தேயிலைத் தமிழரின் தேயாத்தலைவர்

புத்தர் பரிபூரண நிலையை எய்திய பின், உலகெங்கும் அவரின் போதனைகளை எடுத்துச்சென்ற பிக்குகளின் ஆயிரமாண்டுகாலக் கதைகளை வரலாறு பேசுகிறது.
நடேசய்யர்
நடேசய்யர்

புத்தர் பரிபூரண நிலையை எய்திய பின், உலகெங்கும் அவரின் போதனைகளை எடுத்துச்சென்ற பிக்குகளின் ஆயிரமாண்டுகாலக் கதைகளை வரலாறு பேசுகிறது. கண்டங்கள் தாண்டிச் சமயங்களைப் பரவச் செய்த சீடர்களின் கதைகள் கூட நாம் அறிந்ததே.  

ஆனால் மானுடத்தை அணுவணுவாக நேசித்த ஒரு தமிழ்க்கவிஞனின் சொற்களில் புதைந்திருந்த அக்கினிக்கனலைச் சுமந்து கொண்டு, அடித்தள மக்களின் துயரங்களைத் துடைத்தெறிய அயலகம் சென்ற பேராளுமை ஒருவரின் பயணம், வரலாற்றுக்கு முற்றிலும் புதியது. 

மகாகவி பாரதியாரின் விடுதலைத் தாகத்தைத் தன்னுள் நிரப்பிக் கொண்டு இலங்கைத் தேயிலைத் தோட்டத்தமிழரின்  விதியை மாற்றச் சென்ற அம்மாமனிதர் கோ. நடேசய்யர். 

வாசித்தால் சிலிர்ப்பூட்டும் வாழ்க்கையைக் கொண்ட நடேசய்யர், 1891-ஆம் ஆண்டு தென்னாற்காடு மாவட்டம் வளவனூரில் பிறந்தவர். தஞ்சாவூர் கல்யாணசுந்தரம் உயர்நிலைப்பள்ளியில் வணிகப்பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் "வர்த்தகமித்திரன்' என்னும் பத்திரிகையை நடத்தினார். 

காப்பீடு, மோட்டார் இயந்திரவியல், வங்கி நிர்வாகவியல் துறைகள் சார்ந்த நூல்களை எழுதி வெளியிட்டார். நடேசய்யரின் அடிநெஞ்சில் மகாகவி பாரதியாரின் எழுத்துகள் பெரும் புரட்சித்தீயை வார்த்து  வந்தன.  ஆங்கிலேய அரசு வங்காளத்தை இரண்டாகப் பிரித்திருந்த காலம் அது.

ஆங்கிலேய ஆதிக்கத்தைப் பொருளாதாரப் பார்வையைக் கொண்டுதான்  வீழ்த்த முடியும் என்பது நடேசய்யரின் எண்ணம். தென்னிந்திய வர்த்தகர்கள் சங்கத்தையும் இந்திய மில்காரர்கள் சங்கத்தையும் தோற்றுவித்த நடேசய்யர், "வர்த்தகமித்திரன்' பத்திரிகைக்கு உறுப்பினர்களைச் சேர்க்கவும், மில்காரர்கள் சங்கத்தின் புதிய கிளையைத் தொடங்கவும் 1919-ஆம் ஆண்டு இலங்கைக்குச் சென்றார். சங்கக் கிளையைத் தொடங்கச் சென்றவரின் செவிகளில், இலங்கையின் மத்திய மாகாணத்தில்,  பல இலட்சம் இந்தியத்த மிழர்கள் தேயிலைத் தோட்டங்களில் படும் துயரங்கள் வந்து விழுந்தன. 

