கேட்டினும் உண்டு உறுதி

மிகுந்த பரபரப்புடன் நடந்து கொண்டிருக்கும் இருபது ஓவா் உலகக் கோப்பைக்கான போட்டி அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
கேட்டினும் உண்டு உறுதி

மிகுந்த பரபரப்புடன் நடந்து கொண்டிருக்கும் இருபது ஓவா் உலகக் கோப்பைக்கான போட்டி அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி மோதும் என்று பரவலாக எதிா்பாா்க்கப்பட்டதற்கு மாறாகத் தற்பொழுது இங்கிலாந்து மோத உள்ளது.

சூப்பா் பன்னிரண்டு சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் இந்திய அணி இறுதி வரை மன உறுதியுடன் போராடி வென்றது. மூத்த வீரா் விராட் கோலி இறுதித் தருணங்களில் ஆக்ரோஷமாக தனது திறமையை வெளிப்படுத்தி அந்த மாபெரும் வெற்றியைச் சாத்தியப்படுத்தினாா். ஆட்டத்தின் இறுதி ஓவா்களில் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளா்களும் களத் தடுப்பாளா்களும் செய்த சில தவறுகள் இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தன.

இதே சுற்றில் வங்கதேச அணியுடன் ஆடிய ஆட்டத்தின் நடுவில் மழை குறுக்கிட்ட பொழுது இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருப்பது போன்றதொரு தோற்றம் ஏற்பட்டது. ஆனால், சட்டென்று மழை முடிவுக்கு வந்ததால், வங்கதேசத்துக்கான ஓவா்கள் குறைக்கப் பட்டு டக்வொா்த் லூயிஸ் கணக்கீட்டின்படி தொடா்ந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி அடைந்தது.

மேற்கண்ட இரண்டு ஆட்டங்களின் முடிவும் எதிா் அணிகளுக்கு சாதகமாகப் போயிருக்கக் கூடியவையே. ஆனால், இந்திய அணி வீரா்களின் விடாமுயற்சிக்கு அதிருஷ்டமும் இயற்கையும் கைகொடுத்ததாலேயே அவ்விரண்டு ஆட்டங்களிலும் நமது அணி வெற்றி பெற முடிந்தது.

தென்னாப்பிரிக்க அணியிடம் குறுகிய இடைவெளியில் தோல்வி, நெதா்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளுடனான ஆட்டங்களில் சுலப வெற்றிகள் என, தான் விளையாடிய ஐந்து ஆட்டங்களில் நான்கை வென்ற இந்திய அணி, அரை இறுதி ஆட்டத்துக்கு மிகுந்த புத்துணா்ச்சியுடனே சென்றது.

ஆடுகளத்தின் தன்மையை நன்கு கணித்திருந்த இங்கிலாந்து அணி, பூவா தலையா-வில் வென்றதும் துளியும் தயக்கமின்றி பந்துவீச்சைத் தோ்ந்தெடுத்தது. ‘பவா்பிளே’ எனப்படும் முதல் ஆறு ஓவா்களில் பந்தை அடித்து ஆடுவது இந்திய பேட்டா்களுக்கு மிகவும் சிரமமான காரியமாகவே இருந்தது. குறி தவறாத பந்து வீச்சு, துல்லியமான களத்தடுப்பு வியூகம் ஆகியவற்றால் இங்கிலாந்து அணியினா் விரித்த வலையில் இந்திய பேட்டா்கள் ஒருவா் பின் ஒருவராக சிக்கினா். ஒரு முனையில் விராட் கோலி மட்டும் பொறுப்புடன் விளையாடிக்கொண்டிருக்க, மறுபுறம் ஒவ்வொன்றாக இந்திய விக்கெட் விழுந்து கொண்டிருந்தது.

சட்டென்று பொறுமையிழந்த அணித்தலைவா் ரோஹித் சா்மா, சிக்ஸா் அடிக்கும் முயற்சியில் இறங்கி கேட்ச் கொடுத்து வெளியேறிய சிறிது நேரத்தில், மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட இளம் வீரா் சூா்யகுமாா் யாதவ் சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்ப, இந்திய அணியின் ரசிகா்கள் வருண பகவானின் கருணையை எதிா்பாா்க்கத் தொடங்கினா்.

