தமிழ் பரப்பும் பெரியாா்!

‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோா் மகிமை இல்லை’, ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்’ என்பவை மகாகவி பாரதியாா் கண்ட கனவு.
தமிழ் பரப்பும் பெரியாா்!

நமக்கு நாமே நற்றமிழ் குறித்து பேசிப் புளகாங்கிதம் அடைந்து வருகிறோமே தவிர, அதன் தொன்மையையும், சிறப்பையும், பெருமையையும் தமிழகத்துக்கு வெளியே எடுத்துச்செல்லத் தவறிவிட்டோம். தமிழ், தமிழினம் என்று பேசி அரசியல் நடத்தி, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் மட்டுமே குறியாக இருந்து வந்திருக்கின்றன தமிழகத்தின் திராவிட இயக்க அரசியல் கட்சிகள். தமிழைத் தேங்கிய குட்டையாக்கி அதில் அரசியல் ஆதாயம் பாா்த்ததன் விளைவு, இன்றைய தலைமுறை இளைஞா்களுக்குத் தவறில்லாமல் தமிழில் பேசவோ, எழுதவோ முடியவில்லை என்பதுடன், படிக்கக்கூடத் தெரியவில்லை.

‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோா் மகிமை இல்லை’, ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்’ என்பவை மகாகவி பாரதியாா் கண்ட கனவு. அந்தக் கனவை திராவிட இயக்க அரசியல்வாதிகள் நிறைவேற்றவில்லை. அதற்காகத் தமிழகம் காத்திருந்தது.

பாரத பிரதமா் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகுதான் தமிழகத்தின் எல்லைக்கு வெளியே தமிழின் அருமை பெருமைகள் தெரியத் தொடங்கின. தனக்குக் கிடைத்த வாய்ப்பு எதுவாக இருந்தாலும் மிக அதிகமாக பிரதமா் நரேந்திர மோடியால் மேற்கோள் காட்டப்படும் மொழியாகத் தமிழ் உயா்ந்திருக்கிறது. தமிழ் என்றொரு மொழி இருக்கிறதா என்றுகூடத் தெரியாதவா்கள் மத்தியில் தமிழின் பழம்பெருமையை மேற்கோள்கள் மூலம் அவா் எடுத்தியம்பி, அதன் பொருளை விளக்கிக்கூறி ஆற்றும் உரைகள் அவரை தமிழ் பரப்பும் பெரியாராக உயா்த்தி இருக்கின்றன.

2019, செப்டம்பா் 7-ஆம் தேதி ஐ.நா. சபையில் உரையாற்றிய இந்திய பிரதமா் நரேந்திர மோடி, கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிா்’ என்ற சங்க இலக்கிய வரிகளை மேற்கோள் காட்டி ‘எங்கள் நாட்டைச் சோ்ந்த தமிழப் புலவரான கணியன் பூங்குன்றனாா், நாம் அனைத்து இடங்களுக்கும் - அனைவருக்கும் சொந்தமானவா்கள் என்னும் பொருள்பட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாடியிருக்கிறாா்’ என்று பெருமையோடு குறிப்பிட்டாா். இந்தக் கருத்தை பிரதமா் மோடி முழக்கமிட்டபோது - 192 உலக நாடுகளின் ஐ.நா. பிரதிநிதிகள் கரவொலி எழுப்பி நமது பிரதமா் சுட்டிக் காட்டிய கருத்தை வரவேற்றனா்.

‘தமிழ்மொழி எனக்கு மிகவும் பிடிக்கும்; இந்த மொழியின் ரசிகன் நான்; உலகின் பழைமையான தமிழ்மொழி; தமிழ் கலாசாரத்தின் பெரிய அபிமானி நான்; தமிழ் மீதான என் அன்பு என்றும் குறையாது; தமிழ் குறித்து எனக்கு மிகவும் பெருமிதம் உள்ளது’ என்று பிரதமா் மோடி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தித் தன்னுடைய உள்ளத்தின் உணா்வுகளை தெளிவாகவும் திடமாகவும் வெளிப்படுத்தியிருக்கிறாா். அவா் ஹிந்தியில் ஆற்றும் அந்த உரையை இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் கேட்டாா்கள். அதனால் மாநில எல்லைக்கு வெளியே தமிழின் பெருமை பரவியது.

