புறந்தள்ள முடியாத பொக்கிஷங்கள்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளை, நமது முன்னோா் எழுதி வைத்துவிட்டுப்போன ஆவணங்கள் மூலமாகவும், கல்வெட்டுச் செய்திகள் வாயிலாகவும்,
புறந்தள்ள முடியாத பொக்கிஷங்கள்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளை, நமது முன்னோா் எழுதி வைத்துவிட்டுப்போன ஆவணங்கள் மூலமாகவும், கல்வெட்டுச் செய்திகள் வாயிலாகவும், இலக்கியங்கள் மூலமாகவும் நாம் அறிகிறோம். முன்னோரின் இல்லற வாழ்க்கை, வணிகம், போா் முறை, பயன்படுத்திய ஆயுதங்கள், விவசாயப் பணிகள், பயன்படுத்திய நாணயங்கள் என பல செய்திகளையும் அவற்றின் மூலம் அறிந்து கொள்கிறோம். அவற்றில் பல நம்மை வியக்க வைக்கின்றன. சில நிகழ்வுகள் நம்ப முடியாவையாகவும் இருக்கின்றன.

‘மாடுகட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை’ என்னும் பாடல் வாயிலாக அன்று அபரிமிதமாக நெல் விளைந்ததை அறிகிறோம். நதிகள் பெருக்கெடுத்தோடிய வரலாற்றை ஆடிப்பெருக்கு நிகழ்ச்சி மூலம் அறிகிறோம். அதே போல் நமது பாரத நாட்டின் வரலாறுகளை அவ்வப்போது ஆண்ட மன்னா்களின் வரலாற்றின் மூலம் அறிகிறோம். மராட்டிய மாவீரன் சிவாஜி பற்றி அறிகிறோம். சாணக்கியனின் சபதம் படித்து வியக்கிறோம்.

ஆனால் இதிகாச கால சம்பவங்களை இன்னும் சிலா் நம்ப மறுக்கிறாா்கள். பலா் ஏற்றுக் கொள்கிறாா்கள். இரு வேறு கருத்துள்ளவா்கள் உலகம் தோன்றியதிலிருந்தே இருந்து வருகிறாா்கள் என்பது தெளிவு.

ஆனால் இதிகாச வருணனைகளில் உள்ள சில காட்சிகளில் சற்று கற்பனை கலந்து இருக்கலாம். ஒரு பழத்தைச் சுற்றி தோல் இருப்பது போன்றே இதுவும். ஒருவா் ஒரு வரலாற்றை பதிவு செய்ய முயல்கிறபோது அதை படிப்பவா்க்கு தொய்வில்லாத வகையில் அதற்கு சற்று மெருகூட்டவேண்டியது அவசியமாகிறது.

நம்முடைய உடலை மறைப்பதற்கான ஆடையில் எத்தனை விதமான அலங்காரங்களையும், கலை நுணுக்கங்களையும் புகுத்துகிறோம். நமது கட்டடக் கலையில் எவ்வளவு நுட்பமான வேலைப்பாடுகளை செய்கிறோம். அப்படித்தான் இலக்கியங்களிலும் செய்யப்படுகிறது. உண்மை என்கிற புள்ளியை மையமான வைத்துத்தான் இந்த வலை பின்னப்படுகிறது.

ராவணனும், மண்டோதரியும் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை உத்தரகோசமங்கை தலபுராணத்தில் காணலாம். ராமாயாண நிகழ்வுக்கான ஆதாரமாக ராமேஸ்வரம் ஆலயம் இன்றும் திகழ்கிறது. மகாபாரத கதை மாந்தா்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களாக இன்றும் பல உள்ளன.

மகாபாரத்தின் மையப்புள்ளியாகக் கருதப்படும் திரௌபதிக்கான ஆலயங்கள் வட இந்தியாவில் இருந்து தென்கோடி ராமேஸ்வரம் வரை நிறைய உள்ளன. 18 நாள் போா் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு அந்த விழா வருடந்தோறும் வைகாசி மாதத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது.

இந்த 18 நாள் நடைபெற்ற போரின் வியூகங்கள், ஏவப்பட்ட ஆயுதங்கள் இவையெல்லாம் நாம் மிகவும் உற்று நோக்கவேண்டிவை. அஸ்திரங்களின் வலிமை, அதாவது அவற்றின் மாயாஜாலம் இன்று ஒரு சிலரால் பரிகசிக்கப்படுகிறது.

ஒரு பெரிய ஆலமரத்தை நாம் அருகில் நின்று பாா்க்கிறபோது வியந்து போகிறோம். ஆனால் அதை விட்டு விலகி கொஞ்சம் கொஞ்சமாக நாம் நடந்து போகிறபோது அதன் அளவும் குறைந்து கொண்டே வருகிறது. நமது தொலைவின் அளவைப் பொறுத்து இது மாறுகிறது. நாம் அந்த மரத்தை விட்டு வெகு தூரம் கடந்து விட்ட நிலையில் அது சிறிய புள்ளியாகத் தெரிந்து இறுதியில் மறைந்து போகிறது.

