ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

இந்த ஆண்டின் தென்மேற்குப் பருவமழை தமிழகத்திற்கு சராசரியைவிட அதிக அளவில் கிடைத்திருப்பது விவசாயப் பணிகளுக்கு பெரும் உதவியாகும். மேலும், கர்நாடகத்தில் குறுகிய காலத்தில் கொட்டித்தீர்த்த மழையால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளதைக் காணமுடிகிறது. இச்சூழல் ஏற்படக் காரணம் பருவ நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றமே ஆகும்.
சிலர் வெளிநாடு சென்று சிலகாலம் கழித்து தாய்நாடு திரும்பும்போது அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் பெருமகிழ்ச்சி ஏற்படுவது இயல்பு. அதுபோலவே, பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து ஓடிவரும் காவிரி நீரினை சில நாள்கள் கரைபுரண்டோடக் காணும்போது மக்களிடையே பெருமகிழ்ச்சி ஏற்படுகிறது. அம்மகிழ்ச்சி காவிரி நீரைப்பயன்படுத்தி விவசாயம் செய்வதன் பயனாக வருவதோடு, மற்றவர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதாலும் வருவதாகும்.
தமிழகத்தில் காவிரியின் குறுக்கே, 1935-ஆம் ஆண்டு, மேட்டூரில் ஸ்டேன்லி நீர்த்தேக்கத்தை ஆங்கிலேயர்கள் உருவாக்கித் திறக்கும் வரை காவிரியில் ஏற்படும் தொடர் வெள்ளப்பெருக்கு ஆண்டுதோறும் காணக்கூடியதாகவே இருந்துள்ளது.
இவ்வெள்ளப்பெருக்கு நிலையிலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பண்டைய தொழில்நுட்பம் மூலம் கரிகால் சோழன் காவிரியில் கல்லணையை உருவாக்கி, விவசாயத்திற்கு காவிரி நீரை சிறப்புற பயன்படுத்தி, அவ்வணை இன்றளவும் நிலைத்திருக்கச் செய்துள்ள மதிநுட்பத்தை பொறியியல் அறிஞர்கள் இன்றும் வியந்து பாராட்டி வருகின்றனர்.
இப்படி ஆண்டுதோறும் கரைபுரண்டோடி, தன் கரையின் இருபுறமும் உள்ள மக்களுக்குத் தன்னையே வழங்கி அவர்களது வாழ்வை விவசாயம் மூலம் வளப்படுத்தி இறுதியாகக் கடலில் கலக்கும் காவிரியின் நிலை, இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப்பின் படிப்படியாகக் குறைய ஆரம்பித்து விட்டது. குறிப்பாக, 1980-களுக்குப் பின் தமிழகத்திற்கு காவிரி நீர் போதிய அளவு கிடைப்பதில் சிக்கல்கள் உருவாகி வந்தன. இந்நிலை பிப்ரவரி 2013-இல் உச்சநீதிமன்றம் அளித்த காவிரி நீர் பங்கீட்டின் இறுதித் தீர்ப்பு வரும்வரை தொடர்ந்தது.
இப்படி நீர் பங்கீட்டில் பேரளவு சிக்கல்கள் எழ முதன்மைக் காரணம் மக்கள்தொகைப் பெருக்கமே. மகாகவி பாரதி 1920-களில் பாரதத்தைக் குறிப்பிடும்போது "முப்பது கோடி முகமுடையாள்' என்று வருணித்தார். இன்று 140 கோடி முகமாக ஒரே நூற்றாண்டில் பாரதத்தின் மக்கள்தொகை அதிகரித்து விட்டது.
இந்திய சுதந்திரத்திற்குப் பின், மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பொழுது, அதாவது 1960-களில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சராசரி அளவு மக்கள்தொகையே இருந்தது. இருப்பினும், அம்மக்களுக்கே உணவு அளிக்க இயலாத நிலை ஏற்பட்டபொழுது நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற அன்றைய மத்திய அரசின் திட்டக்குழு விரைந்து செயல்பட்டது. அதன் விளைவாக 1965-இல் பசுமைப் புரட்சி உருவாக வழி ஏற்பட்டது.
1960-களில் எடுக்கப்பட்ட விரைவான திட்டங்களால் படிப்படியாக, பசுமைப் புரட்சிக்கு கை கொடுக்கும் வகையில், பல்வேறு ஆறுகளின் குறுக்கே பேரணைகள் கட்டப்பட்டு ஆற்றுநீர் பேரளவு தேக்கப்பட்டு, புதிய கால்வாய்கள் அமைக்கப்பட்டு, மானாவாரியாக இருந்த நிலங்கள் நீர்ப்பாசன நிலங்களாக மாற்றப்பட்டன. இதில் பெரும் பலன் அடைந்த மாநிலங்களில் கர்நாடகமும் ஒன்று.
