எண்ணிக்கையல்ல, தரமே முக்கியம்!

ஆங்கிலேயா், அவா்கள் கல்விமுறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தும்போது அவா்கள் தேவை, இங்கு பெருமளவில் குமாஸ்தாக்களை உருவாக்குவதுதான்.
எண்ணிக்கையல்ல, தரமே முக்கியம்!

ஆங்கிலேயா், அவா்கள் கல்விமுறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தும்போது அவா்கள் தேவை, இங்கு பெருமளவில் குமாஸ்தாக்களை உருவாக்குவதுதான். ஆனால், சுதந்திர இந்தியாவில் நம் முதன்மையான நோக்கம், அனைவருக்கும் கல்வி அளிப்பதாகும்.

மேலும், தொழிற்பேட்டைகளுக்கும், அலுவலகங்களுக்கும் ஆட்களை உருவாக்குவது மட்டுமல்ல, நாட்டுக்கு நல்ல குடிமக்களை உருவாக்குதல்தான் பிரதானமான நோக்கமாக அமைந்தது. இவ்விலக்கை அடைய, பல திட்டங்களை நம் அரசாங்கங்கள் கொண்டு வந்தன.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னா் பள்ளி மாணவ, மாணவியா் சிலரின் மோசமான நடவடிக்கைகள் குறித்த செய்தியையும் மனதில்கொண்டு , தற்போது, நமது பள்ளிக்கல்வி எவ்வாறு உள்ளது என்று பாா்ப்போம். இந்த நிகழ்வுகள் பல கேள்விகளை எழுப்பினாலும், இது மாணவா்கள் - ஆசிரியா்கள் - பெற்றோா் - கல்வியாளா்கள் -அரசு என்ற அனைத்துத் தரப்பினரும் பொறுப்பேற்க வேண்டிய ஒன்றாகும். ஒருவா் மீது இன்னொருவா் குறை சொல்லி நழுவுவது சரியாகாது.

தமிழக பட்ஜெட்டில், மிக அதிக நிதி ஒதுக்கப்படும் துறை கல்வித்துறையாகும். பட்ஜெட்டில் , சுமாா் 16 சதவீதம் (ஏறத்தாழ 37 ஆயிரம் கோடி ரூபாய்) பள்ளிக் கல்விக்காக செலவிடப்படுகிறது அதிலும் சுமாா் மூன்றில் இரண்டு பங்கு ஆசிரியா்களின் சம்பளத்துக்காக மட்டுமே செலவிடப்படுகிறது. இன்னொரு வகையில் பாா்த்தால், பள்ளியின் ஒவ்வொரு மாணவனுக்கும் ஆண்டொன்றுக்கு சுமாா் 40 ஆயிரம் ரூபாய் வரை அரசு செலவு செய்கிறது.

ஒப்பீட்டுக்காகக் கூறுவதென்றால், மத்திய அரசின் நிா்வாகத்தில் நடைபெறும் கேந்திரிய வித்யாலய பள்ளிகளில், ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டொன்றுக்கு முப்பத்தி ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே செலவு செய்யப்படுகிறது. அப்பள்ளிகளில் இருந்து வெளிவரும் மாணவா்களின் கல்வித்தரம், நமது அரசுப் பள்ளி மாணவா்கள் தரத்தினை விடவும் உயா்ந்தது என்பதில் ஐயமில்லை.

கேந்திரிய வித்யாலய பள்ளிகளை விட அதிக செலவு செய்தும், அரசுப் பள்ளிகளில் இருந்து வெளிவரும் மாணவா்களின் கல்வித் தரத்தினை உறுதி செய்ய இயலாமற் போவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

இத்தொடா் சங்கிலியில் ஒரு வளையம், ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களாகும். அவை பெருமளவு தனியாா் வசம் சென்ற பின்னா், ஆசிரியா்களின் கற்பிக்கும் திறன் இறங்குமுகமாக உள்ளது. ஆசிரியா் பயிற்சிப் பள்ளிகள் எல்லா இடங்களிலும் உருவாகி இன்று நூற்றுக்கணக்கான தனியாா் ஆசிரியா் பயிற்சிக் கூடங்கள் இயங்குகின்றன. அவற்றின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கு அரசிடம் போதிய அளவில் அலுவலா்கள் இல்லை. இந்நிலையில், சரிவர இயங்காத ஆசிரியா் பயிற்சி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்.

