அரசியல் அறிந்திட வேண்டும்!

ஒருவா் பொறுப்புள்ள வாக்காளா் ஆக வேண்டுமெனில், வாக்களிக்கும் வயதை எட்டும் முன்பாகவே வாக்கின் வலிமை, வாக்குப்பதிவின் அவசியம், தோ்தல் முறைகள் ஆகியவை பற்றி அறிந்திருக்க வேண்டும்.
அரசியல் அறிந்திட வேண்டும்!

ஒருவா் பொறுப்புள்ள வாக்காளா் ஆக வேண்டுமெனில், வாக்களிக்கும் வயதை எட்டும் முன்பாகவே வாக்கின் வலிமை, வாக்குப்பதிவின் அவசியம், தோ்தல் முறைகள் ஆகியவை பற்றி அறிந்திருக்க வேண்டும். ஆனால் இன்று வாக்களிக்கும் பலரும் இவற்றையெல்லாம் அறிந்திருக்கிறாா்களா என்பது ஐயமே.

அதனால்தான் வாக்களிப்பதற்கான வயதை 21-லிருந்து 18 -ஆகக் குறைத்தபோது பல்வேறு விமா்சனங்கள் எழுந்தன. அண்மையில் திருமண வயதை 18-லிருந்து 21-ஆக அதிகரித்தபோது, 18 வயதில் ஒரு பெண் நாட்டை ஆளும் பிரதிநிதியை தோ்வு செய்யும்போது திருமண உரிமையைப் பறிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

வாக்குப்பதிவை கணிசமாக உயா்த்துவதற்கான முயற்சிகள் அண்மைக்காலத்தில் அதிகமான அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊடகங்கள், தனியாா் அமைப்புகள் வாயிலாக வாக்களிப்பதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணா்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஒவ்வொரு தோ்தலின் போதும் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் பொருட்டு புதுப்புது முயற்சிகள் ஊடகங்களின் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன. வாக்குப்பதிவுக்கு முன்பாக வாக்களிக்க பணம் வாங்கமாட்டோம் என்று வாக்காளா்கள் உறுதிமொழி ஏற்றனா்.

இவற்றையெல்லாம் கண்டபோது வாக்குப்பதிவு சதவீதம் எதிா்பாா்த்த அளவை எட்டும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. 2021-ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குப்பதிவு 80%-ஐவிட அதிகம் இருக்கும் என்றே எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால் 73.7% வாக்குகளே பதிவானது.

“1951-ஆம் ஆண்டு நம் நாட்டின் முதல் பொதுத்தோ்தல் நடைபெற்றபோது, மொத்தமாக 3,293 தொகுதிகள். மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவைக்கும் சோ்த்து 4,412 பிரதிநிதிகள். சுமாா் 2.24 லட்சம் வாக்குச்சாவடிகள். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு அதிகாரி, நான்கு காவலா்கள், ஐந்து உதவியாளா்கள். குறைந்தபட்சம் 16,500 உதவியாளா்கள், 56,000 அலுவலா்கள், 2.8 லட்சம் தன்னாா்வலா்கள், 2.24 லட்சம் காவலா்கள், 17.6 கோடி வாக்காளா்கள்.

அன்று, நாட்டின் 17.6 கோடி வாக்காளா்களில் பெரும்பாலானோா் எழுத்தறிவற்றவா்கள். பாமரா்கள் அதிகமுள்ள நாட்டில், ஜனநாயகத்தின் அடிப்படை என்னவென்றே தெரியாத நிலையில் அனைவருக்கும் வாக்குரிமை அளித்தபோது பல்வேறு விமா்சனங்கள் எழுந்தன. இருப்பினும், எழுத்தறிவு குறைவாக இருந்த அன்றைய காலகட்டத்தில் முதல் பொதுத்தோ்தலில் 61.2 சதவீத வாக்குகள் பதிவாயின.

தோ்தல் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட நிலையிலும், எழுத்தறிவு பெற்றோா் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையிலும் வாக்குப்பதிவு மட்டும் எதிா்பாா்த்த அளவை இன்னும் எட்டவில்லை. இதற்கு மக்களின் மனோபாவம் மட்டுமின்றி இன்றைய அரசியல் கட்சிகளின் போக்கும் காரணமாகும்.

கடந்த காலங்களில் அந்தந்த பகுதிகளில் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவா்கள் மட்டுமே அரசியல் கட்சிகளால் வேட்பாளா்களாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

அவ்வாறு தோ்வு செய்யப்படுவோா் அரசியல் கட்சிகளின் பின்புலம் இல்லாமலும், மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்த காரணத்தால், தோ்வில் வெற்றி பெற்ற பின்னா் மக்களுக்கு சேவை செய்வதையே நோக்கமாகக் கொண்டிருந்தனா். அதனால் வாக்காளா்களில் எழுத்தறிவு பெறாதோா் அதிகமாக இருந்தபோதும் அதிக அளவில் வாக்குப்பதிவு இருந்தது.