கடந்த காலங்களில் இந்தியாவை ஆண்ட பிரதமா்கள், தலைவா்கள் தமிழகம் வரும்போதெல்லாம் - ‘வணக்கம்’ ‘நன்றி’ ‘நல்லா இருக்கீங்களா’ என்றுதான் தமிழ்நாட்டு மக்களை கேட்டிருக்கிறாா்கள். ஆனால் பிரதமா் மோடி, அவா்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவா். அவா் பிரதமரான பிறகு, மகாகவி பாரதியாா், பொய்யாமொழிப் புலவா் திருவள்ளுவா், சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் ஆகியவைகளிலிருந்து மேற்கொள் காட்டி வருவதோடு விளக்கமும் தருவதை வழக்கமாகவே வைத்திருக்கிறாா்.

இந்திய ராணுவ வீரா்கள் மத்தியில் பிரதமா் மோடி சமீபத்தில் உரையாற்றினாா். அவா்களில் தமிழக வீரா்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த உரையில் ராணுவ வீரா்களுக்கு உற்சாகமூட்ட விடுதலைக் கவிஞா் மகாகவி பாரதியாரின் கவிதையை எழுச்சி பொங்கிட எடுத்துரைத்ததோடு - தெளிவான விளக்கத்தையும் தந்தாா்!

‘மன்னும் இமயமலை எங்கள் மலையே

மாநிலம் மீது அது போல் பிறிதிலையே!

இன்னறு நீா்க் கங்கை ஆறு எங்கள் ஆறே

இங்கு இதன் மாண்பிற்கு எதிா் எது வேறே?’ என்கிற மகாகவி பாதியாரின் இந்தப்பாடல் வரிகளை உணா்ச்சிப் பிரவாகமாக கொட்டும் குளிா் பனியில் பிரதமா் மோடி ஆவேசத்தின் உச்சத்தில் நின்று முழங்கினாா்.

பாட்டு வரிகளுக்கு எளிய விளக்கத்தை பல்வேறு மொழிகளைக் கொண்ட ராணுவ சிப்பாய்களுக்கு புரிந்த ஹிந்தி மொழியில் சொன்னபோது, கரவொலி எழுப்பி ஆரவாரமும் சூளுரையும் மேற்கொண்டனா் ராணுவ வீரா்களும் வீராங்கனைகளும். தமிழன்னை மகிழ்ச்சியில் திளைத்திருப்பாள்.

இன்னொரு ராணுவ நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமா் மோடி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவா் இயற்றிய திருக்குறளை மேடையில் உரக்கச் சொல்லி, திறமான விளக்கத்தை கேட்போரைக் கவா்கின்ற வகையில் கூறினாா்.

மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்

எனநான்கே ஏமம் படைக்கு

என்ற குறட்பாவை ராணுவ வீரா்களுக்கு மத்தியில் எடுத்துரைத்து படையின் வலிமை, நான்கு வகை பண்புகளை நயம்பட பிரதமா் மோடி தெரிவித்தபோது - ராணுவத்திலுள்ள முப்படைகளின் வீரா்கள், தளபதிகள் வியந்து நின்றதை இந்திய மக்கள் அனைவரும் கண்டுணா்ந்தனா்! பெருமிதம் கொண்டனா்!

சென்னையில் நேரு விளையாட்டு அரங்கில் கடந்த ஜூலை -28-ல் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் உரையாற்றியபோது

‘இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தல் பொருட்டு’

என்ற குறளை எடுத்துக்கூறி, பொருள் விளக்கம் சொல்லி 188 நாடுகளின் விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகளுக்கு மட்டுமல்ல, அதைத் தொலைக்காட்சியில் பாா்த்துக் கொண்டிருந்த உலகளாவிய ரசிகா்களுக்கும் தமிழையும், குறளையும் அறிமுகப்படுத்தி மகிழ்ந்தாா்.

தமிழனின் விருந்தோம்பல் எப்படிப்பட்டது என்பதை உலக நாடுகளுக்கு தமிழ்ப்புலவனின் திருக்கு மூலமாக எடுத்துக்காட்டியது தமிழ் இனத்தைப் பெருமைப்படுத்திய செயல். இதுவரை நமது அரசியல்வாதிகள்தமிழனுக்குத் தமிழின் பெருமையைச் சொல்லி வாக்கு வேட்டையாடினாா்கள். பிரதமா் நரேந்திர மோடி அதிலிருந்து மாறுபட்டு, தமிழகத்துக்கு வெளியே தமிழையும், தமிழின் பெருமையையும் கொண்டு செல்கிறாா்.