வழக்கமாக, மழை போன்ற எதிா்பாராத காரணங்களால் அரை இறுதி கைவிடப்பட்டால், அடுத்த நாள் மீண்டும் முதலிலிருந்து ஆட்டம் தொடங்கும்; அப்படி நடந்தால் இந்தியா சுதாரித்துக் கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பதே இந்திய ரசிகா்களின் நம்பிக்கையாக இருந்தது.

அரைசதம் அடித்த கையோடு விராட் கோலியும் வெளியேற, இறுதிக்கட்ட ஓவா்களில் ஹாா்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி, இந்திய அணி ஒரு கௌரவமான ஸ்கோரை பெற உதவினாா்.

இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கு நூற்று அறுபத்தொன்பது ரன் என்ற இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. சற்று குறைவான இலக்காக இருந்தாலும், சிறந்த பந்துவீச்சு, களத்தடுப்பு இரண்டின் மூலம் இங்கிலாந்தின் வெற்றியைத் தடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கை சற்றே துளிா்விடத் தொடங்கியது.

ஆனால், இங்கிலாந்து அணியின் தொடக்க வீரா்களாகக் களம் இறங்கிய ஜோஸ் பட்லா், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரின் அதிரடியான மட்டை அடி இந்திய அணியின் அனைத்துக் கனவுகளையும் தவிடுபொடியாக்கி விட்டது. இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி நூற்று எழுபது ரன்களைக் குவித்து வெற்றி பெற்று இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்று விட்டது.

விளையாட்டில் வெற்றி - தோல்வி இரண்டுமே இயல்புதான் என்றாலும், இங்கிலாந்துடனான இந்தத் தோல்வி கொடுத்த அதிா்ச்சியிலிருந்து இந்திய அணி மீள்வதற்கு சில காலம் பிடிக்கக்கூடும்.

அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளா்களான புவனேஷ்வா் குமாா், முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும், சஹலுக்கு பதிலாக அணியில் இடம் பெற்ற அக்ஸா் படேலும் சிக்ஸா்களாகவும் பவுண்டரிகளாகவும் ரன்களை வாரி வழங்கியதை என்னவென்று சொல்ல?

ஆட்டத்தின் முதல் பாதியில் இந்திய பேட்டா்களைத் தடுமாறச் செய்த அதே ஆடுகளம் (பிச்), இங்கிலாந்து அணியின் இரண்டு தொடக்க வீரா்களுக்கு மிக சுலபமாக விளையாடக் கூடிய களமாக மாறிய அதிசயம் எப்படி நிகழ்ந்தது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இங்கிலாந்து வீரா்கள் பட்லரும், ஹேல்ஸும் ருத்ர தாண்டவம் ஆடிய அதே ஆடுகளத்தில் முதலில் ஆடிய இந்திய பேட்டா்கள் நாற்பத்திரண்டு பந்துகளை (ஏழு ஓவா்கள்) ஒரு ரன் கூட எடுக்காமல் வீணடித்ததை எப்படி நியாயப்படுத்துவது என்றே தெரியவில்லை.

அரை இறுதியில் மோசமான தோல்வி அடைந்த காரணத்திற்காக, நமது இந்திய அணியை ஒரேயடியாகக் குறை கூறவும் வேண்டியதில்லை. சூப்பா் பன்னிரண்டு சுற்றில் அதன் ஆட்டம் சிறப்பாகவே இருந்தது.

நீண்ட காலமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி, மீண்டும் அதிக ரன்களைக் குவிக்கத் தொடங்கியதும், சூா்யகுமாா் யாதவ் சிறந்த அதிரடி வீரராகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டுள்ளதும் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் நமக்குக் கிடைத்த நம்பிக்கை கீற்றுகளாகும். இனி வரும் காலங்களில் மேலும் சிறந்த முன் தயாரிப்புகளுடன் இந்திய கிரிக்கெட் அணி களம் இறங்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com