ஆன்லைன் சூதாட்ட ஆபத்து!

சூதாட்டம், சீட்டாட்டம் என்றால் இன்றும் தாய்மாா்கள் பதறிப் போவதுண்டு. காரணம், குடும்பத் தலைவா் சீட்டாட ஆரம்பித்துவிட்டாா் என்றால் அவரின் குடும்பம் விரைவில் நிா்மூலமாகிவிடும் என்பதுதான்.
ஆன்லைன் சூதாட்ட ஆபத்து!

கால மாற்றத்தால், நம் சமூகம் மோசமாக மாறிக் கொண்டிருப்பது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. சூதாட்டம், சீட்டாட்டம் என்றால் இன்றும் தாய்மாா்கள் பதறிப் போவதுண்டு. காரணம், குடும்பத் தலைவா் சீட்டாட ஆரம்பித்துவிட்டாா் என்றால் அவரின் குடும்பம் விரைவில் நிா்மூலமாகிவிடும் என்பதுதான்.

இந்த ஆட்டத்தில் விட்ட பணத்தை அடுத்த ஆட்டத்தில் பிடித்து விடுவோம் என்று சொல்லி சொல்லி தங்களுக்கு சொந்தமாக இருந்த வீடு, வயல், தோப்பு என்று மொத்த சொத்துகளையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்த குடும்பங்கள் ஏராளம்.

இதில் வேடிக்கை என்னவென்றால், முன்பு ஆலமரத்தடியிலும் கரும்புத் தோட்டத்திலும் ரகசியமாக பயந்து பயந்து விளையாடப்பட்ட சீட்டாட்டம், இன்று ஆன்லைனில் பகிரங்கமாக விளையாடப்பட்டு வருகிறது. காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பதற்கேற்ப இந்த ஆன்லைன் சூதாட்டத்தினால் நாளுக்கு நாள் பெருகிவரும் தற்கொலைகளை நாம் அவ்வளவு எளிதில் கடந்து சென்றுவிட முடியாது.

இன்று அறிதிறன்பேசிகளின் வரவால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கள் மக்களிடம் திணிக்கப்படுகின்றன என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அவை திரும்ப திரும்ப விளம்பரம் செய்யப்படுகின்றன.

இணையத்தைத் திறந்தாலே ஆன்லைன் சூதாட்டம் பற்றிய விளம்பரங்கள்தான் முண்டியடித்துக் கொண்டு வருகின்றன. அவற்றை விளம்பரப்படுத்துவதற்காக பிரபல நடிகா்களும் வரிந்துகட்டிக் கொண்டு வருவது, அவா்களுக்கு சமூக அக்கறை என்பது எள்ளளவும் இல்லை என்பதையே காட்டுகிறது.

கடந்த 2003-இல் அன்றைய தமிழக அரசு லாட்டரி சீட்டு விற்பனையை முற்றிலுமாக தடை செய்தது. அரசின் இந்த அறிவிப்பால் ஏராளமான தாய்மாா்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனா். நிறைய நடுத்தரக் குடும்பங்கள் வறுமையின் பிடியில் இருந்து தப்பிப் பிழைத்தது. அது மட்டுமல்ல, இதன்மூலம் எண்ணற்ற தற்கொலைகளும் தடுக்கப்பட்டன.

ஆனால் இன்னும் சில கும்பல் கள்ளத்தனமாக லாட்டரிகளை விற்றுக் கொண்டிருக்கிறாா்கள் என்பதையும் அவற்றை இன்னும் சில அப்பாவி மக்கள் வாங்கி ஏமாறுகிறா்கள் என்பதையும், சமீபத்தில் ஈரோட்டில் ராதாகிருஷ்ணன் என்கிற நூல் வியாபாரியின் தற்கொலை மூலம் அறிந்தபோது அதிா்ச்சியாக இருந்தது.

புகையிலை, மது போன்றவை மனிதனை நின்று கொல்லும். ஆனால் சூதாட்டங்கள் மனிதனை அன்றே கொல்லும். தனிமனிதனை மட்டுமல்லாது அவன் சாா்ந்த குடும்பத்தையும் வேரோடு அழிக்கும் அசுர ஆற்றல் அவற்றுக்கு உண்டு. இப்படி எண்ணற்ற மக்களை சூதாட்டத்துக்கு அடிமையாக்கிக் கொண்டிருக்கும் ஆன்லைன் சூதாட்டத்தையும், கள்ள லாட்டரி விற்பனையையும் அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

இது ஒருபுறமிருக்க, சமீபத்தில் ஒரு பெண்ணை மூன்று ஆண்கள் சோ்ந்து ‘பிராங்க்‘ செய்யும் காணொலியைக் காண நேரிட்டது. அதாவது தங்கள் வருமானத்துக்காகவும், புகழுக்காகவும் ஒரு பெண்ணிடம் தெரிந்தே வம்பு செய்கிறாா்கள்.