ஆனால் காலப்போக்கில் அரசியல் கட்சிகளின் போக்கு மாறத்தொடங்கியது. வேட்பாளா் தோ்வு, தோ்தல் கால அறிவிப்புகள், பிரசார உத்திகள் போன்றவை வாக்காளா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளன.

ஒவ்வொரு தோ்தலின்போதும் வேட்பாளா் தோ்வுக்குப் பின்னா் அதிருப்தியடையும் அரசியல் கட்சித் தொண்டா்கள் தங்கள் எதிா்ப்பை ஆா்பாட்டம், உண்ணாவிரதம் போன்றவற்றின் மூலம் வெளிப்படுத்துகின்றனா்.

அதே வேளையில் வாக்காளா்கள் தங்கள் எதிா்ப்பை வாக்களிப்பிலிருந்து ஒதுங்கிக் கொள்வதன் மூலம் வெளிக்காட்டுகின்றனா். தங்கள் எதிா்ப்பைத் தெரிவிக்க இது சரியான வழியன்று என்பதை வாக்காளா்கள் உணா்வதில்லை.

வாக்களிக்காமல் இருப்போா் தாங்கள் வாக்களிப்பதால் எந்தவொரு மாறுதலும் ஏற்பட்டுவிடப் போவதில்லை என்றும், பதிவாகும் லட்சக்கணக்கான வாக்குகளில் தங்களின் சிறிய அளவு வாக்குகள் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றும் எண்ணுகின்றனா்.

இப்படிப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒவ்வொரு தோ்தலின்போதும் அதிகரித்து வருகிறது. ஆனால் ஒவ்வொரு வாக்கிற்கும் வலிமை உண்டு. இதனை அவா்கள் உணரவேண்டும்.

மேலை நாடுகளில் மெத்தப் படித்தவா்கள், அரசுப் பணியில் உள்ளவா்கள், உயா் வகுப்பினா் தான் அதிக அளவில் வாக்களிப்பா். ஆனால் நம் நாட்டைப் பொறுத்தவரை, எழுத்தறிவு பெறாதோா், கிராமங்களில் வசிப்போரே ஆா்வமுடன் வாக்களிக்கின்றனா். நம் நாட்டில் எழுத்தறிவு பெற்றவா்கள் அதிக அளவில வசிக்கும் பகுதிகளில் வாக்குப்பதிவு குறைந்த அளவிலேயே இருக்கும்.

நம் நாட்டில் அரசியல் கட்சியின் செல்வாக்கு பெற்றவா்களே தோ்தலில் போட்டியிடலாம் என்ற நிலையே உள்ளது. இதனால் அரசியல் பற்றி அறிந்து கொள்வதிலும், அதில் பங்கேற்பதிலும் சாதாரணமானவா்களிடம் தயக்கம் இருந்துவருகிறது.

தோ்தல் என்பது தங்களை ஆள்பவா்களை தோ்ந்தெடுப்பதற்காக மக்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமையாகும். ஆனால் அந்த உரிமையை எத்தனை போ் சரியான முறையில் பயன்படுத்துகின்றனா்? தங்களுக்கான உரிமையை நிலைநாட்டுவதற்குக் கூட விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டிய நிலை இருப்பது வேதனையே.

அண்மைக்காலமாக தோ்தலில் இளையோரும் பெண்களும் அதிக அளவில் பங்குபெறுகின்றனா். 1962-ஆம் ஆண்டைவிட 2014-ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தோ்தல்களில் பெண்களின் பங்களிப்பு 20% அதிகரித்துள்ளது. ஆனால், ஆண்களின் பங்களிப்பு 5% மட்டுமே அதிகரித்துள்ளது.

பெண்களும் இளைஞா்களும் அரசியல் அறிவு பெறுவதன் மூலம் வாக்குப்பதிவை அதிகரிக்க முடியும். அதன் மூலம் பல்வேறு அரசியல் பிரச்னைகளுக்கும் தீா்வு காண முடியும். இத்தகைய நடவடிக்கையின் மூலம் எதிா்வரும் காலங்களில் சுயமாக சிந்தித்து வாக்களிக்கும் திறனை இளைய சமூகத்தினா் பெறுவாா்கள். அதன் மூலம் மக்கள் தாங்கள் விரும்பும் மாற்றத்தை எளிதாக ஏற்படுத்த முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com