ஏனெனில், 1960-களில் கர்நாடகத்தின் கால்வாய் பாசனப்பரப்பு ஏறத்தாழ இரண்டு லட்சம் ஹெக்டேர். இதுவே தற்போது 14 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இதே காலத்தில் தமிழகத்தில் இக்கால்வாய் பாசனப்பரப்பு 8.8 லட்சம் ஹெக்டேராக இருந்தது தற்போது 6.5 லட்சம் ஹெக்டேராகக் குறைந்து விட்டது.
பல பத்து ஆண்டுகளாக, மிகவும் அனுபவமிக்க அமைச்சர் நீர்வளத்துறையில் இருந்தும் தமிழகத்திற்கு ஏன் இந்த நிலை? தமிழக நிலநீர் பாசனப்பரப்பு ஏன் தொடர்ந்து குறைந்து வருகிறது? காவிரித்தாய், புதிதாக கட்டப்படுகின்ற அணைகளான தடைக்கற்களை எல்லாம் தாண்டி பல நேரங்களில் கரைபுரண்டு ஓடுவதை இந்த ஆண்டும் நாம் கண்டு வருகிறோம்.
அரசியல்வாதிகள் வாக்குக் கேட்க வரும்பொழுது, தங்கள் ஆட்சி மிகச்சிறப்பாக இருந்தது, இம்முறை தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால் மீண்டும் அப்படியே சிறப்பான ஆட்சி நடைபெற்றும் என மார்தட்டிக் கொள்கின்றனர். ஆனால், உண்மைநிலை அதற்கு மாறாகவே உள்ளதை புள்ளிவிவரங்களும், காவிரியில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரும் காட்டுகின்றன.
தமிழகத்தை கடந்த 55-ஆண்டுகளாக திராவிட கட்சிகள் இரண்டு மட்டுமே மாறி மாறி ஆண்டு வருகின்றன. இருப்பினும் நிலநீர்ப்பாசன முன்னேற்றத்தில் அதுவும் கால்வாய், ஏரிப்பாசன அபிவிருத்தியில் குறிப்பிடும்படியாக எவ்வித முன்னேற்றமுமில்லை. அப்படியே ஓரளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டினாலும், அந்த அதிகரிப்பிற்கும் அதிகமான நிலம், அப்பாசனப் பரப்பிலிருந்து பல காரணங்களால் வெளியேறியுள்ளது. அக்காரணங்களில் பிரதானமாக விளங்குவது மற்ற உபயோகத்திற்கான நீர்ப்பாசன நிலப் பயன்பாடு.
உதாரணமாக, தமிழகத்தில் 1960-களின் பத்தாண்டு முதல் 2010-களின் பத்தாண்டு வரை கால்வாய் பாசனப்பரப்பு 8.83 லட்சம் ஹெக்டேரிலிருந்து 6.52 லட்சம் ஹெக்டேராகவும், ஏரிப் பாசனப்பரப்பு 9.12 லட்சம் ஹெக்டேரிலிருந்து 3.94 லட்சம் ஹெக்டேராகவும் குறைந்துவிட்டது. ஆனால், இவ்விரு நிலநீர்ப்பாசன ஆதாரங்களின் பதிவு செய்யப்பட்ட பாசனப்பரப்பு சற்றே அதிகம். அதாவது ஒவ்வொன்றும் பத்து லட்சம் ஹெக்டேராகும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், நீதிமன்றங்களோ, அரசியல்வாதிகளோ, அரசியல் கட்சிகளோ இயற்கையை வெல்ல முடியாது என்பதை நாம் கடந்த பல பத்து ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம். மக்களுக்கும் சரியான பாடம் புகட்டவே இயற்கையும் அவ்வப்போது தன் போக்கை மாற்றி சிறிது விளையாடி வருகிறது. அதன் உதாரணமே இந்த ஆண்டும் அபரிமிதமாக காவிரியில் பெருகி வரும் வெள்ளப்பெருக்காகும்.
பிப்ரவரி 2013, உச்சநீதிமன்ற காவிரிநீர் பகிர்வு தீர்ப்பிற்குப்பின், தமிழகம் தனது பங்கிற்கு அதிகமாகவே ஐந்து ஆண்டுகள் (2013, 2014, 2018, 2019, 2022) காவிரியில் உபரியாக நீரைப்பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது. இந்த ஆண்டுகள் அனைத்திலும் காவிரிநீரை முழுமையாகப் பயன்படுத்த இயலாமல் பேரளவு உபரிநீர் கடலில் கலந்துள்ளது.