கதைகளைக் கேட்டுப் பெருமூச்செறிந்து விட்டு நகரும் சாதாரண மனிதனாக இல்லாமல், அத்தமிழரைச் சந்திப்பதென நடேசய்யர் தீர்மானித்தார். ஆனால், வெளியாட்கள் எவரும் ஊடுருவ இயலாமல், இலங்கை மலையகம் முழுவதையும்  முள்வேலியிட்டு ஆங்கிலேய முதலாளிகள் மூடி வைத்திருந்தனர். தோட்ட பிரதேசங்களில் அயலார் நுழைந்தால் கடுந்தண்டனை என்ற சட்டம் அமலில் இருந்தது. கொடுங்குளிரும் கடுங்காவலும் நிறைந்த அம்மலையகத்திற்குள் ஒரு கம்பளித்துணி வியாபாரியின் வேடத்தில் நடேசய்யர் துணிந்து நுழைந்தார்.

அழகின் சொர்க்கமாக விரிந்து கிடந்த அம்மலைநாட்டின் மடியில், இந்தியத் தமிழர்களின் வாழ்க்கைச் சிதறிக்கிடந்த பெருங்கொடுமையைக் கண்களால் கண்டார். பன்றித் தொழுவத்தை விட மோசமான குடியிருப்புகள், குறைந்த கூலியில் உறிஞ்சப்பட்ட தொழிலாளர்களின் உழைப்பு, கந்தலாடை உடுத்தி, பனிமூடிக் கிடந்த மலைமுகடுகளில் தேயிலைக்கொழுந்து பறித்த சகோதரர்களின் அவலவாழ்வு ஆகியவற்றைக் கண்டு அவர் திடுக்கிட்டார். 

இலங்கைக்குக் குடிபெயர்ந்து ஒரு நூற்றாண்டு கழிந்த பின்னரும், ஓர் அங்குலம் கூட முன்னேற்றம் காணாத அந்த அப்பாவித் தமிழர்களின் பரிதாப வாழ்க்கை நடேசய்யரின் உள்ளத்தைக் கொதிக்க வைத்தது. மலையகத்தை விட்டுக் கீழிறங்கிய நடேசய்யர், நூறாண்டுக்கால இருள் கவ்விக் கிடந்த தமிழர்களை மீட்டெடுக்க இலங்கையிலேயே குடியேறிப் போராடுவதென முடிவெடுத்தார். 

இந்தியா திரும்பியவுடன், இலங்கையில் மடியும் இந்தியத் தமிழர்களின் வேதனை வாழ்வு குறித்து ஓர் அறிக்கையை இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையிடம் நேரடியாக அளித்தார்.  

இலங்கைக்குப் புறப்பட முடிவெடுத்த நடேசய்யர், தன் "வர்த்தகமித்திரன்' பத்திரிகையை வ. ராமசாமியிடம் (வ.ரா.) ஒப்படைத்தார். 1920-ஆம் ஆண்டு இலங்கையில் குடியேறிய அவருடைய போராட்ட வாழ்வின் முதற்புள்ளி, தலைநகர் கொழும்பில் தொடங்கியது. அந்நாட்டின் தொழிற்சங்கத்தலைவர்கள், அரசியல் பிரமுகர்களுடன் இணைந்து அரசியல் களத்தில் இறங்கினார். 

தோட்டப்புறத் தமிழர்கள் பாமரர்களாய் இருப்பதாலேயே ஆண்டாண்டுகளாய் வெள்ளையர்கள் ஏமாற்றுகின்றனர் என்றுணர்ந்த நடேசய்யர், தமிழர்களின் வாழ்க்கையை அடியோடு மாற்ற முனைந்தார். முதற்கட்டமாக,  மகாகவி பாரதியாரின் ஆயுதமான பத்திரிகையைக் கையிலெடுத்தார். 1921-இல் அவர் தொடங்கிய. "தேசநேசன்' நாளிதழ் மலையகத் தமிழர்களின் உரிமைகளை உரத்துப் பேசியது. உண்மையில் இந்தியத் தமிழர்களின் சோக வாழ்வினை இலங்கைக்கு அடையாளம் காட்டியதே, "தேசநேசன்' தான். 

