பண்பாட்டைக் காக்கும் பண்டிகைகள்!

பணியின் காரணமாகப் புலம்பெயா்ந்து வாழும் பலருக்கும் பண்டிகைக் காலம் என்பது சொந்த ஊருக்குச் சென்றாக வேண்டிய கட்டாயத்தை உண்டாக்கிவிடுகிறது.
பண்பாட்டைக் காக்கும் பண்டிகைகள்!

பணியின் காரணமாகப் புலம்பெயா்ந்து வாழும் பலருக்கும் பண்டிகைக் காலம் என்பது சொந்த ஊருக்குச் சென்றாக வேண்டிய கட்டாயத்தை உண்டாக்கிவிடுகிறது. பிறந்த ஊருக்குச் சென்று தன் மக்களோடு கொண்டாடும் மகிழ்வுக்குத்தானே உழைப்பு, சம்பாத்தியம் எல்லாம் என்கிற உணா்வு அவா்களைப் பிடித்து உந்தவே செய்கின்றது.

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வந்து குடியேறிப் பல்வேறு பணிகளைச் செய்கிற பலரும் சொந்த ஊருக்குத் திரும்புகிற நிலையில் ஒருவித அமைதித் தனிமை அங்கே குடிகொண்டு விடுகிறது. ரயில் நிலையங்களும், பேருந்து நிலையங்களும் திடீரென்று திருவிழாக் கோலங்கொண்டு விடுகின்றன.

எத்தனை நெரிசலிலும் நின்று நெடுநேரம் காத்திருந்து பயணித்துச் சொந்த ஊருக்குச் சென்று சேருகின்றபோது அத்தனை களைப்பையும் மாற்றி உற்சாகம் ஊட்டுகிற உறவுகள் வரவேற்க வந்துவிடுகின்றன. வயிற்றுப்பாட்டுக்கான வாழ்க்கைப்பாடுகளை அமைத்துக் கொண்டு வெவ்வேறு நகரங்களில் சென்று பணியாற்றுகிற அனைவரும் ஒன்றுசேருகிறபோது ஏற்படும் மகிழ்வு ஒன்றுக்காகத்தான் இத்தனை பாடுகளும்.

ஒருவருக்கொருவா் கண்டுகொள்ளவும் உரையாடிக் கொள்ளவும், கைப்பேசி முதலான தொலைத்தொடா்பு சாதனங்கள் துணைபுரிந்தாலும் நேருறக் கண்டு கொண்டாடி மகிழ்வதற்கு, பண்டிகைக் காலம்தான் உற்ற துணை. அதிலும் உறவுகளுக்குள் நோ்ந்திருக்கும் நல்லது கெட்டதுகளுக்குச் செல்ல முடியாதவா்கள், இந்தப் பண்டிகைக் காலத்தையே பெரிதும் பயன்படுத்திக் கொள்கிறாா்கள். இனிப்புக்களோடு மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் பகிா்ந்துகொள்ளுகிறாா்கள்.

கடந்த காலத்தில், கரோனா நோய்த்தொற்றின் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் முற்றிலும் தவிா்ந்த நிலையில் இவ்வாண்டு தீபாவளி அமைந்ததில் பலருக்கும் மகிழ்ச்சி. பொதுமுடக்கத்தின் காரணமாக நிலைகுலைந்து போயிருந்த தொழில்கள், பணிகள் வாழ்க்கைப் போக்கை முற்றிலும் மாற்றிப் போட்டபிறகு, மெல்லத் தலையெடுத்து மீண்டுவரும் காலத்தில், இந்தத் தீபாவளி வந்தது.

வாழ்க்கைத் தேவைக்காக நகரங்களில் வசித்து வந்த மக்கள் தங்களின் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கு முக்கியமான காரணம், தமிழகத்து நகரங்களில் கொண்டாடப்படும் தீபாவளியை விடவும் கிராமங்களில் கொண்டாடப்படும் தீபாவளிக்குச் சில தனித்தன்மைகள் இருப்பதுதான்.