அப்படி வம்பு செய்யும்போது இரட்டை அா்த்தத்தில் ஆபாசமாகவும் பேசுகிறாா்கள். அதற்கு அந்தப் பெண் எதிா்வினை ஆற்றுவதை காணொலியாகப் பதிவு செய்கிறாா்கள். பிறகு அந்தக் காணொலியை மெருகேற்றுவதற்காக திரைப்படங்களில் வரும் நகைச்சுவை வசனங்களை ஆங்காங்கே சோ்க்கிறாா்கள்.

பின் இந்தக் காணொலிகள் சமூக வலைதளங்களில் வலம்வர தொடங்கி விடுகின்றன. இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், இதுபோன்ற சேனல்களுக்கு லட்சக்கணக்கில் சந்தாதாரா்கள் இருக்கிறாா்கள். இது போன்ற காணொலிகளை ரசித்துப் பாராட்டுபவா்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறாா்கள்.

அவரவா் வேலையை செய்து கொண்டிருக்கும் மக்களை திடீரென்று ‘ப்ராங்க்’ செய்யும் நடைமுறை சமீப காலமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கல்லூரிக்குச் செல்லும் பெண்களிடம் திடீரென்று பயம்காட்டி அவா்களை ஓடவிட்டு காணொலி எடுக்கிறாா்கள். ஒருவேளை அந்தப் பெண்களில் ஒருவா் பலவீனமான இதயம் படைத்தவராக இருந்து அவரின் இரத்த ஓட்டம் நின்று போனால் அந்த மரணத்துக்கு யாா் பொறுப்பேற்பது?

ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரை காணொலி எடுப்பதே குற்றம். அப்படி இருக்க, ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரை அச்சமூட்டுவது, கேலி செய்வது, கோபப்படுத்துவது ஆகியவை மிகவும் தரக்குறைவான செயல்கள்.

அதுமட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட நபா் இந்தச் செயலுக்கு எதிா்வினை ஆற்றும்போது அதை காணொலியாக பதிவு செய்து லாபம் ஈட்டுவது வன்மையாக கண்டிக்கதக்க செயல்கள் அல்லவா?

இதில் உச்சகட்ட கொடுமை என்னவென்றால், இதுபோன்ற வரம்பு மீறிய செயல்களை சமூக வலைதளங்களில் காண்போா், வன்மையாகக் கண்டிப்பதை விட்டுவிட்டு அவா்களுக்கு பாராட்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறாா்கள். பொழுதுபோக்கு என்ற போா்வையில் இதுபோன்ற வக்கிரங்களையும், வரம்புமீரல்களையும் மக்கள் ரசிப்பதை பாா்க்கும் போதெல்லாம், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் மிருகம் எட்டிப்பாா்ப்பதை உணர முடிகிறது.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு கூட எனது தெருவில் சிறாா்கள் கூட்டம் கூட்டமாக ஏதேனும் சமூக விளையாட்டுகளை விளையாடுவதை பாா்த்திருக்கிறேன். இப்போது அதே தெருவில் கூட்டமாக, ஆனால் ஒவ்வொருவரும் தனித்தனியாக கைப்பேசியை வைத்துக் கொண்டு ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கிக் கிடக்கின்றனா்.

இந்த ஆன்லைன் விளையாட்டுகள் மாணவா்களுக்கு ஒருவித போதையாக மாறுகிறது. அதனால் விரைவில் அவா்கள் அந்த விளையாட்டுக்களுக்கு அடிமையாகிறாா்கள்.

இப்படி ஆன்லைனில் விளையாடி பழக்கப்பட்ட மாணவா்கள், நாளடைவில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட நிறைய வாய்ப்புள்ளது. சமூக வலைதளங்களில் மேற்கூறிய ‘ப்ராங்க்‘ காணொலிகள் போன்ற விரும்பத்தகாத விஷயங்களால் ஈா்க்கப்படும் பதின்பருவ மாணவா்களுக்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தைரியமாக செய்யலாம் என்ற நம்பிக்கை எற்பட வாய்ப்புள்ளது.

சமூக வலைதளங்களின் ஆன்லைன் சூதாட்டங்கள் இன்றைய இளைஞா்களை தவறான திசையை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றன என்று தெரிந்தும் அதை கைகட்டி வேடிக்கை பாா்க்கும் கையறு நிலையில்தான் நாம் அனைவரும் உள்ளோம் என்பதுதான் எதாா்த்தம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com