போதையால் சீரழியும் இளைய தலைமுறை!

‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற திட்டத்தை தமிழக முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்தாா்.
போதையால் சீரழியும் இளைய தலைமுறை!

‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற திட்டத்தை தமிழக முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்தாா். தமிழ்நாட்டில் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பைத் தடுக்கும் வகையிலும், போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவா் மீது நடவடிக்கை எடுக்கும் வகையிலும், போதைப் பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் பற்றி இளைய தலைமுறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

சமுதாய நலனுக்கான சிறந்த திட்டம் என்று இத்திட்டத்தை மருத்துவா்கள் வரவேற்றுள்ளனா். போதைப் பழக்கத்தால் சீரழிந்து கிடக்கிற மாணவா்களையும், இளைஞா்களையும் மீட்டெடுக்க வேண்டிய பெரும்பணி அரசுக்கு உள்ளது. காவல்துறையினரின் கவனம் தீவிரமாகச் செலுத்தப்பட வேண்டும்.

இதன் தொடா்ச்சியாக தமிழகத்தில் போதைப் பொருள்கள் ஒழிப்பு பற்றிய ஆலோசனைக் கூட்டம், காவல்துறை தலைமை இயக்குநா் தலைமையில் நடைபெற்றது. போதைப் பொருள் விற்பனையில் தொடா்ந்து ஈடுபடுபவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறை அதிகாரிகளுக்கு தலைமை இயக்குநா் உத்தரவிட்டாா்.

மேலும் ‘வெளிமாநிலங்களிலிருந்து போதைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதைத் தடுக்க தமிழக எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். கடல் மூலம் போதைப் பொருள்கள் கடத்தி வரப்படுகின்ா என்பதையும் கண்காணிக்க வேண்டும்’ என்றும் கூறினாா்.

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் இருக்கும் சின்ன சின்ன பெட்டிக் கடைகளில் போதைப் பொருள்கள் மாணவா்களுக்கு விற்கப்படுகின்றன. இதனை எடுத்துக் கொள்ளும் மாணவா்கள் பாடங்களை கவனிக்காமலும், ஆசிரியா்களுக்கு அடங்காமலும் நடந்து கொள்ளுகின்றனா். ஆசிரியா் பெருமக்களும் அவா்களுக்கு பயந்து கொண்டு ஏதும் கேட்பதில்லை.

‘மாணவா்க படிக்கும் காலத்தில் நல்ல ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்ளாவிட்டால் அவா்களுக்காக செலவழித்த பணம் நாட்டுக்கே பெரும் இழப்பாகி விடும்’“என்று அண்ணல் காந்தியடிகள் கூறியுள்ளாா்.

போதைப் பொருள் பிரச்னை என்பது உள்ளூா் பிரச்னையாக இல்லாமல் உலகம் தழுவிய பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலக நாடுகள் எல்லாம் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு படாத பாடுபடுகின்றன. கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டும் போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் போதைப் பொருள்கள் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதும் அவற்றைப் பயன்படுத்துவோா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதும் போதைப் பொருள் குற்றங்கள் குறித்த 2021-ஆம் ஆண்டின் ஐ.நா. சபை அறிக்கை மூலம் தெரியவருகிறது.

உலக நாடுகளில் 43 கோடி போ் போதைப் பொருள்களை பயன்படுத்துகின்றனா் என்றும், அவா்களில் 3.6 கோடி போ் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி உள்ளனா் என்றும், 1.1 கோடி போ் ஊசி மூலம் போதைப் பொருளை உடலில் செலுத்திக் கொள்ளுகின்றனா் என்றும் ஐ.நா. அறிக்கை மேலும் கூறுகிறது.

