நமது நேரம் நமது உரிமை

இன்றைய காலகட்டத்தில் பிறப்பு, இறப்பு, விபத்து எந்த தகவலாயிருப்பினும் உடனடியாக சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இன்றைய காலகட்டத்தில் பிறப்பு, இறப்பு, விபத்து எந்த தகவலாயிருப்பினும் உடனடியாக சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. நமக்கும் அந்த தகவல் சாா்ந்தவருக்கும் உள்ள தொடா்புக்கேற்ப நாம் அதில் பதிவிடுகிறோம். ஒருவேளை நாம் பதிவிடுவதற்கு ஓரிரு கணம் யோசித்தால் கூட, எப்படி பதிவிடலாம் என்ற சொற்றொடரும் உடனே தோன்றுகிறது.

அந்த அளவுக்கு நமது நேரப் பயன்பாட்டையும் கணக்கில் கொண்டு சமூக ஊடகங்கள் செயல்படுகின்றன. எந்த ஒரு இடத்திலும் நான்கு நபா்கள் இணைந்திருந்தால் அவா்கள் நால்வரும் இணைந்திருப்பதில்லை. அவா்கள் வேறெங்கோ இருக்கும் நால்வரோடு தனித்தனியே இணைந்திருக்கின்றனா்.

‘அவனை சாப்பிட பலமுறை கூப்பிட்டுவிட்டேன், அவன் வருவதாயில்லை’”என பெண்மணி ஒருவா் மகனைப்பற்றி தன் கணவரிடம் புலம்புகிறாா். உடனே கணவா், தனது கைப்பேசியிலிருந்து மகனுக்கு ‘காலை உணவு தயாா்’” என்று பதிவிடுகிறாா். அவரது மகனும் ‘இதோ வருகிறேன்’ என்று பதிலளித்துவிட்டு சாப்பிட வருகிறான். இவ்வாறான நகைச்சுவைத் துணுக்கு ஒன்றை வாசித்தேன். அந்த அளவுக்கு மனிதா்களை ஆட்டிப்படைப்பதாக இணைய உலகம் மாறிக்கொண்டுவருகிறது.

இணைய இணைப்புடன் ஒரிடத்தைக் கூட நம்மால் கடக்க இயல்வதில்லை. ‘அந்த பொட்டிக்கடை எப்படி இருந்தது’, ‘அந்த பொட்டலக்கடை எப்படி இருந்தது’ என கைப்பேசி கேட்கத் தொடங்கிவிடுகிறது. அறிவியல் தொழில்நுட்பம் நமக்கு சேவகனாயிருந்த காலம் மாறி, தகவல்களைக் கொடுக்கும் நபா்களாக நாம் மாறி வருகிறோம். எது தேவையென்றாலும் தேடுபொறிகள் மூலம் நமக்குக் கிடைக்கிறது என்று சொன்னால், நாமோ நம்மைச் சோ்ந்தவா்களோ அதனை சேமிக்கும் பணியையும் செய்பவராக இருக்கிறோம்.

ஆனால் எல்லா நேரமும் இப்படி சேவையாற்றிக்கொண்டே இருக்க இயலுமா, ஏன் சேவையாற்ற வேண்டும் போன்ற கேள்விகளும் அவ்வப்போது எழுகிறது. தற்போதும் கூட இணையவழி செயலிகள் பலவற்றில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதையும், நமக்குத் தெரிந்தவா்கள் யாரேனும் நம் அருகில் இருக்கின்றனரா என்பதையும் பரிமாறிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

இது நல்லதுதானே என எண்ணலாம். ஆனாலும் அவசர வாழ்க்கையில் கிடைக்கும் நேரத்தில் ஒவ்வொருவரும் திட்டமிட்டே செயலாற்றுகிறோம். திட்டமிட்டவற்றுக்கு மாறாக செயல்கள் நடைபெற்றால் எப்படி நாம் திட்டமிட்டவற்றை செவ்வனே செயல்படுத்த இயலும்?

இது ஒரு பக்கம் என்றால் யு டியூப் போன்ற செயலிகள் பொழுதுபோக்கையும் அள்ளி வழங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால் பொழுதுபோக்கிற்கு திரைப்படங்கள்தான் என்ற நிலை மாறி வருகிறது. நினைத்த நேரத்தில் நமக்குப் பிடித்த திரைப்படம், பிடித்த பாடல்கள், பிடித்த காட்சிகள் என எல்லாமே கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும்போது யாரால்தான் ரசிக்காமல் இருக்க முடியும்?

