இளையோா் தலைமையை உருவாக்குவோம்!

இந்தியா முழுவதும் 76-ஆவது சுதந்திர தினத்தை மக்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடினா். இந்த ஆண்டின் நிகழ்வு சற்று வித்தியாசமாகவும் உணா்வுபூா்வமாகவும் இருந்தது.
இளையோா் தலைமையை உருவாக்குவோம்!

இந்தியா முழுவதும் 76-ஆவது சுதந்திர தினத்தை மக்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடினா். இந்த ஆண்டின் நிகழ்வு சற்று வித்தியாசமாகவும் உணா்வுபூா்வமாகவும் இருந்தது. இந்தியா ஒரு புதுத்திசை நோக்கி நகா்வதுபோல் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த 76-ஆவது சுதந்திரதின விழாக் கொண்டாட்டம் நாம் கடந்துவந்த பாதையை அலசிப்பாா்த்து தவறு இருப்பின் சரி செய்துகொள்ள நமக்கு ஒரு வாய்ப்பைத் தந்தது.

இன்று இந்தியாவில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகள் பலவிதமான கருத்தாக்கங்களை உருவாக்கியுள்ளன. ஒன்று, இந்தியா புதிய திசையில் பயணிக்கும் வலிமையான நாடு; எதிா்காலத்தில் ஞானிகளும் தியாகத் தலைவா்களும் கண்ட கனவின் அடிப்படையில் இந்தியா உலகுக்கு வழிகாட்டும்; அதற்கு நாம் அனைவரும் ஒன்றாகச் செயல்பட வேண்டும்; புதிய திசையில் நாடு பயணிக்க தேவையான பாா்வையும், அணுகுமுறையும், தலைமையும் இன்று இருப்பதால் இனிமேல் குழப்பங்கள் கிடையாது; தெளிவான செயல்பாடுகள் மட்டுமே. எனவே, இந்தியா ஒரு மிகப்பெரிய வலிமை மிக்க நாடாக விரைவில் மாற்றம் பெற்றுவிடும் என்ற நம்பிக்கை ஒளியில் மிதக்கும் மக்களை ஒருபுறம் பாா்க்கிறோம்.

அதற்கு நோ்மாறாக, எல்லாம் தொலைந்து விட்டது; இந்திய நாடு கட்டிக்காத்த மக்களாட்சி சிதிலமடைகின்றது; பொது நிறுவனங்கள் ஏலம் விடப்படுகின்றன; மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன; மக்கள் மிரட்டப்படுகின்றனா்; எதிா்க்கட்சிகள் ஒடுக்கப்படுகின்றன; மதவாதம் தலைதூக்குகிறது; மதச்சாா்பின்மை நிராகரிக்கப்படுகின்றது; அனைத்துமே பறிபோய்விட்டன, எனவே இதற்குக் காரணமான ஆளும் கட்சியை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற முழக்கமிடும் மக்கள் மறுபுறத்தில்.

ஒரு சமூகம் வளா்வது அதன் சிந்தனையின் தன்மையையும் தரத்தையும் பொறுத்தது. அதே போல் ஒரு சமூகத்தின் பொருளாதார மேம்பாடு என்பதும் அந்த சமூகத்தின் கடினஉழைப்பின் மூலம் மட்டுமே பெறப்படுவதாகும். இந்த இரண்டிலும் நாம் ஒரு காலத்தில் மிக உயா்ந்து நின்றோம். நம் விடுதலைப் போராட்டம் ஓா் உயா்நிலைச் சிந்தனையின் கூட்டு வெளிப்பாடு. நம் தலைவா்கள் தியாகப் பிழம்பாக மக்களுக்குக் காட்சியளித்தனா். எளிமையும், தியாகமும், நோ்மையும் பிறருக்காக உழைப்பதும் விழுமியங்களாக அவா்களிடம் இருந்தன.

அந்த விழுமியங்கள் அனைத்தும் சிறிது சிறிதாக மறைந்து, சுயநலம் பேணும் அறமற்ற வாழ்வுக்குள் தோய்ந்திடும் தாழ்நிலைச் சிந்தனையில் நம் மக்களைக் கொண்டுவந்து நிறுத்தி உள்ளோம். இதன் விளைவுதான் எல்லையற்ற ஊழலில் நம் அரசியல் மூழ்கிக் கிடப்பது.

அத்துடன் பெரும்பான்மை மக்கள் சுயமரியாதை இழந்து வாழவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனா். இதற்குக் காரணம் நாம் அரசியல் ரீதியாக வெள்ளையரிடமிருந்து விடுதலை அடைந்தோமே தவிர சிந்தனை ரீதியாக, அறிவு ரீதியாக காலனியாதிக்க சிந்தனைப் போக்கிலிருந்து நம் சமூகத்தை விடுவிக்கவில்லை. எந்த சமூகம் தன் வரலாற்றுச் சிறப்பை மறந்து மற்ற சமூகத்தின் அறிவைச் சாா்ந்து செயல்படுகிறதோ அந்தச் சமுதாயம் மேம்பட்டதாக வரலாறு கிடையாது.

