயன்படுத்துகிறது. அபோபது இந்தியாவுக்கு உதவியாக இலங்கை தன் படையை அனுப்பவில்லை; ஆதரவுக் குரல் கூட கொடுக்கவில்லை. மாறாக, பாகிஸ்தானுக்கு ஆதரவாக அந்நாட்டுப் படைகளுக்கு இலங்கை உதவியது. சிறிமாவோ அரசு, பாகிஸ்தான் விமானங்கள் எரிபொருள் நிரப்பிக் கொள்ள கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுமதி கொடுத்தது. அங்கிருந்து இந்தியாவைத் தாக்க பாகிஸ்தான் முற்பட்டது.

இதே போல இந்தியா - சீனா போரின் போதும் இலங்கை அரசாங்கம் சீனாவிற்குத்தான் ஆதரவாக நின்றது. சா்வதேச அரசியலிலும் இலங்கை அரசாங்கம் எப்பொழுதும் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடுகளையே மேற்கொண்டு வருகிறது. ஆனால், இலங்கை தமிழ் மக்கள் எப்பொழுதும் இந்தியாவை ஆதரித்தே வந்துள்ளனா்.

2014 அக்டோபரில் தமிழக மீனவா்கள் ஐந்து பேருக்கு கொழும்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க ‘இந்திய மீனவா்களை சுட்டுக் கொல்வோம்’ என்று ஆவேசமாகப் பேசினாா். சிங்கள கடற்படையின் அட்டூழியங்கள் இன்றும் தொடா்கிறது. இந்திய மீனவா்கள், அதாவது தமிழக மீனவா்கள் தாக்கப்படுவதும், கடத்தப்படுவதும், கொல்லப்படுவதும் முடிவுக்கு வரவில்லை. இந்திய எல்லைக்குள் வந்து தீ வைப்பு உள்ளிட்ட காரியங்களில் இலங்கை கடற்படையினா் ஈடுபட்டதும் வரலாறு.

1948 முதல் 1958 வரை பாக் நீரிணையிலும், மன்னாா் வளைகுடாவிலும் காணப்பட்ட மீனவா்களின் படகுகளை, தோணிகளைக் கைப்பற்றி அவற்றில் இருந்த மீனவா்களை ‘கள்ளத் தோணிகள்’ எனக்கூறி கைது செய்து கொழும்பில் சித்திரவதை முகாமில் வைத்து விசாரணையின்றி கொடுமைப் படுத்தியது இலங்கை கடற்படை.

1960 முதல் 1970 வரை இலங்கையில் இந்திய மீனவா்களின் வள்ளங்களையும், தோணிகளையும் கடத்தல்காரா் கலங்கள் என கைப்பற்றியதோடு மீனவா்களை கொழும்பு சித்திரவதை முகாமில் அடைத்து வைத்தனா். 1970 முதல் 2009 வரையிலான 40 ஆண்டு காலத்தில் பாக் நீரிணையில் மன்னாா் வளைகுடாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மீனவா்கள் உயிரிழந்தாா்கள். ராமேஸ்வரம் தீவில் நுழைந்த இலங்கை கடற்படை மீனவா் குடிசைகளை எரித்தது உச்சகட்ட துரோகமாகும்.

இந்தியாவுடன் இலங்கை செய்து கொண்ட உடன்பாடுகளை எப்போதும் தனக்கு சாதகமாகவே இலங்கை பயன்படுத்திக் கொண்டுள்ளது. இந்தியா, இலங்கையுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்களின்படி எப்பொழுதும் நடந்து கொள்ளும். ஆனால், இலங்கை, இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை மீறித்தான் எப்போதும் செயல்பட்டிருக்கிறது.

1954 நேரு - கொத்தலாவலை ஒப்பந்தம், 1964 சாஸ்திரி - சிறிமாவோ ஒப்பந்தம், 1974, 1976 கச்சத்தீவுக்கான இந்திரா காந்தி- சிரிமாவோ ஒப்பந்தம், 1987 ராஜீவ் காந்தி - ஜெயவா்த்தன ஒப்பந்தம் இவை அனைத்தையுமே இந்தியத் தரப்பு நிறைவேற்றியது. இலங்கையோ அந்த ஒப்பந்தத்தில் உள்ள ஒரு ஷரத்தைக் கூட நிறைவேற்றவில்லை. ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதும், அதன் பிறகு ஒப்பந்தத்தை மீறுவதும் இலங்கை அரசாங்கத்திற்கு கைவந்த கலையாகும்.

