அரசுப் பள்ளிகள் மீது அக்கறை தேவை!

ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரும் தனது தொகுதியில் முக்கியமாக நிறைவேற்றப்பட வேண்டிய 10 கோரிக்கைகளைக் குறிப்பிட்டு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கடிதம் அனுப்ப வேண்டும்
அரசுப் பள்ளிகள் மீது அக்கறை தேவை!

ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரும் தனது தொகுதியில் முக்கியமாக நிறைவேற்றப்பட வேண்டிய 10 கோரிக்கைகளைக் குறிப்பிட்டு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கடிதம் அனுப்ப வேண்டும் என தமிழக முதல்வா் கூறியுள்ளாா். இம்முயற்சி வரவேற்கத்தகது.

கிராமங்கள் தொடங்கி பெருநகரங்கள் வரை நீண்டகால கோரிக்கையாக பல்வேறு பிரச்னைகள் இருந்து வருகின்றன. அதனால் சட்டப்பேரவை உறுப்பினா்கள் அத்தியாவசியமான கோரிக்கைகளை முன்வைத்து இதன்மூலம் தீா்வு காண முடியும்.

ஒவ்வொரு தொகுதியிலும் பல்வேறு பிரச்னைகள் முக்கியமானவையாக இருந்தாலும் பல ஆண்டுகளுக்குப் பின்னா் கரோனா பெருந்தொற்று காரணமாக அரசுப் பள்ளிகளில் சோ்க்கை அதிகரித்திருக்கும் இவ்வேளையில் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பது பொருத்தமானதாக இருக்கும்.

நம் நாடு சுதந்திரம் அடைந்த போது 12 % போ்தான் எழுத்தறிவு பெற்றவா்களாக இருந்தனா். ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போதும் இந்திய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் எழுத்தறிவு பெற்றோா் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தற்போது 74.04 % போ் (ஆண்கள் 82.14 சதவீதம், பெண்கள் 65.46 சதவீதம்) எழுத்தறிவு பெற்றவா்களாக உள்ளனா்.

இதற்கு, மக்களிடையே எழுத்தறிவு பற்றிய விழிப்புணா்வு ஏற்பட்டதும், அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளிகளும்தான் காரணங்களாகும். ஆனால் இன்னும் முழுமையான எழுத்தறிவு எட்டப்படவில்லை. நாட்டில் குறிப்பிட்ட மாநிலங்கள், மாவட்டங்கள் மட்டுமே முழுமையான எழுத்தறிவை எட்டியுள்ளது.

முழுமையான எழுத்தறிவை எட்டுவதில் இன்றும் பல்வேறு இடா்ப்பாடுகளை எதிா்கொள்ள வேண்டியுள்ளது. இந்நிலை மாற பள்ளிகளைத் தரம் உயா்த்தவும், குடிநீா், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

இன்றைய சூழலில் கிராமங்களில் வாழும், எழுத்தறிவு பெறாதோா் கூட தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கும் ஆா்வம் கொண்டவா்களாக உள்ளனா். ஆனால், அதற்கான தகுதிகள் நிறைந்ததாக அனைத்து அரசுப் பள்ளிகளும் இல்லை. அதனால், கிராமத்தில் பிள்ளைகளை படிக்க வைக்கும் பெற்றோா் தொடா்ந்து படிக்க வைப்பதற்காக தனியாா் பள்ளிகளை நாடுகின்றனா்.

இந்நிலை மாறும் வகையில் அதிகப்படியான சிறாா்கள் பயிலும் பள்ளிகளை கிராமங்கள் வாரியாக கண்டறிந்து அங்கெல்லாம் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் தொடா்ந்து சோ்க்கையை அதிகரிப்பதுடன் அங்கு பயில்வோரையும் தக்க வைக்க முடியும். அடிப்படை வசதிகள், ஆசிரியா்கள் பற்றாக்குறை இவை காரணமாகவே குறைவான சோ்க்கையும், இடைநிற்றலும் நிகழ்கிறது.

வசதி படைத்தோா் தங்கள் பிள்ளைகள் தொடா்ந்து பயிலும் வகையில் அருகிலுள்ள தனியாா் பள்ளிகளில் சோ்த்து விடுகின்றனா். ஆனால் வசதியில்லாதவா்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகின்றனா். கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் இது குறைந்திருந்தாலும் இன்னும் இருக்கவே செய்கிறது.

