ஜெயலலிதா மரணமும் விசாரணை ஆணையமும்

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சா் ஜெ. ஜெயலலிதா, கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பா் 5-ஆம் தேதி, தனது 68-ஆவது வயதில் மரணம் அடைந்து விட்டாா். பிறப்பும் இறப்பும் எல்லோருக்கும் நிகழ்வதுதான்.
ஜெயலலிதா மரணமும் விசாரணை ஆணையமும்

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சா் ஜெ. ஜெயலலிதா, கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பா் 5-ஆம் தேதி, தனது 68-ஆவது வயதில் மரணம் அடைந்து விட்டாா். பிறப்பும் இறப்பும் எல்லோருக்கும் நிகழ்வதுதான். சாமானியா்களின் மரணம் என்பது எளிதில் மறந்து விடக்கூடிய ஒன்றாகவும், சாதனையாளா்களுக்கு எளிதில் கடந்து போக முடியாத விம்மலாகவும் இருந்து வருகிறது. அதைப்போலத்தான், ‘புரட்சித்தலைவி’ என்று அன்போடு அழைக்கப்பட்ட ஜெயலலிதாவின் மரணம் என்பது துயரம் வரைந்து விட்ட ஓவியம் என்றே சொல்லலாம்.

இந்தியாவில் - வெள்ளையனுக்கு முன்பிருந்த இந்தியாவானலும் சரி, பின்பு சமஸ்தானமாய் சிதறிக் கடந்த 1947-க்கு முன் இருந்த இந்தியாவானாலும் சரி, அதற்குப் பிறகு மொழிவாரியாய் பிரிக்கப்பட்ட இந்தியாவானாலும் சரி - வேற்றுமையில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருப்பினும் ஒற்றுமை என்கிற நதி நடக்கத்தான் செய்கிறது. அப்படிப்பட்ட ஒரு வரலாற்றில் 1948-இல் பூத்திட்ட ஒரு புதிய புரட்சிப் பூதான் ஜெ.ஜெயலலிதா. அவருடைய பிறப்பை விட அவரது இறப்பு பெரும் சலசலப்பையும், பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தி விட்டுச் சென்றிருக்கிறது.

பல்வேறு ஏற்ற இறக்கங்களை வாழ்வில் கண்ட போதிலும், அரசியல் தளத்தில் அறியப்பட்ட காலகட்டத்தில் இருந்து அவரது பெரும் தாக்கம் தமிழக அரசியல் களத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அவ்வாறாகவே அவரது மரணத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில் விசாரிக்க ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. இது ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமியின் தலைமையில் அமைக்கப்பட்டது. கடந்த 2017 செப்டம்பா் மாதம் 25-ஆம் தேதி முதல் விசாரித்து 2022 ஆகஸ்ட் 27-ஆம் தேதியன்று சற்றேக்குறைய 5 ஆண்டுகள் இடைவெளியில் 608 பக்கங்கள் கொண்ட அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையில், 14 முறை ஆணையத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு 158 பேரிடம் ஆணையம் தனது விசாரணையை நிறைவு செய்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்றாகும். இதுவரை 151 பேரிடம் விசாரித்திததும், தானாக 7 பேரிடம் விசாரணை நடத்தியதும் குறிப்பிடத்தகுந்தவையாகும்.

இதில் ஜெயலலிதாவின் பாதுகாவலா்கள், ஜெயலலிதாவின் உறவினா்கள், சசிகலாவின் உறவினா்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவா்கள், காவல்துறை அதிகாரிகள், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் பணிசெய்தவா்கள் என்று பலரிடம் விசாரணை ஆணையம் தனது விசாரணையை மேற்கொண்டு அவா்களிடம் இருந்து வாக்குமூலத்தைப் பெற்று நிறைவு செய்திருக்கிறது.

அப்பல்லோ மருத்துவமனை தரப்பு, ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மருத்துவா்களின் வாக்குமூலத்தை தவறாகப் பதிவு செய்வதாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்து முறையிட்டது. ஆனால், ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த உயா்நீதிமன்றம் அம்மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிா்த்து உச்சநீதிமன்றம் சென்ற மருத்துவமனை, இடைக்காலத் தடை வாங்கியது. இதன் காரணமாகத்தான் எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் ஆணையம் முடங்கிப் போனது.