தமிழர்களின் துன்ப வாழ்வைப் பேச ஒரு பத்திரிகை போதாதென்று நினைத்து, "தேசபக்தன்',  "உரிமைப்போர்', "சுதந்திரப்போர்', "வீரன், "சுதந்திரன்', "தோட்டத்தொழிலாளி', "தி சிட்டிசன்', "தி எஸ்டேட் லேபரர்ஸ்', "இண்டியன் ஒப்பீனியன்' என்று ஏறத்தாழ பத்துக்கும் மேற்பட்ட பத்திரிகைகளை நடேசய்யர் தொடங்கினார். 

"அச்சம் தவிர்', "கொடுமையை எதிர்த்து நில்' என்னும்  பாரதியாரின் புதிய ஆத்திசூடியையும் "உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா' போன்ற கவிதை வரிகளையும் முகப்புகளில் சூடி நாள்தோறும் நடேசய்யரின் பத்திரிகைகள் வெளிவந்தன. 

தொழிலாளர் உரிமைக்கும், பெண்ணுரிமைக்கும் பாரதி பாடிய கவிதை நெருப்பு, கடல் கடந்து "தேசபக்தன்' நாளிதழில் புகைந்தது. அச்சமென்பதன் அடிச்சுவட்டைக் கூட அறியாத நடேசய்யர், மலையகத் தமிழர்களைக் "குடியேற்றக்கூலிகள்' என்று ஏகடியம் பேசிய இலங்கையின் இனவாதிகள் அனைவரையும் துணிந்து எதிர்த்தார். சிங்களத் தீவின் கொடியில் இருந்த வாளேந்திய சிங்கம் போல் வீறுநடையிட்டது,  நடேசய்யர்தான்.  மலையகத்தில் ஆங்கிலேயர்களால் குடியேற்றப்பட்ட இந்தியத் தமிழர்கள் மீது படிந்திருக்கும் அடிமை வாழ்வின் கொடூரங்கள் குறித்த தகவல்களைச் சேகரித்தார். 

தோட்டங்களுக்குள் நேரடியாகப் பயணித்து இரகசியமாகச் சேகரித்த அந்த அரிய ஆவணத்தை, இந்தியாவின் சிம்லாவில் கூட்டப்பட்ட புலம்பெயர்ந்த இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் நிலை குறித்த ஆய்வு மாநாட்டில் தாக்கல் செய்தார் (1922). 

முதன்முதலாக, இலங்கைத் தேயிலைத் தோட்டத் தமிழர்களின் பிரச்னை உலக அளவில் பேசப்பட்ட நிகழ்வு இதுவே. இதைத் தாக்கல் செய்து பேசிய நடேசய்யரின் உரை, ஆங்கிலேயத் தேயிலைத்தோட்ட முதலாளிகளை நடுநடுங்க வைத்தது.  

நடேசய்யர்  எடுத்த செயல்களில் எல்லாம் வெற்றியை ஈட்டியதன் பின்னணியில் நின்றவர், அவருடைய மனைவி மீனாட்சியம்மை. மலையகத்தின் ஒவ்வொரு தோட்டமாகச் செல்லும் அத்தம்பதி, தோட்டத்தின் மையப்பகுதியில் வாகனத்தை நிறுத்துவர். 

அடுத்து, தன் இனிய குரலில், "தேயிலைத் தோட்டத்திலே பாரத சேய்கள் சென்று மாய்கின்றார் ஐயய்யோ' என்று மீனாட்சியம்மாள் பாடத்தொடங்குவார். கொழுந்துக்கூடையை இறக்கி வைத்து விட்டு வந்து கூடும் தமிழர்களிடம்,  மகாகவி பாரதியாரின் கும்மி, சிந்து பாடல்களின் மெட்டுகளில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர் வாழ்க்கை பிரச்னைகள் வெளிப்பட்டு அம்மலை முழுக்க எதிரொலிக்கும். தொடர்ந்து தன் சிம்மக்குரலில் நடேசய்யர் தொழிலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவார். 