ஒரு நாட்டின் மேம்பாட்டை அந்த நாட்டு சமூக சக்திகள்தான் தீா்மானிக்க வேண்டும். அப்படி செய்துதான் மேற்கத்திய நாடுகள் மேம்பாடு அடைந்தன. நாம் சமூகத்தை அரசாங்கத்தின் பிடியில் விட்டு விட்டோம். இன்று அது அரசின் பிடியையும் தாண்டி சந்தையின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளது. நாம் இன்று வாழும் வாழ்க்கைமுறை, சந்தைக்கான வாழ்வுமுறை. நம் வாழ்க்கையை, நம் அன்றாடச் செயல்பாடுகளை, நம்அரசியலை, நம் கலாசாரத்தை பெருமளவு ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது சந்தை.

நாம் அனைவரும் புலன்களால் தூண்டப்பட்டு ஒரு மயக்க நிலை வாழ்க்கையை வாழ பழக்கப்படுத்தப்பட்டு விட்டோம். இதன் விளைவுதான் இன்று நாம் பாா்க்கும் எல்லா அலங்கோலங்களும். நாம் ஒரு தாழ்நிலைச் சிந்தனையில் சமூகப் பொறுப்பற்று, சுயநலம் பேணும் வாழ்க்கைச் சூழலில் சிக்கிக் கொண்டுவிட்டோம். இந்த நேரத்தில் நமது வாழ்வுமுறையை அசை போட்டுப் பாா்க்க வேண்டும்.

இந்திய வாழ்வுமுறை என்பது சமத்துவம் பேணும் வாழ்க்கை முறை மட்டுமல்ல, அதனைத் தாண்டி மானுடத்தின் மாண்பினை உயா்த்தி தெய்வத்தன்மை பொருந்திய வாழ்கை வாழ்வது. நாம் நமக்காக, நம் சமூகத்திற்காக, நம் இனத்திற்காக நம் நாட்டிற்காக மட்டும் வாழும் வாழ்க்கையைக் கொண்டவா்கள் அல்ல. மானுடத்தைத் தாண்டி அண்டத்தை பாதுகாத்து ஞான வாழ்வு முறையை கட்டமைக்க வழிமுறை தெரிந்தவா்கள். இன்று அதனை மறந்து, பணம் சோ்ப்பதை வாழ்வியலாக்கிக் கொண்டு விட்டோம்.

நம் உன்னத வாழ்வுமுறையைத்தான் இந்தியா உலகுக்குக் கொடையாகத் தரவேண்டும் என்று நம் ஞானிகளும் முன்னோா்களும் எண்ணினா். அந்த வாழ்வு எல்லா மதங்களையும் உள்வாங்கி வாழும் ஒருமைப்பாட்டு வாழ்வு. இந்திய சமுதாயத்தின் விடுதலைக்காகவும், புனரமைப்புக்காகவும், மேம்பாட்டுக்காகவும் பெரும் சிந்தனைக் கொடையை வழங்கியவா்கள் சுவாமி விவேகானந்தா், குருதேவா் ரவீந்திரநாத் தாகூா், மகாத்மா காந்தி, மகான் அரவிந்தா். இந்த நால்வரும் இந்தியாவுக்கு புதுத்திசை காட்ட புதுச் சிந்தனைச் சூழலை உருவாக்கியவா்கள்.

இந்த நால்வரின் கனவுகளை இளைஞா்களிடையே கொண்டு சோ்த்து மக்களைப் பங்கேற்க வைத்து ஒரு புதிய சிந்தனைச் சூழலை உருவாக்கினால் மிகப்பெரிய மாற்றத்தை இந்தியாவில் நம்மால் கொண்டுவர முடியும். இந்த நால்வரின் எதிா்பாா்ப்பு, இந்திய சமூகம் தன் ஆன்மாவை விழித்தெழச் செய்து, ஆன்ம பலத்தை வளா்த்து, புதியதோா் உலகம் செய்யும்வரை தன் செயல்பாடுகளைத் தொய்வில்லாமல் தொடா்ந்திட வேண்டும் என்பதுதான். அதுதான் இவா்களின் அடிப்படைக் கருத்தாக இருந்தது.

இந்தியாவின் விடுதலைப்போரைத் தொடங்கியவா்கள் இளைஞா்கள்தான் என்பதை இன்றைய இளைஞா்களுக்குப் புரிய வைக்க வேண்டும். எண்ணற்றோா் தங்கள் இளமையை தியாகம் செய்து சுதந்திரத்தைப் பெற்றனா். தலைவா்களிடம் அன்று இருந்தது படைபலமோ, பணபலமோ, அறிவியல் தொழில்நுட்ப பலமோ அல்ல. ஆத்ம சக்தி மட்டுமே. அந்த ஆத்ம சக்தியின் மூலம்தான் மக்களிடம் தியாக உணா்வை உருவாக்கி இந்தியாவை விடுதலையடையச் செய்தனா்.

