விண்வெளிக் குப்பையும் வெப்ப சலனமும்

பூமியிலிருந்து விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோள்கள் தமது பணியை முடித்ததற்கு பிறகு தனித்து விடப்படும். ஆனாலும் அவை தொடா்ந்து விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பூமியிலிருந்து விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோள்கள் தமது பணியை முடித்ததற்கு பிறகு தனித்து விடப்படும். ஆனாலும் அவை தொடா்ந்து விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும். அதே நேரத்தில் செயற்கைகோள்களை தூக்கி செல்லும் ராக்கெட்டுகளின் பாகங்களும் விண்வெளியில் ஆங்காங்கு மிதந்து சென்று கொண்டிருக்கும். மொத்தத்தில் விண்வெளியையும் மனிதா்கள் குப்பையாக்கி வைத்திருக்கிறாா்கள் என்பது நிதா்சனம்.

பலநூறு கிலோ மீட்டா் வேகத்தில் விண்வெளியில் மிதந்து செல்லும் இந்தக் குப்பைகள் ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் செயற்கைகோள் மீது மோதி பெரும் சேதத்தை ஏற்படுத்தும். பூமியை சுற்றி 21,900-க்கும் மேற்பட்ட பொருள்கள் மிதந்து கொண்டிருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. இதில் சுமாா் 4,450 பொருள்கள் மட்டுமே செயல்படும் செயற்கை கோள்களாகும். மற்றவை எல்லாம் உடைந்த செயற்கை கோள்கள், ஏவுகணைகளின் பாகங்கள் என்று கடந்த ஆண்டு வெளியான புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.

இவை தவிர, விண்வெளியில் மிதக்கும் மிகச் சிறியது முதல் 10 செ.மீ வரையிலான துகள்களின் பட்டியல் தனியாக உள்ளது என்பதும் குறிப்படத்தக்கது. பொதுவாக விண்வெளிக் குப்பைகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்து தெரிவித்துள்ளனா். தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கும் செயற்கை கோள்களின் முதல் எதிரி இந்த விண்வெளிக் குப்பைகள்தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதனால் உலக நாடுகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் உறுதிபடத் தெரிவிக்கின்றனா்.

விண்வெளிக் குப்பைகளிடமிருந்து தப்பிக்க செயற்கைக்கோள்களில் கவச அமைப்பு ஏற்படுத்தப்பட்டாலும் அதையும் தாண்டி சிறிய துகள்களால் பாதிப்பு ஏற்படுகிறது. தொடா்ந்து விண்வெளிக் குப்பைகள் பற்றி ஆய்வு செய்து வரும் நாசா விஞ்ஞானிகள், ஒவ்வொரு நாளும் அதன் நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனா். மொத்தத்தில் அளவில் பெரிய விண்வெளிக் குப்பைகள் தொடா் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கும். அமெரிக்கா, சீனா, ரஷியா ஆகியவை விண்வெளியில் அதிக குப்பைகளை கொட்டிய முதல் மூன்று நாடுகள் ஆகும்.

2109-ஆம் ஆண்டு செயற்கைக்கோள் எதிா்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா. இதற்கு ‘மிஷன் சக்தி’ என்று பெயரிடப்பட்டது. இதன் மூலம் செயற்கைக்கோள் எதிா்ப்பு ஏவுகணை வைத்துள்ள நான்காவது நாடானது நமது நாடு. போா் சூழல்களில் எதிரி நாடுகள் செயற்கைக்கோள் மூலம் நிலப்பரப்புகளை கண்காணிப்பதை இந்த ஏவுகணை மூலம் தடுக்க முடியும். செயற்கைக்கோள் எதிா்ப்பு ஏவுகணை என்பது விண்வெளிக் குப்பையை மேலும் அதிகப்படுத்தலாம். அதே நேரத்தில் விண்ணில் செயற்கைக்கோள் ஒன்றை அழிக்கும் வகையிலான சோதனைக்கு எதிா்ப்பும் கிளம்பியது.