சாதி வேற்றுமைகளை ஒழித்து, தீண்டாமை வழக்கத்தை அறவே ஒதுக்கி, கள்ளுண்பதை விடுத்து, துணிவுடன் நிமிர்ந்து நிற்கும் நாளிலேயே விடுதலையைச் சுவாசிக்க முடியும் என நடேசய்யர் உரையாற்றுவார். இப்படி அம்மலைநாடு முழுக்க நாட்கணக்கில் பயணித்து, அவ்விருவரும் தொழிலாளர்களின் உள்ளங்களில் நம்பிக்கையை விதைத்தனர்.  

1925-ஆம் ஆண்டு இலங்கை சட்ட நிரூபண சபைக்குத் தமிழர்கள் பிரதிநிதியாக நடேசய்யர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நல்வாய்ப்பைப் பயன்படுத்தி, மலையகத் தமிழரின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண அவர் கொண்டு வந்த  தீர்மானங்கள், சிறப்புக்கவனயீர்ப்புகளால் சட்டசபையில் புயலும் சூறாவளியும் வீசின. 

நடேசய்யருடைய உரைகளில், மலையகத் தமிழர்களின் உடல்களைப் பிணித்திருந்த நூற்றாண்டின் சங்கிலிகள் உடைந்து நொறுங்கத் தொடங்கின. 1936 நேரடித்தேர்தலில் போட்டியிட்டு மலையகத் தமிழர்களின் உறுப்பினராய் வெற்றி பெற்றார்.  தேயிலைத் தோட்டத் தமிழருக்கான உரிமைகளை ஓய்வில்லாப் போராட்டங்களால் வென்றெடுத்தார். இலங்கை அரசியலில் மலையகத் தமிழருக்கான பக்கங்களை நடேசய்யரின் செயல்பாடுகள் திறந்து வைத்தன.  

இலங்கை மலையகத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடியும் நடேசய்யரே. சிறுகதை, நாவல், நாடகம், கருத்துச்சித்திரம், தன்னம்பிக்கை நூல்கள், பயண இலக்கியம் என்று அவர் தொடாத வடிவமே இல்லை.  அடித்தளத் தொழிலாளர்களின் தோள்களை அணைத்துக் கொண்டு,  இலங்கை அரசியலில் 28 ஆண்டுகள் தனிநடையிட்ட தன்னிகரில்லாத் தலைவர் கோ. நடேசய்யர். 

எந்த மலையக மண்ணுக்காகப் பாடுபட்டாரோ, அதே மண்ணின் அரசியல் துரோகங்கள் அவரை 1947-பொதுத்தேர்தலில் தோல்வியடையச் செய்தன. அந்த அதிர்ச்சி விலகாத நிலையில், 7.11.1947 அன்று மலையகத்தமிழரின் மனசாட்சியாக வாழ்ந்த கோ. நடேசய்யர் அமரரானார்.  

வெறும் ஐம்பத்தாறு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த நடேசய்யர், தன் வாழ்க்கையின் சரிபாதியை இந்தியத் தமிழர்களுக்குக் கொடையாக ஈந்தார்.  அவர் மட்டும் கம்பளி வியாபாரியாக வேடமிட்டு, இலங்கை மலையகத்தில் கால் பதித்திராவிட்டால், அத்தேயிலைத் தமிழர்களின் நூற்றாண்டுக் கண்ணீர், வெளியுலகம் அறியாமல் அக்குளிரிலேயே உறைந்து மறைந்திருக்கும்.

இன்று (நவ. 7) கோ. நடேசய்யர் மறைந்து 75 ஆண்டு நிறைவு. 
கட்டுரையாளர் :
பேராசிரியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com