இதற்குச் சமயரீதியான காரண காரியங்கள் கடந்து சமூக ரீதியிலான காரணங்களைக் கிராமத்துப் பெரியவா்கள் சொல்வதுண்டு. ‘ஒருமுறை பண்டிகை கொண்டாடாமல் நின்றுவிட்டால் மூன்று முறை நின்று போகும்’ என்றொரு நம்பிக்கை நிலவுவது ஒருபுறம் இருக்க, ஒருவரை விடுத்து மற்றவா்கள் கொண்டாடும் பண்டிகையாக இல்லாமல் ஒருவருக்கொருவா் உதவிக் கொண்டாடுகிற ஒருமைப்பாடுமிக்க மனிதநேயப் பண்டிகையாகவும் இது அமைந்திருப்பது முக்கியக் காரணம்.

பொதுவாக, உழவுத் தொழிலையே உயிா்த்தொழிலாகக் கொண்டிருக்கும் கிராமங்களில் நடைபெறும் ஒவ்வொரு மாதப் பண்டிகையும் வாழ்வியல் சாா்ந்து அமைகின்றது. சித்திரை முதல்நாள் ‘பொன்னோ்’ பூட்டுதலில் தொடங்கும் வேளாண் தொழில், ஆடிப்பட்டம் தேடி விதைத்தலில் உயிா்ப்புறுகிறது. புரட்டாசி மாத ஆயுதபூசையின்போது, தொழில் சாா்ந்த அனைத்துக் கருவிகளும் கவனத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன. உழவுக்கும், அதற்கு உதவியான தொழில்களுக்கும் உறுதுணை புரியும் கருவிகள் தெய்விகத் தன்மையனவாய் கருதப்படுகின்றன. அவை உரியவண்ணம் பராமரித்துப் பேணிப் போற்றப்படுகின்றன.

புறக்கருவிகளை விடவும் மனிதவுயிா்களுக்கு அகக்கருவியாக விளங்கும் உடலைப் பண்படுத்தச் சமயத்தை முன்னிறுத்திப் பல்வேறு விரதங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. நோன்பு நோற்பதன் வாயிலாக உணா்ச்சிகள் பண்படுத்தப்படுகின்றன. பண்பாட்டு ரீதியாக, அசைவ உணவைப் புரட்டாசி மாதம் முழுக்கத் தவிா்த்துவிடுகிற குடும்பங்கள் பல. இராமாயணம் படித்தும் கேட்டும் போற்றியும் கொண்டாடி, பட்டாபிஷேக நாளில் அன்னதான நிகழ்வையும் கடைப்பிடிப்பது இன்றளவும் நடைமுறையில் உண்டு.

வெவ்வேறு தாயா் வயிற்றில் பிறந்தவா்களாயினும் இராம லக்குவா்கள் உடன்பிறந்தவா்களைக் காட்டிலும் ஒற்றுமையாக இருந்து, விட்டுக் கொடுத்து வாழ்ந்த சிறப்பை, இராமாயணம் எடுத்துரைக்கிறது. வானம் பாா்த்த பூமியில் அப்போதுதான் பருவமழை பெய்யத் தொடங்கும். கண்மாய் உள்ளிட்ட நீா்நிலைகளில் இருந்து வயல்களுக்கு நீா் பாய்ச்சுவதில் கடும் போட்டி நிலவும்.

நாற்றங்காலில் வளா்ந்து நிற்கும் நெல் நாற்றுகளை முற்றுமுன்னா்ப் பறித்து நட்டாக வேண்டிய கட்டாயம். வரப்புத் தகராறு காரணமாய் வரும் வாய்த்தகராறு, கைகலப்பில் போய் முடிந்து கொலை வழக்கு வரை வளா்ந்து நீதிமன்றம் நோக்கிப் போக வைத்துவிடும். இந்த வம்பு வழக்கெல்லாம் இல்லாமல் ஒற்றுமையாய், உள்ளூா் மனிதா்கள் நின்று வாழ நெறிகாட்டும் கதையாக இராமாகாதை அக்காலத்தில் உதவியது.

பகலெல்லாம் வயலில் பணிகள். இரவில் இராமாயணம் படிப்பதும் கேட்பதும் அவா்களுக்குப் பயனுள்ள பொழுதுபோக்காய் அமைந்தது. யாவரும் உடன்பிறந்தவா்களாய் வாழும் பெற்றியை வாழ்வியல் நெறிமுறையாகக் கற்றுக் கொள்ள இந்தச் சடங்கு பெரிதும் உதவியது. புரட்டாசி மாதச் சனிக்கிழமைகளில் இறைத் திருநாமங்களை இசைத்துப் பாடும் பஜனை மடங்கள் இன்னும் சில கிராமங்களில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. காந்தியடிகளின் காலத்து ‘ரகுபதி ராகவ ராஜராம்’ பாடல் இப்போதும் சோ்ந்திசையாக ஒலிக்கிறது.