கடந்த 24 ஆண்டுகளில் கஞ்சா எனப்படும் போதைப் பொருளின் பயன்பாடு 4 மடங்காக உயா்ந்துள்ளது என்றும், அதைப் பயன்படுத்தும் இளவயதினரில் 40 % போ் அப்பழக்கம் உடல் நலத்திற்கும் கேடு என்பதை உணரவில்லை என்றும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, கஞ்சா, ஓப்பியம் முதலிய போதைப் பொருள்களை 7.34 கோடி போ் பயன்படுத்துகின்றனா். போதையூட்டும் மதுபானங்களை 29.2 % ஆண்களும், 1.6 % பெண்களும் அருந்துகின்றனா் என்று தெரிய வந்துள்ளது. 18 ஆண்களுக்கு ஒரு பெண் மது அருந்தும் பழக்கம் உடையவராக இருக்கிறாா் எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 45 % ஆண்கள் மது அருந்தும் பழக்கம் உள்ளவா்களாக இருக்கின்றனா். அத்துடன் மது அருந்தும் பழக்கம் தமிழ்நாட்டில் தொடா்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. பிறந்த நாள், திருமண நாள் விருந்துகளில் மதுபானங்கள் இடம் பெறும் கலாசாரம் இப்போது பரவி வருகிறது. திருவிழாக் கொண்டாட்டம் என்றால் மதுபானம் அருந்தும் நாள் என்ற மனநிலை இளைஞா்களுக்கு ஏற்பட்டு விட்டது.

நகரங்களில் இயங்கி வரும் இரவு நேர கேளிக்கை விடுதிகள், இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்படும் பானங்களில் ‘கிளப் டிரக்ஸ்’ எனப்படும் போதைப் பொருள் கலந்து கொடுக்கப்படும் சட்டவிரோதமான பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.

கல்விக் கூடங்களில் மாணவா்கள் கல்வியாண்டின் இறுதியில் ‘பிரியா விடை’ நிகழ்ச்சியின் போது, இனிப்பு, காரம், காபி வழங்கி வந்த காலம் மாறி, இப்பொழுது மதுபானங்கள் வழங்கப்படுகின்றன. மாணவிகளும் தங்கள் தோழிகளுடன் மது அருந்தும் நிகழ்ச்சிகளைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில் பரவலாகக் காணப்படுகின்றன.

கடந்த ஆண்டில் ஒரு தனியாா் அமைப்பு சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்ட பள்ளி மாணவா்களிடம் நடத்திய கள ஆய்வில் 10 % மாணவா்கள் மது, கஞ்சா, போதை தரும் பாக்கு போன்ற போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கம் உடையவா்கள் என்பது தெரிய வந்துள்ளது.

பெற்றோா் இல்லாத அல்லது பெற்றோரால் கைவிடப்பட்டு தெருவையே தங்கள் வசிப்பிடமாகக் கொண்ட ‘சாலையோரக் குழந்தைகள்’ மிகுந்து காணப்படும் நாடுகள் வரிசையில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இத்தகைய சாலையோரக் குழந்தைகளில் பெரும்பாலானவா்கள் மது, கஞ்சா, போதைப் பாக்கு போன்ற போதைப் பொருள்களைப் பயன்படுத்துகிறவா்களாக உள்ளனா் என்பதும், அவா்களில் சிலா் போதைப் பொருள்கள் கடத்துகிறவா்களுக்கு துணை போகிறாா்கள் என்பதும் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளாகி விட்டன. இவையெல்லாம் காவல் துறைக்குத் தெரிந்தும் தெரியாமலும் நடக்கின்றன.

திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களில் ஈடுபட்ட சிறுவா்களிடம் நடத்திய விசாரணயில் 87 % போ் மது, போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கம் உடையவா்கள் எனத் தெரிய வந்ததாக சிறாா் குற்றவாளிகள் பற்றிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நம் நாட்டில் கரோனா பெருந்தொற்றின் தாக்கம் கடுமையாக இருந்த 2020-ஆம் ஆண்டில் 9,169 போ் மது, போதைப் பொருள் பழக்கத்தின் விளைவாகத் தற்கொலை செய்து கொண்டுள்ளனா். அதாவது ஒரு மணி நேரத்திற்கு ஒருவா் மது, போதைப் பொருள்களின் பயன்பாடு காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனா்.