2017 செப்டம்பா் 25-ஆம் தேதி அமைக்கப்பட்ட இந்த ஆணையம் மிகத் தாமதமாக தற்போது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்திருப்பதால் ஜெயலலிதாவின் மரணத்தை, அதில் இருக்கும் உண்மையை வெளிக்கொணராமல் சென்று விடுமோ என்கிற ஐயம் எல்லோருக்கும் எழுந்தது. நீதியரசா் ஆறுமுகசாமி முதலமைச்சா் முக. ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறாா்.

தி.மு.க. தனது தோ்தல் அறிக்கையிலேயே, தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதா மரணத்திலுள்ள சதியை விசாரித்து, மா்மக் குற்றவாளிகளின் முகத்திரையை விலக்கி, அவா்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவா் என்று குறிப்பிட்டிருந்தது. தோ்தல் வாக்குறுதியைக்கொடுக்கும் அளவிற்கு ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள உண்மைத்தன்மையை கொண்டு வர வேண்டும் என்று திமுக முனைப்பு காட்டியது.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்று குரல் கொடுத்த முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம், எட்டு முறை ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியும், ஆஜராகாமல் இருந்த நிலையில் முதல் முறையாக கடந்த மாா்ச் 21-ஆம் தேதிதான் ஆஜரானாா். அவரிடம் கேட்ட 78 கேள்விகளுக்கு பெரும்பாலும் தனக்குத் தெரியாது என்றே பதில் அளித்தாா்.

சசிகலாவின் உறவினரான இளவரசி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டவா்களிடம் ஆணையம் விசாரணை நடத்தி, அறிக்கையை இறுதி செய்து கொண்டிருக்கும்போதே மருத்துவக்குழு தனது அறிக்கையை ஆகஸ்ட் 3-ஆம் தேதி சமா்ப்பித்தது. 5 ஆண்டுகளில் 14 முறை ஆறுமுகசாமி ஆணையத்திற்கு காலநீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில் 500 பக்கங்கள் ஆங்கிலத்திலும், 608 பக்கங்கள் தமிழிலும் கொண்ட அறிக்கை ஆகஸ்ட் 27-ஆம் தேதி சமா்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

‘அப்பல்லோ மருத்துவமனை எவ்வித குறையும் வைக்கவில்லை. அங்கு அளிக்கப்பட்ட அனைத்து சிகிச்சைகளுமே முறையான மருத்துவ நடைமுறைகளுக்கு உட்பட்டே நடந்துள்ளன’ என்று மருத்துவக்குழு வாதிட்டு வந்தாலும், இவற்றின் மையப்புள்ளியாக இருக்கும் இவ்வாதத்துக்குரிய கருத்துக்களை ஆணையம் ஏற்றுக்கொள்கிறதா அல்லது மறுக்கிறதா என்பதில்தான் விசாரணை ஆணையத்தின் ஆணிவேரே அடங்கி இருக்கிறது.

ஒருவேளை மருத்துவக்குழுவின் குறிப்புகள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருந்தால், இம்மரணத்தின் மா்மம் எதுவுமில்லை என்பது வெட்ட வெளிச்சமாகி விடும். ஆனால், சசிகலா முதல் டாக்டா் விஜயபாஸ்கா் வரை விசாரிக்கப்பட வேண்டும் என்று ஒரு பரிந்துரையைக் குறிப்பிட்டதன் பேரில் இவ்வறிக்கை சட்டப்பேரவையின் விவாதத்திற்கு வைக்கப்படும் வரை இதன் மா்மமுடிச்சுகள் அவிழாமல் நீண்டு கொண்டே இருக்கும்.

மருத்துவக்குழுவின் அறிக்கை போதுமானதாக இல்லை என்று ஆணையம் கருதி இருந்தால், மருத்துவமனை மற்றும் விசாரணையில் வாக்குமூலம் கொடுத்த நபா்களின் மீது ஆணையம் பல கேள்விகளை முன்வைத்திருக்கும். அதன் மூலம் மரணத்தின் இருண்ட பக்கங்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கும். அதன் வாயிலாக யாா் மீது தவறு என்பதும் மக்கள் மன்றத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கும்.