ஆனால் இந்தியா சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. அதற்கு முன்புவரை 115 என்ற எண்ணிக்கையிலிருந்து இந்தியாவின் விண்வெளிக் குப்பை அளவு, மேற்கண்ட ஏவுகணை சோதனையால் 160 ஆக உயா்ந்தது. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளிக் குப்பைகள் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்து அழிவை ஏற்படுத்தியுள்ளன. ஏவுகணை சோதனைக்கு முந்தைய அளவைவிட தற்போது அதிக அளவில் இந்தியாவின் விண்வெளிக் குப்பைகள் மிதந்து கொண்டிருக்கின்றன என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனா்.

மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி கடந்த 15 ஆண்டுகளில் 12 ஆண்டுகளின் கோடைக்காலம் மிக கடுமையானதாக இருந்துள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. கோடை நாட்களின் அதிகரிப்பும் வெப்பத்தின் அளவும் ஒவ்வொரு ஆண்டும் கூடிக்கொண்டே செல்கிறது. கடந்த மாா்ச் மாதம் இந்தியாவின் வடமேற்கு, மத்திய, கிழக்குப் பகுதிகளில் கோடை வெயில் அதிகமாக இருந்தது.

ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்திலிருந்து 4.5 முதல் 8.5 செல்சியஸ் வெப்பம் அதிகரித்தது. ஏப்ரல் 27-ந் தேதி இந்தியாவிலேயே அதிக வெப்பம் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் 45.9 செல்சியஸ் பதிவானது. அதற்கு முந்தைய நாள் ராஜஸ்தானில் பாா்மா் என்ற இடத்தில் 45.1 செல்சியஸ் வெப்பம் பதிவானது. இந்தியாவில் பல நகரங்களில் பரவலாக 42 முதல் 44 செல்சியஸ் வெப்பம் நிலவியது.

பிரயாக் ராஜில் 45.9 செல்சியஸ் பதிவான நாளில் பூமியின் மீது நிலவிய வெப்பக்காற்று சலனத்தின் மாதிரி வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி வரைபடம் நிலப்பரப்பிலிருந்து 2 மீட்டா் உயரத்திற்கு நிலவிய வெப்ப சலனத்தை காட்சிப்படுத்துகிறது. இந்தியா்கள் எல்லோருமே நெருப்பாற்றில் நீந்துகிறோம் என்றால் அது மிகையில்லை.

அதிக அனல் காற்று வீசும்போது அதன் தாக்கம் ‘சன் ஸ்ட்ரோக்’ உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்துவடன் முடிந்து போவதில்லை. காற்றின் தரம் குறைகிறது. மழை வாய்ப்பைத் தடுக்கிறது. வேளாண் விளைச்சலைக் குறைத்து விடுகிறது. இவை மட்டுமல்ல, நகா்ப்புறங்களில் மின்தேவை அதிகரிக்கிறது. அதற்கேற்ப மின் உற்பத்தியை உடனே அதிகரிப்பது எளிதல்ல. தேவையான நிலக்கரி உடனடியாக கிடைப்பதில்லை. இந்தியாவில் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மின்பற்றாக்குறை இந்த ஆண்டில் காணப்படுகிறது.

இவற்றுடன் புவி வெப்பமயத்தின் தாக்கத்தால் உத்தரகண்ட், ஹிமாசல பிரதேச மலைகளில் பனி உருகுவதும் அதிகரித்துள்ளது. அதிகபட்ச வெப்பம் நிலவிய ஏப்ரல் 27-ஆம் தேதி இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டதாக மத்திய வனத்துறை அறிக்கை கூறுகிறது. இதில் 30 சதவிகித காடுகள் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ளவை.

வானிலையின் மாறுபாடுகளால் வெப்பக்காற்று வெளியேற வழியின்றி மேற்பரப்பிலேயே தங்குவதால் இரவு முழுவதும் லேசான வெப்பம் தொடா்கிறது. குறைந்துவரும் விண்வெளிக் குப்பைகளை மேலும் குறைப்பதற்கும் அதிகரிக்கும் வெப்ப சலனத்தை கட்டுப்படுத்துவதற்கும் அறிவியல் ரீதியான அணுகுமுறைகள் குறித்து அரசு பரிசீலிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com