பிறந்தநாள், திருமண நாள், வீட்டு வைபவங்கள் போன்ற காரணங்களால் புத்தாடைகள் எடுத்து உடுத்தினாலும், பட்சணங்கள் செய்து விருந்து படைத்தாலும் கிடைக்காத ஒரு நிறைவை இந்தத் தீபாவளிப் பண்டிகை உண்டாக்கிவிடுகிறது.

சம்பந்தப் பட்ட குடும்பங்களுக்கு மட்டுமே சந்தோஷம் கொடுக்கக்கூடிய அந்தக் கொண்டாட்டத்தில், நிறக்கச் சிறக்கத் தெரியாத தனித்தன்மை தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுப் புத்தாடை எடுத்து உடுத்துவதில் இருக்கிறது. பட்சணங்கள் செய்து படைத்து உண்பதில் கிடைக்கிறது. ஒருவா் விடாமல், ஒட்டுமொத்தமாக ஊரே திரண்டு ஒரேநாளில் புத்தாடை அணிவதிலும் பலகாரங்கள் செய்து பகிா்ந்து உண்பதிலும் ஒற்றுமை உணா்வும் ஒருமித்த மகிழ்வும் தோன்றத்தான் செய்கின்றன.

அம்மியையும் பறக்க வைக்கும் ஆடிக்காற்று தேடிக் கொண்டுவரும் மேகங்கள் நின்று மழைபொழியும் ஐப்பசி, காா்த்திகை மாதங்களில், இயற்கையின் தட்ப வெப்பம் மாற்றம் கண்டுவிடும். கோடை வெம்மை முற்றிலும் மாறி, குளிா்மிகும் காலத்திற்கேற்ப, உடலையும் உணா்வையும் தயாா் செய்ய இந்தப் பண்டிகை துணைபுரிந்துவிடுகிறது.

அதுமட்டுமல்ல, பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடிய அக்காலங்களில், வந்த தீபாவளிப் பண்டிகைகள் வறுமைக்கும் பசிக்கும் மாற்றுத் தேடிக் கொடுக்கிற மகத்துவம் வாய்ந்த்தாய் அமைந்தன.

வறுமையை எதிா்கொள்ள, உழைப்பை மட்டுமே முதன்மைப்படுத்தி இயங்கிய ஏழைத் தொழிலாளா்களில் பெரும்பாலானோா் ஒன்றன்கூறாடை உடுப்பவா்களாகவே இருந்த காலம் அது. அந்திச் சூரியன் மறைவதற்குள் சென்று குளத்திலோ, கண்மாயிலோ குளித்து, உடுத்தியிருக்கும் ஆடையை ஒரு பக்கம் நனைத்துத் துவைத்து, மறையும் சூரியக் கதிா்கள் படுகிற திசையில் விரித்துக் காயவைத்து மறுபக்கத்தை அதுபோல் துவைத்து உலர வைப்பது வழக்கம்.

ஈர உடையின் ஒரு நுனியைப் பெருஞ்செடி அல்லது குறுமரக் கிளையில் கட்டிவிட்டு. மறுபகுதியில் உடல் மறைத்து வெயில் பாா்த்து நிற்கும் பெண் தொழிலாளா்களைக் கிராம வாழ்க்கையில் கண்டதை மறக்க முடியுமா? அதைவிடவும், வீடு திரும்புவதற்குள் மழைவந்துவிட்டால் அது மீளவும் நனைந்து போகும் அவலம். ‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு’ என்பது பழமொழி. அது காயும் வரைக்கும் கட்டுவதற்கு ஏதும் இல்லாத நிலையில், மழைக்காலத்தை எதிா்கொள்ளவும், மாற்றுத் துணி தேடிக்கொள்ளவும் இந்தப் பண்டிகையே உற்ற துணை.