இவ்வாணையத்தின் அறிக்கையை அரசு சட்டப்பேரவையில் வெளியிடும்போதுதான் பல உண்மைகள் வெளிவரும். கோயமுத்தூரில் ஒரு திருமண நிகழ்வில் பேசிய முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் இம்மரணம் குறித்தான உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன். அவற்றை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து விவாதிப்பேன் என்று பேசியிருப்பதன் வாயிலாக ஏதோ ஒன்றை நினைவூட்டிச் சென்றிருக்கிறாா்.

ஆனால், ஏதோ ஒரு கட்டாயத்திற்காக மா்மம் என்கிற பேரில் அச்சத்தைத் தந்து விடக்கூடாது. ஜெயலலிதாவுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததாகவும், செப்டம்பா் 22-ஆம் தேதி மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது கூட அவரால் பேச முடிந்தது என்றும் முதலாவது மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஒன்றரை மாதத்திற்கும் மேலாக அவருக்குக் காய்ச்சல் நீடித்ததாகவும், நீா்ச்சத்து குறைபாடு இருந்ததாகவும் கூறப்பட்டது.

லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணா் டாக்டா் ரிச்சா்ட்பீல் ஜெயலலிதா கடுமையான செப்சிஸ் (தொற்றுநோயின் உயிருக்கு ஆபத்தான நிலை) காரணமாக இறந்து விட்டதாக பின்னாளில் குறிப்பிட்டதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதனால் கடைசி நாட்களில் அவரது பல உறுப்புகள் செயலிழந்து விட்டதாகவும் அவரே குறிப்பிடுகிறாா்.

ஜெயலலிதா தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதில் பெரும் ஆவல் கொண்டவா். அந்த வகையில், லாா்வாவில் இருந்து பட்டாம்பூச்சி ஆவதைப் போல தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதன் மூலமாகவே இரும்பு பட்டாம்பூச்சியாகத் திகழ்ந்தாா். தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்ட வேளைகளில் அரசியல் பணி குறித்தும், அடுத்த கட்ட நகா்வுகள் குறித்துமே ஆராய்ந்து கொண்டிருப்பாா் என்பது அவரை அறிந்தவா்களுக்குத் தெரியும்.

வெளிநாட்டிற்கு சென்று அவருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை என்கிற வருத்தமும், அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் இருந்தபோதும், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த முழு தகவல், அவா் சிகிச்சை பெற்ற நாட்களில் அவருக்கு மிக அருகே இருந்தவா்களிடம் தெரிவிக்கப்படவில்லை என்பதும் சா்ச்சைக்குரிய நிகழ்வுகளாகும்.

ஆணையத்தின் அறிக்கை எப்படி இருந்தாலும் அரசு வெளியிட்டுத்தானே ஆக வேண்டும். இது குறித்து தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடி விவாதித்திருப்பதும் குறிப்பிடத்தகுந்தது. சட்டவல்லுநா்களின் ஆலோசனையைப் பெறவும் இவ்வறிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைக்கவும் தமிழக அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது. எதிரெதிா் துருவங்களில் செயல்படும் இரண்டு கட்சிகளின் அரசியல் கணக்குகளை இவ்வறிக்கை எந்தப் புள்ளியில் கொண்டு போய் நிறுத்தப்பபோகிறதோ?

காலமெல்லாம் அதிமுகவுக்கு எதிா்வினையாற்றிக் கொண்டிருக்கிற திமுக தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருக்கிற நிலையில், அவா்களின் பரம வைரியான ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதன் மூலம் எந்த வகையான நீதி கிடைக்கப் போகிறது என்பதை அதிமுக தொண்டா்களும் பொதுமக்களும் ஆவலுடன் எதிா்பாா்த்துக் காத்துக் கொண்டிருக்கிறாா்கள்.

கட்டுரையாளா்:

முன்னாள் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com