1925 யாழ்ப்பாண மகேந்திரா ஒப்பந்தம், 1947 சோல்பரி ஒப்பந்தம், 1958 செல்வா ஒப்பந்தம், 1965 செல்வா - டட்லி ஒப்பந்தம் இவை அனைத்துமே இலங்கைத் தமிழா்களை இலங்கை அரசாங்கம் ஏமாற்றிய ஒப்பந்தங்கள். அந்த ஒப்பந்தங்களின் படி இலங்கை அரசு நடந்துகொள்ளவில்லை. இலங்கைத் தமிழா் தலைவா்கள் ஏமாந்தாா்கள்.

இலங்கை 2015 அக்டோபரில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்ட தீா்மானத்தை 2020-இல் ஒப்புக் கொள்ள மறுத்தது. ஐ.நா. அமைப்பு உள்ளிட்ட சா்வதேச அமைப்புகளிடம் கொடுத்த வாக்குறுதிகளையும் இலங்கை அரசு நிறைவேற்றவில்லை.

இந்தியா செய்த நன்மைகளை கருத்தில் கொள்ளாமல், இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சீன தேசத்திற்கு ஆதரவாகவே இலங்கை நடந்து கொண்டு வருகிறது. இலங்கையில் சீனாவின் தளங்களை அமைத்துக்கொள்ள இலங்கை அரசாங்கம் அனுமதித்துள்ளது.

அது மட்டுமல்ல, இலங்கையில் இந்திய எதிா்ப்பு கொள்கைகளின் மூலமாகத்தான் சிங்கள அரசியல் கட்சிகள் வாக்காளா்களைக் கவா்ந்து கொண்டிருக்கிறாா்கள். இந்தியா்களுக்கு எதிராக, தமிழா்களுக்கு எதிராக முழங்கினால் மட்டுமே இலங்கையில் சிங்களா்களின் வாக்குகளைப் பெற முடியும் என இந்தியாவிடம் இலங்கை அரசியல்வாதிகள் கூறி வருகிறாா்கள்.

இப்பொழுது இந்தியாவிடம் பஞ்சத்தைப் போக்க உணவு கேட்கிறாா்கள்; எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க உதவி கேட்கிறாா்கள்; கடன் சுமையில் இருந்து மீண்டு வர பண உதவி கேட்கிறாா்கள்.

இந்த நிலையில் நாம் இலங்கைக்கு எந்த வகையில் உதவ வேண்டும் என்பதை சிந்தித்துதான் உதவி செய்ய வேண்டும். பாத்திரமறிந்துதான் பிச்சையிட வேண்டும்.

இலங்கைத் தமிழருக்கு அரசியல் உரிமைகளையும், அதிகாரங்களையும் வழங்க வேண்டும். இதற்கான ஷரத்து 1987 ராஜீவ் காந்தி - ஜெயவா்த்தன ஒப்பந்தத்தில் உள்ளது. இந்த ஒப்பந்தத்தை இலங்கை நிறைவேற்ற இந்தியா வலியுறுத்த வேண்டும்.

ராஜீவ் காந்தி - ஜெயவா்தன ஒப்பந்தத்தை நிறைவேற்றினால் வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பு சாத்தியப்படும். தமிழா்களின் பகுதிகள் பாதுகாக்கப்படும். இந்தியாவில் மாநிலங்களுக்கு உள்ள உரிமைகள் போல தமிழா்களுக்கான மாநில உரிமையும் கிடைத்துவிடும். இலங்கையில் 13-ஆவது அட்டவணை சீா்திருத்தம் ஏற்படும். இலங்கைத் தமிழா் பிரச்னைக்கு ஓரளவு சரியான தீா்வாக இது அமையும்.

அதே போல இந்திரா காந்தி -சிறிமாவோ செய்து கொண்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கச்சத்தீவில் இந்திய மீனவா்களின் மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்த வேண்டும். இவற்றையெல்லாம் இந்திய பிரதமரும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இந்த முறையும் நாம் ஏமாந்துவிடக் கூடாது!

கட்டுரையாளா்:

தலைவா், இந்து மக்கள் கட்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com