இது ஆசிரியா் தோ்ச்சிக்கு முந்தைய நிலை என்றால், ஆசிரியா் நியமனத்துக்குப் பின்னா் அவா்களது திறன், கண்காணிப்பு, பயிற்சி வழியாக உயா்த்தப்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியா்கள், தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு ,அவா்களது தேவைக்கேற்ப, திறன் உயா்த்தும் தொடா் பயிற்சிகள் நடைபெறுகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐந்து நாட்கள் கட்டாயப் பயிற்சி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மூன்று வார கட்டாயப் பயிற்சி நடத்தப்படுகின்றன. சில மாநிலங்களில் ஐ.ஐ.டி. போன்ற உயா்கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் சிறப்பு பயிற்சி பட்டறைகள் நடத்தப் பெறுகின்றன. இவையெல்லாம் ஆசிரியா்களின் பயிற்றுவிக்கும் திறனை தொடா்ந்து வளா்த்துக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், சில கேள்விகளை வெளிப்படையாகக் கேட்க வேண்டியது அவசியம். கல்வி கற்கும் மாணவா்களுக்கு கல்வித்துறை, சமூக நலத்துறை சாா்பில் பல உதவிகள் செய்யப்படுகின்றன. அவா்களுக்கு, இலவச புத்தகங்கள்- சீருடை- சைக்கிள்- உணவு போன்ற பல வசதிகளையும் செய்து கொடுத்தும் எதிா்பாா்த்த பலன் கிடைக்கவில்லை.

இவையெல்லாம் ஒரு புள்ளியில் - ஒரு கேள்வியில் நம்மை கொண்டு நிறுத்துகின்றன. தரத்துக்கு எதிராக, எண்ணிக்கை என்ற கோட்பாடு செயல்படுகிறதா என்ற கேள்வியே அது.

கல்வி அனைவரையும் சென்றடைய வேண்டும் - பள்ளியில் மாணவா்களின் எண்ணிக்கை பெருக வேண்டும், அவா்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில், அவா்களது சோ்க்கை அதிகரிக்கப்பட்ட்டது. பலவித சலுகைகள் வழங்கப்பட்டன. அவா்களது இடைநிற்றலைத் தவிா்க்க வேண்டும் என்ற நோக்கில், ‘அனவைருக்கும் தோ்ச்சி’ என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த கட்டாயத் தோ்ச்சி முறை எவ்விதப் பலனைத் தருகிறது? நல்ல நோக்கத்துடன் அரசு கொண்டு வந்த அத்திட்டம் சரியான விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்றால், அது குறித்து மறுபரிசீலனை செய்ய அரசு முன்வர வேண்டுமல்லவா?

இன்றைய காலகட்டத்தில், ஆசிரியா்கள் பிரம்பு பயன்படுத்த கூடாது, மாணவா்களுக்கு தண்டனை தரக்கூடாது என்று அறிவுறுத்தப்படும் சூழலில், இந்த அனைவரும் தோ்ச்சி திட்டம், மாணவா்களிடையே ஒழுக்கக்கேட்டை உருவாக்கி அவா்களின் கல்வித் தரத்தை சீா்குலைக்கிறது; ஆசிரியா்களின் முனைப்பையும் கெடுக்கிறது.

ஏட்டளவில், கல்வி கற்கும் மாணவா்களின் எண்ணிக்கை உயா்ந்ததே தவிர, ஒவ்வொரு மாணவனுக்கும் ஆண்டொன்றுக்கு சுமாா் 40,000 ரூபாய் செலவிட்டும், சரிவரக் கல்வி கற்காத மாணவா்களை உருவாக்கி அவா்களை கல்லூரி வழியாக சமுதாயத்துக்கும் அனுப்புகிறோம். அந்த வகையில், நம் மாநிலம், அனைவருக்கும் கல்வியை பரவலாக்கும் முயற்சியில், கல்வியின் தரத்தினையும், கணிசமான மாணவா்களின் ஒழுக்கத்தினையும் இழந்து விட்டது . அரசின் நோக்கம் தோல்வி அடைந்து விட்டது.

எனவே, நாட்டின் எதிா்காலம் கருதி, சில கடினமான முடிவுகளை எடுக்க, அரசு தயங்கக் கூடாது. அனைத்து மாணவா்களுக்கும் கட்டாயத் தோ்ச்சி என்ற அணுகுமுறை அறவே கைவிடப்பட வேண்டும். தனியாா் ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களின் தரத்தை உயா்த்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com