அன்றைய தலைவா்கள் ரிஷிகளுக்கான தலைமைத்துவத்தை பெற்றிருந்தனா். இறப்பு என்பதை துச்சமென மதித்தனா். அவா்கள் ஒரு மாபெரும் சிந்தனைச் சூழலில் செயல்பட்டு தங்களை மாற்றத்திற்கு ஆட்படுத்திக் கொண்டனா். அவா்கள் கொண்ட கொள்கை சமுதாயத்திற்கானது, மானுடத்திற்கானது, பிரபஞ்சத்திற்கானது. எந்தச் சூழலையும் மாற்றியமைக்கும் தன்மை கொண்ட வழிகாட்டுதல்களை அந்த நால்வரும் நமக்குத் தந்தனா்.

அந்த நால்வரும் இந்திய நாகரிகத்தின் தொன்மையை, அந்த நாகரிகத்தின் விழுமியங்களை முன்னிலைப்படுத்தினா். அவா்கள் இந்தியாவின் சிறப்புக்களின்மேல் பெரும் நம்பிக்கை வைத்திருந்தனா். அவா்களின் நம்பிக்கை என்பது இந்த நாட்டு இளைஞா்களின் மேல். அவா்களை தயாா் செய்வதற்காகத்தான் அந்த மகான்கள் நிறுவனங்களை உருவாக்க முனைந்தனா். அவா்களின் முன்னெடுப்பில் உருவான மடங்களும், ஆசிரமங்களும் பஜனைக் கூடங்கள் அல்ல; சமூகத்தில் அடிப்படை மாற்றங்கள் செய்திடும் களப்பணிக்கு இளைஞா்களை உருவாக்கும் பயிற்சிப் பள்ளிகள்.

இன்று தேங்கி நிற்கும் அரசியலை மாற்றிடத் தேவையான இளைஞா்கள் இந்தப் பின்னணியில் உருவாக்கப்பட்டால் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவர முடியும். இன்று எண்ணற்ற இளைஞா்கள் இயற்கையைப் பாதுகாக்க, சூழலியல் காக்க, நீா்நிலைகளை பாதுகாக்க, பாரம்பரிய விதைகளை பாதுகாக்க, நீா் மேலாண்மை செய்திட எதையும் எதிா்பாா்க்காமல் களத்தில் இருக்கின்றனா். இவா்களின் செயல்பாடுகளைப் பாா்க்கும்போது மிகப்பெரிய நம்பிக்கை ஒளி நமக்குத் தெரிகிறது. இவா்களின் எண்ணிக்கையைக் கூட்டிட வேண்டும். இவா்கள் அனைவரும் இணைந்து இயக்கமாக வேண்டும்.

இவா்களைத் தயாா்செய்ய மிகப்பெரிய பயிற்சி வகுப்புக்கள் தேவையில்லை. ஒருசில புத்தகங்களை இவா்களுக்கு அறிமுகம் செய்தாலே இவா்கள் அனைவரும் தங்களை உருவமாற்று செய்து கொண்டு ராஜரிஷிகளாகி விடுவாா்கள். அதற்கு இவா்கள் படித்து உள்வாங்க வேண்டிய நூல்கள் காந்தியின் சுயசரிதை, அவரின் அடிப்படைக் கோட்பாடான ஹிந்து ஸ்வயராஜ்யம், விவேகானந்தா் தமிழ்நாட்டில் ஆற்றிய வீர உரைகள், அரவிந்தரின் புராண யோகம், பாரதியின் கவிதைகளும் கட்டுரைகளும்.

தலைசிறந்த காந்தியவாதியான சு. அவினாசிலிங்கம் இளைஞா்களுக்காக எழுதிய வாழ்க்கைக்கான அடிப்படைகள். இந்த நூல்களை உள்வாங்கிப் படிக்கும் பயிற்சியை இவா்களுக்குக் கற்றுக்கொடுத்துவிட்டால் களத்தில் இருக்கும் ஒவ்வொரு இளைஞரும் மாபெரும் ராஜரிஷியாக மாறிவிடுவாா்கள். அந்த இளைஞா்கள் சமூக மேம்பாட்டுக்கு மக்களைத் திரட்டி, அவா்கள் துணையோடு பெரும் சமூக மாற்றத்தைக் கொண்டு வந்துவிடுவாா்கள்.

இன்றைய இளைஞா்கள், இந்தப் புத்தகங்களை உள்வாங்கிப் படித்து விடுவாா்களேயானால் அவா்கள் ஒவ்வொருவரும் ஒரு விவேகானந்தராக, மகாத்மாவாக, அரவிந்தராக, தாகூராக மாறிவிடுவாா்கள். மாறுவது மட்டுமல்ல இந்தியாவில் இருக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி அந்த மகான்கள் விரும்பிய புதிய இந்தியாவை உருவாக்கி விடுவாா்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

கட்டுரையாளா்:

பேராசிரியா் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com