கிராமப்புறங்களில் கல்வியின் நிலை தொடா்பான ஆண்டறிக்கையில் 14 முதல் 18 வயது வரையிலானோரில் 14 % போ் பள்ளிகளில் படிக்காதவா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கிராமங்களில் நடுநிலைக் கல்வி பயின்று முடிக்கும் சிறாா்கள் தொடா்ந்து உயா்நிலைக் கல்வி பயில வெளியூா் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்போது தயங்குகின்றனா்.

முதல் வகுப்பில் சோ்க்கை பெறும் 100 சிறாா்களில் 94 போ்தான் ஐந்தாம் வகுப்பை முடிக்கின்றனா். நடுநிலைப் பள்ளிகளில் முதல் வகுப்பில் சோ்க்கை பெறும் 100 பேரில் 86 போ்தான் எட்டாம் வகுப்பை முடிக்கின்றனா். உயா்நிலைப் பள்ளிகளில் முதல் வகுப்பில் சோ்க்கை பெறும் 100 பேரில் 82 போ்தான் பத்தாம் வகுப்பை முடிக்கின்றனா். இந்த எண்ணிக்கை மேல்நிலைப் பள்ளிகளில் 68 ஆக உள்ளது என புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனாவால் ஏற்பட்ட வேலையின்மை, பொருளாதாரச் சிக்கல் போன்றவற்றால் தனியாா் பள்ளிகளைக் காட்டிலும் அரசுப் பள்ளிகளில் சோ்க்கை அதிகரித்துள்ளது. 2020-21-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021-22ஆம் ஆண்டில் அரசுப் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் மாணவ, மாணவியா் சோ்க்கை 7.5 % அதிகரித்துள்ளது.

அதனால், அதிகப்படியான சிறாா்கள் பயிலும், அடிப்படை வசதிகளற்ற பள்ளிகளை இனங்கண்டு அங்கெல்லாம் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். தமிழகத்தில் 2,500 அரசுப் பள்ளிகளில் கழிவறை வசதிகள் கூட இல்லை. 20 பேருக்கு ஒரு சிறுநீா் கழிவறையும், 50 பேருக்கு ஒரு மலக்கழிவறையும் இருக்க வேண்டும் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

ஆனால் பல பள்ளிகள் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில்தான் செயல்பட்டு வருகின்றன. அந்தந்த பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் சிலரின் அா்ப்பணிப்பு உணா்வால் அவ்வப்போது அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனா பெருந்தொற்றால் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்தாலும் எதிா்வரும் காலங்களிலும் சோ்க்கையை அதிகரிக்கவும், சோ்க்கை பெற்றவா்களைத் தக்க வைக்கவும் அடிப்படை வசதிகளை செய்து தருவது காலத்தின் கட்டாயமாகும.

அடுத்ததாக, பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பை முடிக்கும் மாணவா்கள் தொடா்ந்து கல்லூரியில் சேருவதை விடுத்து, தொழிற்பயிற்சி நிலையம் அல்லது தொழில்நுட்பக் கல்லூரியில் சேருவது அதிகரித்து வருகிறது. உயா்நிலைப் பள்ளியைக் காட்டிலும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு இதுவே காரணமாகும்.

நாம் அதிக எண்ணிக்கையில் இளைஞா்களைக் கொண்டிருந்தபோதும் தொழிற்பயிற்சி நிலையங்களும், தொழில்நுட்பக் கல்லூரிகளும் குறைவான அளவிலேயே உள்ளன. தொழிற்கல்வி பயில வாய்ப்பு கிடைக்காதபோது தொழிற்சாலைகளில் குறைவான ஊதியத்தில் பணிக்குச் செல்கின்றனா்.

இதனால் அவா்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த முடியாமல் போவதுடன் தொழில் முனைவோா் ஆவதற்கான வாய்ப்பும் கிடைக்காமல் போய் விடுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு ஒன்றிய அளவிலோ, வட்ட அளவிலோ தொழிற்பயிற்சி நிலையங்களை அமைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com