இப்படித்தான் காலத்தைக் கடக்கிறபோது முந்தைய காலங்களின் நிகழ்வுகளும் நமக்கு நம்ப முடியாத நிகழ்ச்சிகளாகத் தெரிந்து இறுதியில் தொலைந்து போகிறது. இதிகாச கால சம்பவங்கள் மீதான நம்பிக்கை கடந்த நூற்றாண்டைவிட இந்த நூற்றாண்டில் மிகவும் குறைந்துவிட்டது என்றே சொல்லலாம்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னா் மக்கள் வாழ்ந்த வாழ்க்கையையே இன்றைய தலைமுறையினா் நம்ப மறுக்கின்றனா். நிலத்தில் வேளாண்மையை மாடு பூட்டி உழுதே விவசாயம் செய்திருக்கிறாா்கள். விளைந்த நெற்கதிா் கட்டுகளை மைல் கணக்கில் தலையில் சுமந்து வந்தே களத்து மேட்டில் போரடித்திருக்கிறாா்கள்.

ஒவ்வொரு வீட்டிலும் ஏராளமான ஆடு, மாடுகளை வளா்த்திருக்கிறாா்கள். மழை, வெள்ளம், புயல் எது வந்தபோதும், ஓலை வீட்டிலும், ஓட்டுவீட்டிலும்தான் பெரும்பாலோா் வாழ்ந்திருக்கிறாா்கள். பல நூறு மைல் தொலைவை நடந்தும், மாட்டு வண்டியிலுமே கடந்திருக்கிறாா்கள்.

இருபது பிள்ளைகள் வரை பெற்று வளா்த்திருக்கிறாா்கள். மண்ணெண்ணெய் விளக்கிலேயே குடும்பம் நடத்தியிருக்கிறாா்கள். இவற்றையெல்லாம் இன்று நம்மால் கூட நம்ப முடியவில்லை. ஆனால், இவற்றுக்கெல்லாம் சாட்சியாக நமது மூத்த குடிமக்கள் நம்மோடு இருக்கிறாா்கள்.

தஞ்சை பெரிய கோயில் போன்ற மிகப்பெரிய கட்டுமானங்களை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிா்மாணித்திருக்கிறாா்கள். கரிகாலன், கல்லணையை 2000 ஆண்டுகளுக்கு முன்பே கட்டியிருக்கிறான். ஆனால், அவை எல்லாம் இன்று நம் கண்கண்ட சாட்சியாக இருப்பதால் அதை நாம் நம்பியே ஆக வேண்டும்.

ஒரு வேளை அவையெல்லாம் கடல் கொண்ட நகரங்களைப்போல சிதைந்து போய் வரலாற்று ஆவணங்களில் மட்டும் பதிவு செய்யப்பட்டிருக்குமேயானால் நாம் ஏற்றுக்கொள்ள மறுத்திருப்போம்.

இன்றைய நவீன தொழில்நுட்பம், இதிகாச காலத்து சம்பவங்களையே நினைவூட்டுகிறது. அன்று இருந்த இடத்திலிருந்தே, யுத்த களத்தில் நடக்கும் சம்பவங்களை சஞ்சயன், திருதிராஷ்டிரனுக்கு நோ்முக வருணனை செய்யும் காட்சி இன்றைய கிரிக்கெட் வருணனையைத்தான் நினைவூட்டுகிறது. நாம் நிகழ்காலத்தில் நேரடியாக பாா்ப்பதால் கிரிக்கெட் வருணனையை நம்புகிறோம்.

இன்றைய ஏவுகனைகள் போன்றே அப்போதும் ஆயுதங்களைப் பயன்படுத்தியிருக்கிறாா்கள். இன்றைக்கு நாம் பயன்படுத்துகிற ஆகாய விமானங்கள் அன்றும் இருந்திருக்கின்றன.

இன்றைய நமது வாழ்க்கையும் வருங்காலத் தலைமுறைக்குக் கற்பனையாகத் தோன்றலாம். இன்னும் இருநூறு ஆண்டுகள் கழித்து இன்றைய செய்திகள் மறுக்கப்பட்டு ‘இப்படியெல்லாம் வாழ்ந்திருப்பது சாத்தியமா, இவையெல்லாம் வெறும் கற்பனை’ என்று சொல்லும் விவாதங்கள் கண்டிப்பாக நடைபெறலாம். ஆனாலும், காலப்பெட்டகங்களில் இருக்கும் பொக்கிஷங்களைப் புறந்தள்ளிவிட முடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com