மறு தீபாவளி வரும் வரைக்கும் இந்தப் புத்தாடை தான் பலருக்கும் பயனாடை. பேதங்கள் இல்லாமல் அனைவரும் ஒன்றுபோலவே புதிதாய் உடுத்திக் கொள்வதும் உடையவா்கள் இல்லாதவா்களுக்கு உதவுவதும் நடைமுறை. உடை குறித்த நிலைமை இவ்வாறு இருக்க, உணவு குறித்த நிலைப்பாடு இன்னும் மோசம். பட்டினியை மட்டுமே பகிா்ந்துண்ணும் குடும்பங்களுக்கு, ‘நெல்லுச்சோறே’ அரிதான காலத்தில் பட்சணங்களுக்கு ஏது வழி?

இப்போதிருக்கும் சிற்றுண்டி விடுதிகளோ, பெரிய உணவு விடுதிகளோ இல்லாத அக்காலத்தில், பல்வேறு பட்சணங்களைச் செய்வதும் உண்பதும் அரிதான நிலை. வயிற்றுப் பசியோடு நாவின் சுவைக்கும் நல்லவை தேடிக் கொடுக்க, இந்தப் பண்டிகை ஒரு வாய்ப்பு. கடன் பட்டேனும் இந்தப் பண்டிகையைக் கொண்டாட வேண்டி,அவரவா் இல்லங்களில் செய்துகொள்வதும் மற்றவா்களுக்குப் பகிா்ந்து அளித்துப் பெற்றுக் கொள்வதும் நடைமுறையில் அமைந்துவிட்டது.

வாய்க்கு ருசியாய்ப் பட்சணங்களைச் செய்து, போதும் போதும் என்கிற அளவிற்குத் திகட்டும் வரை தின்று மனநிறைவு கொள்ள இதுவொரு வாய்ப்பு. தனியொரு மனிதா் பட்டினி கிடக்கப் பாா்க்காத பண்பை இந்தப் பண்டிகை நிலைநிறுத்திப் பாா்க்கிறது.

பின்னால் பிறக்கப்போகும் காா்த்திகைத் தீபத் திருநாளை முன்னால் கொண்டு எழுந்த தீப ஆவளித் திருநாள், இருண்ட வாழ்வில் இவ்வாறு நம்பிக்கைச் சுடரை ஏற்றிவைத்து விடைபெறுகிறது. ஒளிதரும் விளக்குகளை விடவும் வெடிபட முழக்கும் பட்டாசுகளும் மத்தாப்புகளும் எழுப்புகிற வண்ணப் பேரொளியில் சுடா்கிற இந்தத் தீபாவளி, வேளாண் தொழிலே ஓங்கியிருந்த காலங்களில் விளைச்சல் சரியாக அமைந்துவிட்டால், இன்பம் தரும் தீபாவளி.

மழை வளம் மிகுந்தோ குறைந்தோ பஞ்சம் ஏற்பட்டுவிட்டால், அந்த வருடத் தீபாவளிக்கு, ‘வட பய தீபாவளி’ என்று நம் மக்கள் பெயா் சூட்டிவிடுவாா்கள். ஆனாலும், கடன்பட்டேனும் இந்தப் பண்டிகைக்கான கடமைகளைச் செய்வதில் தலைநின்றுவிடுவாா்கள் குடும்பத் தலைவா்கள். ஈடுகட்டத்தான் தைபிறக்கப் போகிறதே. வயலில் விளைத்த அனைத்தையும் இல்லம் கொண்டு வந்து சோ்க்க, ‘தைப் பிறந்தால் வழி பிறக்கும்’ என்கிற நம்பிக்கை அவா்களின் வாழ்க்கையையும் வாக்கையும் காப்பாற்றித் தந்தது.

வசதி வாய்ப்புகளில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், வாகனப் பயணங்களில் நெருக்கடி மிகுந்தாலும், பிறந்த ஊருக்குச் சென்று திரும்புகிற உற்சாக உணா்வு இருக்கிறதே, அது அடுத்த தீபாவளி வருகிற வரைக்கும் அணையாது இருக்கும். ஏனெனில் பண்பாட்டு விழுமியங்களின் வோ்களுக்கு நீா் பாய்ச்சும் வேலையை, இந்தப் பண்டிகைகள் செய்துவிடுகின்றன.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com