யாரைத்தான் நம்புவதோ?

பணத்தின் மீது ஆசை கொள்வது மனித இயல்பாகி விட்டது. எனவே அந்தப் பணத்தைச் சம்பாதிக்க வேண்டியது மனிதனின் முக்கியக் கடமையாகி விட்டது.      
யாரைத்தான் நம்புவதோ?

நாள்தோறும் நாளேடுகளில் கொலை, கொள்ளை பற்றிய செய்திகள் தவறாமல் இடம் பெறுவது ஒன்றும் புதிதல்ல. இருந்தாலும், அண்மையில் வந்த இரு செய்திகள் படிப்போரின் நெஞ்சைப் பிளப்பனவாக இருந்தன. முதலாவது, சென்னை மைலாப்பூர் தொழிலதிபர் மனைவியுடன் கொலை செய்யப்பட்ட செய்தி; இரண்டாவது, மதுரையில் வளர்ப்புத் தந்தை கொலை செய்யப்பட்ட செய்தி. 

இரண்டுமே  நெருங்கிப் பழகியவர்களால் விளைந்த  கொலைகள். மைலாப்பூர் கொலை, வீட்டிலே பணிபுரிந்து, பலகாலம் பழகிய பணியாளரால் செய்யப்பட்டது. மதுரையில் நடந்த கொலையோ வளர்ப்பு மகளால் நடத்தப் பட்டது. பழகியவரும் வளர்த்தவரும்  செய்த இந்தப் படுபாதகங்களை நினைக்கும்போது, யாரைத்தான் நம்புவதோ இப்பாழும் உலகில் என்று மனம் பதறுகிறது. 

இரண்டு கொலைகளுக்கும் காரணம் பணம். உடனடியாகப் பணம் சேர்க்க வேண்டும் என்ற பேராசைதான் இந்தக் கொலைகளைச் செய்யத் தூண்டியுள்ளது. கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு கொலைசெய்வது என்பது ஒன்றும் புதிதில்லை. ஆனால், நீண்ட காலமாக உடன் பழகியவர்கள் அந்த நோக்கத்தோடு கொலைசெய்ததுதான் வேதனையை உண்டாக்கி, நம்பகத்தன்மையில் ஒரு இடைவெளியை உருவாக்கி உள்ளது. எல்லார் மனத்திலும், வீட்டு வேலையாளரிடமும் சொந்த உறவினர்களிடமும் ஒரு சந்தேகப் பார்வையை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த இரு கொலைகளும் பணம் என்னும் பேய் இந்தச் சமூகத்தை எப்படி ஆட்டிப் படைக்கிறது என்பதையும், பழக்கமும் பாசமும் வெறும் வேஷம் ஆகிவிட்டன என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறன. 

பசியைப் போக்க உணவு வேண்டும், மானம் காக்க உடை வேண்டும், உழைத்த களைப்பு நீங்க ஓய்வெடுக்க ஓர் இடம் வேண்டும். இவையெல்லாம் மனிதர்களின் இன்றியமையாத் தேவைகள். இவற்றைப் பெறுவதற்கு நிச்சயமாகப் பணம் தேவையாகிறது. காலத்தின் வளர்ச்சிக்கேற்ப தற்போது இன்னும் பல வசதிகள் மனிதனுக்கு அவசியத் தேவைகளாகி விட்டன. கல்வி பெறுவதற்கு பணம் வேண்டும். கடவுளை வழிபடவும் பணம் வேண்டும். தொழில் தொடங்க பணம் வேண்டும். ஒரு வாகனம் வாங்கிட பணம் வேண்டும். ஒரே இடத்தில் அடைந்து கிடக்காமல் ஊர் சுற்றிப் பார்க்க பணம் வேண்டும். 

இப்படி, பணம் இருந்தால்தான் இவ்வுலகில் வாழ முடியும் என்றொரு நிலை உருவாகி விட்டது. அதனால்  பணத்தின் மீது ஆசை கொள்வது மனித இயல்பாகி விட்டது. எனவே அந்தப் பணத்தைச் சம்பாதிக்க வேண்டியது மனிதனின் முக்கியக் கடமையாகி விட்டது.      

