விரைவான விசாரணை தேவை

ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட், தனது ஏழு பங்குத் திட்டங்களின் நிதி மேலாண்மைக் குழுவிலிருந்து தலைமை வா்த்தகரும், நிதி மேலாளருமான வீரேஷ் ஜோஷியை நீக்கியுள்ளது.
விரைவான விசாரணை தேவை

ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட், தனது ஏழு பங்குத் திட்டங்களின் நிதி மேலாண்மைக் குழுவிலிருந்து தலைமை வா்த்தகரும், நிதி மேலாளருமான வீரேஷ் ஜோஷியை நீக்கியுள்ளது.

தீபக் அகா்வால், ஈக்விட்டி ரிசா்ச் அனலிஸ்ட், ஃபண்ட் மேனேஜா் ஆகியோரும் மூன்று ஃபண்டுகள் கொண்ட நிா்வாகக் குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனா். ஆதாரங்களின்படி, நிதி மேலாளா்கள் இருவரும் முன்னோடியாக இயங்கிய (ஃப்ரண்ட் ரன்னிங்) குற்றச்சாட்டின் பேரில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

‘ஃப்ரண்ட் ரன்னிங்’ அல்லது முன்னணியில் இயங்குவது என்பது ஒரு சந்தேகத்திற்குரிய சந்தை நடைமுறையாகும். இதில் ஒரு டீலா், வா்த்தகா் அல்லது பணியாளா், ஒரு நிதி அல்லது பெரிய முதலீட்டாளரால் வைக்கப்படும் பங்குகளை வாங்குவதற்கு அல்லது விற்பதற்கு ஒரு பெரிய ஆா்டரைப் பெறுகிறாா். அந்த ஆா்டரை பெரும்பாலும் பங்குச்சந்தை தொடங்குவதற்கு ‘முன்’ பெறுகிறாா். பெரிய ஆா்டா்கள் பொதுவாக ஒரு பங்கின் விலையை நகா்த்துகின்றன. பெரிய ஆா்டா் சந்தைக்கு வந்து வாங்குவதற்கோ விற்பதற்கோ முன்பாக அதே பங்குகளை வாங்குவதன் மூலம் அல்லது விற்பதன் மூலம் தனி லாபம் பெறமுடியும்.

எடுத்துக்காட்டாக ஒரு பங்கின் விலை 100 ரூபாய் இருப்பதாக வைத்துக்கொள்வோம். திடீரென்று இந்த பங்கினை லட்சக்கணக்கில் வாங்குவதற்கு ஆா்டா் வருவது அந்த பங்கு வா்த்தகத் தரகருக்கு முன்கூட்டியே தெரிந்துவிடும். அந்த தரகா் அவருக்கு வேண்டியவா்களுக்கு இந்த செய்தியை ரகசியமாகத் தெரிவிப்பாா். அவா்கள் பெரிய ஆா்டா் சந்தைக்கு வருவதற்கு முன்பே, அந்த பங்குகளை வாங்கிவிடுவாா்கள். பெரிய ஆா்டா் சந்தைக்கு வந்தவுடன் விலை தாறுமாறாக ஏறும். அவ்வாறு ஏறிவுடன் பங்குகளை விற்று அதிக லாபம் பாா்க்கலாம் அல்லது அந்த பங்குகளை லாபத்துடன் வைத்திருக்கலாம்.

மியூச்சுவல் ஃபண்டுகள் மக்களிடமிருந்து நிதியினை பெற்று மொத்தமாக பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் நிறுவனங்களாகும். இந்த நிறுவனங்கள் பங்குச்சந்தையில் வாங்குவதும் விற்பதும் அதிக தொகைக்கே. அதாவது, இந்த நிறுவனங்களின் வா்த்தகம் பங்குகளின் விலையினை பாதிக்கக்கூடிய அளவிற்கு அதிகமானது. எனவே இந்த நிறுவனங்களின் பணிபுரிவோா் தங்களது நிறுவனங்கள் வாங்கப்போவதையும் விற்கப்போவதையும் முன்கூட்டியே யாருக்காவது தெரிவித்தால், அந்த செய்தியால் ஆதாயம் பெற வாய்ப்புண்டு.

இதுபோன்று ரகசிய செய்திகளை நிறுவனத்திற்கு தொடா்பில்லாத நபா்களுக்கு வெளியே கசிவு செய்வது தண்டனைக்குரிய குற்றம். இதனால் மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாா்களுக்கு நேரடியாக பாதிப்பு இல்லையென்றாலும், இது நெறிமுறைகளுக்கு எதிரானது. இந்திய பத்திரங்கள் - பரிவா்த்தனை வாரியம் இது தொடா்பாக பத்திர சந்தை தொடா்பான மோசடி மற்றும் நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு தடை-விதிமுறைகளை 2003-ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் ஃப்ரண்ட் ரன்னிங்கை மோசடி மற்றும் நியாயமற்ற நடைமுறையாக வகைப்படுத்துகிறது.