அதே நேரத்தில், காவிரி வடிநிலத்தில், அகண்ட காவிரி என வர்ணிக்கப்படும் முசிறியில் இருந்து மூன்று கி.மீ. தொலைவிற்கு அப்பால் பல கி.மீ தூரம் வரை உள்ள வருவாய் கிராமங்கள் அனைத்தும், சகாரா பாலைவனத்தின் ஒரு பகுதியாக மழைப்பொழிவின்றி, மிகவும் வறண்டு கிடக்கும் நிலையை நாம் காண்கிறோம். ஆனால், இந்த வறண்ட கிராமங்கள் அனைத்தும் 1980-க்கு முன்பு வரை பொன்விளையும் பூமியாக இருந்து வந்ததைக் குறிப்பிட்டுக் கூறவேண்டும்.
உபரியான காவிரி நீரை நல்ல வாய்ப்புகள் இருந்தும் கர்நாடகமும் (புதிய மேக்கேதாட்டு அணை மூலம்) பயன்படுத்த இயலவில்லை (அதை தமிழகம் அனுமதிப்பதில்லை), தமிழகத்தாலும் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. ஆனால், ஒற்றுமையோடு செயல்பட்டால் இரண்டுமே சாத்தியமாகும். இனி வரும் காலங்களில் அதற்காகத் தமிழகமும் கர்நாடகமும் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு குறிக்கோள்களை நிறைவேற்றிட கீழ்கண்ட இரு முயற்சிகளை எடுக்க வேண்டும்.
முதலாவது, கர்நாடகம் தற்போது தீவிரமாக பரிசீலித்து வரும் மேக்கேதாட்டு அணையினை கட்டி, உபரிநீர்வரத்து காலங்களில், அதில் நீரைத்தேக்க தமிழகம் ஒத்துழைக்க வேண்டும். ஆனால், காவிரிநீர்ப் பற்றாக்குறை காலங்களில் இப்புதிய அணையில் நீரை சேமிக்க அனுமதிக்கக்கூடாது. இரண்டாவது, தமிழகத்தில், மேட்டூர் அணை முதல் காவிரி கடலில் கலக்கும் இடம் வரை உள்ள ஏறத்தாழ 420 கி.மீ. தூரத்தில், மேட்டூர் அணையிலிருந்து முதல் 300-கி.மீ.இல் ஒவ்வொரு 50 கி.மீ.-க்கு ஒன்று வீதம் ஆறு பெரிய கதவணைகளை காவிரியின் குறுக்கே அமைக்க வேண்டும்.
காவிரியின் இருபுறமும் இந்த ஆறு கதவணைகள் மூலமாக ஒவ்வொரு பக்கமும் 40 முதல் 50 கி.மீ. தூரத்திற்கு கால்வாய் அமைத்து இவற்றின் மூலமாக காவிரிப் பாசனத்தை தற்போது கிடைக்கும் நீரினைக்கொண்டே மேலும் 2 லட்சம் முதல் 3 லட்சம் ஹெக்டேர் வரை தமிழகத்தில் அதிகரிக்க முடியும். இதனால், தற்போது பாலைவனம் போல் காட்சியளிக்கும் தமிழக தரிசு, மானாவாரி நிலங்களுக்கு ஒரு போக சாகுபடியாவது செய்வது உறுதியாகும்.
இரண்டாம் முயற்சிக்கு தற்போது தமிழகத்திலேயே சிறந்த உதாரணமாகத் திகழ்வது 1960-களின் முற்பகுதியில் அன்றைய முதல்வர் காமராஜரால் திறக்கப்பட்டு, இன்றளவும் செவ்வனே செயல்பட்டு வரும் பரம்பிக்குளம்-ஆழியாறு நீர்ப்பாசனத் திட்டமாகும். படிப்படியாக இத்திட்டம் சீரமைக்கப்பட்டு, தற்போது ஏறத்தாழ 2.5 லட்சம் ஹெக்டேர் மானாவாரி நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கிறது.
இந்த இரு செயல்கள் மேற்கொள்ளப்பட்டு, கர்நாடகமும், தமிழ்நாடும் விட்டுக்கொடுத்து செயல்பட்டால் பல்லாயிரக்கணக்கானோர் பொருளாதார முன்னேற்றம் பெற்று மகிழ்ச்சியடைவார்கள். தமிழக அரசே முக்கிய முடிவினை எடுத்து, பாதிக்கப்பட்ட காவிரிப்படுகையின் வறண்ட விவசாயிகளுக்கு உதவும் வகையில் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால், காவிரி நீர் வீணாவதைத் தடுப்பதோடு, விவசாயிகளின் வாழ்விலும் வளம் காண இயலும்.

கட்டுரையாளர்:
பேராசிரியர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com