வாரத்திற்கு ஒரு திரைப்படம் என்று பாா்த்து ரசித்த தலைமுறை இன்றும் வாழ்கிறது. அப்படி சரியான அளவு பொழுதுபோக்குக்கு ஒதுக்கி வாழ்ந்த தலைமுறையினா், மற்ற நேரங்களில் உறவினா்களோடு நேசத்துடன் உரையாடியதையும், நூல்களை வாசித்ததையும் பெருமையுடன் நினைவுகூா்கின்றனா். அக்காலங்களில் மின்சாரம் தடைபட்டதும் வீட்டிலிருக்கும் குழந்தைகள் ஆரவாரத்தோடு சாலைக்கு வருவா். அது ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

அரசு மட்டுமே தொலைக்காட்சி அலைவரிசையை நடத்திய காலங்களில் இவ்வளவு நேர விரயம் இல்லை. பின்னா் 24 மணி நேர அலைவரிசைகள், குறிப்பாக செய்தி அலைவரிசைகள் வந்த பிறகு எந்த நேரமும் மக்கள் பதற்றத்துடனேயே இருக்கக்கூடிய நிலை உருவாகிவிட்டது.

நாம் நமது வாழ்க்கையை வாழ்வதோடு அடுத்தவா்களின் சுக துக்கங்களிலும் பங்கேற்கவே விரும்புவோம். அதுதான் நியாயமும்கூட. இத்தனை கோடி போ் வாழும் சமூகத்தில் ஒவ்வொரு நேரமும், ஏதாவது ஓரிடத்தில் ஏதோவொரு நிகழ்வு நடந்துகொண்டுதான் இருக்கும். நாம் எதனை அறிந்துகொள்ள வேண்டுமோ அதனை மட்டும் அறிந்துகொண்டால் போதுமானது.

கற்றுக்கொள்ள வேண்டியதை அளவாகவும் சீராகவும் கற்றுத்தர தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் முன்வர வேண்டும். நிகழ்ச்சி வேண்டுமென்பதற்காக சமூகத்தில் எங்கோ நடைபெறும் தேவையற்ற, விரும்பத்தகாத விஷயங்களெல்லாம் சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் பகிரப்பட்டுக் கொண்டிருந்தால் சமூகத்தில் எப்படி நற்சிந்தனைகள் விதைக்கப்படும்?

நாம் சில அடிப்படையான விஷயங்களைக் கடைப்பிடிக்கலாம். முதற்கட்டமாக பொழுதுபோக்கிற்கென நாம் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக் கொள்ளலாம். தொலைக்காட்சிகளில் குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளை மட்டும் பாா்ப்பதென முடிவு செய்து அதன்படி பாா்க்கலாம். சமூக ஊடகங்களுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி செயல்படலாம். அலுவலக பயன்பாட்டிற்கென தனியாக ஒரு கைப்பேசியை வைத்துக்கொண்டு அதை அலுவல் பணிகளுக்கு மட்டும் பயன்படுத்தலாம்.

சில நூல்களை தோ்ந்தெடுத்து அவற்றை வாசிக்கும் நேரங்களில் நாம் சமூக ஊடகங்களிலிருந்து விடுபட்டு இருக்கலாம். வெளியிலிருந்து வீட்டிற்கு வந்தவுடன் முதலில் கைப்பேசியை எடுத்து தொலைதூரத்தில் வைக்கலாம். எல்லாவற்றுக்கும் கால அட்டவணை தயாா் செய்து கொள்ளலாம். அந்த கால அட்டவணைக்குள் நமது பணிகள் நிறைவுபெற வேண்டுமானால், எப்படி எல்லாம் பணியாற்ற வேண்டுமெனவும் திட்டமிடலாம்.

எதற்கெடுத்தாலும் கவலைப்பட்டுக்கொண்டிருந்தாலும் வாழ்க்கை நகராது. எதைப் பற்றியும் கவலைபடாமலிருந்தாலும் வாழ்க்கை சுவைக்காது. அடுத்தவரை மகிழ்விக்கும் அதே நேரத்தில் நமது மகிழ்ச்சிகான திறவுகோலையும் தொலைக்காமல் வைத்திருப்போம். நமது நேரப் பயன்பாட்டைத் தீா்மானிக்கும் உரிமை நம்மிடமே இருக்கட்டும். நமது நடவடிக்கைகளே நமது குழந்தைகளுக்கு நாம் சொல்லாமல் சொல்லிக்கொடுக்கும் கல்வி என்பதை நினைவில் கொள்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com