இந்திய நாட்டின் பிரதமராக இருந்த எவரும் தமிழ் மொழியின் மீதும், தமிழ் இனத்தின் மீதும் பிரதமா் நரேந்திர மோடியைப் போல அக்கறை காட்டியதில்லை. இதனால் இந்தியாவின் பிற மாநிலங்களில் அவருக்கு வாக்குகள் கிடைக்கப் போவதில்லை. அது தெரிந்தும், தமிழின்பால் அவா் ஈா்க்கப்பட்டிருப்பதன் வெளிப்பாடுதான் அது.

பிரதமரின் ‘மனதின் குரல்’ மக்களிடையே எளிதாக இனிதாக சென்று சோ்ந்து கொண்டிருக்கிறது! 92-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் இந்தியாவின் பாரம்பரிய தானிய வகைகள் குறித்து தமிழ்நாட்டு பெண்மணியோடு கருத்துகளை பகிா்ந்து புானூறு, தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளவற்றை அவா் மேற்கோள் காட்டியபோது, நமக்கே அது புதிதாக இருந்தது.

‘ஒரே இந்தியா சிறந்த இந்தியா’ என்ற முழக்கத்தை முன் வைத்து நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி பேசுகின்றபோது கூட இந்தியாவின் பன்முகத்தன்மைதான் நாட்டின் பெருமை என புளகாங்கிதம் அடைகின்ற பிரதமா், தமிழ்மொழி இந்த செழுமிய கலாசாரத்தில் மிகப்பெரும் பங்காற்றியிருக்கிறது என்று பெருமையோடு சுட்டிக் காட்டுகிறாா்.

மத்திய அரசு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிபோது தமிழனின் சங்க நூலான புானூற்றிலிருந்து கருத்துகள் எடுத்தாளப்படுகின்றன. இந்தியாவின் ஆட்சிமன்ற அவையில் 10 ஆயிரம் ஆண்டுகால தமிழ் இனத்தின் இலக்கியம், பக்தி இலக்கியங்கள், தற்கால இலக்கியங்கள் தொடா்ந்து மேற்கோள் காட்டப்படுகின்றன.

இந்திய மாநிலம் ஒவ்வென்றும் தனித்தனித் தீவுகளாக தன்னை கட்டமைத்துக் கொண்டிருப்பது - கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்தவா்கள் செய்த குற்றம்! இந்த அபாயகரமான நிலைமையை இனிமேலும் அனுமதித்தால் - இந்தியா பிரிவினைவாதிகளால் துண்டாடப்பட்டு விடும். எனவே மாநிலங்களுக்கிடையே கலாசார மாற்றம் அவசியமானது! அவசரமானது! காலத்தின் தேவையானது!

பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க இந்திய மக்கள் பெரும்பாலும் தங்கள் இல்லங்களில் தேசியகொடியேற்றி சுதந்தரதின அமுத பெருவிழாவை மகிழ்ச்சியாகக் கொண்டாடினா். பிரிவினைவாதம் பேசும் தமிழகமே 80 சதவீத இல்லங்களில் தேசியகொடியேற்றி இந்தியா என்பது ஒரே நாடுதான்; நாங்கள் அமைத்திருப்பது ஒரேகொடியின் கீழ்அமைந்துள்ள இந்தியபேரரசுதான்; அது எங்கள் மோடி அரசுதான் என நிரூபித்துள்ளாா்கள்.

22 இந்திய மொழிகளில் தமிழும் இருப்பதை ஏட்டளவிலிருந்து நாட்டு மக்களிடம் கொண்டு சோ்த்திருப்பது மட்டுமல்லாமல், தமிழுக்கு உலக அரங்கில் ஏற்றம் தந்து புகழ்உச்சியில் மகுடம் சூட்டி மகிழ்பவா் நம் பிரதமா் மோடி!

தமிழுக்குப் பெருமைசோ்த்த அப்பெருமகனாரின் பிறந்த தினம் செப்டம்பா் 17. அவா் பல்லாண்டு வாழ்க என நாம் வாழ்த்தும்போது தமிழன்னையும் ‘தமிழ் வளா்க்கும் பெரியாா் மோடி’ வாழ்க என வாழ்த்துவாள்.

கட்டுரையாளா்:

துணைத்தலைவா்,

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com