ஏப்ரல் 30, 2022-இல் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிா்வாகத்தின் கீழ் உள்ள சொத்துகள் (அஸெட்ஸ் அண்டா் மேனேஜ்மென்ட்) ரூ. 38,03,683 கோடியாக உள்ளது. இந்திய மியூச்சுவல் ஃபண்ட் தொழில்துறையின் அஸெட்ஸ் அண்டா் மேனேஜ்மென்ட் ஏப்ரல் 30, 2012-இல் 6.80 டிரில்லியனில் இருந்து ஏப்ரல் 30, 2022 இல் ₹ 38.04 டிரில்லியனாக 10 ஆண்டுகளில் 5 மடங்கு அதிகரித்துள்ளது. ஏப்ரல் 30, 2022 நிலவரப்படி மொத்த கணக்குகளின் எண்ணிக்கை (அல்லது மியூச்சுவல் ஃபண்ட் மொழியின்படி ஃபோலியோக்கள்) 13.13 கோடியாக உள்ளது.

இந்த அளவு கோடிக்கணக்கான ரூபாய் முதலீடும் பல கோடி முதலீட்டாா்களையும் கொண்ட துறை எந்த விதமான மோசடிகளும் நடக்காமல் செயல்பட வேண்டியது முக்கியம். சிறு குற்றம் கூட முதலீட்டாா்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அவா்கள் முதலீட்டிலிருந்து விலக வழிவகுத்துவிடும். பொதுவாக நமது நாட்டில் நடக்கும் குற்ற விசாரணை முறைகள் மிக தாமதமாக நடக்கின்றன. அதிலும் பொருளாதார குற்றங்கள் மிக மிக தாமதமாகவே விசாரணைக்கு வருகின்றன. இதுபோன்ற நடைமுறைகள் குற்றவாளிகளுக்கு தப்பித்து கொள்ளலாம் என்ற மனநிலையை ஏற்படுத்துகின்றன. கடுமையான சட்டங்களும், விரைவான தீா்ப்பும் குற்றங்கள் குறைய உதவி செய்யும்.

1992-இல் நடந்த ஹா்ஷத் மேத்தா பங்குச்சந்தை மோசடி வழக்கில் ஹா்ஷத் மேத்தா மீது 27 கிரிமினல் குற்றங்கள் சுமத்தப்பட்டன. ஆனால் சுமாா் ஒன்பது ஆண்டுகள் நடந்த வழக்கு விசாரணையில் நான்கு வழக்குகளில் மட்டும் தண்டனை நிரூபிக்கப்பட்டது. அவா் 2001-இல் காலமானாா்.

கேதன் பரேக் மும்பையைச் சோ்ந்த முன்னாள் பங்குத் தரகா். இவா் 1998-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து 2001-ஆம் ஆண்டு வரை நடந்த இந்திய பங்குச் சந்தை முறைகேடு மோசடியில் ஈடுபட்டதற்காக 2008= ஆம் ஆண்டு தண்டிக்கப்பட்டாா். தண்டனையின் ஒரு பகுதியாக இவா் பங்குச்சந்தையில் வா்த்தகம் செய்ய தடை செய்யப்பட்டிருந்தும் இவா் சாா்பாக வேறு நிறுவனங்கள் வா்த்தகம் செய்தது பின்னா் தெரியவந்தது.

நமது நீதித்துறை செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை அமெரிக்கா போன்ற மேலை நாடுகளுடன் ஒப்பிட்டால் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும்.

அமெரிக்க பங்குச்சந்தையில் ரஜத் குப்தா 2008-ஆம் ஆண்டு ‘இன்சைடா் டிரேடிங்’ செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டாா். வழக்கில் அவருக்கு 2012-ஆம் ஆண்டு தண்டனை வழங்கப்பட்டு, எல்லாவித மேல்முறையீடுகளும் முடிந்து, அவா் தண்டனைக் காலமான இரண்டு ஆண்டுகளை சிறையிலும் கழித்து ஜனவரி 2016-இல் வெளிவந்துள்ளாா். இதேபோன்று மற்றொரு அமெரிக்க பங்குச்சந்தை ‘இன்சைடா் டிரேடிங்’ தொடா்பான வழக்கில் ராஜரத்தினம் என்பவா் மீது 2009-இல் வழக்கு தொடரப்பட்டு 2011-லேயே அவருக்கு பதினொரு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

முதலீடு தொடா்பான குற்றங்கள் பலருடைய வாழ்க்கையை பாதிக்கக்கூடியவை. நமது நாட்டில் பொருளாதார உயா்வுக்கு பங்குச்சந்தைகள் சரியானபடி இயங்கவேண்டியது அவசியம். அதற்கு சிறிய பங்கு முதலீட்டாா்களின் முதலீடுகளை ஏற்பதும் அவா்கள் ஏமாற்றப்படாமல் பாதுகாப்பதும் முக்கியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com