பணத்தின் மீது ஆசை கொள்வதில் தவறில்லை. அதைச் சேர்க்க வேண்டும் என்று நினைப்பதிலும் ஆட்சேபணையில்லை. அந்தப் பணம் சம்பாதிக்க வேண்டுமெனில் உழைக்க வேண்டும். இதனால்தான் "உத்தியோகம் புருஷ லட்சணம்' என்று நம் முன்னோர் குறிப்பிட்டனர். ஆனால், இப்போது உழைக்காமலே பணம் சேர்க்க வேண்டும் என்று பலர் விரும்புகின்றனர். இன்னும் சிலர் உடனடியாகப் பெரும்பணம் சேர்க்க வேண்டும் என நினைக்கின்றனர். அதற்குக் குறுக்கு வழியை நாடுகின்றனர். அது கொலை, கொள்ளையில் கொண்டு விடுகிறது. மேற்கூறிய இரண்டு சம்பவங்களும் இப்படித்தான் நடைபெற்றுள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது. 

மைலாப்பூர் கொலையில் குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர், தன் மகனை நன்கு படிக்கவைக்க வேண்டும் என்று விரும்பியதாகச் சொல்கிறார். மதுரைப் பெண்ணோ  உடனடியாக சொத்தைப் பெற வேண்டும் என்று விரும்பியதாகத் தெரிகிறது. இருவரின் ஆசையும் நியாயமானது என்று கொண்டாலும், அவர்களின் செயல் வள்ளுவரின் பார்வையில் "சான்றோர் பழிக்கும் வினை'யாகிப் போகிறது. 

அதனினும் அவர்கள் மேற்கொண்ட வழிமுறை மிக மோசமானது. வழி எதுவாக இருந்தாலும் பொருள் சேர்ப்பதே முக்கியம் என்ற அவர்களின் மனநிலையை அது காட்டுகிறது. இப்படி இருக்கக் கூடாது என்பதை உணர்ந்துதான் காந்தியடிகள், "நோக்கம் நல்லதாக இருந்தால் மட்டும் போதாது; அதனை அடையும் வழிமுறையும் நேரியதாக  இருக்க வேண்டும்' என்று குறிப்பிட்டார்.  

வளர்ந்து வரும் சமூகச் சூழலில் வேலைக்கு ஆட்கள் நியமிப்பதும், குழந்தைப் பாசத்திற்காகத் தத்து எடுப்பதும் நடைமுறை ஆகிவிட்டது. இவ்விரண்டிலும் விசுவாசம் என்பது சிறிதும் இல்லாமலாகிவிட்ட அவலமான ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்வதை இந்நிகழ்வுகள் காட்டுகின்றன என்பதும் எண்ணிப்பார்க்கத் தக்கது. முன்பெல்லாம், "உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்றொரு பண்பாடு நிலவியிருந்தது. இன்று அது உச்சி  மலையேறிவிட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. 

மைலாப்பூர் சம்பவத்தில் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்படுபவர், "எனக்குச் சம்பளம் மட்டும்தான் தருவார். வேறு எந்த உதவியும் செய்ய மாட்டார்' என்று கூறுகிறார். கொலையுண்டவரின் மகனோ, "என் தந்தை அவரை மகனைப்போல காத்து வந்தார்' என்று கூறுகிறார். இந்தக் கூற்றுக்களிலிருந்து சில  உண்மைகளைத் தெரிந்துகொள்ள முடிகிறது. பிழைப்புக்குக் கூலி தருகிறாரே என்ற பெருந்தன்மை அவருக்கில்லை. ஏதோ ஒரு பயன் கருதித்தான் அவர் பணியாற்றியிருக்கிறார் என்பது ஒரு உண்மை.  

அவருடைய குணத்தைப் புரிந்துகொள்ளாமல் அவருக்கு முதலாளி உதவி செய்திருக்கிறார் என்பது இன்னொரு உண்மை.  "ஒருவனுடைய தகுதி தெரியாமல் அவனுக்கு உதவி புரிவது குற்றம்' என்ற குறளின் கூற்று அவருக்குப் புரியாமல் போனதுதான் வேதனை. இந்த வேதனை மூலம் ஒரு முடிவுக்கு நாம் வரவேண்டியுள்ளது. வேலைக்கும், வளர்ப்புக்கும் தேவைப்படுவோரை  ஆய்ந்து, தெளிந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே அந்த முடிவாகும். யாரைத்தான் நம்புவதோ? 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com