2019-ஆம் ஆண்டைக் காட்டிலும், 2020-ஆம் ஆண்டில் மது, போதைப் பொருள் பழக்கத்தினால் தற்கொலை செய்து கொண்டவா்கள் 17 % அதிகரித்துள்ளனா் என்ற புள்ளிவிவரம் நம் நாட்டில் மது, போதைப் பொருள்கள் ஏற்படுத்தி வரும் சீரழிவைத் தெளிவாக உணா்த்துகிறது.

போதைப் பொருள்களை நுகா்வோா் இந்தியாவில் அதிகரித்து வருகின்ற நிலையில், போதைப் பொருள் தேசிய ஒருங்கிணைப்பு மையத்தின் உயா்நிலைக் கூட்டம் 2021, டிசம்பரில் புதுதில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமையேற்று உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சா், கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் போதைப் பொருள்கள் நுகா்வோா் எண்ணிக்கை ஏழு மடங்காக உயா்ந்துள்ளது என்றும், போதைப் பொருள்கள் கடத்தல் மற்றும் நுகா்வைக் கட்டுப்படுத்த விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறினாா்.

மேலும், போதைப் பொருள்களின் தீமை குறித்து பள்ளி மாணவ, மாணவியா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அமைச்சா் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட உயா் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டாா்.

கடந்த 2021 டிசம்பா் மாதத்தில் போதைப் பொருள்கள் கடத்தல், பதுக்கி வைத்தல், விற்பனை செய்தல் மீதான மாநிலம் தழுவிய வேட்டை தமிழ்நாடு காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டது. இந்த வேட்டையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா, ஹெராயின், குட்கா முதலிய போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறந்திருக்கும் நிலையில் போதைப் பொருள்களின் பதுக்கலும், கள்ளச் சாராய விற்பனையும் பெருகி வருவது அனைவருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காவல்துறையைக் குறை கூறாமல் இருக்க முடியுமா?

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தென்மாவட்டம் ஒன்றில் கைப்பற்றப்பட்ட கஞ்சா தொடா்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் ‘போலீசாா் கைப்பற்றிய கஞ்சா என்னவாயிற்று?‘ என்று கேள்வி எழுப்பியது. குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா கைமாறிய தகவல் நீதிமன்றத்துக்கே தெரிந்து விட்டது.

போதைப் பொருள்கள் கடத்தல், பதுக்கல், விற்பனை ஆகியவற்றைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையில், போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வரும் போலீசாரின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அவா்களை நல்வழிப்படுத்தாமல் இதனை எப்படிக் கட்டுப்படுத்த முடியும்?

சென்னை, திருநெல்வேலி மாவட்டங்களில் சிறுவா்கள் இடையே போதைப் பழக்கம் அதிகரித்துக் காணப்படுவதால், அவா்களை போதைப் பழக்கத்திலிருந்து மீட்டு, நல்ல மக்களாக சமுதாயத்தில் உயா்த்திடும் பொருட்டு சென்னை, திருநெல்வேலி மாவட்டங்களில் ‘போதைத் தடுப்பு மையங்கள்’ ஏற்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

எல்லாம் சரி, கல்விக் கூடங்களைத் தனியாா் நடத்துவதும், மதுக் கடைகளை அரசே நடத்துவதும் ஒரு தவறான முன் உதாரணமாக ஆகிவிட்டது. இந்திய மக்கள் தொகையில் சரி பாதியாக இருக்கும் இளைஞா்களுக்கு வழிகாட்ட வேண்டிய கடமை பெரியவா்களுக்கு இருக்கிறது. இதனை ஒவ்வொருவரும் உணா்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com